என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழக பா.ஜ.க.வில் புதிய பொறுப்பாளர்கள் கொண்ட பட்டியலை நயினார் நாகேந்திரன் நட்டாவிடம் சமர்ப்பித்தார்.
    • நட்டா ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக பா.ஜ.க.வில் புதிதாக 4 பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது தமிழக பா.ஜ.க.வில் புதிய பொறுப்பாளர்கள் கொண்ட பட்டியலை நயினார் நாகேந்திரன் நட்டாவிடம் சமர்ப்பித்தார். கே.வி.ராமலிங்கம், கருப்பு முருகானந்தம், வினோஜ் செல்வம், கார்த்தியாயினிக்கு வாய்ப்பு வழக்கப்பட உள்ளது.

    நயினார் நாகேந்திரனின் பட்டியலுக்கு நட்டா ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே அனுப்பப்பட்ட பட்டியலில் சில மாற்றங்கள் செய்து வரும் வெள்ளியன்று பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியாக உள்ளது.

     

    குஷ்புக்கு மாநிலப் பொறுப்பும், மீனா பா.ஜ.க.வில் சேர்ந்து மாநிலப்பொறுப்பு பெறலாம் என்றும் சரத்குமார் தேசிய பொறுப்பு கேட்பதால் தற்போதைய பட்டியலில் அவரது பெயர் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது.
    • தமிழறிஞர் சண்முகதாசுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2025-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. வரவேற்று பேசினார்.

    இதில் பொதுசெயலாளர் சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, ஆளுர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாவட்டச்செயலாளர்கள் இளங்கோ, ஜேக்கப், கரிகால்வளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    விழாவில், ஆந்திராவில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கே.எஸ்.சலமுக்கு அம்பேத்கர் சுடர் விருது, நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகுவுக்கு மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்பட்டது.

    புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி வைத்திலிங்கத்துக்கு காமராசர் கதிர் விருது, பவுத்த ஆய்வறிஞர் ஜம்புலிங்கத்துக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவிக்கு காயிதேமில்லத் பிறை விருது வழங்கப்பட்டது. தமிழறிஞர் சண்முகதாசுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:- கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதில் நமக்கு பிரச்சனை இல்லை. நமக்கு பிரச்சனையே சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்...

    சாதி வைத்து தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும். ஆணவக் கொலை எப்படி நடக்கிறது? ஒரு தமிழனை இன்னொரு தமிழன் தான் வெட்டுகிறான். சாதி ஒழியாமல் எப்படி தமிழ் தேசியம் மலரும்? சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்... அதுதான் முக்கியமான கொள்கை.

    பெரியாரிடம் ஒருவர் கேட்டார்... ஆத்திகத்துக்கும்- நாத்திகத்துக்கும் என்ன வித்தியாசம் என்று... அதற்கு பெரியார், கோவிலில் கடவுள் சிலைக்கு முன்னாடி ஒரு உண்டியல் வைக்குறீங்க இல்லையா... அதுக்கு பெயர் ஆத்திகம். அந்த கடவுளையை நம்பாமல் அந்த உண்டியலுக்கு பூட்டு போடுறீங்க இல்லையா அதுக்கு பெயர் நாத்திகம். முருகனுக்காக ஒரு மாநாடு நடத்தி இவர்களை ஏமாற்றிவிட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், முருகன் உங்களை ஏமாற்றிவிடுவார் என்றார். 

    • மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், நேற்று சவரனுக்கு 600 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,070-க்கும் சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.72,560-க்கும் விற்பனையாகிறது. மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240

    23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840

    22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-06-2025- ஒரு கிராம் ரூ.120

    23-06-2025- ஒரு கிராம் ரூ.120

    22-06-2025- ஒரு கிராம் ரூ.120

    21-06-2025- ஒரு கிராம் ரூ.120

    20-06-2025- ஒரு கிராம் ரூ.120

    • நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.
    • இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.

    பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றபோது அதனை எதிர்த்து பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொரித்து, தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினை அமைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து, போறிஞர் அண்ணா காட்டிய வழியில் நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்தவர் புரட்சித் தலைவி. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஆகியோரால் மதிக்கப்பட்ட போற்றப்பட்ட தலைவர்கள் தந்தை பெரியார் மற்றும் போறிஞர் அண்ணா ஆகியோர். நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.

    தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் போறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். 

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    • 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரெயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை இன்று காலை பாதிக்கப்பட்டது.

    கோயம்பேடு - அசோக் நகர் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரெயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை வழக்கமான அட்டவணைபடி இயக்கப்படுகிறது.

    விம்கோ நகர் டிப்போவிலிருந்து விமான நிலையம் வரை நீலப்பாதையில் மற்றும் சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை பசுமைப் பாதையில் வழக்கமான அட்டவணைப்படி ரெயில் சேவைகள் இயங்குகின்றன.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக 24 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் மீண்டும் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை, 28, 29 ஆகிய தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, நாளை காலை 10.30, 11.35 மதியம் 1.40 மற்றும் மதியம் 1, 2.30, 3.15, 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் அதிகாலை 5.40, காலை 10.15, மதியம் 12.10, 12.35, 1,15, 3.10 நேரங்களில் சென்ட்ரல்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் மதியம் 12.40, 2.40 மற்றும் மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    • 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரெயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
    • ப்ளூ லைனில் மெட்ரோ ரெயில் சேவைகள் அட்டவணைப்படி இயங்குகின்றன.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு - அசோக் நகர் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 24 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரெயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

    சென்னை சென்ட்ரல் கோயம்பேடு, அசோக் நகர் - செயின்ட் தாமஸ் மவுண்ட் சேவையில் பாதிப்பில்லை. ப்ளூ லைனில் மெட்ரோ ரெயில் சேவைகள் அட்டவணைப்படி இயங்குகின்றன.

    எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • மேடவாக்கம் மெயின் ரோடு, ஏரிக்கரை தெரு, பார்த்தசாரதி நகர், வள்ளலார் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    ஆலந்தூர் : மேடவாக்கம் மெயின் ரோடு, ஏரிக்கரை தெரு, பார்த்தசாரதி நகர், வள்ளலார் தெரு.

    மடிப்பாக்கம் : பஜார் ரோடு, ராம்நகர் தெற்கு, சீனிவாச நகர், சதாசிவம் நகர், பிருந்தாவன் தெரு, அறிவொளி தெரு, பாகீரதி நகர், வள்ளல் அதியமான் தெரு, வள்ளல் குமணன் தெரு.

    திருமுடிவாக்கம்: முருகன் கோவில் மெயின் ரோடு, மெலந்தை தெரு, நல்லீஸ்வரர் நகர், கோவில் டவுன், பாலவராயன் குளக்கரை தெரு, பாபு நகர், ஜெகநாதபுரம், பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், PTC குடியிருப்புகள், வரதராஜபுரம், ராயப்ப நகர், தர்காஸ்ட் சாலை, நடுவீரப்பட்டு, திருமுடிவாக்கம் சிட்கோ 8-வது தெரு, திருமுடிவாக்கம் சிட்கோ மெயின் ரோடு லேன், வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர்.

    திருவான்மியூர் : சாஸ்திரி நகர் கிழக்கு, வடக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, பாரதிதாசன், தெரு, ஈசிஆர் பகுதி, லலிதா கார்டன், குப்பம் கடற்கரை ரோடு பகுதி, மேற்கு டேங்க் தெரு, சன்னதி தெரு, மேட்டூ தெரு.

    பல்லாவரம் : கடப்பேரி நாகல்கேணி, குரோம்பேட் பகுதி, லட்சுமிபுரம், குமரசாமி ஆச்சாரி தெரு, டேங்க் தெரு, சவுந்தரம்மாள் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, ஸ்ரீபுரம் 1 முதல் 2-வது தெரு, சரஸ்வதிபுரம், ஈஸ்வரி நகர், திருநீர்மலை அப்துல்கலாம் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, மணியக்கர் கோவில் தெரு, ராஜீவ்காந்தி தெரு, பாரதிதாசன் தெரு, குளக்கரை தெரு, சல்மான் காலணி.

    போரூர் : வரதராஜபுரம், பனிமலர் மருத்துவக்கல்லூரி, பெங்களூரு டிரங்க் சாலை, குளப்பன்சேரி, சோக்களனூர், பிடாரிதங்கல் ஒரு பகுதி, காமாட்சி நகர்.

    நொளம்பூர் : 5-வது பிளாக் முதல் 8-வது பிளாக், கவிமணி சாலை.

    தில்லை கங்கா நகர்: 1வது, 2வது மற்றும் 5வது மெயின் ரோடு, தில்லை கங்கா நகர் 8 முதல் 19வது தெரு, ஜான் தேசிகர் தெரு, நியூ காலனி 1 முதல் 2வது தெரு, 1வது குறுக்குத் தெரு, பாரதியார் தெற்கு, பாரதியார் 1 முதல் 2வது தெரு, பாரதியார் லேன், ஜோசப் தெரு, பிருந்தாவன் நகர், வேம்புலியம்மன் தெரு, துரைராஜ் சந்து, வீரமாமுனிவர் தெரு, அவ்வையார் தெரு, இளங்கோவடிகள் தெரு, நங்கநல்லூர் 3 முதல் 4 மெயின் ரோடு, நங்கநல்லூர் 36, 37, 38வது தெரு.

    ஐயப்பன்தாங்கல்: ஐயப்பன்தாங்கல் மெயின் ரோடு, ராமச்சந்திரா நகர், நடேசன் நகர், கேசவர்த்தினி நகர், யூனியன் சாலை, கொழுத்துவாஞ்சேரி, ஆர்.ஆர்.நகர், ஆர்.ஆர்.நகர் இணைப்பு, வி.ஜி.என்.

    தாம்பரம்: நியூ ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் ரோடு, முடிச்சூர் பாலம், படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, இரும்புலியூர், மங்களபுரம், சித்த மருத்துவமனை, சானடோரியம், டிவாடி வாட்டர் போர்டு, ஸ்டேஷன் பார்டர் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ராஜேந்திர நகர், சாலமன் தெரு, திருவார்லு தெரு, திருவள்ளூர், எம்.எஸ். கற்பக விநாயகர் தெரு, நால்வர் தெரு, சத்தியமூர்த்தி தெரு, தங்கராஜ் நகர், அமுதம் நகர், கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ, சடகோபன் நகர், முடிச்சூர் மெயின் ரோடு, ஸ்ரீராம் நகர், இந்திரா காந்தி சாலை, கேவிடி கிரீன் சிட்டி, செல்லியம்மன் கோவில் தெரு, குமரன் நகர், பழைய பெருங்களத்தூர் மெயின் ரோடு, திருமகள் நகர், பார்வதி நகர், பார்வதி நகர் குண்டலகேசி தெரு, சிலப்பதிகாரம் தெரு, சிட்லபாக்கம் மெயின் ரோடு.

    ஆவடி: சிவசக்தி நகர் 60-40 அடி ரோடு, ஜோதி நகர், நாகம்மை நகர், ஆண்டனி நகர், இஎஸ்ஐ அண்ணாநகர்.

    அம்பத்தூர்: கொரட்டூர் காவல் நிலையம், கிழக்கு அவென்யூ ரோடு, இஎஸ்ஐ மருத்துவமனை, இந்தியன் வங்கி, டிஎன்எச்பி 27, 29, 31, 49 மற்றும் 50வது தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, ரெயில் நிலைய சாலை, மாருதி பிளாட்ஸ், ராஜன்குப்பம், மெட்ரோ சிட்டி கட்டம் 1, விஜிஎன் மகாலட்சுமி நகர்.

    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட சமூக நீதி எனும் பேரொளியை தூக்கி சுமந்த விடிவெள்ளி வி.பி.சிங்.
    • ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றை திரிபுகளால் மாற்றுவது அடிமைத் தனத்துக்கே வழிவகுக்கும் முயற்சி.

    சென்னை:

    சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி 'சமூகநீதிக் காவலர்' வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்!

    ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! என்று கூறியுள்ளார். 



    • தமிழ்நாட்டில் பல ஊர்களிலிருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு திருவிழா 07.07.2025 அன்று நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வரும் 04.07.2025 முதல் 08.07.2025 வரையிலான நாட்களில், இவ்விழாவிற்கு, தமிழ்நாட்டில் பல ஊர்களிலிருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக வரும் 04.07.2025 மதியம் முதல் 08.07.2025 மதியம் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், இவ்விழாவினை முன்னிட்டு, திருச்செந்தூரில் திருநெல்வேலி சாலையில் குமாரபுரம், நாகர்கோவில் சாலையில் தெப்பக்குளம், தூத்துக்குடி சாலையில் ITI வளாகம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மூன்று தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து, திருச்செந்தூர் கோவில் வாசல்வரை செல்வதற்கு வசதியாக 30 கட்டணமில்லா சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்விழாவினை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் பங்கேற்க வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி சென்னை, திருச்சி, கும்பகோணம்., காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை., கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 06.07.2025, 07.07.2025 மற்றும் 08.07.2025 ஆகிய நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு https://www.tnstc.in/ மற்றும் TNSTC Mobile App மூலம் பயணச்சீட்டினை முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • அதிமுக, தொடர்ந்து பாஜக உடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய ஒன்று.
    • திராவிடத்திற்கும் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை...

    மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் அதிமுக தலைவர்கள் மேடையில் இருந்தபோதே, பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் பின்வருமாறு:-

    அதிமுக, தொடர்ந்து பாஜக உடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய ஒன்று. இன்னும் ஒருபடி மேலே சென்று பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக் கூடிய இடத்திலேயே அவர்களும் இருந்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது அவர்கள் யார் என்பதையும், திராவிடத்திற்கும் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு எடுத்துக்காட்டுகிறது.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பதில் அளித்தார்.

    ×