என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே மூதாட்டி வெட்டி கொலை
    X

    கோவை அருகே மூதாட்டி வெட்டி கொலை

    • முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா?
    • போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை

    சூலூர்,

    கோவை கருமத்தம்பட்டி கணியூர் அருகே உள்ள கங்கா லட்சுமி தோட்டத்தை சேர்ந்தவர் கணபதியப்பன் (வயது 76). இவரது மனைவி பாப்பம்மாள் (72). இவர்களுடன் இவர்களது மகள் கிருஷ்ணவேணி மற்றும் பேரன் லோகேஷ், பேத்தி கோபிகா ஆகியோர் வசித்து வருகின்றனர்.

    கணபதி தனது தோட்டத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலையில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று இந்த வீட்டை பார்ப்பதற்காக அவர் சென்றார். மகள் மற்றும் பேரன், பேத்திகள் வேலை விஷயமாக வெளியே சென்று இருந்தனர்.

    பாப்பம்மாள் மட்டும் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்தார்.

    இரவு 8 மணியளவில் பாப்பம்மாளின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர் யாரோ அவரது பின் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் அங்கு ஓடிச் சென்றனர். அங்கு அரிவாளால் வெட்டப்பட்டு பாப்பம்மாள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இது பற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் பாப்பம்மாளை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாப்பம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கருமத்தம்பட்டி போலீசார் இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேரில் சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

    கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொலையாளிகளின் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.கொலை எதன் காரணமாக நடந்தது என்பது தெரியவில்லை. மேலும் மூதாட்டி அணிந்து இருந்த நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை.

    இது குறித்து கருமத்தமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தையல்நாயகி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை வெட்டி கொலை செய்த மர்மநபரை தேடி வருகின்றனர். பாப்பம்மாள் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது நகைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் கொல்லப்பட்டாரா? என் பது பற்றி விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×