என் மலர்tooltip icon

    சென்னை

    • அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.
    • பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.

    தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றிப் பாதுகாத்து, சமூகநீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனிற்காக அயராது பாடுபட்டு வருகிறது.

    தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் பொதுநலத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் ஆகும். கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்குட்பட்டு, மாநில சுயாட்சியே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். தமிழ்நாடு அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிவகைகளை உருவாக்க மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 15 (3)-வது பிரிவின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்தமையால், தனது செயல்பாடுகளில், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் அவற்றை செயல்படுத்தி, அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார் நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்.

    மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • உழவர்களை ஏமாற்ற திமுக அரசு முயல்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
    • மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயிர்களின் அளவு குறித்து அரசு முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதால், உழவர்களை ஏமாற்ற திமுக அரசு முயல்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

    பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லி அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. மழை பாதிப்புகளை கணக்கிட 35 நாள்கள் என்பது மிக அதிக காலம் ஆகும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தனர். அந்த இழப்பீட்டைக் கூட தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. மழையில் நனைந்து சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்காததன் மூலம் உழவர்களை தி.மு.க. அரசே கடன் வலையில் வீழ்த்தி விடக் கூடாது. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானங்களில் பாதுகாப்பு காரணங்களால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
    • இரண்டு விமானங்கள் சுமார் 3 மணி நேரங்கள் தாமதமாக வந்துவிட்டு தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

    ஆலந்தூர்:

    கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலை வெடித்ததில் அதன் சாம்பல் புகை சுமார் 15 கி.மீட்டர் உயரத்திற்கு எழுந்தது. வான்வெளியில் பரவி வரும் இந்த சாம்பல் புகை இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா மாநில பகுதியிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் சென்னையில் இருந்து மும்பைக்கு இன்று காலை 7.15 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா பயணிகள் விமானம், காலை 11 மணிக்கு, தாமதமாக புறப்பட்டு சென்றது. காலை 9.35 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு எதிரொலி காரணமாக, சில குறிப்பிட்ட இடங்களில் பறந்த விமானங்களில், முன்எச்சரிக்கை சோதனை செய்யப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானங்களில் பாதுகாப்பு காரணங்களால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    சென்னை-மும்பை விமானம் மட்டுமின்றி, டெல்லி-ஐதராபாத், மும்பை-ஐதராபாத், மும்பை-கொல்கத்தா விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதோடு சென்னை விமான நிலையத்தில் லண்டன்-சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், சென்னை லண்டன்-பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஆகிய இரண்டு விமானங்கள், சுமார் 3 மணி நேரங்கள் தாமதமாக வந்துவிட்டு தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இது தவிர இன்று மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கும், தாமதமாக இயக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை 8.30 மணி அளவில் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில், நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரிலிருந்து, (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. இது மெதுவாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

    நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று காலை 5.30 மணி அளவில் குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும்.

    இன்று மற்றும் நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    27-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    28-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    29-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    30-ந்தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    01-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
    • 17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வருகிற 17-ந்தேதி (புதன்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு வசதியாகவும், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை இன்னும் வலிமையாகவும், பிரமாண்டமாகவும் வலியுறுத்துவதற்கு வசதியாகவும் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.

    17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விற்பனை செய்யப்படும் விதைகள் கியூ ஆர் கோடில் பதிவு செய்யப்பட வேண்டும்.
    • விதைகளில் எது போலியானது, எது தரமற்றது என்பது எப்படி முடிவு செய்யப்படும் என்று தெரியவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா-2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11-ந்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    விவசாயிகளின் விதைக்கு விலை வைக்கும் நடைமுறையே விவசாயத்தை அழித்து விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. கட்டாய கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக்கட்டுபாட்டு விதிமுறைகள் போன்றவற்றை அறிமுகம் செய்து விதை விற்பனையை தனியார்மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விதைகள் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவவோ அல்லது தன்னளவில் பொருளாதார பலன்களை அடையவோ இந்த புதிய விதை மசோதா தடை செய்கிறது. கார்ப்பரேட்டுகளின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து புதிய விதை வாங்கி, பயிர் செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

    விதைகள் மசோதாவை பொறுத்தவரை ஒவ்வொரு விற்பனையாளரும் விதைகள் குறித்து பதிவு சான்றிதழை ஒன்றிய-மாநில அரசுகளிடம் பெற்ற பிறகு தான் விதைகளை விற்கவோ, ஏற்றுமதி, இறக்குமதி செய்யவோ, தனிப்பட்ட நபருக்கு வழங்கவோ முடியும் என்ற வகையில் இந்த மசோதா பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. விற்பனை செய்யப்படும் விதைகள் கியூ ஆர் கோடில் பதிவு செய்யப்பட வேண்டும்.

    இதன்மூலம் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கிற விதை மசோதா மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் இறக்குமதி செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

    இந்த புதிய விதை மசோதாவை பொறுத்தவரை போலி மற்றும் தரமற்ற விதைகளை விநியோகம் செய்தால் சிறு குற்றங்களுக்கு முதலில் ரூபாய் 1 லட்சம், தவறுகள் தொடர்ந்தால் ரூபாய் 2 லட்சம், பெரிய குற்றங்களுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

    அப்படி அபராதம் கட்டத் தவறினால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளது. விதைகளில் எது போலியானது, எது தரமற்றது என்பது எப்படி முடிவு செய்யப்படும் என்று தெரியவில்லை.

    விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது விவசாயிகளின் சாகுபடி செலவை அதிகரிக்கும். ஏற்கனவே, மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி, அந்த சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற்றது. அதேபோல, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான, விவசாயிகளுக்கு விரோதமான பாரம்பரிய விதை இறையாண்மையை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் ஒன்றிய அரசின் விதை மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார்.

    • இந்திய மகளிருக்கு விளையாட்டில் ஆர்வத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது.
    • இந்திய மகளிர் கபடி அணியினர் தொடர்ந்து விளையாட்டு சாதனைகளைப் படைத்து முன்னேற வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வங்கதேசத்தில் நடைபெற்ற மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய மகளிர் கபடி அணி இந்தத் தொடர் முழுவதுமே தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டியிலும் தங்கள் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.

    இறுதிப்போட்டியில் 35- 28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணியினர் வென்று உலக அரங்கில் இந்திய மகளிரின் விளையாட்டு வீரத்தை நிரூபித்திருக்கிறார்கள். மொத்தம் 11 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பைத் தொடரில், சாம்பியன் பட்டம் வென்றதால் ஒட்டு மொத்ததேசமும் பெருமை அடைந்துள்ளது.

    மேலும் இந்திய மகளிருக்கு விளையாட்டில் ஆர்வத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்திய மகளிர் கபடி அணியின் வீராங்கனைகளுக்கு துணை நின்ற பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். இந்திய மகளிர் கபடி அணியினர் தொடர்ந்து விளையாட்டு சாதனைகளைப் படைத்து முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும்.
    • பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்புதுரை தெரு, T.T.K. சாலை, கதீட்ரல் சாலை.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    தேனாம்பேட்டை: போஸ் கார்டன், T.V. சாலை, ஜெயம்மால் சாலை, இளங்கோ சாலை, போஸ் சாலை பகுதிகள், ராஜாகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தம்மாள் காலனி பகுதிகள், K.B. தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்புதுரை தெரு, T.T.K. சாலை, கதீட்ரல் சாலை, J.J.சாலை, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், K.R. சாலை பகுதிகள், ஜார்ஜ் அவென்யூ, S.S.I. சாலை, H.D. ராஜா தெரு, A.R.K. காலனி, அண்ணா சாலை (பகுதி), வீனஸ் காலனி மற்றும் முர்ரேஸ் கேட் சாலை பகுதிகள்.

    மீஞ்சூர் : மீஞ்சூர் நகரம், TH சாலை, சிறுவாக்கம், சூர்யா நகர், BDO அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமவரம், R-R பாளையம் அரியன்வயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டா மந்திரம், வல்லூர், அத்திப்பட்டு, S.R. பாளையம், G.R. பாளையம், கொண்டக்கரை, பள்ளிபுரம்.

    • தென் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.
    • அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெறக்கூடும் என்பதால் தமிழகத்தில் கன மழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுவித்துள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தென் வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    தென் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார்.
    • கூட்டணி நிலவரம், தேர்தல் பணிகள், வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பைஜயிந்த் பாண்டா ஆகியோரை சந்திக்க உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, கூட்டணி நிலவரம், தேர்தல் பணிகள், வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    • குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
    • முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தொலைதூரப் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதி நவீன சொகுசு பஸ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.

    மேலும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிர் சாதனம் மற்றும் குளிர்சாதனம் இல்லாத மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் வருகிற 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் இயக்கப்பட உள்ளன.

    சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in இணையதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. செயலி ஆகியவற்றின் மூலமாக புறப்பாடு மற்றும் வருகை என இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை-9445014426, திருநெல்வேலி-9445014428, நாகர்கோவில்-9445014432, தூத்துக்குடி-9445014430, கோவை-9445014435, சென்னை தலைமையகம்-9445014463 மற்றும் 9445014424 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92 ஆயிரத்து 160-க்கும், கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.93 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.174-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,160

    23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040

    22-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040

    21-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,680

    20-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-11-2025- ஒரு கிராம் ரூ.171

    23-11-2025- ஒரு கிராம் ரூ.172

    22-11-2025- ஒரு கிராம் ரூ.172

    21-11-2025- ஒரு கிராம் ரூ.169

    20-11-2025- ஒரு கிராம் ரூ.173

    ×