என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது
- கத்திமுனையில் மிரட்டி தங்கச்சங்கிலியை பிடுங்க முயற்சி
- பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
கோவை,
கோவை தேவாங்கபேட்டை வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 46).
இவர் சுக்கிரவார் பேட்டை அருகே உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது அருகில் உள்ள தெப்பக்குளம் தண்டு மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து விஜயலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை கழற்றி தருமாறு கூறி மிரட்டினர். விஜயலட்சுமி முடியாது என்று கூறியவுடன் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் விஜயலட்சுமி கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி சத்தம் போட்டார். உடனே அப்பகுதி வழியாக சென்ற 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரையும் பிடித்து விஜயலட்சுமியை காப்பாற்றினர். பிடிபட்ட 2 பேரும் காந்திபுரத்தை சேர்ந்த குணசேகர் (26), மற்றும் ரத்தினபுரி சேர்ந்த சின்னு (23) என்பது தெரியவந்தது.
உடனடியாக இருவரையும் ஆர்.எஸ். புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






