என் மலர்
கோயம்புத்தூர்
- சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
- இணையத்தில் பதிந்தால் வீட்டுக்கே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை,
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து மக்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதற்கு தயராகி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் தேசியக்கொடியின் விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை களைகட்டி உள்ளது.
கோவையில் ஆர்.எஸ்.புரம், கூட்ஷெட் ரோடு ஆகிய பகுதிகளில் தலைமை தபால் நிலையங்கள் உள்ளன. இதுதவிர மாவட்டம் முழுவதும் 80 துணை அஞ்சல் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
கோவையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை நேற்று தொடங்கியது.
அங்கு ஒரு கொடி ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.எனவே அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு திரண்டு வந்து தேசியக்கொடிகளை விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து கோவை அஞ்சலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவையில் உள்ள தபால் அலுவலகங்களில் ஆண்டுதோறும் தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் விற்பனையை தொடங்கி உள்ளோம்.பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியும் தேசியக்கொடி வாங்குவதற்காக இ-போஸ்ட் வசதியை பயன்படுத்தலாம்.
இதற்காக அவர்கள் விண்ணப்பித்தால் தபால் அலுவலக ஊழியர்களே நேரில் வந்து தேசியக்கொடியை ஒப்படைப்பர்.
கோவையில் உள்ள தபால் அலுவலகங்களில் விற்கப்படும் தேசியக்கொடிக்கு மாவட்ட அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. எனவே நடப்பாண்டு சுமார் 40 ஆயிரம் தேசியக்கொடிகளை விற்பனை செய்வது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த களைக் கொல்லி பூச்சி மருந்தினை குடித்து சம்பத்குமார் தற்கொலைக்கு முயன்றார்.
- சம்பத்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்,
காரமடையை அடுத்துள்ள மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலையூர் துரைசாமி கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி(60).இவரது மனைவி ஜெயமணி(56).
இந்த தம்பதிக்கு விமலா(36) என்ற மகளும், சம்பத்குமார்(34) என்ற மகனும் உள்ளனர்.
சம்பத் குமாருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விபத்து காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த களைக் கொல்லி பூச்சி மருந்தினை குடித்து சம்பத்குமார் தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து அவரை மீட்ட ஜெயமணி 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் காரமடை ஆர்.வி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(48). இவரது மனைவி சுபிதா(37).பிரகாஷ் காரமடையை அடுத்த பெட்டதாபுரம் தண்ணீர் பந்தல் பகுதியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார்.
சிப்ஸ் கடை மூலமாக போதிய வருமானம் கிடைக்காததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரி கிறது. இதனால் விரக்தி யடைந்து நேற்று காலை விஷம் குடித்து தற்கொ லைக்கு முயன்றார்.
அவரை மீட்ட மனைவி சுபிதா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
2 தற்கொலை சம்ப வங்கள் தொடர்பாக கார மடை இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகமது ஜாபர் பள்ளிவாசல் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
- மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்த சிசிடிவி காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பங்களாமேடு வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் முகமது ஜாபர்(23). இவர் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் கிழக்குத்தெருவில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு சென்றார்.
அப்போது, பள்ளிவாசல் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் தேடி பார்த்தார்.
மேலும் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று, அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
அந்த சிசிடிவி காட்சியில் சாலையில் நடந்து வரும் மர்ம நபர் ஒருவர் திரும்பிச்செல்லும்போது திருடு போனதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வது பதிவாகியுள்ளது.
தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
- அதிகாரிகளுக்கு இவ்வாறு சான்று அளிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.
கோவை:
கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் பிரலோப். இவரது மனைவி பீனா பிரீத்தி. இவர்களுக்கு 3 வயதில் ஹாதியா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் தங்களின் குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடும் வகையில் சான்றிதழ் வாங்க வேண்டும் என அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தனர்.
விண்ணப்பங்களை பரிசீலித்த அதிகாரிகள் நேற்று பிரலோப்-பிரீத்தி தம்பதியின் குழந்தை ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லையென்ற சான்றிதழ் வழங்கினர். அதில் ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எல்லோரும் இந்தியர்கள் என்ற மனநிலை மட்டும் இருந்தால் போதும். எங்கள் மகளை ஜாதி,மதம் என எதை வைத்தும் பிரிக்க வேண்டாம் என முடிவு செய்தோம்.
இவ்வாறு சான்று பெறுவதால் வருங்காலத்தில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் எங்கள் குழந்தை பெற இயலாது என்று தெரிந்து தான் விண்ணப்பித்தோம்.
சான்று பெற விண்ணப்பித்து, அதனை பெறுவதில், சிறிது காலதாமதம் ஏற்பட்டது. ஏன் இதை வாங்குகிறீர்கள் என நிறைய கேள்விகள் கேட்டனர். அதிகாரிகளுக்கு இவ்வாறு சான்று அளிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசு ஏற்கெனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது பெற்றோர் விருப்பப்பட்டால், மாற்று சான்றிதழில் ஜாதி, மதமில்லை என்று குறிப்பிடலாம். அல்லது அந்த கேள்விக்கான இடத்தை அப்படியே விட்டு விடலாம் என்று அரசாணை வெளியிட்டு உள்ளது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.
எங்களை போல பலரும் தங்களின் குழந்தைகளுக்கு ஜாதி, மதம் இல்லாத சான்றிதழ் பெற விரும்புகின்றனர். ஆனால் இதற்காக எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரம் அவர்களுக்கு முழுமையாக தெரியவில்லை. எனவே அரசாங்கம் இதுகுறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நஸ்ரின் பாத்திமா கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி பொள்ளாச்சிக்கு வந்தார்.
- போலீசார், இருதரப்பு பெற்றோரிடமும் கலந்து பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
கோவை,
தென்காசி அருகே உள்ள வி.கே.புதூரை சேர்ந்தவர் நஸ்ரின் பாத்திமா (வயது 19). இவர் பொள்ளாச்சி கஞ்சம்பட்டியைச் சேர்ந்த பெயிண்டர் கருப்பசாமி (21) என்பவரை காதலித்து வந்தார்.
இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு வலுத்தது.எனவே நஸ்ரின் பாத்திமா கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி பொள்ளாச்சிக்கு வந்தார். அங்கு அவருக்கு காதலர் கருப்பசாமி உடன் 26-ந்தேதி திருமணம் நடந்தது.இதனை தொடர்ந்து காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இருதரப்பு பெற்றோரிடமும் கலந்து பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பது என்று முடிவு செய்து உள்ளனர்.
- தொடர் ஓட்டப்பந்தயத்தை கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
- போலீசாருக்கு மனஅழுத்தம் குறைந்து, உடல் நலமும் மேம்படும்
கோவை,
கோவை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான 48 நாள்- 2 கி.மீ. தொடர் ஓட்டப்பந்தயத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காலை, மாலை என்று பாராமல் நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு ஆரோக்கியம் தரும். இவ்வாறு 21 அல்லது 48 நாட்கள் தொடர்ச்சியாக ஓட்டப்பயிற்சி செய்து வந்தால் இது அவர்களின் தினசரி வாழ்வில் ஒரு பழக்கமாகவே மாறி விடும்.
இதனால் போலீசாருக்கு மனஅழுத்தம் குறைந்து, உடல் நலமும் மேம்படும் என்று கூறினார். கோவை ஆயுதப்படை மைதானத்தில் ஓட்டப்பந்தயப் போட்டியில் முதற்கட்டமாக 1000 போலீசார் பங்கேற்க முன்வந்து உள்ளனர்.
- கால்கடுக்க புத்தக மூட்டையுடன் மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்
- பயணிகளை ஏற்றி செல்வது ஓட்டுநர்களின் இன்றியமையாத கடமை என மக்கள் தெரிவித்தனர்.
பொதுவாக மனிதன் வாழும் வாழ்க்கையில் பஸ்களின் அவசியம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும். அதிலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகள் அனைவருக்கும் பஸ் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளியூர் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை விட நகர பஸ்களின் எண்ணிக்கை தான் அதிக அளவில் உள்ளது. ஏனெனில் பொதுமக்கள் நகர்ப்புற எல்லைக்குள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு நகரப் பஸ் மட்டுமே அணுக வேண்டிய அவசியம் உள்ளது.
அத்தகைய நகர பஸ்களை தினமும் காலை மற்றும் மாலை சமயங்களில் உபயோகப்படுத்தாத மக்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நகர பஸ்கள் உரிய நிறுத்தத்தில் நிற்பது கிடையாது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதிலும் காலை நேரங்களில் பஸ் நிறுத்தத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கூட்டத்தை காணும் போது, டிரைவர் வேண்டுமென்றே வேகத்தை கூட்டி அவர்கள் நிற்கக்கூடிய இடத்தை தாண்டி செல்வார். இது அன்றாடம் நடைபெறும் நிகழ்வு ஆகிவிட்டது. ஒரு சில பஸ்கள் நிற்காமல் சென்று விடும். மற்ற சில பஸ்கள் நிறுத்தத்தை விட்டு, சிறு தூரம் கடந்து சென்று நிற்கும். அப்போது பள்ளி மாணவிகள் தனது புத்தக சுமையையும் தோளில் தொங்க விட்டுக்கொண்டு ஓடி பிடித்து, முண்டியடித்துக் கொண்டு பஸ்ஸில் ஏறுவது வழக்கம். இது தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது என அன்றாடம் பயணிப்பவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இவ்வாறு பஸ்கள் நிற்காமல் செல்லும்போது, அதன் பின்னால் வரும் தனியார் பஸ்கள் நிறுத்தி அனைவரையும் ஏற்றி விட்டு செல்கின்றனர். அந்த இடத்தில் தனியார் பஸ்களில் வருமானம் அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது போன்ற ஒரு மாயை ஏற்படுகிறது.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் பஸ்சை எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால் வாகனங்கள் அல்லாத நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே பஸ்களை எதிர்பார்த்து பயணம் செய்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பஸ் பயணத்தை நம்பியே உள்ளனர். அப்படி இருக்கும் போது அவர்களை புறக்கணித்து விட்டு பஸ்கள் செல்வது மாணவ மாணவிகளுக்கு கஷ்டமாக உள்ளது. காலையிலேயே பஸ் மூலம் அவர்கள் மனது உடையும்போது அன்றும் முழுவதும் பள்ளி படிப்பில் கவனம் செலுத்துவதே முடியாது.
இதனால் கல்வியில் பின் தங்கிய நிலைக்கு செல்வதற்கு கூட ஒரு வாய்ப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பஸ் ஓட்டும் டிரைவர்கள் இதை கவனத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் நிறுத்தத்தில் சரியாக நிறுத்தி, மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்வது அவர்களது இன்றியமையாத கடமையாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஊருக்குள் வந்த பாகுபலி யானை பாக்கு மரங்களை உடைத்து விழுங்கியது.
- வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாகுபலியை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டுயானை சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர், தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது.நீண்ட தந்தங்கள், மிகப்பெரிய உருவத்துடன் காட்சியளித்த அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் பாகுபலி என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.
இது பெரும்பாலும் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்து கிராமங்களுக்கு அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் பாகுபலி யானைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாயில் காயம் ஏற்பட்டது. எனவே அதற்கு சிகிச்சை அளிப்பது என கால்நடை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக அந்த யானையை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனாலும் பாகுபலி சிக்கவில்லை.
இதற்கிடையே யானைக்கு வாயில் இருந்த காயம் தானாகவே சரியாகி விட்டது. எனவே பாகுபலி யானையை பிடிக்க வேண்டாம் என மருத்துவ குழுவினர் அறிக்கை அளித்தனர்.
இதனை தொடர்ந்து காட்டுயானை பாகுபலி வழக்கமான வலசை பாதையில் இருந்து விலகி அடர் வனத்திற்குள் சென்று விட்டது. அதன்பிறகு அந்த யானையை ஊருக்குள் பார்க்க முடியவில்லை. எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் பாகுபலி யானை 2 மாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை கல்லார் பகுதியில் உள்ள பாக்கு தோப்புக்கு வந்தது. அங்கு இருந்த பாக்கு மரங்களை உடைத்து விழுங்கியது.
இதனை தற்செயலாக பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாகுபலியை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
சுமார் 2 மாத இடைவெளிக்கு பிறகு பாகுபலி யானையின் நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- நிலத்தின் அடியில் புதைக்கப்படும் பொருட்களை கண்டுபிடிக்கும் திறமை கொண்ட மோப்பநாய் ‘பைரவா ஆகும்.
- மதுரை மாவட்டம் வைகை அணை பகுதியில் கடந்த 6 மாதங்களாக பைரவாக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ெபாள்ளாச்சி,
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, அமராவதி, உடுமலை ஆகிய 6 வனச்சரகங்களை கொண்டது. இங்கு புலி, மலபார் அணில், சிங்கவால் குரங்கு, வரையாடு உட்பட பல அரிய வகை விலங்குகளும், தாவரங்களும் உள்ளன. வனக்கொள்ளை, வன விலங்குகள் வேட்டை ஆகியவற்றை தடுக்கும் பணியிலும், கண்காணிக்கும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் வகையிலும், வனக்குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிவதற்காகவும், தற்போது டாபர்மேன் ரகத்தைச் சேர்ந்த ஒரு வயதுடைய பைரவா என பெயர் சூட்டப்பட்டுள்ள மோப்பநாய், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை பராமரிக்கவும், வனங்குற்றங்கள் ஏற்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று குற்றவாளிகளைப் பிடிக்கவும் வேட்டைத்தடுப்பு காவலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுவது, வன விலங்கு வேட்டை உள்ளிட்ட சட்ட விரோத வனக்குற்றங்களை கண்டறியும் வகையில், வாகனங்களில் சோதனையிடுதல், சந்தனம், ஈட்டி மரங்களின் வாசனைகளை வைத்து கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது," வனப்பகுதியில் நடைபெறும் காட்டுயிர் வேட்டை, திருட்டு, மரம்வெட்டுதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை உடனுக்குடன் கண்டறியவும், குற்றப் புலனாய்வுக்கு உதவியாகவும் வனத்துறையின் ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பு மோப்பநாய் பிரிவு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, தற்போது ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பைரவா எனும் பெயர் சூட்ட ப்பட்டுள்ள மோப்பநாய் பணியமர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, மதுரை மாவட்டம் வைகை அணை பகுதியில் கடந்த 6 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வனப்பொருட்கள் கடத்தல், வன விலங்குகள் வேட்டை ஆகியவற்றை துப்பறிவதுடன், நிலத்தின் அடியில் புதைத்து வைக்கப்படும் எந்த பொருளையும் எளிதில் கண்டறிந்துவிடும் அளவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காடுகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் பணியில், மோப்ப நாய்கள் பங்களிப்பும் இருக்கும்" என்றனர்.
- கடந்த 22-ந் தேதி மாணவியை தேடி விஸ்வநாதன் பொள்ளாச்சிக்கு வந்தார்.
- போலீசார் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தற்போது இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்சாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நாகப்பட்டிணத்தை சேர்ந்த ஜே.சி.பி. ஆபரேட்டர் விஸ்வநாதன் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பேசி பழகி வந்தனர்.
கடந்த 22-ந் தேதி மாணவியை தேடி விஸ்வநாதன் பொள்ளாச்சிக்கு வந்தார். பின்னர் அவர் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தார்.
மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடினர்.
அப்போது அவர் கேரளாவில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கேரளாவுக்கு சென்ற போலீசார் விஸ்வநாதனுடன் தங்கி இருந்த மாணவியை மீட்டனர். அவரை கடத்தி சென்று திருமணம் செய்த விஸ்வநாதனை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் 2 பேரையும் மகாலிங்கபுரத்துக்கு அழைத்து வந்தனர். மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு பிரதீப்புக்கு திருமணமானது தெரிய வந்தது.
- வாலிபர் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 22 வயது பட்டதாரி இளம்பெண். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மேட்டுப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த திருமணமான பிரதீப் (வயது 28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
பிரதீப் இளம்பெண்ணுடன் திருமணமானதை மறைத்து அவருடன் பழகி வந்தார். 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு பிரதீப்புக்கு திருமணமானது தெரிய வந்தது. இது குறித்து இளம்பெண் கேட்ட போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் பிரதீப்புடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தார்.
ஆனால் வாலிபர் இளம்பெண்ணை தினசரி பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். தொல்லை தாங்க முடியாத இளம்பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிரதீப்பை அழைத்து இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுக்க கூடாது என எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர்.
சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிரதீப் மீண்டும் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்தார். அவர் இளம்பெண்ணிடம் நீ எனக்கு மட்டும் தான். நான் உன்னை காதலித்து கொண்டே தான் இருப்பேன் என கூறி தகராறு செய்தார். பின்னர் அவர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து இளம்பெண் மீண்டும் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த பிரதீப் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- எதிர்பாராத விதமாக பஸ் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை காந்தி நகர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மகன் நிரஞ்சன் (20) இவர் அவிநாசி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவினாசி ரோடு பீளமேடு சாலையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பள்ளி பஸ் வந்தது. இந்த பஸ்சை கோவை குமாரபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(41) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நிரஞ்சன் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






