என் மலர்
கோயம்புத்தூர்
- திரும்பி வந்த கணவர் வாழ அழைத்த போது தாக்குதல் நடத்தினர்.
- இளம்பெண்ணின் கணவர் 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு இளம்பெண்ணின் கணவர் அவருக்கு திருமணமானதை மறைத்து 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்தார். இது குறித்து மாணவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
தனியாக குழந்தைகளுடன் வசித்த இளம்பெண்ணுக்கு அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வரும் 27 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் ஜெயிலில் இருந்ததால் இளம்பெண் வாலிபரை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் கணவர், தனது மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். கள்ளக்காதலனும் அவரை அனுப்பி வைக்கவில்லை.
சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த இளம்பெண்ணின் கணவர் அவரது மனைவியின் கள்ளக்காதலன் நடத்தி வரும் செல்போன் கடைக்கு சென்றார். அங்கு இருந்த வாலிபரிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார்சைக்கிள் சாவியை எடுத்து இளம்பெண்ணின் கணவரின் வலது கை, தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்போன் கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என ஆய்வு செய்தார்.
- சிகிச்சைக்கு வரும் தொழிலாளர்களைக் கருணை உள்ளத்தோடு அணுக வேண்டும்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி-கோவை சாலை சிடிசி மேடு பகுதியில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, எத்தனை மருத்துவர்கள் பணியில் உள்ளனர், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என ஆய்வு செய்ததோடு, அவர்களின் வருகைப் பதிவேடுகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, மருத்துவத்தின் செயல்பாடு, மருந்துகள் இருப்பு குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மருந்தகத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடந்தது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மருந்தகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தொழிற்சாலைகளில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மருந்தகங்கள் மூலம் மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா, முறையான சிகிச்ைச அளிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், பொள்ளாச்சி இ.எஸ்.ஐ. மருந்தகத்தை ஆய்வு செய்துள்ளேன்.
மருத்துவர்கள், பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்ததில் அவர்கள் சரியான நேரத்துக்குப் பணிக்கு வந்துள்ளனர். இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மூலம் தொழிலாளர்களுக்குப் போதுமான சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது.
சிகிச்சைக்கு வரும் தொழிலாளர்களைக் கருணை உள்ளத்தோடு அணுக வேண்டும். நீண்டநேரம் காத்திருக்க வைக்கக்கூடாது என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் இல்லம் தேடி மருத்துவம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழகம்தான் மருத்துவ சேவையில் முன்னிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, சப்-கலெக்டர் பிரியங்கா, பொள்ளாச்சி நகரசபை தலைவி சியாமளா நவநீதகிரு ஷ்ணன், தி.மு.க. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- 2-வது கட்ட முகாம் 16-ந்தேதி வரை நடக்கிறது
- கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 901 பேருக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன
கோவை,
தமிழகத்தில் வசிக்கும் ஏழை-எளிய குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோ றும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை த்தொகை திட்டம் அறிவிக்க ப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தை தாண்டி இருக்க கூடாது, வருமானவரி, ஜி.எஸ்.டி வரி செலுத்து வோர் மற்றும் சொந்த நிலம் வைத்து இருப்பவ ர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு ஏற்கனவே நிபந்தனை களை விதித்து உள்ளது.
கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 901 பேருக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன. அவர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ண ப்பங்களை வழங்கி னர்.
அப்போது சுமார் 70 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பம் வேண்டாம் என்று கூறி நிராகரித்து விட்டனர். இது ரேஷன் ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இருந்தபோதிலும் அவ ர்கள் விண்ணப்பம் பெறா தது ஏன் என்பது தொட ர்பாக சம்பந்தப்பட்ட ரேஷ ன்கார்டுதாரரிடம் உறுதி மொழி படிவம் எழுதி வாங்கி சென்றனர்.
கோவையில் மகளிர் உரிமைதொகை விண்ண ப்பம் பதிவு செய்வதற்கான முதல்கட்ட முகாம் 839 இடங்களில் நடந்தது. இதில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 398 பேர் நேரடியாக பங்கேற்று, தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்து உள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 63.7 சதவீதம் பேர் மகளிர் உரிமை தொகைக்காக விண்ண ப்பத்தை பதிந்து உள்ளனர்.
கோவையில் மகளிர் உரிமைத்தொகை விண்ண ப்ப பதிவுக்கான 2-வது கட்டமுகாம் தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடக்க உள்ளது. இதில் மீதம் உள்ள ரேஷன் கார்டுதா ரர்கள் பங்கேற்று, தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கோவையில் அனைத்து ரேஷன்கார்டு தாரர்க ளுக்கும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 70 ஆயிரம் பேர் மட்டும் விண்ணப்பம் பெறவில்லை.
கோவையில் மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி, ஜி.எஸ்.டி வரி கட்டுவோர் அதிகம் உள்ளனர். ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வருமானம் உடையவர்கள் மற்றும் சொந்த நிலம் வைத்து இருப்போரின் எண்ணிக்கை அதிகம்.
கோவையில் அனைத்து ரேஷன்கார்டு தாரர்க ளுக்கும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணங்கள் வழங்க ப்பட்டபோதிலும், அவர்களில் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மட்டுமே மாதாந்திர தொகை யாக ரூ.1000 வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.2½ கோடி பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
- தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டிடத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
கோவை
கோவை, கிராஸ்கட் ரோடு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் நிகித் (வயது33).
இவர் ராஜாஜி வீதியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை 4.30 மணிக்கு இவரது கடையில் இருந்து கரும்பு கை வெளி வந்தது. சிறிது நேரத்தில் பயங்கர மாக தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை அந்த வழியாக சென்ற வர்கள் பார்த்தனர். உடனே அவர்கள் சம்பவம் குறித்து கோவை மத்திய தீயணைப்பு துறையி னருக்கு தகவல் கொடு த்தனர்.
ஆனால் அவர்கள் வருவதற்குள்ளாகவே தீ கடை முழுவதும் வேகமாக பரவி எரிந்து கொண்டி ருந்தது. தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டிடத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த காட்டூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீ அணைக்கப்ப ட்டது.
இந்த தீ விபத்தில் அழகு சாதன கடையில் இருந்த ரூ. 2½ கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது.
இந்த தீ விபத்து குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர். மேலும் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது. மின் கசிவு காரமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் விசார ணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபர ப்பை ஏற்படுத்தியது.
- கொள்ளை கும்பல் மாதத்தில் 30 நாட்களில் 20 நாட்கள் மட்டுமே திருடுவார்கள்.
- கொள்ளை கும்பல், தாங்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
கோவை:
கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக மாநகர போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நகை பறிப்பு திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவி தலைமையில், இன்ஸ்பெக்டர் கண்ணையன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, போலீசார் கார்த்தி, பூபதி, முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் புகார்கள் வந்த பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் சாதராண உடையில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.
யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் பிடித்து விசாரித்தும் வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பல் மருதமலை முருகன் கோவிலுக்கு வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் மருதமலை கோவில் பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரவி (வயது47). அவரது மனைவி பழனியம்மாள்(40), அவரது உறவினர்கள் வனிதா(37), நதியா (37) என்பதும், இவர்கள் கோவையில் குடும்பத்தோடு தொடர் நகைபறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் இவர்கள் வேறு எங்கு எல்லாம் கைவரிசை காட்டியுள்ளனர். திருடிய பணத்தை என்ன செய்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது ரவி. ரவி தான் எங்கு திருட வேண்டும். எப்படி திருட வேண்டும். எந்த சமயத்தில் அந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டு கொடுப்பார்.
அவர் போட்டு கொடுக்கும் திட்டத்தின்படியே பெண்கள் 3 பேரும் திருட்டில் ஈடுபடுவார்கள். குறிப்பாக பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ள கோவில், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே தங்கள் கைவரிசையை காட்டி வந்துள்ளனர்.
இந்த கொள்ளை கும்பல் மாதத்தில் 30 நாட்களில் 20 நாட்கள் மட்டுமே திருடுவார்கள். மற்ற 10 நாட்கள் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று வந்துள்ளனர். இதுவரை புதுடெல்லி, மும்பை, காஷ்மீர் என பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
மேலும் இவர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டே கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி வந்துள்ளனர்.
இந்த கொள்ளை கும்பல், தாங்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ரவிக்கு பெங்களூரில் ரூ.5 கோடி மதிப்பில் சொகுசு பங்களாவும், ஒரு காரும் உள்ளது. தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் தங்கள் பிள்ளைகளை டாக்டர் மற்றும் என்ஜினீயரிங் படிக்க வைத்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரவி, பழனியம்மாள், நதியா, வனிதா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் இவர்கள் கோவை மட்டுமின்றி வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வழக்கினை சி.பி.சி.ஐ.டி எஸ்.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தற்போது பவுசியா 2-வது திருமணம் செய்து கொண்டு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ளார்.
கோவை:
கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதானி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து கடந்த 2002-ம் ஆண்டு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் குண்டு வைக்கப்பட்டது. ஆனால் அந்த குண்டு வெடிக்கும் முன் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வெடி குண்டை வைத்தது, கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த முகம்மது சதீர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி எஸ்.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய முகமது சதீர் என்பவர் கடந்த 21 ஆண்டுகளாக தலைமறைவாகவே உள்ளார்.
இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு முகம்மது சதீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வந்தது.
மேலும் முகமது சதீருடன், அவரது மனைவியும், சேர்ந்து பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் புதுடெல்லி, ஐதராபாத், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்ததும், அங்கு இதுபோன்று ஆட்களை சேர்த்திருக்கலாம் எனவும் தெரிகிறது.
இதையடுத்து போலீசார் இது தொடர்பாக விசாரிப்பதற்காகவும், முகமது சதீர் எங்கே இருக்கிறார் என்பதை அறியவும், அவரது மனைவியான பவுசியாவிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
தற்போது பவுசியா 2-வது திருமணம் செய்து கொண்டு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ளார். அங்கு சென்று அவரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயர்அதிகாரிகள் கூறுகையில், 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் முகம்மது சதீரை எங்கு இருக்கிறார் என்பதை அறிய அவரது மனைவியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
- ஜெயபிரகாஷ் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
- விசாரணையில் திருட முயன்றது தர்மபுரி மாவட்டம் முள்ளிப்பட்டியை சேர்ந்த குமார் என்பது தெரிய வந்தது.
கோவை,
கோவை கஸ்தூரிபாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(வயது 55). இவர் கட்டுமான பொருட்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் ஒரு சரக்கு வாகனம் உள்ளது.
இந்த நிலையில் ஜெயபிரகாஷ் சம்பவத்தன்று இரவு கடையை மூடிவிட்டு சென்றார். அப்போது மர்மநபர் சரக்கு வாகனத்தை திருட முயன்றார்.
அப்போது யாரோ சிலர் நடந்து வரும் சப்தம் கேட்டது. எனவே அந்த திருடன் தப்பி சென்று விட்டான்.இதுதொடர்பாக ஜெயபிரகாஷ் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜெயபிரகாசின் சரக்கு வாகனத்தை திருட முயன்றது தர்மபுரி மாவட்டம் முள்ளிப்பட்டியை சேர்ந்த குமார் (23) என்பது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- செல்வராஜ் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர்.
கோவை,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது29). இவர் கணியூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது அறையின் அருகே வடமாநிலத்தவர்கள் 3 பேர் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று காலை இவர் தங்கியிருந்த அறையின் அருகே இருந்த மற்றொரு அறையில் 5 செல்போன்கள் திடீரனெ திருடு போய் இருந்தது.இது தொடர்பாக செல்வராஜ் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர். யாராவது அந்த ரூமிற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததா என போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாலிபருக்கும், சிறுமிக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.
- சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். இவர் கிணத்துக்கடவில் உள்ள ஓர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஒரே பகுதி என்பதால் இவருக்கும், சிறுமிக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் 4 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் வாலிபர், சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதனை சிறுமி வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமி செல்போனை சார்ஜர் போட்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தாய், செல்போனை பார்த்ததும் அதிர்ச்சியானார்.
இது யாருடையது, யார் வாங்கி தந்தது என கேட்கவே சிறுமி அனைத்தையும் தெரிவித்து விட்டார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே வைத்து விட்டனர். நேற்று வீட்டில் இருந்த சிறுமி மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடினர்.
இந்த நிலையில் வாலிபர் சிறுமியின் வீட்டிற்கு போன் செய்து, சிறுமி என்னுடன் தான் இருக்கிறார். நான் அவரை உங்கள் வீட்டில் கொண்டு வந்து விடுகிறேன் என தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்து முன்னணி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
- பா.ஜ.க, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியை சேர்ந்த பா.ஜ.க, இந்து முன்னணி மற்றும் விசு வஇந்துபரிசத் அமைப்பை சேர்ந்தவர்கள் அரியானா விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டி போலீஸ் நிலையத்தில் விண்ணப்பம் செய்தனர்.
ஆனாலும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது.எனவே மேற்கண்ட அமைப்புகள் காரமடை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் இன்று காலை காரமடையில் உள்ள இந்து முன்னணி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அந்த பகுதி முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் இந்துமுன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மற்ற அமைப்பை சேர்ந்தவர்களும் அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர்.
அவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல் மேட்டுப்பாளையத்திலும் ஏராளமானவர் போராட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுடன் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதில் பா.ஜக வடக்கு மாவட்ட துணை தலைவர் விக்னேஷ், வி.எச்.பி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவப்புகழ், பொதுசெயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது இந்துக்களுக்கு எதிராக போலீசார் செயல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
- இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் தட்டு தடுமாறி செல்கின்றன.
- மின் கோபுர விளக்கை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் கடைவீதியில் இருந்து மேம்பாலம் செல்லும் வழியில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இது இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. ஆனால் தற்போது அங்கு உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் தட்டு தடுமாறி செல்கின்றன.
உயர் கோபுர மின் விளக்கின் கீழ்ப்பகுதியில் 2 வேகத்தடைகள் உள்ளன. சாலையின் இடதுபுறம் பெரிய குழி தோண்டி, மூடப்படாமல் உள்ளது. வலது பக்கம் டிவைடர் உள்ளது. எனவே போத்தனூர் கடைவீதியில் இருந்து வேகமாக செல்லும் வாகனங்கள் உயர்கோபுர விளக்கு ஏரியாததால், வேகத்தடையில் சிக்கி நிலைதடுமாறி குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. வலது பக்கம் உள்ள டிவைடரில் முட்டி நிற்கும் சூழலும் நிலவுகிறது.
இதுதவிர சாலைஓரத்தில் நிற்கும் மர்ம நபர்கள் இருளை பயன்படுத்தி இரு சக்கர வாகனத்தில் செல்ப வர்களிடம் வழிப்பறி செய்யும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே போத்தனூரில் நீண்ட நாளாக எரியாமல் உள்ள மின் கோபுர விளக்கை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பதரார்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறினால் அவர்களின் தற்காலிக சேர்க்கை ரத்து செய்யப்படும்.
கோவை,
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகள், 3 பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை மே மாதம் முதல் ஜூன் வரை நடந்தது.
சுமார் 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், முதற்கட்ட நகர்வின் முடிவுகள் கடந்த 4ம் தேதி பல்கலை.யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் தங்களின் பயனர் ஐடி மற்றம் பாஸ்வேர்ட் பயன்படுத்தி தங்களின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், 1,732 விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நாளை (7ம் தேதி) பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடி மற்றும் அலைபேசி எண்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், விண்ணப்பதரார்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறினால் அவர்களின் தற்காலிக சேர்க்கை ரத்து செய்யப்படும்.
இந்த கல்வியாண்டில் கல்லூரி திறக்கப்படும் தேதி, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாக மாணவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 0422-6611346, 94864-25076, 94886-35077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






