ஜெயிலுக்கு சென்ற கணவர்-கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண்

திரும்பி வந்த கணவர் வாழ அழைத்த போது தாக்குதல் நடத்தினர். இளம்பெண்ணின் கணவர் 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்தார்.
ஜெயிலுக்கு சென்ற கணவர்-கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண்
Published on

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு இளம்பெண்ணின் கணவர் அவருக்கு திருமணமானதை மறைத்து 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்தார். இது குறித்து மாணவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

தனியாக குழந்தைகளுடன் வசித்த இளம்பெண்ணுக்கு அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வரும் 27 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் ஜெயிலில் இருந்ததால் இளம்பெண் வாலிபரை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் கணவர், தனது மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். கள்ளக்காதலனும் அவரை அனுப்பி வைக்கவில்லை.

சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த இளம்பெண்ணின் கணவர் அவரது மனைவியின் கள்ளக்காதலன் நடத்தி வரும் செல்போன் கடைக்கு சென்றார். அங்கு இருந்த வாலிபரிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார்சைக்கிள் சாவியை எடுத்து இளம்பெண்ணின் கணவரின் வலது கை, தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்போன் கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com