என் மலர்tooltip icon

    சென்னை

      சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு அவரை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.

      இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

      தந்தை மறைவுக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, நேரில் வந்து ஆறுதல் சொன்ன அமித்ஷா அவர்களுக்கும் நன்றி.

      தந்தை மறைந்த செய்தி கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்ததோடு, பா.ஜ.க. கட்சி உங்களோடு துணை நிற்கிறது என்று கூறினார்கள்.

      அதேபோல் ஜே.பி.நட்டா, சந்தோஷ், தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கள் இல்லத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி. அமித்ஷா அவர்களும் என் தந்தையை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டு பேசினார்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • பொன்முடி அதிகாரமிக்க ஒரு அமைச்சராக நீடிப்பது பேரவலம் இல்லையா?
      • பொன்முடி போன்ற முதலைகளை பொறுப்பு-நீக்கம் செய்வதெல்லாம் அப்பட்டமான கண் துடைப்பு நாடகம் என்று மக்கள் அறிவார்கள்!

      தமிழக பா.ஜ.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

      "உத்தம சிகாமணி" மு.க.ஸ்டாலின் அவர்களே!

      தி.மு.க. போன்ற குடும்ப கட்சிகளில் துணை பொது செயலாளருக்கும் சரி அடிப்படை உறுப்பினருக்கும் சரி, அதிகாரம் என்பது சூனியம் தான்!

      இந்நிலையில், மனித மாண்புகளுக்கு எந்த விதமான யோக்கியத்தையும் இல்லாத பொன்முடியை வெறும் பொறுப்பு-நீக்கம் செய்வதோடு முடிந்துவிடாது உங்கள் அடிப்படை நேர்மையை நிரூபிக்கும் இடம்.

      பெண்களை இழிவு செய்ததோடு தமிழகத்தின் பழம்பெருமைமிக்க அடையாளமாகவும், தமிழ் மொழியை வளம் கொழிக்க வைத்த சைவ - வைணவ சமயங்களையும், அதன் புனித அடையாளங்களையும் எவ்வளவு இழிவுபடுத்திப் பேச முடியுமோ அந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி பேசியுள்ள பொன்முடி அதிகாரமிக்க ஒரு அமைச்சராக நீடிப்பது பேரவலம் இல்லையா?

      மேலும், தொடர் ஈனப்பேச்சாளன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற கீழ் மட்ட நிர்வாகிகளையே நீக்குவதுபோல் நீக்கிவிட்டு சில வாரங்களிலேயே மறுவாழ்வு கொடுக்கும் திமுக, பொன்முடி போன்ற முதலைகளை பொறுப்பு-நீக்கம் செய்வதெல்லாம் அப்பட்டமான கண் துடைப்பு நாடகம் என்று மக்கள் அறிவார்கள்!

      பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவது மட்டுமே நீங்கள் திராணியுள்ள தலைவர் மற்றும் மாண்புள்ள முதல்வர் என்பதை நிரூபிக்கும்!

      மற்ற அறிவிப்புகளெல்லாம் உங்கள் பலவீனத்தின் எடுத்துக்காட்டே!

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • உயர்க்கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
      • தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

      தி.மு.க. அமைச்சர்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்குகின்றனர். அந்த வகையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.

      அந்த வகையில், அரசு பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் செய்வதை அமைச்சர் பொன்முடி, 'ஓசி பயணம்' என்று பேசியதும், அதன் பின்னர் பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டதும் சர்ச்சையானது.

      மேலும், பள்ளிக்கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை உள்ளதாக புகார் அளித்தார். பெண்ணின் கோரிக்கையை தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலரிடம் பொன்முடி விசாரித்துக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பேசிய பொன்முடி, எனக்கோ ஓட்டு போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க. நீங்க வந்து கேக்குறீங்க. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஓட்டு போட்டவர்கள், போடாதவர்களுக்கும் நல்லதைச் செய்ய சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். ரோடு போட்டது நான், பஸ் விட்டது நான், குடி தண்ணீர் விட்டது நான்! ஏதாவது குறை இருந்தால் எழுதிக் கொடுங்கள், சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கத்திக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம் என்று கூறினார்.

      இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அய்யா ஆஸ்பத்திரி வேணும் என்று கேட்ட பொதுமக்களிடம், நீ என்ன எனக்கா ஓட்டுப் போட்டாய் என்று கேட்டார்.

      மேலும், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் பகுதியில் மகளிர் உரிமைத் தொகை குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி, அங்கிருந்த பெண்களிடம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கேள்வி கேட்டு விளக்கம் அளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்காமல் ஒருமையில் பேசினார்.

      இதனை தொடர்ந்து, அவரது உயர்க்கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

      இந்த நிலையில், கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது. பொன்முடியின் பேச்சுக்கு தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

      இதனால் அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியில் உள்ளார். 



      • குடும்பத்தினர் டாக்டர் ராமதாசிடம் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.
      • சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

      திண்டிவனம்:

      திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார் .

      அப்போது கட்சி நிறுவனரான நான் இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட போவதாக அறிவித்தார். கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

      இந்த நிலையில் பா.ம.க. வின் பல்வேறு நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் கட்சியில் தலைவராக தொடர வேண்டும் என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

      நேற்று மாலை 4 மணி அளவில் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோ சனை நடத்துவதற்காக டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் இளைஞர் அணி தலைவர் முகுதனின் தாயாருமான காந்தி, இளைய மகள் கவிதா, மாநில பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன்,மயிலம் எம்.எல்.ஏ.சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி,முன்னாள்எம்.பி. செந்தில்குமார், பா.ம.க. மாநில நிர்வாகி வக்கீல் பாலு ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்திக்க வந்தனர்.

      இதில் பா.ம.க. பொரு ளாளர் திலகபாமாவிற்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. மற்றவர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்திவிட்டு ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.

      இன்று காலை பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும்பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்திக்க உள்ளனர். அதில் சுமூகமான முடிவு ஏற்படும் என பா.ம.க. வட்டாரம் தெரிவிக்கிறது.

      டாக்டர் ராமதாஸ் மகள்கள் மற்றும் பேரன் முகுந்தன் ஆகியோர் கட்சியினர் வெளியே சென்ற பிறகு மீண்டும் ஆலோசனை ஈடுபட்டனர்.

      இரவு வரை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. ஆனால் அதில் எந்த முடிவும் ஏற்படாமல் சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

      ராமதாசை சந்தித்து விட்டு வந்த வக்கீல் பாலுவிடம் நிருபர்கள், ஆலோசனையில் என்ன பேசினீர்கள் என்று கேட்டனர். அதற்கு பாலு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இது வழக்கமான நிகழ்வு தான் எனக் கூறிவிட்டு எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் கிளம்பி விட்டார்.

      3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை முடிந்த நிலையில் டாக்டர் ராமதாசின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்தி, இளைய மகள் கவிதா மற்றும் பா.ம.க. இளைஞரணி தலைவர் முகுந்தன் ஆகியோர் மட்டுமே டாக்டர் ராமதாசிடம் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.

      இந்த நிலையில் வக்கீல் பாலு,முன்னாள் எம்.பி. செந்தில்குமார்,தலைமை நிலைய செயலாளர் அன்பழகன்ஆகியோர் டாக்டர் அன்புமணி ராமதாசை இன்று சென்னையில் சந்திக்க உள்ளதாகவும் பா.ம.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

      • கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவறாகும்.
      • இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்.

      மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்"" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

      அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

      தலைவர் தளபதி அவர்கள், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். 

      • பொன்முடி வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
      • பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

      சென்னை:

      அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

      இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

      இதையடுத்து தி.மு.க.வில் அமைச்சர் பொன்முடி வகித்து வரும் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

      பொன்முடி வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

      பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

      தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

      • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பல்வேறு கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
      • தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.

      பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று பல்வேறு கட்சி தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று முடிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      இந்த நிலையில் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா புறப்பட்டு சென்றார்.

      காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு அவரை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.

      • அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
      • தி.மு.க.வில் அமைச்சர் பொன்முடி வகித்து வரும் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

      சென்னை:

      அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

      அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

      இந்த நிலையில், தி.மு.க.வில் அமைச்சர் பொன்முடி வகித்து வரும் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொன்முடி வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

      • டி.டி.வி.தினகரனுக்கு நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதி.
      • டி.டி.வி.தினகரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

      சென்னை:

      அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

      டி.டி.வி.தினகரனுக்கு நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதனை தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

      ஆனால் டி.டி.வி.தினகரன் தரப்பில், வழக்கமான பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

      • காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன்?
      • காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நீட் என்ற தேர்வை அறிமுகம் செய்தவரே உங்கள் கட்சியை சேர்ந்த அன்றைய மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தானே?

      அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

      பொதுவாக, ஒரு ஆட்சிக்கான அடையாளமாக, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே திகழும். ஆனால், ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல ஆட்சியாக இருக்கிறது.

      இதனை ஸ்டாலினும் நன்கு உணர்ந்தே இருக்கிறார். அதனால் தான், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து இவைகளை திசைதிருப்ப வரிசையாக நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.

      கவுண்டமணி ஒரு நகைச்சுவையில் இலையில் செங்கலை வைத்துவிட்டு "சோத்துல கல்லு இருக்கு" என்பார். அதுபோலத் தான் இருக்கின்றன மு.க.ஸ்டாலின் கொண்டுவரும் தீர்மானங்கள்!

      இந்த கருணாநிதி காலத்து டெக்னிக் எல்லாம் இன்னும் மக்களிடம் செல்லுபடியாகும் என்று நம்புகிறீர்களா? வாய்ப்பே இல்லை!

      இவ்வளவு தீர்மானங்களை வரிசை கட்டிக்கொண்டு வருபவர், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன்?

      எஜமான விசுவாசம் தடுக்கிறதா மு.க.ஸ்டாலின் அவர்களே?

      கர்நாடக காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருடன் பல கூட்டங்களில் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் நீங்கள், ஒரு முறையாவது காவிரி குறித்து பேசியதுண்டா?

      "மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு நன்மை தரும்" என்று தமிழ்நாட்டிலேயே கர்நாடக முதல்வரை பேசவிட்டு வேடிக்கை பார்த்த கொத்தடிமைகள் தானே நீங்கள்?

      கேரள கம்யூனிஸ்ட் முதல்வருடன் பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டு கைகுலுக்கிக் கொண்டிருக்கும் நீங்கள்,

      ஒரு முறையாவது முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் மாநில உரிமை குறித்து , ஒரு கோரிக்கையாவது வைத்தது உண்டா?

      2009-14 UPA கூட்டணி ஆட்சியில், முதுகைக் காட்டினால் கூட கையெழுத்து போடும் அளவிற்கு காங்கிரசுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டு மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவித்த எஜமான விசுவாசிகள் நீங்கள் தானே?

      இலங்கை இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, காங்கிரசுக்கு சாமரம் வீசிக்கொண்டு, எத்தனை மந்திரி என விவாதித்துக் கொண்டிருந்த சுயநலவாதிகள் தானே நீங்கள்?

      2ஜி இமாலய ஊழல் வழக்கில் திகார் சிறையின் கதவுகள் அழைத்தபோதும், அறிவாலய மேல் மாடியில் ரெய்டு நடந்த போதும், அன்றைக்கு உங்களை மிரட்டிய உங்கள் எஜமானரான காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்து, உங்கள் கட்சியையே அடகு வைத்தவர்கள் தானே நீங்கள்?

      அறிவாலயக் கதவுகளை மூடிக்கொண்டாலும் உங்களின் கெஞ்சல், கதறல் சத்தம் அன்றைக்கு தமிழ்நாடு முழுக்க தான் நன்றாக கேட்டதே!

      இவ்வளவு ஏன், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நீட் என்ற தேர்வை அறிமுகம் செய்தவரே உங்கள் கட்சியை சேர்ந்த அன்றைய மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தானே?

      இப்படிப்பட்ட வரலாறு கொண்ட உங்களுக்கு, அ.இ.அ.தி.மு.க. பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

      முதலமைச்சருக்கு நேரடியாக சவால் விடுகிறேன்- தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன், மேகதாது அணை, காவிரி நதிநீர் விவகாரங்களில் செயல்படும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காமல் செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்தும் அரசினர் தனித் தீர்மானத்தை முடிந்தால் சட்டப்பேரவையில் கொண்டுவாருங்கள் பார்ப்போம்!

      (பி.கு. : அமைச்சர் நேருவுக்காக "தொட்டுப் பார்- சீண்டிப்பார்" வீடியோ ஷூட்டிங் முடிந்துவிட்டதா? எப்போது ரிலீஸ்? சீரியஸ் அரசியலுக்கு நடுவில் மக்களுக்கு அந்த வீடியோ நல்ல நகைச்சுவையாக இருக்கும் என்பதால், அதனை தவறாமல் வெளியிட வேண்டுமென மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.)

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
      • எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.

      சென்னை:

      அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

      இதுதொடர்பாக கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

      அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். 



      • 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
      • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

      சென்னை:

      தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி வரை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

      அதன் பின்னரும் விலை அதிகரிக்கும் என்ற அச்சத்தை கொடுத்த நிலை மாறி, மறுநாளில் இருந்து தங்கம் விலை மளமளவென சரியத் தொடங்கியது. அதன்படி, கடந்த 4-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 680-ம் அதிரடியாக குறைந்து சற்று நிம்மதியை அளித்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.

      நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுமுகத்தை நோக்கி சென்றது. அன்றைய நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் உயர்ந்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

      இதனை தொடர்ந்து, இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 185 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,745-க்கும் சவரனுக்கு 1480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960-க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

      வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

      கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

      10-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

      09-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,280

      08-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,800

      07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280

      06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

      கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

      10-04-2025- ஒரு கிராம் ரூ.107

      09-04-2025- ஒரு கிராம் ரூ.104

      08-04-2025- ஒரு கிராம் ரூ.102

      07-04-2025- ஒரு கிராம் ரூ.103

      06-04-2025- ஒரு கிராம் ரூ.103

      ×