என் மலர்
கோயம்புத்தூர்
- ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த நபர்கள், பட்டா கத்தியால் ஆனந்தன், அந்தோணியை தாக்கினர்.
- ஆனந்தன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பாரத் பவன் ரோடு திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது37).அதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (37). கூலித்தொழிலாளிகள்.
இவர்கள் 2 பேரும் திருவள்ளுவர் நகர் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே சென்றனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்தனர்.
இதனை பார்த்த ஆனந்தனும், அந்தோணியும், அவர்களிடம் சென்று கோவில் முன்பு இப்படி செய்யலாமா என கூறி தட்டி கேட்டனர்.
இதனால் 2 தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து, ஆனந்தன், அந்தோணியை தாக்கினர். இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆனந்தன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.
விசாரணையில் ஆனந்தன், அந்தோணியை தாக்கியது, அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (23), பிரதீப் (22), பிரசாத் (21) என்பதும், 3 பேரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பிரசாந்த், பிரதீப் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- இன்று காலை 5 மணிக்கு எழுந்த பாக்கியலட்சுமி உணவு சமைப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார்.
- பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீளமேடு,
கோவை விளாங்குறிச்சி ரோடு தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 38). இவர் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு பாக்கியலட்சுமி சமையல் வேலைகளை முடித்து சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அப்போது சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு உள்ளது. இன்று காலை 5 மணிக்கு எழுந்த அவர் உணவு சமைப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார்.
அப்போது சமையல் அறை முழுவதும் கியாஸ் கசிந்து இருந்தது. தூக்க கலக்கத்தில் இருந்த பாக்கிய லட்சுமி கியாஸ் கசிந்து இருப்பது தெரியாமல் மின்சார சுவிட்சை போட்டார். இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகிய அவர் சத்தம் போட்டார்.
உயிருக்கு போராடிய அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவருக்கு 80 சதவீத தீக்காயம் இருந்ததால் பாக்கிய லட்சுமியை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 27 கிராம் நகைகளை தனியார் வங்கியிலிருந்து எடுத்து உங்களது நிதி நிறுவனத்தில் அடகு வைப்பதாக கூறினார்.
- வங்கி மேலாளர் பிரசாந்த் அன்னூர் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
காரமடை அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 25). இவர் அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது நிதி நிறுவனத்துக்கு ஏ.குமாரபாளையத்தை சேர்ந்த கூலித் ெதாழிலாளி சுடலை முத்து (32) என்பவர் வந்தார்.
அவர் மேலாளர் பிரசாந்திடம் 27 கிராம் நகைகளை தனியார் வங்கியில் அடகு வைத்து இருப்பதாகவும், அதனை திருப்பி உங்களது நிதி நிறுவனத்தில் அடகு வைப்பதாக கூறினார்.
இதனை உண்மை என நம்பிய நிதி நிறுவன மேலாளர் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் பணத்தை நிதி நிறுவன ஊழியர் கோகுல்ராஜ் என்பவரிடம் கொடுத்து அனுப்பினார். இதனையடுத்து சுடலை முத்து நகைகள் அடகு வைத்து இருப்பதாக கூறி வங்கிக்கு நிதி நிறுவன ஊழியரை அழைத்து சென்றார். பின்னர் வங்கி ஊழியர் கோகுல்ராஜிடம், சுடலைமுத்து பணத்தை வாங்கி கொண்டு வங்கிக்குள் சென்றார்.
பின்னர் அவர் கோகுல்ராஜிக்கு தெரியாமல் பணத்துடன் ஓட்டம் பிடித்தார். நீண்ட நேரமாக அவர் திரும்பி வராததால் கோகுல்ராஜ் உள்ளே சென்று பார்த்தார். ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர் அவர் இது குறித்து வங்கி மேலாளர் பிரசாந்துக்கு தகவல் தெரிவித்தார். அவர் இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சுடலைமுத்துவை கைது செய்தனர். கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவர் இளம்பெண்ணிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கண்டித்தார்.
- மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவை,
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் கணவருடன் கோவை விளாங்குறிச்சியில் குடியிருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் தர்மபுரியில் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இளம்பெண் அவரது கணவருடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு அவரது உறவினரான 35 வயது கட்டிட தொழிலாளி வந்து சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கும், கட்டிட தொழிலாளிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் கட்டிட தொழிலாளியை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது கணவரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
நீண்ட நேரம் ஆகியும் இளம்பெண் திரும்பி வராததால் அவரை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் அவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- ரூ. 55 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பில் பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன
- தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்பட ஆறு மாநிலங்களில் நடைபெற உள்ளது
இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள 'ஈஷா கிராமோத்சவம்' இந்தாண்டு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 55 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பில் பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன.
ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் 15-வது முறையாக நடத்தப்படும் இத்திருவிழா இந்தாண்டு முதல்முறையாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி என மொத்தம் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெற உள்ளது. இதில் 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 60,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக களம் காண உள்ளனர்.
இது தொடர்பாக 'ஈஷா கிராமோத்சவம்' குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி நகுஜா அவர்கள் கூறுகையில், "ஈஷா கிராமோத்சவம் என்பது மற்ற அமைப்புகள் நடத்தும் விளையாட்டு போட்டிகளில் இருந்து பெரிதும் வேறுப்பட்ட ஒன்றாகும்.
இதில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் விளையாடும் விளையாட்டு வீரர்கள், பல்கலைக்கழக வீரர்கள், தொழில்முறை வீரர்கள் என ஏற்கனவே சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அனுமதி இல்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் அந்தந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு அணியை உருவாக்கி இப்போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்.
இதன்மூலம், ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு புதிய அணி உருவாகவும், பழைய அணிகள் மீண்டும் புத்துயிர் பெறவும் வாய்ப்பு உள்ளது. அணியை உருவாக்கி, குழுவாக சேர்ந்து பயிற்சி எடுக்கும் செயல்முறையின் மூலம் இளைஞர்களின் தலைமைப் பண்பும், ஒற்றுமை உணர்வும் அதிகரிக்கும்.
இதுதவிர, 14-வயதை கடந்த யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்க முடியும் என்பதால், பல ஆண்டுகளாக விளையாட வாய்ப்பின்றி இருந்த குடும்ப பெண்களும், முதியவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இப்போட்டிகளில் இருந்து பெறுவார்கள். இதன்மூலம், 'வெற்றி' என்ற ஒற்றை பலனை தாண்டி, கிராமத்தின் சமூக ஒற்றுமை, ஆரோக்கிய மேம்பாடு, பெண்களின் சுயசார்பு தன்மை என பல அம்சங்களை பயன்களாக பெற முடியும்.
இளைஞர்களை போதை பழக்கங்களில் இருந்து வெளிக்கொண்டு வந்தது, கிராமப்புற பெண்களை விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க செய்தது, சாதிய வேறுபாடுகளை கடந்த ஒற்றுமை மனநிலையை உருவாக்கியது என பல மாற்றங்களை இத்திருவிழா சாதித்து காட்டியுள்ளது.
விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் உருவாக்குவது தான் ஈஷா கிராமோத்சவத்தின் அடிப்படை நோக்கம். சத்குரு அவர்களால் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திருவிழா வெறும் 4 தாலுக்காவில் ஆரம்பித்து படிப்படியாக இப்போது தென்னிந்திய அளவில் நடத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவரை 8,412 அணிகளும், சுமார் 1 லட்சம் வீரர்களும் கிராமோத்சவ போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்" என்றார்.
மேலும், இந்தாண்டு போட்டிகள் குறித்து பேசுகையில், "ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபாடி போட்டி என மொத்தம் 4 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வாலிபால் (ஆண்கள்) - ரூ.5 லட்சம், த்ரோபால் (பெண்கள்) - ரூ. 2 லட்சம், கபாடி (ஆண்கள்) - ரூ.5 லட்சம், கபாடி (பெண்கள்) - ரூ.2 லட்சம் என மிகப்பெரிய பரிசு தொகைகள் சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கப்படும்.
இதுதவிர, கிளெஸ்டர், டிவிஸ்னல் அளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கும் பரிசு தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அணியில் இடம்பெறாத மக்கள் பங்கேற்று மகிழ்வதற்காக பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
இந்தாண்டிற்கான போட்டிகள் தமிழ்நாட்டில் ஆகஸ்டு 12-ம்தேதி தொடங்கி செப்டம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும். இறுதிப் போட்டிகள் கோவையில் உள்ள புகழ்பெற்ற ஆதியோகி முன்பு மிகப் பிரமாண்டமாக நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் https://isha.co/gramotsavam-tamil என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்." என்றார்.
இத்திருவிழாவை நடத்தும் ஈஷா அவுட்ரீச் அமைப்பு, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறையிடம் இருந்து தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு (National Sports Promotion Organization) என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு 'ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்' என்ற உயரிய விருதை அப்போதைய குடியரசு தலைவர், ஈஷா அவுட்ரீச்சிற்கு வழங்கி கெளரவித்துள்ளார்.
மேலும், இத்திருவிழாவின் இறுதிப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ், பி.வி.சிந்து, ஷிகர் தவான், வீரேந்திர சேவாக் போன்ற விளையாட்டு துறை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
- பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் இளம்பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மனைவி ஜெகதீஷ்வரி (வயது40).
கடந்த 28-ந்தேதி ஜெகதீஷ்வரி வீட்டில் உள்ள அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த 5 ¾ பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
ஜெகதீஷ்வரி கொலையில் தொடர்புடைய நபரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ஜெகதீஷ்வரியின் செல்போனை கைப்பற்றி, அதில் அவருக்கு கடைசியாக போன் செய்தவர்கள் யார் என்ற தகவல்களை சேகரித்து விசாரித்தனர்.
அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். ஆனாலும் போலீசாருக்கு அதில் எந்தவித துப்புமே கிடைக்காமல் இருந்து வந்தது. அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் இதுவரை 90 பேரை அழைத்து விசாரணை நடத்தி இருந்தனர்.
கொலை நடந்து சில நாட்களை கடந்த பின்னும் குற்றவாளியை கண்டுபிடிக்கப்படாததால் இளம்பெண் கொலையில் பல்வேறு மர்மங்களும் நீடித்து வந்தது. கொலையாளி யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் இறங்கினர்.
தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்த போது சில ஆதாரங்கள் கிடைத்ததுடன், குற்றவாளி தொடர்பான தகவல்களும் கிடைத்தன.
அதனை கொண்டு தீவிர விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை கொலை செய்தது, ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்த மோகன்ராஜ் (33) என்பது தெரியவந்தது. இருந்த போதிலும் அவர்தான் கொலை செய்தாரா என்பதை தெரிந்து கொள்ள சில நாட்கள் சாதாரண உடையில் சென்று போலீசார் அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர்.
அப்போது அவர் தான் கொலை செய்தது என்பது உறுதியாகவே நேற்று மாலை போலீசார் ரேஸ்கோர்சில் வைத்து மோகன்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரை பீளேமடு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்தேன் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
கைதான மோகன்ராஜ் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சூப் கடை நடத்தி வருகிறார். இவர் முதலில் சேரன்மாநகர் பாலாஜி நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
அப்போது, அவருக்கு ஜெகதீஷ்வரியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு போனில் பேசி வந்தனர்.
மேலும் அடிக்கடி நேரில் சந்தித்தும் தனிமையில் ஜாலியாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் 2 வீட்டாருக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மோகன்ராஜ், சேரன்மாநகர் பகுதியில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு, ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் பகுதிக்கு மாறி வந்து விட்டார். வீடு மாறினாலும், அவர்களது கள்ளக்காதலானது தொடர்ந்தது.
ஒரு நாள் ஜெகதீஷ்வரி, மோகன்ராஜூக்கு வீடியோ காலில் போன் செய்து பேசியுள்ளார். அப்போது, எனக்கு பணம் வேண்டும். நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் நமது கள்ளக்காதலை உனது மனைவியிடம் தெரிவித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் கள்ளக்காதலர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து அவர் பணம் கேட்டு மிரட்டவே மோகன்ராஜ், ஜெகதீஷ்வரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த 28-ந்தேதி காலை வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு மோகன்ராஜ் புறப்பட்டார். நவ இந்தியா பகுதிக்கு சென்றதும், தனது கடையில் வேலை பார்க்கும் ஊழியரை தொடர்பு கொண்டு, மொபட்டை எடுத்து வர கூறியுள்ளார். அவரும் எடுத்து சென்று கொடுத்தார்.
அதனை வாங்கி கொண்டு, மீண்டும் ஜெகதீஷ்வரியின் வீட்டை நோக்கி பயணித்த அவர், செல்லும் வழியில் வண்டியின் ஒரிஜினல் நம்பர் பிளேட்டை மாற்றி விட்டு, மற்றொரு நம்பர் பிளேட்டை மாற்றி கொண்டு சென்றார்.
ஜெகதீஷ்வரியின் வீட்டிற்குள் சென்ற மோகன்ராஜ் 2 மணி நேரம் வரை இருந்துள்ளார். பின்னர் அவரை கொலை செய்து விட்டு, நகைக்காக கொலை நடந்தது போல் காண்பிக்க வேண்டும் என்பதற்காக, அங்கிருந்த நகைகளை 5 முக்கால் பவுன் நகைகளுடன் தப்பிவிட்டார்.
வீட்டிற்கு திரும்பி வந்த போதும், நவஇந்தியா வரை மொபட்டிலும், அதன் பின்னர் மோட்டார் சைக்கிளிலும் வீட்டிற்கு திரும்பி உள்ளார். கொலை செய்த பிறகு அவர் தலைமறைவாகவில்லை. எப்போதும், போல ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு சென்று தனது சூப் வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். செல்போனில் இவருடன் பேசியதற்கான ஆதாரங்களும் இல்லாததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை. இதனால் அவரும் தொடர்ந்து தனது வேலைகளில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
மொபட்டிலும், மோட்டார்சைக்கிளிலும் சென்றபோது ஒரே சட்டை தான் அவர் அணிந்திருந்தார். கண்காணிப்பு கேமிராக்களில் அவர் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. ஒரே சட்டை அணிந்த நபர் 2 மோட்டார்சைக்கிளில் பயணிப்பது ஏன் என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது தான் குற்றவாளி சிக்கிக் கொண்டார். மொபட்டின் எண்ணை மாற்றியவர் சட்டையை மாற்றாததால் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் இளம்பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2 போலீசாரை பணியில் அமர்த்தி முழுநேரமும் திறக்க வேண்டும்.
- வின்சென்ட் ரோட்டில் புறக் காவல் நிலையம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.
குனியமுத்தூர்,
கோவை உக்கடம் போலீஸ் சரகத்தில் உள்ள கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புறக்காவல் திறக்கப்பட்டது. அங்கு 2 போலீசார் சுழற்சி முறையில் வேலை பார்த்து வந்தனர். இது வின்சென்ட் ரோடு, சின்ன பள்ளி வீதி, சாமியார் புதூர் வீதி , பி.கே.செட்டி வீதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது.
ஆனால் இங்கு தற்போது புறக்காவல் நிலையம் முழுமையாக திறக்கப்படுவது இல்லை. கோட்டைமேடு பகுதியில் ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. எனவே அங்கு எந்த நேரமும் பொதுமக்களின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.ஆனால் வின்சென்ட் ரோட்டில் புறக் காவல் நிலையம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. ஜனநடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தால், அங்கு தகராறு செய்பவர்கள் தானாகவே ஒதுங்கி சென்று விடுவர். ஆனால் இங்கு தற்போது அதற்கு உரிய சூழ்நிலை இல்லை.
வின்சென்ட் ரோடு புறக்காவல் நிலையத்திற்கு போலீசார் எப்போது வருவார்கள்? எப்போது போவார்கள்? என்று தெரியாது. திடீரென்று வந்து நிற்பார்கள். அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போய்விடுவர். இந்த நிலை மாற வேண்டும்.
புற காவல் நிலையத்தில் 2 போலீசாரை பணியில் அமர்த்தி முழுநேரமும் திறக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்.
வீண் பிரச்சனைகள், தேவையற்ற கூச்சல் குழப்பங்களை தவிர்க்க முடியும்.
எனவே உக்கடம் வின்சென்ட் ரோட்டில் புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பட செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
- சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது.
- குற்றாலத்தில் தற்போது சிறிய அளவில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
வடவள்ளி,
கோவை மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உள்ள கோவை குற்றாலம், முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இந்த நிலையில் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது.
இந்த நிலையில் கோவை குற்றாலத்தில் தற்போது தண்ணீர் வரத்து சற்று குறைந்து உள்ளது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிப்பது என்று வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். கோவை குற்றாலத்தில் தற்போது சிறிய அளவில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
எனவே இன்னும் ஒருசில நாட்களில் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஆடி பெருக்கு பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் இன்று காலை கோவை குற்றாலத்துக்கு குளிப்பத ற்காக வந்திருந்தனர். ஆனால் அங்கு அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே அவர்கள் சின்னாறு பகுதியில் உள்ள ஆற்றில் குளித்து முடித்து பத்திரமாக வீடு திரும்பினர்.
- தென்னை நார் தொழில் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
- வங்கிகளில் என்.பி.ஏ., வகை கடன் தவணை செலுத்தும் நாளை 90ல் இருந்து 180 நாட்களாக உயர்த்த வேண்டும்.
கோவை,
மத்திய தொழில்துறை அமைச்சர் பியுஷ்கோயல் தலைமையிலான ஆய்வுக் கூட்டம், புதுடெல்லியில் நடந்தது. இதில் தேங்காய் விலை வீழ்ச்சி, கொப்பரையை ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வது, நலிவடைந்து வரும் தென்னை நார் தொழில் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.ஆய்வுக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி, சந்திரகேகர் எம்.பி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், செயலாளர் செல்லத்துரை, நிர்வாகிகள் காந்தி, நாகராஜன், தாஜுதீன், முகமது நூருல்லா, சண்முகசுந்தரம், பத்மநாபன் ஆகியோர் மத்திய அமைச்சரிடம் அளித்து உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு, ரஷ்யா- உக்ரைன் போர், பண மதிப்பு மற்றும் பொருளா தார நிலையி ன்மை, மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி பொருட்க ளின் விலை குறைவு போன்ற காரணங்க ளால் தென்னை சார் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் எண்ணற்றோர் கயிறு கம்பெனிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். வங்கிகளுக்கும் தவணை தொகை செலுத்த முடிவதில்லை. எனவே வங்கிகளில் என்.பி.ஏ., வகை கடன் தவணை செலுத்தும் நாளை 90ல் இருந்து 180 நாட்களாக உயர்த்த வேண்டும்.மேலும் அனுபவம் மிகுந்த ஐ.ஏ. எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதி தொழிலை மறுசீர மைப்பதுடன், அன்னிய செலவா ணி யை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
- அ.தி.மு.க. 31 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறது.
- 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து பல திட்டங்களை செயல்படுத்தினார்.
கோவை,
அ.தி.மு.க. வீரவரலாற்றின் பொன்வி ழா எழுச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பது தொடர்பான கோவை ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை இதய தெய்வம் மாளிகையில் நடந்தது.
எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, அமுல்கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேச உள்ளார். அந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்.
அ.தி.மு.க. தொடங்க ப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. அ.தி.மு.க. 31 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறது. பல திட்டங்க ளை எம்.ஜி.ஆர்., ஜெயலலி தா ஆகியோர் கொண்டு வந்து உள்ளனர். 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து பல திட்டங்களை செயல்படுத்தினார்.
தங்களுக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்லாமல் ஓட்டு போடாதவர்களுக்கும் பல திட்டங்களை கொண்டு வருவோம் என்று ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 அரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தமிழகத்தில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
இதனால் தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க முடிவு செய்துவிட்டனர். எப்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர். வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெ றும் மாநாடு தமிழகத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும்.
முதல்-அமைச்சராவது உறுதி
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அத்துடன் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும்.
இதில் அ.தி.மு.க. 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.பி.தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கஸ்தூரி வாசு, எட்டிமடை சண்முகம், வால்பாறை அமீது, பகுதி செயலாளர்கள் ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், செல்வகுமார் மற்றும் சிங்கை முத்து, வக்கீல் ராஜேந்திரன், பொருளாளர் பார்த்திபன், கவுன்சிலர் பிரபாகரன்,சிங்கை பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே தடுப்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
- மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.
பேரூர்,
பேரூர் நொய்யல் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா இன்று சிறப்பாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழாவன்று (ஆடி18) பேரூர் நொய்யல் படித்துறையில், இறந்துபோன தங்களது குழந்தைகள், கல்யாணம் ஆகாமல் இறந்து போன பெண்கள் ஆகியோருக்கு இலைப்படையல் வைத்து 7 கூழாங்கற்களை கன்னிமார் தெய்வங்களாக உருவகித்து, காதோலை, கருகுமணி, தாழைமடல், நாணல்இலை, தின்பண்டங்கள் ஆகியன வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம், இறந்து போன குழந்தைகளின் பித்ருதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காலை முதலே பஸ்களில் ஏராளமான பக்தர்கள் பேரூருக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் நொய்யல் ஆற்றின் படித்துறைக்கு சென்று, ஆற்றின் இரு கரைகளிலும் பக்தர்கள் அமர்ந்து இறந்துபோன குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலைப் படையல் வைத்து 7 சப்த கன்னிமார் வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த பசுமாடு கன்றுகளுக்கு அகத்திக்கீரைகள் வழங்கியதோடு நொய்யல் ஆற்றோரம் அமர்ந்திருந்த சாதுக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு அன்னதானங்களையும் வழங்கினர்.
ஆடிப்பெருக்கு விழா என்பதால், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர்.
மேலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே தடுப்பு வளைவுகளும் அமைக்கப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
இந்த நிலையில் பேரூர் படித்துறையில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு அருளாசி பெற்றுச்சென்றனர். மேலும், வனபத்ரகாளி யம்மன் கொடி மரம் முன்பு அம்மனுக்கு விளக்கேற்றி தாங்கள் வேண்டிய காரியங்கள் நிறைவேற வேண்டி பூஜைகள் செய்தனர்.
மேலும்,பவானி ஆற்றங்கரையில் அதிகாலை முதலே ஆற்றில் குளித்து சப்த கன்னிமார்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு வழிபட்டு வருகின்றனர்.இதனால் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.
- குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
- இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தென் இந்தியாவின் மான்செஸ்டர், தொழில்களின் நகரம் என பல்வேறு பெயர்களுடன் தாங்கி நிற்கிறது கோவை மாவட்டம்.
இந்த நகர் கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த பலருக்கும் வேலை வாய்ப்ைப கொடுக்கும் நகரமாகவும் இருந்து வருகிறது. தற்போது கோவை மாநகரின் பல பகுதிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவுபடுத்தப்பட்டு, அந்த பகுதிகள் எல்லாம் அழகுற காட்சியளிக்கிறது.கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் குப்பைகள் அள்ளப்பட்டு அந்த பகுதி சுத்தமாக காட்சி அளிக்கிறது. ஆனால் ஒரு சில பகுதிகளில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் குவியல், குவியலாக கிடக்கிறது.
கோவை மாநகரில் ஒரு நாளைக்கு சராசரியாக 2,000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிகாலை தங்களது வேலையை தொடங்கும் அவர்கள் மாலை வரை பணியாற்றுகிறார்கள். குப்பைகளை சேகரித்து மாநகரை தூய்மையான கோவையாக வைத்து கொள்வதில் அவர்களுக்கு தான் பெரும் பங்கு உள்ளது.
கோவை மாநகரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 35 ஆயிரம் டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் ஏராளமான பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதையும் நாம் பார்த்து தான் வருகிறோம்.
இப்படி கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியை கடக்கும் மக்கள் மிகவும் சிரமத்துடனேயே சென்று வருகிறார்கள். மேலும், குப்பைகளால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள், வியாதிகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
கோவை சாய்பாபா காலனியில் என்.டி.சி மில் குவாட்டர்ஸ் அருகே நீண்ட நாட்களாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகளில் கிடக்கும் பொருட்களை சாப்பிடுவதற்காக, ஆடு, மாடுகள் அங்கு சுற்றி திரிந்து வருகின்றன.
அப்படி வரும், ஆடு மாடுகள் குப்பைகளை இழுத்து ெகாண்டு வந்து சாலையில் போட்டு விட்டு செல்கின்றன. இதனால் அந்த சாலைகளில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் அந்த சாலை வழியாக செல்வதே சிரமமாக உள்ளது.
இந்த பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதி ஆகும். இங்குள்ள பொதுமக்கள் விடிந்தவுடன் நடைப்பயிற்சி செல்லும்போது குப்பையை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீண்ட நாட்கள் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அவ்வப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது குற்றம் சாட்டுகிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். சாலையின் நடு பகுதி வரை குப்பை பரந்து விரிந்து கிடப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலையும் அங்கு அரங்கேறி வருகிறது.
ராஜா அண்ணாமலை சாலை என்பது கோவை சாய்பாபா காலணியின் மிக முக்கியமான சாலை ஆகும். என்.எஸ். ஆர் ரோடு, அழகேசன் ரோடு, பாரதி பார்க் ரோடு, பாரதி பார்க் ரோட்டின் குறுக்கு சாலைகள் இவை அனைத்தையும் இணைக்க கூடிய முக்கியமான சாலையாகும். இந்த பகுதியிலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
இந்த குப்பைகள் தேங்கி கிடக்கும் இடத்திற்கு நேர் எதிரே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர். தினமும் காலையிலும், மாலையிலும் அப்பள்ளி மாணவ, மாணவிகளும், அவர்களை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்களும் இந்த குப்பையை தாண்டி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று எதுவும் ஏற்படும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் தினமும் தவித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் கடந்து வரும் இந்த சாலை இப்படி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது போன்று மாநகரின் பல பகுதிகள் மற்றும் சாக்கடை கால்வாய்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்று காணப்படுகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தூய்மையான நகரம், சுத்தமான நகரம், ஸ்மார்ட் சிட்டி என்று மார்தட்டி கூறிவரும் சூழ்நிலையில் இத்தகைய குப்பைமேடுகள் மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. குடியிருப்புகளுக்கு நடுவே இவ்வாறு குப்பை தேங்குவது மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும். இந்த அவல நிலை மாற வேண்டும்.
இதில் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை. நகரத்தை சுத்தமாக வைப்பது மட்டுமன்றி, வரப்போகும் நோயிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் பொதுமக்கள் தயார் நிலையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கோவை மாநகரப் பொருத்தவரை சுகாதாரப் பணியாளர்கள் தினமும் வீட்டு வாசலுக்கு வந்து குப்பைகளை சேகரித்து விட்டு செல்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அவர்கள் வரும் சமயத்தில் குப்பைகளை போடாமல் விட்டுவிடுகின்றனர். பின்னர் அந்த குப்பையை எங்கே போடுவது என்று தெரியாமல் தேவையில்லாத இடத்தில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். ஒவ்வொருவரும் என் நகரத்தை நான் தூய்மையாக வைத்திருப்பேன் என்று உறுதிமொழி எடுத்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் அனாசியமான இடத்தில் குப்பைகள் தேங்குவதற்கு வாய்ப்பு கிடையாது. அவ்வாறு கோவை மாநகராட்சியும் நாமும் இணைந்து செயல்பட்டால் நகரும் தூய்மையாகும். நாமும் நோய் இல்லாத வாழ்க்கை வாழ முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






