என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியது
- வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 3077 ஆக உயர்வு
- கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ தொகுதியில் அதிகபட்சமாக 435 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளது
கோவை,
பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பற்றிய முன்னோட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி பட்டியல் திருத்தம் பற்றிய ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பொள்ளாச்சி சப்கலெக்டர் பிரியங்கா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக்அலி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஜெயபால் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது கலெக்டர் கிராந்திகுமார் நிகழ்ச்சியில் பேசும்போது, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
இதன்படி 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசிக்கும் 10 வாக்கு சாவடிகள் பிரிக்கப்பட்டு உள்ளது. 300 பேருக்கும் கீழ் வசிக்கும் பகுதிகளில் 2 வாக்குச்சாவடிகள் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன.
மேலும் 19 வாக்குச்சாவடிகளில் வீதிகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. 65 வாக்குச்சாவடிகள் இட மாற்றம் செய்யப்படுகிறது. 29 சாவடிகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன. தொடர்ந்து 8 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை தற்போது 3077 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கவுண் டம்பாளையம் எம்.எல்.ஏ தொகுதியில் அதிகபட்சமாக 435 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளது.
இதேபோல மேட்டுப்பாளையத்தில் 321, சூலூரில் 329, கோவை வடக்கில் 298, தொண்டாமுத்தூரில் 310, கோவை தெற்கில் 251, சிங்காநல்லூரில் 323, கிணத்துக்கடவில் 305 பொள்ளாச்சியில் 269, வால்பாறையில் 236 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று தெரிவித்து உள்ளார்.






