என் மலர்tooltip icon

    சென்னை

    • இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு.
    • மொழி திணிப்பு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை உலக சரித்திரத்தை புரட்டினால் தெரியும்.

    சென்னை:

    தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மொழி சமத்துவமே தி.மு.க.வின் லட்சியம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    * இந்தியா ஒற்றை மொழி பேசும் நாடு அல்ல, அது பல்வேறு மொழி வழி தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றியம்.

    * இந்தி மொழி மட்டுமே இந்திய நாட்டின் தேசிய மொழி என்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு.

    * சமஸ்கிருதமே இந்தியாவின் மூல மொழி என்பது நம்மை அடிமையாக்கும் முயற்சி.

    * மத்தியில் ஆள்பவர்கள் தமிழ் பகைவர்களாக உள்ளனர்.

    * தமிழ் மீது மிகுந்த பற்று வைத்துள்ளதாக கூறும் பிரதமர் மோடி சமஸ்கிருதத்திற்கு ரூ.2,435 கோடி ஒதுக்கியுள்ளார்.

    * 2014-2023 வரை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ரூ.167 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    * நிதி ஒதுக்கீட்டில் உள்ள வேறுபாடே அவர்கள் தமிழ் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டு காட்டும்.

    * இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு.

    * இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிதான் இந்தி, அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக உள்ளது.

    * மொழி திணிப்பு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை உலக சரித்திரத்தை புரட்டினால் தெரியும்.

    * தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் நிதி தராமல் ஆதிக்க மொழிகளை கொண்டு மத்திய பா.ஜ.க. அரசு அழிக்க துடிக்கிறது.

    * தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை பேசுவோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது என்றார். 

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
    • அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு.

    இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.

    அதே நேரத்தில், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.

    சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. அதே நேரத்தில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.

    • சென்னையில் இளம் எழுத்தாளர்கள் 15 பேர் எழுதிய புத்தகங்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது.
    • இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும் ரைட்டத்தான் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இளம் எழுத்தாளர்கள் 15 பேர் எழுதிய புத்தகங்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது. இளம் வயது எழுத்தாளர்களை உருவாக்கும் நோக்கில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும், இளம் எழுத்தாளர்களை வளர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவும், இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும் ரைட்டத்தான் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலும் உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ரைட்டத்தான் (Writathon) என்ற படைப்பு எழுத்துப் போட்டியை லேர்னர்ஸ் சர்க்கிள் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் 8 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்.

     

    இந்த போட்டி, அனைத்து வகைகளிலும் கவிதை, சிறுகதை மற்றும் குறுநாவல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க இளம் எழுத்தாளர்களை அழைக்கிறது. ரூ. 20,000 மதிப்புள்ள ரொக்கப் பரிசுகளுடனும், 10+ பங்கேற்பாளர்கள் உள்ள பள்ளிகளுக்கான மதிப்புமிக்க பள்ளி ஊக்கப் பரிசுடனும், வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்த ரைட்டத்தான் போட்டி ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

    • ரம்ஜானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பல பேருக்கு கோபம் வரும்.
    • சிறுபான்மை மக்களுடைய மனதில், பெரும்பான்மை இடத்தை பிடித்த ஒரு அரசு என்றால், அது திராவிட மாடல் அரசுதான்.

    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஏற்பாட்டில் நடக்கின்ற இந்த சிறப்புக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புனித ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    முதலில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய புனித ரம்ஜான் வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ரம்ஜானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பல பேருக்கு கோபம் வரும். அதை பற்றியெல்லாம் நமக்கு கவலை இல்லை. ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது என்றால், இன்னும் நூறு முறை கூட மீண்டும், மீண்டும் நாங்கள் ரம்ஜான் வாழ்த்துகளை சொல்லிக் கொண்டே இருப்போம்.

    இந்தியாவிலேயே இன்றைக்கு சிறுபான்மை மக்கள் உங்களுக்கு சொந்த வீடு போல இருக்கின்ற ஒரு மாநிலம் அப்படியென்றால், அது நம்முடைய தமிழ்நாடு என்று நாம் தைரியமாக சொல்லலாம். சிறுபான்மை மக்களுடைய மனதில், பெரும்பான்மை இடத்தை பிடித்த ஒரு அரசு என்றால், அது நம்முடைய திராவிட மாடல் அரசுதான். அதற்கு உங்களிடம் இருக்கின்ற அந்த மகிழ்ச்சியும், உணர்வும், பாசமுமே சாட்சி.

    திராவிட இயக்கத்துக்கும்– இஸ்லாமிய மக்களுக்குமான உறவு இன்று நேற்று தொடங்கிய உறவு கிடையாது.பெரியவர் மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுடைய காலத்தில் இருந்தே திராவிட இயக்கம் இஸ்லாமிய மக்களுடைய அன்பை பெற்று செயல்பட்டு வருகின்றது.

    இன்றைக்கு கலைஞர் வழியில் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்களும், இஸ்லாமிய பெருமக்களுக்கு அனைத்து வகையிலும் துணை நின்று வருகிறார். நம்முடைய கழக அரசு ஆட்சிக்கு வந்ததுமே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும் என்று சட்டப்பேரவையில் முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் தான் நம்முடைய முதலமைச்சர்.

    முத்தலாக் சட்டம், என்.ஆர்.சி, இப்படி வருஷா வருஷம் ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்தி, சிறுபான்மை மக்களை நெருக்கடிக்கு ஆளாக்குகின்ற வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஆனால், அதை எல்லாம் இந்தியாவிலேயே கடுமையாக எதிர்க்கின்ற ஒரு இயக்கம், ஒரு மாநிலம் ஒரு அரசு என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான், நம்முடைய முதலமைச்சர்தான்.

    குறிப்பாக, இன்றைக்கு ஒரு புது பிரச்சினையை புதிதாக கையில் எடுத்து இருக்கிறார்கள். அதுதான் வக்ஃப் வாரிய திருத்த மசோதா என்று ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த திருத்தம் மட்டும் அமலுக்கு வந்தால், வக்ஃப் வாரிய சொத்துக்கள் வக்ஃப் வாரியங்களிடம் இருந்து அபகரிக்கப்படுகின்ற அபாயத்திற்கு தள்ள முயற்சிக்கிறார்கள்.

    அதுமட்டுமல்ல, வக்ஃப் வாரியங்களுக்கு ஒன்றிய அரசு சொல்கின்ற ஆட்களைதான் நியமனம் செய்ய வேண்டும் என்று இந்த மசோதா குறிப்பிடுகின்றது. குறிப்பாக, முஸ்லிம் அல்லாத நபர்களையும், வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக சேர்க்கக் கூடிய சூழல் உருவாக இருக்கிறது. அதனால்தான் நம்முடைய தலைவர், இந்த சட்டத்தை துவக்கத்திலிருந்து கடுமையாக எதிர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
    • 8-ஆம் தேதி நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

    சென்னை கடற்கரை- எழும்பூர் இடையில் 4-ஆவது வழித்தட இணைப்பு பணிகள் காரணமாக எழும்பூர் ரெயில் நிலைய ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி,

    காரைக்குடி- சென்னை எழும்பூர் இடையிலான பல்லவன் விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    8-ஆம் தேதி நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேரமாக செங்கல்பட்டு- எழும்பூர் வரை ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு ரெயில் நிலையத்துடன் நின்றுவிடும்.

    8-ஆம்தேதி புறப்படும் ஐதராபாத்- சென்னை தாம்பரம் சாமினார் எக்ஸ்பிரஸ் சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.

    மண்டபத்தில் இருந்து 8-ஆம் தேதி இரவு புறப்படும் மண்டபம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22662) தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

    தூத்துக்குடியில் இருந்து 8-ஆம் தேதி புறப்படும் தூத்துக்குடி- சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மாம்பலம் வரை இயக்கப்படும்.

    மண்டபத்தில் இருந்து 8-ஆம் தேதி மாலை புறப்படும் மண்டபம்- சென்னை (16752) எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை தாம்பரம் வரை இயக்கப்படும்.

    புதுச்சேரியில் இருந்து 8ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் புதுச்சேரி- சென்னை எழும்பூர் (66052) மெமு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

    எழும்பூரில் இருந்து புறப்படும் சேது விரைவு ரெயில் 8-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

    9ஆம் தேதி (66051) சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி புறப்படும் மெமு ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

    தாம்பரம்- ஐதராபாத் (12759) சாமினார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 9-ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

    • ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் விழா மற்றும் இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

    இந்த விழாவில் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன், கலந்து கொண்டனர்.

    • இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் திமுக கவுன்சிலர்.
    • திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    மேலும், "இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன்.

    திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் புதியதாக தொடரப்பட்ட வழக்கில் தாமோதரன், விஜயா, கோவிந்தராஜ் மற்றும் பரமசிவம் கைது.
    • ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷச் சாராய விற்பனை, கடத்தல் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரன் உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி மற்றும் தாமோதரன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது முக்கிய குற்றவாளியான இருவருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது. மோசமான மற்றும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவருக்கும் கருணை காட்டக்கூடாது என என சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடந்த மாதம் 15 ந்தேதி ஜாமின் வழங்க நீதிபதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

    இதற்கிடையே கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் புதியதாக தொடரப்பட்ட வழக்கில் தாமோதரன், விஜயா, கோவிந்தராஜ் மற்றும் பரமசிவம் கைது செய்யப்பட்டனர். இவர்களை அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் கடந்த 27 ந்தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தாமோதரன், விஜயா, கோவிந்தராஜ் மற்றும் பரமசிவம் ஆகியோரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    • ஆழ்துளை எரிவாயுக் கிணறு அமைக்கும் நடவடிக்கை முழு கடலோரப் பகுதியை பாதிக்கப்படைய செய்யும்.
    • இது கடலோர சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியுள்ளது என்றார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறேன்.

    ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொகுதிகளை ஏலம் விடுவதற்கான திறந்தவெளி பரப்புரிமை கொள்கை (Open Acreage Licensing Policy-Bid Round-X) அறிவிப்பினை 11.02.2025 அன்று தொடங்கியிருக்கிறது. அந்த அறிவிப்பில் காவிரிப் படுகையில் CY-DWHP-2024/1 என்ற தொகுதி பெயரில் 9990.96 சதுர கி.மீ. பரப்பளவும் அடங்கும். இது மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்திற்குள்ளும், பாக் விரிகுடா மற்றும் வாட்ஜ் கரைக்கு அருகில் உள்ளது.

    மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்காவை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடற்பகுதி, உயிர்க்கோளக் காப்பகமாக ஒன்றிய அரசால் 18.02.1989 அன்று அறிவிக்கப்பட்டது. இது பவளப்பாறைகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள் மற்றும் காடுகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளது.

    இந்த உயிர்க்கோளக் காப்பகம், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரையிலிருந்து 560 சதுர கி.மீ பரப்பளவில், பரந்து விரிந்து கிடக்கும் 21 தீவுகள் மற்றும் அருகிலுள்ள பவளப்பாறைகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது. இது பல்வேறு வகையான கடல் விலங்கினங்களின் புகலிடமாக விளங்கி வருகிறது.

    தமிழ்நாடு அரசு செப்டம்பர் 2021-ல் பாக் விரிகுடாவில் மிக அரிதான கடற்பசு (Dugong) இனத்தைப் பாதுகாக்கும் வகையில், இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை அறிவித்துள்ளது. இது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதியில் 448 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது.

    இந்தப் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள், இந்தப் பகுதிகளில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு, அவற்றின் வளமான பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் மற்றும் கடலின் ஒட்டுமொத்த பாதுகாப்பினையும் சீர்குலைக்கக்கூடும்.

    வண்டல் படிவுகள், நச்சுக் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு போன்ற அபாயங்கள் மட்டுமின்றி, மன்னார் வளைகுடாவை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.

    ஒன்றிய அரசின் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் இதுபோன்ற எந்தவொரு இடையூறும், முழு கடலோரப் பகுதியையும் பாதிக்கப்படையச் செய்யும். இது கடலோர சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.

    துரதிர்ஷ்டவசமாக, இந்த ஏல அறிவிப்புக்கு முன்பாக ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசிடம் கருத்து எதையும் கேட்கவில்லை. உரிய ஆலோசனை கேட்கப்பட்டிருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கும்.

    எனவே, இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இந்த ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்கான ஏல முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறும், ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட அனைத்து பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும் OALP-இலிருந்து நீக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

    எளிதில் பாதிக்கப்படக்கூடிய, பாதுகாக்கப்பட்ட இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கியமான பிரச்சனையில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 20 நாட்கள் போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதி கோரி மனு.
    • இரண்டு நாட்கள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

    விவசாய நிலங்களை கோவில் நிலங்கள் எனக்கூறி, இந்து அறநிலைய துறை விவசாயிகளை வாடகைத்தாரர்களாக மாற்றுவதை கண்டித்து 20 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்து அறநிலைய துறைக்கு எதிராக 2 நாட்கள் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

    • தலைவராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி. ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டார்.
    • நீதி சாராத 2 உறுப்பினர்களாக வி.ராமராஜ், ஆறுமுக மோகன் அலங்காமணி நியமிக்கப்பட்டனர்.

    தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் பதவி ஏற்றுக்கொண்டார். உறுப்பினர்களாக ராமராஜ், ஆறுமுக மோகன் அழகுமணி ஆகியோரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கத்தை நியமித்து கவர்னர் உத்தரட்டார். மேலும் நீதி சாராத 2 உறுப்பினர்களாக, மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷனின் தலைவர் வி.ராமராஜ் (நாமக்கல்) மற்றும் வருமான வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில்தான் இன்னு பதவி ஏற்றுக்கொண்டனர்.

    லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் 17.4.2027 வரை பதவி வகிப்பார். மற்ற 2 உறுப்பினர்கள் தங்கள் 70 வயது வரையிலோ அல்லது 5 ஆண்டுகள் வரையிலோ, இதில் எது முதலில் வருகிறதோ? அதுவரையில் பதவியில் நீடிப்பார்கள்.

    லோக் ஆயுக்தா தலைவராக பதவி ஏற்றுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ராஜமாணிக்கம் 31.5.1959-ம் ஆண்டு பிறந்தவர். 1983-ம் ஆண்டு வக்கீலாக பணியை தொடங்கி, அதன்பின்னர் மாவட்ட நீதிபதி, மாவட்ட தலைமை நீதிபதி என படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். 2016-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு பதிவாளராக பதவியேற்ற அவர் அடுத்த ஆண்டில் (2017) சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனார். 30.5.2021 அன்று நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் நீதி பிரிவு உறுப்பினராக 18.4.2022 முதல் 19.8. 2024 வரை பணியாற்றினார்.

    • கொரோனா காலத்தில் வங்கி கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
    • தனியார் வங்கிகள் அதிக வட்டி விதித்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    கொரோனா காலத்தில் பலர் வேலையை இழந்தனர். இதனால் வங்கிகளில் பெற்ற கடன் மற்றும் இ.எம்.ஐ-யை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு, வேலையின்மை ஆகியவற்றின் காரணமாக வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் வட்டியை தள்ளுபடி செய்ய வங்கிகள் மறுத்துவிட்டன. இ.எம்.ஐ. கட்ட காலஅவகாசம் வழங்கப்பட்டது. சில வங்கிகளில் வட்டிக்கு வட்டி என அதிக வட்டி வசூலித்தாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் சாந்திகுமாரி என்பவர் கொரோனா காலத்தில் அதிக வட்டி விதித்ததாக தனியார் வங்கிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றதில் புகார் அளித்தார். இந்த புகார் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது கொரோனா காலத்தில் அதிக வட்டி விகித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை 4 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.

    ×