என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருமத்தம்பட்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
- சம்பவத்தன்று இரவு நவநீதகிருஷ்ணன், உணவு வாங்குவதற்காக தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
- மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதும் சி.சி.டி.வி காட்சிகள் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.
சூலூர்,
திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் நவநீதகிருஷ்ணன்(26).
இவர் கோவை கருமத்தம்பட்டியில் தங்கி, கருமத்தம்பட்டி-அன்னூர் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு நவநீதகிருஷ்ணன், உணவு வாங்குவதற்காக தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கருமத்தம்பட்டி நோக்கி வந்தார்.
அப்போது அன்னூரில் இருந்து சென்னைக்கு துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. கருமத்தம்பட்டி நால் ரோட்டில் வரும் போது அங்குள்ள வளைவில் திரும்புவதற்காக டிரைவர் லாரியை திருப்பினார்.
அப்போது எதிர்பாராத விதமாக நவநீதகிருஷ்ணன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டு, லாரியில் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பார்த்து ஓடி சென்று உயிருக்கு போராடிய நவநீதகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நவநீதகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.






