search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகரில் சாலைகளில் ஆங்காங்கே கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகள்
    X

    கோவை மாநகரில் சாலைகளில் ஆங்காங்கே கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகள்

    • குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
    • இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    தென் இந்தியாவின் மான்செஸ்டர், தொழில்களின் நகரம் என பல்வேறு பெயர்களுடன் தாங்கி நிற்கிறது கோவை மாவட்டம்.

    இந்த நகர் கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த பலருக்கும் வேலை வாய்ப்ைப கொடுக்கும் நகரமாகவும் இருந்து வருகிறது. தற்போது கோவை மாநகரின் பல பகுதிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவுபடுத்தப்பட்டு, அந்த பகுதிகள் எல்லாம் அழகுற காட்சியளிக்கிறது.கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் குப்பைகள் அள்ளப்பட்டு அந்த பகுதி சுத்தமாக காட்சி அளிக்கிறது. ஆனால் ஒரு சில பகுதிகளில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் குவியல், குவியலாக கிடக்கிறது.

    கோவை மாநகரில் ஒரு நாளைக்கு சராசரியாக 2,000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிகாலை தங்களது வேலையை தொடங்கும் அவர்கள் மாலை வரை பணியாற்றுகிறார்கள். குப்பைகளை சேகரித்து மாநகரை தூய்மையான கோவையாக வைத்து கொள்வதில் அவர்களுக்கு தான் பெரும் பங்கு உள்ளது.

    கோவை மாநகரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 35 ஆயிரம் டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் ஏராளமான பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதையும் நாம் பார்த்து தான் வருகிறோம்.

    இப்படி கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியை கடக்கும் மக்கள் மிகவும் சிரமத்துடனேயே சென்று வருகிறார்கள். மேலும், குப்பைகளால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள், வியாதிகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

    கோவை சாய்பாபா காலனியில் என்.டி.சி மில் குவாட்டர்ஸ் அருகே நீண்ட நாட்களாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகளில் கிடக்கும் பொருட்களை சாப்பிடுவதற்காக, ஆடு, மாடுகள் அங்கு சுற்றி திரிந்து வருகின்றன.

    அப்படி வரும், ஆடு மாடுகள் குப்பைகளை இழுத்து ெகாண்டு வந்து சாலையில் போட்டு விட்டு செல்கின்றன. இதனால் அந்த சாலைகளில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் அந்த சாலை வழியாக செல்வதே சிரமமாக உள்ளது.

    இந்த பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதி ஆகும். இங்குள்ள பொதுமக்கள் விடிந்தவுடன் நடைப்பயிற்சி செல்லும்போது குப்பையை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீண்ட நாட்கள் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அவ்வப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது குற்றம் சாட்டுகிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். சாலையின் நடு பகுதி வரை குப்பை பரந்து விரிந்து கிடப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலையும் அங்கு அரங்கேறி வருகிறது.

    ராஜா அண்ணாமலை சாலை என்பது கோவை சாய்பாபா காலணியின் மிக முக்கியமான சாலை ஆகும். என்.எஸ். ஆர் ரோடு, அழகேசன் ரோடு, பாரதி பார்க் ரோடு, பாரதி பார்க் ரோட்டின் குறுக்கு சாலைகள் இவை அனைத்தையும் இணைக்க கூடிய முக்கியமான சாலையாகும். இந்த பகுதியிலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    இந்த குப்பைகள் தேங்கி கிடக்கும் இடத்திற்கு நேர் எதிரே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர். தினமும் காலையிலும், மாலையிலும் அப்பள்ளி மாணவ, மாணவிகளும், அவர்களை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்களும் இந்த குப்பையை தாண்டி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று எதுவும் ஏற்படும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் தினமும் தவித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் கடந்து வரும் இந்த சாலை இப்படி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது போன்று மாநகரின் பல பகுதிகள் மற்றும் சாக்கடை கால்வாய்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்று காணப்படுகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தூய்மையான நகரம், சுத்தமான நகரம், ஸ்மார்ட் சிட்டி என்று மார்தட்டி கூறிவரும் சூழ்நிலையில் இத்தகைய குப்பைமேடுகள் மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. குடியிருப்புகளுக்கு நடுவே இவ்வாறு குப்பை தேங்குவது மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும். இந்த அவல நிலை மாற வேண்டும்.

    இதில் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை. நகரத்தை சுத்தமாக வைப்பது மட்டுமன்றி, வரப்போகும் நோயிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் பொதுமக்கள் தயார் நிலையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கோவை மாநகரப் பொருத்தவரை சுகாதாரப் பணியாளர்கள் தினமும் வீட்டு வாசலுக்கு வந்து குப்பைகளை சேகரித்து விட்டு செல்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அவர்கள் வரும் சமயத்தில் குப்பைகளை போடாமல் விட்டுவிடுகின்றனர். பின்னர் அந்த குப்பையை எங்கே போடுவது என்று தெரியாமல் தேவையில்லாத இடத்தில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். ஒவ்வொருவரும் என் நகரத்தை நான் தூய்மையாக வைத்திருப்பேன் என்று உறுதிமொழி எடுத்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் அனாசியமான இடத்தில் குப்பைகள் தேங்குவதற்கு வாய்ப்பு கிடையாது. அவ்வாறு கோவை மாநகராட்சியும் நாமும் இணைந்து செயல்பட்டால் நகரும் தூய்மையாகும். நாமும் நோய் இல்லாத வாழ்க்கை வாழ முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×