என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்சஒழிப்பு"

    • பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியதாக, பேரூராட்சி ஊழியர் நடராஜை போலீசார் கைது செய்தனர்.
    • ஒருவரிடம் நடராஜ் லஞ்சப்பணம் வாங்கி டேபிளில் வைத்தது உறுதி செய்யப்பட்டது.

    கோவை:

    கோவை பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஊழியராக வேலை பார்க்கும் நடராஜ் என்பவர் சிக்கினார். அவரிடம் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரிய வந்தது. எனவே போலீசார் அந்த பணம் எப்படி வந்தது என்று கேட்டனர். இதற்கு நடராஜிடம் சரியான பதில் இல்லை. எனவே அந்த பணத்தை லஞ்சஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து பேரூராட்சி ஊழியர் நடராஜை லஞ்சஒழிப்பு போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரிடம் கணக்கில் காட்டாத ரூ.5 ஆயிரம் பணம் வந்தது எப்படி என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

    எனவே சூளேஸ்வரன்பட்டியில் அரசு வேலைகளை செய்து தருவதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியதாக, பேரூராட்சி ஊழியர் நடராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக லஞ்சஒழிப்பு போலீசார் கூறுகையில், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் கணக்கு பதிவீட்டாளராக வேலை பார்க்கும் நடராஜ் அங்கு வரும் பொதுமக்களிடம் அரசு வேலைகளை செய்து தருவதற்காக ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக ஏற்கெனவே பல்வேறு புகார்கள் வந்தன.

    இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நடராஜ் அரசு வேலைகளை செய்து கொடுப்பதற்காக பொதுமக்களிடம் தொடர்ச்சியாக பணம் பெறுவது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடிப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி அவரை தீவிரமாக கண்காணித்து வந்தோம். இதில் பேரூராட்சிக்கு வந்திருந்த ஒருவரிடம் நடராஜ் லஞ்சப்பணம் வாங்கி டேபிளில் வைத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவரை சுற்றி வளைத்து பிடித்து பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினோம். இதில் பேரூராட்சி ஊழியர் நடராஜ் அரசு வேலைகளை செய்து தருவதாக கூறி ஒருவரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து உள்ளோம்.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ×