என் மலர்
கோயம்புத்தூர்
- 2 மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- பெற்றோர் கழக சங்கத்தினர் இது தொடர்பாக புகார் மனு அனுப்பி உள்ளனர்.
வடவள்ளி,
கோவை ஆலாந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் மெதுவாக கற்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு என்று தனியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்பில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 19 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு தினமும் கற்றல் திறனை அதிகரிப்பது மற்றும் பல்வேறு வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று, வழக்கம் போல வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளியில் படித்து வரும் 6-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும், 8-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனை அந்த வழியாக சென்ற ஆசிரியை ஒருவர் பார்த்தார்.
பின்னர் அருகே சென்று 2 பேரிடமும் சமாதானம் பேசியதுடன், 8-ம் வகுப்பு மாணவரை தனது அறைக்கு வந்து சந்திக்குமாறு கூறி விட்டு சென்றார்.
அதன்படி 8-ம் வகுப்பு மாணவரும் அறைக்கு சென்றார்.
அங்கு மாணவனை முட்டி போட வைத்து, பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து மாணவன், தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவனின் பெற்றோரிடம் சமாதானம் பேசி, இனிமேல் இதுபோன்று நடக்காது என தெரிவித்தனர். இதனால் மாணவனின் பெற்றோரும், புகார் கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதற்கிடையே ஆசிரியை மாணவனை தாக்கிய விவகாரம் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனை அறிந்த பெற்றோர் கழக சங்கத்தினர் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து குழந்தைகள் நல வாரியத்திற்கு இன்று புகார் மனு அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக குழந்தைகள் நல வாரியம் விசாரணை நடத்தும் என தெரிகிறது.
- ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு செல்வேன். அங்கு 2 பேரும் சந்தித்து, தனிமையில் ஜாலியாக இருப்போம்.
- போலீசார் மோகன்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை பீளமேடு சேரன்மாநகர், பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்வரி (வயது 40).
இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த 5 முக்கால் பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியது. இதில் தொடர்புடைய நபரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெகதீஷ்வரியின் வீட்டிற்குள் ஒரு நபர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வீட்டிற்குள் சென்று வந்த நபர், ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜ் (வயது33) என்பதும், ரேஸ்கோர்சில் சூப் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெகதீஷ்வரிக்கும், மோகன்ராஜூக்கும் கள்ளக்காதல் இருந்ததும், தகராறில் அவரை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. நான் கோவை ராமநாதபுரத்தில் தங்கி இருந்து ரேஸ்கோர்சில் சூப் கடை வைத்து நடத்தி வருகிறேன்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேரன்மாநகர் பாலாஜி நகர் பகுதியில் வசித்தேன். அப்போது எனது வீட்டின் அருகே வசித்த ஜெகதீஷ்வரி என்பவரின் பழக்கம் கிடைத்தது. முதலில் நட்பாக பழகி வந்தோம். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. அவரது மகள் பள்ளிக்கு சென்று விடுவார். கணவரும் வேலைக்கு சென்று விடுவார்.
அவர்கள் சென்ற பின்னர் நான், ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு செல்வேன். அங்கு 2 பேரும் சந்தித்து, தனிமையில் ஜாலியாக இருப்போம். இது அப்படியே தொடர்ந்து வந்தது.
மேலும் செல்போனிலும் அடிக்கடி பேசி வந்தேன். நான் அடிக்கடி போனில் பேசுவதால் எனது மனைவிக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் என்னிடம் கேட்டபோதெல்லாம் நான் மழுப்பலாக பதில் அளித்து வந்தேன்.
இதனால் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் நான் வீட்டை மாற்றுவது என முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் பகுதிக்கு வந்தேன்.
இங்கு வந்த பின்னரும் எங்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. நான் அடிக்கடி அங்கு சென்று அவரை சந்தித்து ஜாலியாக இருந்து வந்தேன்.
இதற்கிடையே நான் இங்கு வந்த பின்னர், ஜெகதீஷ்வரிக்கு வேறு பல ஆண்களுடனும் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடனும், அவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இந்த தகவல் எனக்கு தெரியவந்ததும், நான் இதுகுறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் நான் எதுவும் சொல்வதையும் கேட்காமல் தொடர்ந்து அந்த நபர்களுடன் பழகி வந்தார்.
இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் என்னிடம் பணமும் கேட்டு வந்தார். நானும் அடிக்கடி கொடுத்து வந்தேன். தொடர்ந்து பணம் கேட்டு கொண்டே இருந்தால் என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர் நான் பணம் தராவிட்டால் உனது மனைவியிடம் கள்ளக்காதலை தெரிவித்து விடுவேன் என்றார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாலும், வேறு பல ஆண்களுடன் பழகியதாலும் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அதன்படி சம்பவத்தன்று காலை ஜெகதீஷ்வரிக்கு போன் செய்து, நான் வீட்டிற்கு வர வா என கேட்டேன். அவரும் வா என அழைத்தார். இதையடுத்து நான் அவரது வீட்டிற்கு காலை 11 மணிக்கு சென்றேன். அங்கு அவரை சந்தித்து பேசி கொண்டு இருந்தேன்.
அப்போது எங்களுக்குள் இதுதொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. ஏற்கனவே கொலை செய்யும் திட்டத்துடன் சென்றதால், எங்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.
பின்னர் 1 மணியளவில் அங்கிருந்து எனது வீட்டிற்கு சென்றுவிட்டேன். தொடர்ந்து கொலை நடந்ததை வெளியில் காட்டி கொள்ளாமல் எப்போதும் போல சகஜமாக எனது வேலைகளை செய்து வந்தேன். இதனால் என் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
மேலும் வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் வீட்டில் இருந்த நகையை எடுத்து சென்றேன். மேலும் போலீசார் என்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக 2 வாகனங்களிலும், நம்பர் பிளேட்டை மாற்றியும் பயணித்தேன். ஆனால் போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து, நான் அணிந்திருந்த சட்டையை வைத்து என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் மோகன்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- சிவா. தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- சுகன்யா அந்த பகுதி மாணவர்களுக்கு, தனது வீட்டில் வைத்து டியூசன் எடுத்து வருகிறார்.
கோவை,
கோவை தொண்டா முத்தூர் அடுத்த உலியம்பா ளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் பொன்னையா என்ற சிவா. இவர் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளார்.
சுகன்யா அந்த பகுதி மாணவர்களுக்கு, தனது வீட்டில் வைத்து டியூசன் எடுத்து வருகிறார். மேலும் ஆராய்ச்சி படிப்பும் படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவருக்கு திருப்பூரில் வைத்து ஆராய்ச்சி படிப்புக்கான தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வினை எழுது வதற்காக சுகன்யா, தனது கணவர் பொன்னையா வுடன், நேற்று மாலையே திருப்பூருக்கு சென்று விட்டார். மகனை அருகே உள்ள பெற்றோர் வீட்டில் விட்டு சென்றனர்.இந்த நிலையில் இன்று காலை பொன்னையாவின் தந்தை தனது பேரனுடன், வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் உடனே சம்பவம் குறித்து, தனது மகனுக்கு தகவல் தெரிவி த்தார்.அவர் உடனடியாக சம்பவம் குறித்து, தொண்டா முத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற னர். வீடு முழுவதும் ஆய்வு செய்தனர்.
அப்போது வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்ததன. இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், ஆள் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது. வீட்டில் எவ்வளவு நகை இருந்தது என்பது பொன் னையாவின் மனைவி சுகன்யாவுக்கு மட்டுமே தெரியும். அவர் தேர்வு எழுதி கொண்டிரு ப்பதால், அவர் வந்த பின்னரே எவ்வளவு நகை கொள்ளை போனது என்பது தெரியவரும். தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பொருத்த ப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
- 2 மர்மநபர்கள் காசாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றனர்.
- போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
குனியமுத்தூர்,
கோவை வெள்ளலூர் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே தனியார் பேக்கரி செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த பேக்கரியில் காசாளர் பணியில் இருந்தார்.அப்போது உள்ளே நுழைந்த 2 மர்மநபர்கள் காசாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றனர். மேலும், அந்த சாலை வழியாக சென்றவர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்தனர்.
இதுதொடர்பாக சுந்தரா புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
நேற்று இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் வெள்ளலூரை சேர்ந்த மதன்குமார் என்ற மில்கி மதன்(26), வெள்ளலூரை சேர்ந்த மூவேந்திரன்(24) என்பதும், பேக்கரியில் காசாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புயைடவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் கைதான மதன்குமார் மற்றும் மூவேந்திரன் ஆகியோரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தர விட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நடேசன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை கைதானவர்களிடம் வழங்கினார்.
- ஜெயஸ்ரீ 1 டன் மிளகு வாங்கி அனுப்பினால், நாங்கள் பணம் கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.
- வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோவை,
சென்னை சமயபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் விஜயபாண்டியன். இவரது மனைவி புவனேஸ்வரி(44). இவர் சென்னையில் தனது கணவருடன் ஆன்லைன் டிரேடிங் கம்பனி நடத்தி வருகிறார். இவர் வெரைட்டிஹால் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2022-ம் ஆண்டு கோவை கரும்புகடை, பத்திமாநகரை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற கவுதமி என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தான், இடையர்வீதியில் மீரான், காளிராஜன், அஜ்மல்கான், தாவுத் ஆகியோருடன் சேர்ந்து, டிரேடிங் கம்பெனி நடத்தி வருவதாக கூறினார்.
மேலும் நீங்கள் 1 டன் மிளகு வாங்கி அனுப்பினால், நாங்கள் பணம் கொடுத்து விடுவதாக தெரிவித்தனர்.
அதன்படி நானும், கேரளாவில் 1.4 டன் மிளகு வாங்கி தனியார் பார்சல் மூலமாக கடந்த ஆண்டு செப்டம் மாதம் அனுப்பினேன்.
இது தொடர்பாக அவர்களிடம் தெரிவித்த போது, சில நாட்களில் எடுத்து விட்டு ரூ.23 லட்சத்து 10 ஆயிரத்தை அனுப்பவுதாக கூறினர். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கவுதமி, மீரான், தாவுத், அஜ்மல் கான், காளிராஜன் ஆகிய 5 பேர் இதுபோன்று கோவை, சென்னை, ஈரோடு பகுதிகளில் மோசடி செய்ததும், இது தொடர்பாக அங்கு அவர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் அஜ்மல்கான், காளிராஜன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் கவுதமி, தாவுத், மீரான் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- வவ்வால்களின் எச்சம் மூலம் வைரஸ், பாக்டீரியா கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.
- கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குனியமுத்தூர்,
கோவை மாநகரத்தில் வ.உ.சி. பூங்காவிற்கு அடுத்தபடியாக, காந்தி பூங்கா மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது.
இது தற்போது புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. எனவே பூங்காவிற்கு வரும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக சலீவன் வீதி, தெலுங்கு வீதி ,ம.ந.க.வீதி உப்பார வீதி , ஆர். எஸ் புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் நடைபயிற்சிக்கு வந்து செல்கின்றனர். எனவே அங்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கும்.
இந்த நிலையில் காந்தி பூங்கா பகுதியில் உள்ள அனைத்து மரங்களிலும் வவ்வால்கள் தஞ்சம் அடைந்து உள்ளன. அவற்றின் கீச்சு குரல்கள் எந்த நேரமும் ஒலித்து கொண்டு உள்ளன. இது அமைதியை தேடி பூங்காவுக்கு வரும் மக்களிடம் ஒரு சிலநேரங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து நடைபயிற்சிக்கு வந்திருந்த பெண்கள் சிலர் கூறுகையில், தினந்தோறும் நடைபயிற்சிக்கு வரும் எங்களுக்கு காந்தி பூங்கா ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இங்கு ஏராளமானோர் தினமும் வந்திருந்து இளைப்பாறி விட்டு செல்வர்.
இந்த நிலையில் காந்தி பூங்கா மரங்களில் சமீப காலமாக வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் தஞ்சம் புகுந்து உள்ளன. அவற்றின் இரைச்சல் எந்த நேரம் கேட்டுக் கொண்டு உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது.
பொதுவாக வவ்வால்கள் வீட்டிற்குள் வந்தால் அபசகுணம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் ஊருக்கு பொதுவான பூங்காவில் அந்த வவ்வால்களை பார்க்கும்போது மனதிற்குள் இனம்புரியாத ஒரு பதட்டம், பயம் ஏற்படுகிறது.
மேலும் வவ்வால்கள் போடும் எச்சங்கள், ஒருசில வைரஸ் கிருமியை பரப்பும் சக்தி உடையவை. அவற்றை குழந்தைகள் மிதிக்க வேண்டி உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
வவ்வால்களின் எச்சம் மூலம் மிகக் குறைந்த அளவு வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகள் பரவும் வாய்ப்பு உள்ளது.
எனவே அவற்றில் இருந்து பொதுமக்கள் விலகி நிற்பது நல்லது என்று கால்நடை வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.எனவே காந்தி பூங்கா பகுதியில் இருந்து வவ்வால்களை அப்புறப்படுத்தினால் அனைவரும் பயம், தயக்கம் இன்றி நிம்மதியாக இளைப்பாறலாம். எனவே கோவை மாநகராட்சி இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நண்பர்கள் காயம் அடைந்த கார்த்திகேயனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
- விக்னேஷ் எதற்காக மறிக்கிறீர்கள் என கேட்டபோது, அந்த கும்பல் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டினர்.
சூலூர்,
கோவை மாவட்டம் சூலூர் அருகே வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (24).
இவர் தென்னம்பாளையத்தில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் லோகநாதன், அருண், கார்த்திகேயன்.
சம்பவத்தன்று நள்ளிரவு விக்னேஷ் தனது நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
விக்னேஷ், லோகநாதன் ஒரு வாகனத்திலும், அருண் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்தனர்.
இவர்கள் தென்னம்பாளையம் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஓட்டல் அருகே வந்த போது, 3 பேர் கும்பல் நின்று கொண்டிருந்தனர். திடீரென அந்த கும்பல் இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
அப்போது, விக்னேஷ் எதற்காக மறிக்கிறீர்கள் என கேட்டபோது, அந்த கும்பல் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டினர்.
அப்போது திடீரென அதில் இருந்த ஒருவர் கார்த்திகேயனின் (25) கையை வெட்டினார். மேலும் மற்றவர்களை அரிவாளை காட்டி மிரட்டியதுடன், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து நண்பர்கள் காயம் அடைந்த கார்த்திகேயனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
- சாமிநாதனின் தாயார் வீட்டிற்குள் மர்மநபர் இருட்டில் ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கோவை,
கோவை ராக்கிப்பாளையம் அருகே உள்ள வெற்றி லைகாளி பாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 43). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்தார். அறையில் படுத்து இருந்த சாமிநாதனின் தாயார் வீட்டிற்குள் யாரோ மர்மநபர் இருட்டில் ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.
தாயின் அலறல் சத்தம் கேட்டு சாமிநாதன் வெளியே வந்து பார்த்தார். வீட்டிற்குள் யாரும் இல்லை. அறையில் இருந்த பீரோவை பார்த்த போது அது பூட்டி இருந்ததால் அனைவரும் தூங்க சென்றனர்.
மறுநாள் காலையில் சாமிநாதன் பீரோவை திறந்து பார்த்தார். அதில் இருந்த செயின், மோதிரம், கைசெயின், கம்மல் உள்பட 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது. அதனை வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபரின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் ஆட்கள் இருக்கும் போது அத்துமீறி நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- ஆடி 18-ம் தினத்தன்று, தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது மக்களின் ஐதீகம்.
- ஆடி மாதம் 1-ந் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை தினமும் சராசரியாக 70 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன.
கோவை,
தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆடி 18-ம் தினத்தன்று, தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது மக்களின் ஐதீகம். நேற்று தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் வழக்கத்தை விட அதிக ளவில் கூட்டம் காணப்பட்டது.
கோவையில் உள்ள நகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் அங்கு தங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
இதனால் கடைவீதி பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:- ஆடி மாதம் 1-ந் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை தினமும் சராசரியாக 70 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன.
ஆடிப்பெருக்கு தினமான நேற்று கோவை மாவட்டம் முழுவதும் 200 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன.
இதன் மதிப்பு ரூ.120 கோடியாகும். பெரும்பாலும் சிறிய ரக நகைகளான மோதிரம், தோடு, குறைந்த சவரனில் தயாரிக்கப்பட்ட செயின் உள்ளிட்ட நகைகள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன.
இவற்றை தவிர்த்து வளையல்கள், ஆரம், நெக்லஸ் உள்ளிட்ட நகைகளும் விற்பனையாகின.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பஸ்சில் யாரோ மர்மநபர் ஸ்ரீஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் வைர செயினை பறித்து தப்பி சென்றனர்.
- ஸ்ரீஹரிணி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
ஈரோட்டைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் ஸ்ரீஹரிணி (வயது 19), இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2 ம் ஆண்டு படித்து வருகிறார், இவர் ராமநாதபுரம் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். ஸ்ரீஹரிணி பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு அறைக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அப்போது யாரோ மர்மநபர் ஸ்ரீஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் வைர செயினை பறித்து தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வைர செயினை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தெற்கு உக்கடம்அருகே உள்ள புல்லுகாடு பகுதியை சேர்ந்த அங்கண்ணன். இவரது மனைவி சுகந்தி (39). சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும்பி.பி. வீதியில் நடந்து சென்றனர். அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுகந்தி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றார்.
இதுகுறித்து சுகந்தி பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவருடன் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று இரவு நவநீதகிருஷ்ணன், உணவு வாங்குவதற்காக தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
- மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதும் சி.சி.டி.வி காட்சிகள் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.
சூலூர்,
திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் நவநீதகிருஷ்ணன்(26).
இவர் கோவை கருமத்தம்பட்டியில் தங்கி, கருமத்தம்பட்டி-அன்னூர் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு நவநீதகிருஷ்ணன், உணவு வாங்குவதற்காக தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கருமத்தம்பட்டி நோக்கி வந்தார்.
அப்போது அன்னூரில் இருந்து சென்னைக்கு துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. கருமத்தம்பட்டி நால் ரோட்டில் வரும் போது அங்குள்ள வளைவில் திரும்புவதற்காக டிரைவர் லாரியை திருப்பினார்.
அப்போது எதிர்பாராத விதமாக நவநீதகிருஷ்ணன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டு, லாரியில் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பார்த்து ஓடி சென்று உயிருக்கு போராடிய நவநீதகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நவநீதகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.
- மனவேதனை அடைந்த ரேணுகா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு கணேசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள பாலத்துறை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் (வயது 68). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ரேணுகா (54). இவர்களுக்கு வைஷ்ணு என்ற மகன் உள்ளார்.
தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ரேணுகா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கிய நிலையல் இருந்த அவரை கணேசன் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று கணேசன் தனது மனைவியை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த அவர் மனைவி தூக்க மாத்திரை சாப்பிட்டதற்கு அவர் தான் காரணம் என நினைத்து மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கணேசன் வீட்டில் அருகே உள்ள தேக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு கணேசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி இருந்தார்.
பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






