என் மலர்
சென்னை
- இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
- நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம்.
சென்னை:
முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப்போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது என கூறியுள்ளார்.
- மானம்பாடி சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வரும்நிலையில் கட்டண விவரத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
- பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.560 ஆக கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மானம்பாடி சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வரும்நிலையில் கட்டண விவரத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
கார், வேன் உள்ளிட்டவற்றுக்கு ஒருமுறை செல்ல ரூ.105, இருமுறை அதே வழியில் பயணிக்க ரூ.160, வணிக வாகனங்களுக்கு ரூ.55 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகுரக வணிக வாகனம், சிறிய ரக சரக்கு வாகனம், மினி பஸ் ஒருமுறை செல்ல ரூ.170, இருமுறை பயணிக்க ரூ.255 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து, டிரக் - ரூ.360, பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.560 ஆக கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
- ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. தொடங்கி உள்ளது.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. தொடங்கி உள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக இணைப்பதற்கு வியூகம் வகுத்துள்ளது.
2026 சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுத்தல்களை வழங்குகிறார்.
- பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
- தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
சென்னை:
நாடு முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உன்னத தியாகத்தைப் போற்றும் வகையில், பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
உயரிய தியாகத்தைப் போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
- தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.
- நேற்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், புதன்கிழமை ரூ.80-ம், நேற்றுமுன் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், நேற்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,980-க்கும் சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 117 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
04-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,720
03-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,640
02-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
06-06-2025- ஒரு கிராம் ரூ.118
05-06-2025- ஒரு கிராம் ரூ.114
04-06-2025- ஒரு கிராம் ரூ.114
03-06-2025- ஒரு கிராம் ரூ.113
02-06-2025- ஒரு கிராம் ரூ.111
- நேற்று வேட்மனுவுடன் சொத்து விவரங்களையும் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ளார்.
- மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் ஆகிய கார்கள் இருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாகும் பாராளுமன்ற மாநிலங்களவை 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வேட்மனுவுடன் சொத்து விவரங்களையும் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.49.67 கோடி இருப்பதாகவும், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.60 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் ஆகிய கார்கள் இருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.
- நேற்று மாலைநேர தகவலின்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
- இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை:
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
அதன்படி, விண்ணப்பப்பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலைநேர தகவலின்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
இவ்வளவு விண்ணப்பங்கள் வந்திருந்தாலும், அதில் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்பவர்கள்தான் அடுத்தகட்டமாக கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
அந்தவகையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 மாணவ-மாணவிகள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியிருக்கின்றனர். விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான போட்டியில் 2.44 லட்சம் இருக்கின்றனர். அவர்களில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 102 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். சான்றிதழ்களை 9-ந்தேதி வரை (நாளை மறுதினம்) பதிவேற்றம் செய்யலாம்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் அதாவது 2021-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரையில் முறையே 1,45,043, 1,69,083, 1,87,847, 2,09,653 பேர் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி படிப்புகளில் சேருவதற்காக காத்திருந்தனர்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள காலி இடங்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருப்பார்கள். இந்த ஆண்டு அதுபோல் இல்லை. அதாவது, அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் இடங்களுக்கு, 2 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் சார்ந்த படிப்புகளை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், அந்த படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு 10-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்டு, 27-ந்தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
கலந்தாய்வு குறித்த தற்காலிக அட்டவணை எப்போதும் முன்கூட்டியே வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு அப்படி வெளியிடப்படவில்லை. தரவரிசைப் பட்டியலை வெளியிடும்போது, கலந்தாய்வு குறித்த தேதி அறிவிக்கப்படும் எனவும், ஜூலை முதல் மற்றும் 2-வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதவிர, பி.ஆர்க் படிப்புக்கான நாடா நுழைவுத்தேர்வு ஜூன் இறுதி வாரம் வரை நடைபெற இருப்பதால் பி.ஆர்க் படிப்புக்கான இணையதள விண்ணப்பப்பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 30-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 463 என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் (2025-26) 7 புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
- பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது.
- தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.
பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்.
மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
- புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 12-ந்தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிவரை விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, கோவை, புதுக்கோட்டை, சிவகங்ககை ஆகிய 6 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதியிலும் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
- அதிக அளவிலான இளைஞர்களை தி.மு.க.வுக்கு சேர்ப்பதற்கான பணிகளை கட்சி தலைமை முடுக்கி விட்டுள்ளது.
- புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
சென்னை:
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான தி.மு.க. தயாராகி வருகிறது. தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் வகையில் தேர்தல் வியூகத்தை தி.மு.க. அமைக்க உள்ளது.
அந்த வகையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் கட்சி வளர்ச்சி பணியை தீவிரப்படுத்தி, அதிக அளவிலான இளைஞர்களை தி.மு.க.வுக்கு சேர்ப்பதற்கான பணிகளை கட்சி தலைமை முடுக்கி விட்டுள்ளது.
234 தொகுதிகளிலும் தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லவும், சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தொடர்பாகவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாகவும் ஆலோசிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
அதன்படி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.
- பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
- 15, 22 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16127) நாளை (ஞாயிற்றுக்கிழமை), 15, 22 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது.
- மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது.
* ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.
* அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது.
* இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், பா.ஜ.க. எப்படி இந்தக் கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது.
* 1971-ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க. நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும்.
* தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே!
* பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் லட்சணம் புரிந்துவிடும். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது. தேர்தலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்திலேயே உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு-காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
* 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும்.
* அ.தி.மு.க. போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ.க. முன் மண்டியிட்டாலும், தி.மு.க.வின் தலைமையில் #ஓரணியில்_தமிழ்நாடு அணிவகுக்கும்! நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! #தமிழ்நாடு_போராடும்! #தமிழ்நாடு_வெல்லும்!
இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.






