கோவையில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர் ஒரு மாதத்துக்குள் ஒப்படைக்க வனத்துறை அறிவுறுத்தல்

காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக வெளியான புகாரின்பேரில் அதிரடி நடவடிக்கை போலீஸ் நிலையம், வனத்துறை அலுவலகம், ஊர்த்தலைவர்களிடமும் ஒப்படைக்க உத்தரவு
கோவையில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர் ஒரு மாதத்துக்குள் ஒப்படைக்க வனத்துறை அறிவுறுத்தல்
Published on

கோவை,

கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு விலங்குகள் உள்ளன. அவற்றை ஒரு சிலர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதாக புகார் எழுந்து உள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்ட வனச்சரக அதிகாரி ஜெயராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன்படி கோவை வனச்சரக பகுதிகளில் ஒருசிலர் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி வேட்டையாடும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவுட்டுக்காய் தயாரித்து விற்பது, வெடிமருந்துகளை தவறாக பயன்படுத்துவது போன்ற குற்றசெயல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எனவே கோவை மாவட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர் உடனடியாக அவற்றை அந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையம், வனத்துறை அலுவலகம் மற்றும் ஊர்த்தலைவர்கள் ஆகியோரிடம் ஒரு மாதத்துக்குள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

அப்படி ஒப்படைக்காவிட்டால் மோப்பநாய்கள் மூலம் கண்டறியப்பட்டு, நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்போர் மீது இந்திய ஆயுத சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். வனத்துறை சார்பிலும் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் நாட்டு துப்பாக்கி பயன்படுத்துவோர், அவுட்டுக்காய் தயாரிப்பவர்கள் மற்றும் வெடிமருந்துகளை பதுக்கி வைத்து தவறாக பயன்படுத்துவோர் பற்றி பொதுமக்களுக்கு ஏதேனும் விவரங்கள் தெரிந்தால் அதுகுறித்து உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com