என் மலர்
கோயம்புத்தூர்
- சி.ஐ.டி.யூ தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்
- கைத்தறி நெசவுத் தொழில் நலிவடையும் மாதங்களில் அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பகுதியில் சி.ஐ.டி.யூ தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம் சிறுமுகையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை வைத்தார். மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார், மாவட்டத் தலைவர் சிங்காரவேலு, கோவை மாவட்ட செயலாளர் இ.என்.ராஜகோபால் முன்னிலை வைத்தனர்.
மாவட்ட பொருளாளர் டி.ஆர்.ராமசாமி வரவேற்றார். காஞ்சிபுரம், கடலூர், பரமக்குடி, தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கைத்தறி சேலை ரகங்களை விசைத்தறியில் நெய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறி செயல்படும் விசைத்தறிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
கைத்தறி சேலைகளின் மூலப் பொருட்களான பட்டு நூல், நூல் ஜரிகை ஆகியவற்றின் சந்தை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட தொடக்க நெசவாளர் கூட்டுறவு வங்கி தொடங்க வேண்டும்.
கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் நிரந்தர அடையாள அட்டை வழங்க வேண்டும். கைத்தறி நெசவுத் தொழில் நலிவடையும் மாதங்களில் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
கைத்தறி சேலைகளை சாமானியரும் வாங்குவதற்கு ஏதுவாக ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளிக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு வழக்கத்தில் இருந்த மருத்துவ திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் கோவை மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.
- காதலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனவேதனை
- உன்னை நான் வெறுக்கிறேன் என குறுந்தகவல் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கினார்
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள மாதம்பட்டி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுரேந்தர் (வயது 28). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் ஆவாரம்பாளை யத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டது. இதன் காரணமாக இளம்பெண் சுரேந்தரருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் வாலிபர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று சுரேந்தர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் தனது காதலிக்கு செல் போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் தனது காதலிக்கு உன்னை நான் வெறுக்கிறேன் என் குறுந்தகவல் அனுப்பினார்.
பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்கள் பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சுரேந்தரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அவர் அவருடைய காதலியிடம் 30 நிமிடங்கள் பேசியதும், பின்னர் உன்னை வெறுக்கிறேன் என குறுந்தகவல் அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
போலீசார் தற்கொலை செய்து கொண்ட சுரேந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கத்திமுனையில் மிரட்டி தங்கச்சங்கிலியை பிடுங்க முயற்சி
- பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
கோவை,
கோவை தேவாங்கபேட்டை வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 46).
இவர் சுக்கிரவார் பேட்டை அருகே உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது அருகில் உள்ள தெப்பக்குளம் தண்டு மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து விஜயலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை கழற்றி தருமாறு கூறி மிரட்டினர். விஜயலட்சுமி முடியாது என்று கூறியவுடன் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் விஜயலட்சுமி கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி சத்தம் போட்டார். உடனே அப்பகுதி வழியாக சென்ற 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரையும் பிடித்து விஜயலட்சுமியை காப்பாற்றினர். பிடிபட்ட 2 பேரும் காந்திபுரத்தை சேர்ந்த குணசேகர் (26), மற்றும் ரத்தினபுரி சேர்ந்த சின்னு (23) என்பது தெரியவந்தது.
உடனடியாக இருவரையும் ஆர்.எஸ். புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா?
- போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை
சூலூர்,
கோவை கருமத்தம்பட்டி கணியூர் அருகே உள்ள கங்கா லட்சுமி தோட்டத்தை சேர்ந்தவர் கணபதியப்பன் (வயது 76). இவரது மனைவி பாப்பம்மாள் (72). இவர்களுடன் இவர்களது மகள் கிருஷ்ணவேணி மற்றும் பேரன் லோகேஷ், பேத்தி கோபிகா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
கணபதி தனது தோட்டத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலையில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று இந்த வீட்டை பார்ப்பதற்காக அவர் சென்றார். மகள் மற்றும் பேரன், பேத்திகள் வேலை விஷயமாக வெளியே சென்று இருந்தனர்.
பாப்பம்மாள் மட்டும் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்தார்.
இரவு 8 மணியளவில் பாப்பம்மாளின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர் யாரோ அவரது பின் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் அங்கு ஓடிச் சென்றனர். அங்கு அரிவாளால் வெட்டப்பட்டு பாப்பம்மாள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இது பற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் பாப்பம்மாளை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாப்பம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கருமத்தம்பட்டி போலீசார் இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேரில் சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொலையாளிகளின் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.கொலை எதன் காரணமாக நடந்தது என்பது தெரியவில்லை. மேலும் மூதாட்டி அணிந்து இருந்த நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை.
இது குறித்து கருமத்தமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தையல்நாயகி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை வெட்டி கொலை செய்த மர்மநபரை தேடி வருகின்றனர். பாப்பம்மாள் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது நகைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் கொல்லப்பட்டாரா? என் பது பற்றி விசாரணை நடக்கிறது.
- வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 3077 ஆக உயர்வு
- கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ தொகுதியில் அதிகபட்சமாக 435 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளது
கோவை,
பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பற்றிய முன்னோட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி பட்டியல் திருத்தம் பற்றிய ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பொள்ளாச்சி சப்கலெக்டர் பிரியங்கா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக்அலி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஜெயபால் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது கலெக்டர் கிராந்திகுமார் நிகழ்ச்சியில் பேசும்போது, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
இதன்படி 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசிக்கும் 10 வாக்கு சாவடிகள் பிரிக்கப்பட்டு உள்ளது. 300 பேருக்கும் கீழ் வசிக்கும் பகுதிகளில் 2 வாக்குச்சாவடிகள் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன.
மேலும் 19 வாக்குச்சாவடிகளில் வீதிகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. 65 வாக்குச்சாவடிகள் இட மாற்றம் செய்யப்படுகிறது. 29 சாவடிகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன. தொடர்ந்து 8 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை தற்போது 3077 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கவுண் டம்பாளையம் எம்.எல்.ஏ தொகுதியில் அதிகபட்சமாக 435 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளது.
இதேபோல மேட்டுப்பாளையத்தில் 321, சூலூரில் 329, கோவை வடக்கில் 298, தொண்டாமுத்தூரில் 310, கோவை தெற்கில் 251, சிங்காநல்லூரில் 323, கிணத்துக்கடவில் 305 பொள்ளாச்சியில் 269, வால்பாறையில் 236 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று தெரிவித்து உள்ளார்.
- நீரோடையில் கிடக்கும் குப்பைகள் மூலம் நோய் பரவும் அபாயம்
- குப்பை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்க கோரிக்கை
கோவை,
கோவை மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே நொய்யல் ஆறு மூலம் ஆங்காங்கே நீரோடைகள் ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் குடியிருப்புவாசிகள் ஒரு சிலர் இந்த நீரோடைகளில், குப்பை கழிவுகளை கொட்டுவதால், நீரோட்டம் தடைபடுவது மட்டுமின்றி, நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் நோய் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நொய்யல் ஆறு என்பது கோவைக்கு கிடைத்த வரப்பிரசாதம். இத்தகைய நொய்யல் ஆறு கோவை மாநகரம் முழுவதும் ஆங்காங்கே நீர் ஓடைகள் மூலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் செய்யும் தவறுகளால் இந்த நொய்யல் ஆறு மாசடைந்து காணப்படுகிறது.நகர வீதிகளில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைத்திருந்தாலும் குப்பை தொட்டியில் குப்பைைய போடாமல் கீழே போடுவார்கள்.
தற்போது குப்பைகளை நீரோடைகளில் கொட்ட தொடங்கி உள்ளனர்.
நீரோடை என்பதால் தண்ணீரில் அடித்து சென்று விடும் என நினைத்து குப்பைகளை கொட்டுகின்றனர். ஆனால் மேலும், மேலும் கொட்டப்படும் குப்பைகளால் அங்கு நீரோடை இருக்கிறதா என்ற கேள்வியே எல்லோருக்கும் எழும்.
அந்தளவுக்கு அங்கு குப்பைகளை தேக்கி நீர் செல்ல முடியாத அளவுக்கு மாறிவிடுகிறது.
மேலும் குப்பைகள் மக்கி அதில் இருந்து ஒரு சில பாக்டீரியாக்களும் வெளியாகின்றன. இவை துர்நாற்றம் ஏற்படுத்துவதோடும் பொதுமக்களும் சில பல நோய்களையும் உருவாக்கி வருகிறது.
குறிப்பாக கோவையில் மதுக்கரை மார்க்கெட் அருகே ஒரு நீரோடை செல்கிறது. அந்த நீரோடையில் அங்கு குடியிருப்பவர்கள் குப்பைகளை கொட்ட ஆரம்பித்தனர். தற்போது அங்கு நீரோட்டம் தடைபட்டு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
இவர்கள் மட்டுமின்றி மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் இரவு நேரங்களில் வந்து குப்பையை கொட்டி செல்கிறார்கள். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.
3 சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாக இருக்கும் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது.மேலும் நீர் ஓடையில் குவிக்கப்பட்டி ருக்கும் குப்பைகள் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோயையும் பரப்பி வருகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இதை ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
மேலும் குப்பைகளை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உணவுப்பொருட்களை தர ஆய்வு செய்ய நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படுவதாக அறிவிப்பு
- வாணிப கிடங்குகள் நவீனப்படுத்தப்பட்டு வருவதாகவும் பேட்டி
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உணவுப் பொருட்கள் தர கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்க ல்துறை அமைச்சர் சக்கரபாணி வாணிபக் கிடங்கை திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வினியோக கிடங்குகளை தமிழக அரசு நவீனப்படுத்தி வருகிறது. மொத்தமுள்ள 287 நுகர்பொருள் விநியோக கிடங்குகளில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நலன் கருதி தானியங்கி எந்திரங்கள் உதவியுடன் கிடங்குகளில் பொருட்களை அனுப்ப நவீன எந்திரங்கள் அமைக்கப்பட்டு ள்ளது. இதன் அடுத்த கட்டமாக உணவுப்பொருட்களை தர ஆய்வு செய்ய அனைத்து கிடங்குகளிலும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் கருமத்தம்பட்டியில் உள்ள 22 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலும் தர ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது . இங்கு அமைக்கப்பட்டு வரும் தர ஆய்வுக்கூ டத்தை அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.
பிறகு அங்கு இருக்கக்கூடிய உணவு பாதுகாப்பு கிடங்கை ஆய்வு செய்தார். அங்குள்ள உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்படும் விதத்தை கேட்டறிந்தார். பிறகு அமைச்சர் கூறுகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளும் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தர ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தை தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக உணவுப்பொருட்கள் தரமாகவும், காலதாம தமின்றியும் சரியான எடையில் பொருட்களை வழங்கவும் உணவுப்பொருள் வாணிப கிடங்குகள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் அண்ணாதுரை, கோவை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், கோவை மாவட்ட தர கட்டுப்பாட்டு மேலாளர் வனிதா, கருமத்தம்பட்டி நுகர்பொருள் பொருள் கிடங்கின் தர ஆய்வாளர் ரஞ்சித்குமார், சூலூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் கவிதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அமைச்சர் சக்கரபாணி, வாகராயம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்தார். அங்குள்ள வாகராயம்பாளையம் ரேஷன் கடையில் ஆய்வு செய்து, மக்களிடையே பொருட்கள் உரிய நேரத்தில் தரமாக கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார். இதை அடுத்து வாகராயம்பாளையத்தில் உள்ள வீடுகளுக்கும் சென்று பொருட்கள் தடையின்றி சரியான முறையில் கிடைக்கி றதா? என்பதை பொதுமக்க ளிடையே கேட்டறிந்தார். அப்போது கோவை கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பார்த்திபன், கோவை மாவட்ட பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக வெளியான புகாரின்பேரில் அதிரடி நடவடிக்கை
- போலீஸ் நிலையம், வனத்துறை அலுவலகம், ஊர்த்தலைவர்களிடமும் ஒப்படைக்க உத்தரவு
கோவை,
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு விலங்குகள் உள்ளன. அவற்றை ஒரு சிலர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதாக புகார் எழுந்து உள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்ட வனச்சரக அதிகாரி ஜெயராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன்படி கோவை வனச்சரக பகுதிகளில் ஒருசிலர் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி வேட்டையாடும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவுட்டுக்காய் தயாரித்து விற்பது, வெடிமருந்துகளை தவறாக பயன்படுத்துவது போன்ற குற்றசெயல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எனவே கோவை மாவட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர் உடனடியாக அவற்றை அந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையம், வனத்துறை அலுவலகம் மற்றும் ஊர்த்தலைவர்கள் ஆகியோரிடம் ஒரு மாதத்துக்குள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
அப்படி ஒப்படைக்காவிட்டால் மோப்பநாய்கள் மூலம் கண்டறியப்பட்டு, நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்போர் மீது இந்திய ஆயுத சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். வனத்துறை சார்பிலும் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் நாட்டு துப்பாக்கி பயன்படுத்துவோர், அவுட்டுக்காய் தயாரிப்பவர்கள் மற்றும் வெடிமருந்துகளை பதுக்கி வைத்து தவறாக பயன்படுத்துவோர் பற்றி பொதுமக்களுக்கு ஏதேனும் விவரங்கள் தெரிந்தால் அதுகுறித்து உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தன்னை யாரோ கூப்பிடுவதாகவும், விரைவில் இறந்து விடுவேன் எனவும் அடிக்கடி புலம்பி வந்தார்
- சித்தப்பா வீட்டில் தூக்கில் தொங்கினார்
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). கூலித் தொழி லாளி. இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனியாக வசித்த மணிகண்டன் அடிக்கடி தன்னை யாரோ கூப்பிடுவதாகவும், தான் விரைவில் இறந்து விடுவேன் என தனக்கு தானே அடிக்கடி புலம்பி வந்தார்.
சம்பவத்தன்று இவர் அருகே உள்ள சித்தப்பா மாரிமுத்து என்பவரது வீட்டிற்கு இரவு தூங்க சென்றார். நள்ளிரவு திடீரென மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது சித்தப்பா அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 100-க்கும் மேற்பட்டவர்கள் கையில் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.
- போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கருமத்தம்பட்டி:
சுங்க கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
கோவை கருமத்தம்பட்டி அருகே கோவை-அவி்னாசி மெயின் ரோட்டில் கணியூர் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல், கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கையில் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்க முடியாமல் தவித்தன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்களை தடுத்தனர். ஆனால் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர்.
கைதானவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக கணியூர் சுங்கச்சாவடியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
- பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியதாக, பேரூராட்சி ஊழியர் நடராஜை போலீசார் கைது செய்தனர்.
- ஒருவரிடம் நடராஜ் லஞ்சப்பணம் வாங்கி டேபிளில் வைத்தது உறுதி செய்யப்பட்டது.
கோவை:
கோவை பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஊழியராக வேலை பார்க்கும் நடராஜ் என்பவர் சிக்கினார். அவரிடம் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரிய வந்தது. எனவே போலீசார் அந்த பணம் எப்படி வந்தது என்று கேட்டனர். இதற்கு நடராஜிடம் சரியான பதில் இல்லை. எனவே அந்த பணத்தை லஞ்சஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து பேரூராட்சி ஊழியர் நடராஜை லஞ்சஒழிப்பு போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரிடம் கணக்கில் காட்டாத ரூ.5 ஆயிரம் பணம் வந்தது எப்படி என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
எனவே சூளேஸ்வரன்பட்டியில் அரசு வேலைகளை செய்து தருவதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியதாக, பேரூராட்சி ஊழியர் நடராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக லஞ்சஒழிப்பு போலீசார் கூறுகையில், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் கணக்கு பதிவீட்டாளராக வேலை பார்க்கும் நடராஜ் அங்கு வரும் பொதுமக்களிடம் அரசு வேலைகளை செய்து தருவதற்காக ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக ஏற்கெனவே பல்வேறு புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நடராஜ் அரசு வேலைகளை செய்து கொடுப்பதற்காக பொதுமக்களிடம் தொடர்ச்சியாக பணம் பெறுவது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடிப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி அவரை தீவிரமாக கண்காணித்து வந்தோம். இதில் பேரூராட்சிக்கு வந்திருந்த ஒருவரிடம் நடராஜ் லஞ்சப்பணம் வாங்கி டேபிளில் வைத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரை சுற்றி வளைத்து பிடித்து பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினோம். இதில் பேரூராட்சி ஊழியர் நடராஜ் அரசு வேலைகளை செய்து தருவதாக கூறி ஒருவரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து உள்ளோம்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- பாமாயில் இறக்குமதியை தடை செய்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணையை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடந்த 30 நாட்களாக தினமும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சூலூர்:
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சுல்தான்பேட்டையில் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து மாட்டு வண்டியுடன் வந்து விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில பிரச்சார குழு தலைவர் பூரண்டாம்பாளையம் மணி முன்னிலை வகித்தார்.
இந்த போராட்டத்தில் விவசாயிகள் மாட்டு வண்டிகளுடன் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டு சுல்தான் பேட்டையில் இருந்து செஞ்சேரி பிரிவு, செஞ்சேரி, செஞ்சேரிமலை ஆகிய 4 இடங்களில் போராட்டங்களை நடத்தினர். மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாட்டு வண்டிகளில் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
தமிழகம் முழுவதும் தேங்காய் விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொள்முதல் செய்யும் விலை மிகவும் குறைவாக உள்ளது.
ஆனால் பொது மக்களுக்கு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசு கர்நாடகா, பீகார், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை போன்று கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு இழைக்கக்கூடிய டாஸ்மார்க் மதுகடைகளை மூட வேண்டும்.
பாமாயில் இறக்குமதியை தடை செய்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணையை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மதிய உணவு, காலை சிற்றுண்டி ஆகிய திட்டங்களில் தேங்காய் எண்ணையை பயன்படுத்த வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
கடந்த 30 நாட்களாக தினமும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






