என் மலர்
சென்னை
- பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
- ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.ரால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 54-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17-ந்தேதி, 18-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிகளை சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், வருகிற 17-ந்தேதியன்றும் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஆகியோரது உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன்படி எடப்பாடி பழனிசாமி 17-ந்தேதி சேலம் புறநகர் மாவட்டத்தில் பேசுகிறார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி சற்று குறைந்து இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
- எல்லாருக்கும் எல்லாம் எனும் நம் பயணத்தில் சமத்துவத்துக்கான அவரது போராட்டங்கள் தொடர்ந்து வழிகாட்டும்.
சென்னை:
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதி வரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்.
இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என நமது திராவிட மாடல் அரசின் சார்பில் அவரது நூற்றாண்டையொட்டி அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இமானுவேல் சேகரனாருக்குப் பரமக்குடியில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற நமது அரசின் மற்றொரு அறிவிப்பும் செயல்வடிவம் பெற்று, இம்மாத இறுதிக்குள் முழுமையடையத் தயாராக உள்ளது.
எல்லாருக்கும் எல்லாம் எனும் நம் பயணத்தில் சமத்துவத்துக்கான அவரது போராட்டங்கள் தொடர்ந்து வழிகாட்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
- சிகிச்சை பலனின்றி ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான A1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்தார்.
சென்னையில் ரவுடி நாகேந்திரன் மரணத்தையடுத்து கூடுதலாக காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகேந்திரன் வீடு அமைந்துள்ள வியாசர்பாடி முல்லை நகர் அருகே 250க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
- நோட்டீசை வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையில் நோட்டீசை தொழிற்சாலையில் ஒட்டி விட்டு வந்து உள்ளனர்.
சென்னை:
சென்னை எழும்பூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
'கோல்ட்ரிப்' இருமல் மருந்தில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 1-ந்தேதி மத்திய பிரதேசத்தில் இந்த மருந்தை சாப்பிட்ட 20 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அம்மாநில அரசு தமிழ்நாட்டிற்கு தகவல் தெரிவித்தார்கள்.
தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து இந்த இருமல் மருந்தில் நச்சுத்தன்மை இருப்பதை கண்டுபிடித்தது. இது பற்றி உடனே மத்திய பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒடிசா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் தகவல் தெரிவித்தோம்.
ஆனால் மத்திய பிரதேச அரசும், மத்திய அரசும் இந்த மருந்தில் தவறு இல்லை என்று கூறி அலட்சியமாக இருந்து விட்டனர். நாம்தான் இந்த இருமல் மருந்தில் நச்சுத்தன்மை எந்த அளவு கலந்து உள்ளது என்பதை உறுதிபடுத்தி விட்டு உடனே 3-ந்தேதியில் இருந்து அந்த மருந்தை இனி கடைகளில் விற்க கூடாது என்று உத்தரவிட்டோம்.
அதுமட்டுமின்றி அந்த தொழிற்சாலையில் இருமல் மருந்தை தயாரிக்க தடை விதித்தோம். இது குறித்து விளக்கம் தருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த நோட்டீசை வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையில் நோட்டீசை தொழிற்சாலையில் ஒட்டி விட்டு வந்து உள்ளனர்.
இந்த நிலையில் அந்த உரிமையாளர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி கம்பெனிக்கு அவரை அழைத்து சென்று தாசில்தார் விசாரணை நடத்தவும் உள்ளனர். அவரது பதிலுக்கு பிறகு நிரந்தரமாக கம்பெனியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த கட்டமாக அந்த கம்பெனியின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கும் கம்பெனியை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிலையில் 2 சீனியர் மருந்து தர ஆய்வாளர்கள் கடந்த 2 ஆண்டுகளாக மருந்து தரத்தை ஏன் ஆய்வு செய்யவில்லை என்கிற வகையில் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு கூறி உள்ளார்.
- கோல்ட்ரிப் மருந்தில் நச்சுத்தன்மை அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்தது தமிழ்நாடு.
- சரியாக ஆய்வு செய்யாத மூத்த மருந்து ஆய்வாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கோல்ட்ரிப் மருந்தில் நச்சுத்தன்மை அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்தது தமிழ்நாடு.
* மத்திய பிரதேசமும் மத்திய அரசும் நச்சுத்தன்மை இல்லை என்று விட்டு விட்டார்கள்.
* சரியாக ஆய்வு செய்யாத மூத்த மருந்து ஆய்வாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
* கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விசாரணைக்குப்பின் நிரந்தரமாக மூட முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காசாவின் உலர்ந்த வானத்தில் பெய்யும் தமிழ்நாட்டு மழையாகும்
- மத்திய கிழக்கை நோக்கி எங்கள் வெள்ளைப் புறா
காசா மீது இஸ்ரேல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். காசா இனப்படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
காசா இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதற்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காசாவில் நிகழும்
இனப்படுகொலைகளுக்கு எதிராகத்
தமிழ்நாடு சட்டமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்படும்
என்பது ஒரு நற்செய்தியாகும்;
நம்பிக்கை தருவதாகும்
காசாவின்
உலர்ந்த வானத்தில் பெய்யும்
தமிழ்நாட்டு மழையாகும்
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின்
மனிதாபிமானத்தை
மனம் உள்ளவர்களெல்லாம்
பாராட்டுவார்கள்
காசா ஒரு சிறு பகுதிதான்
41 கி.மீ நீளமும்
10 கி. மீ அகலமும் கொண்ட
ஓர் ஒட்டு நிலம்தான்
ஆனால்,
தண்ணீர் இல்லாத
அந்தப் பாலை நிலத்தில்
ரத்த ஊற்று பீறிடுகிறது
உலகத்தின் கண்களில் விழுந்த
கந்தகத் தூளாக
அது உறுத்திக்கொண்டே இருக்கிறது
முதலில் அந்த மக்கள்
உயிரோடு இருக்க வேண்டும்
இந்தத் தீர்மானம்
சர்வதேசச் சமூகத்தின் மீது
தமிழ்நாடு சட்டமன்றம் காட்டும்
அன்பென்றும் அக்கறையென்றும்
போற்றப்படும்
தீப்பிடித்த வீட்டில்
ஆளுக்கொரு குடம் தண்ணீர்
அள்ளி இறைப்பதுபோல
அனைத்துக் கட்சிகளும்
இந்தத் தீர்மானத்தை
ஆதரிக்கும் என்று நம்புகிறோம்
இது
உலக சமாதானத்துக்கு
எங்கள் பங்கு
மத்திய கிழக்கை நோக்கி
எங்கள் வெள்ளைப் புறா
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜி.டி. என்பது உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? ஆங்கிலம் தானே?.
- எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கியவர்கள் ஜி.டி. என்று ஆங்கில முன்னொட்டுக்களில் பெயர் சூட்டுவது ஏன்?
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவையில் புதிதாக 1791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை - அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்திற்கு இந்த நாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் போர் புரிந்து இன்னுயிர் ஈந்த பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? அவ்வீரத்திருமகன் கழுத்திறுகி கசிந்து வெளியேறிய கடைசி மூச்சுக்காற்று அந்த மண்ணில் தானே உலாவிக்கொண்டு இருக்கிறது? நாங்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதற்காகத்தானே பாட்டன் தீரன் சின்னமலை உயிர் நீத்தார். அவர் பாதம் பட்ட மண்ணில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு அவருடைய பெயரைச்சூட்டி நாங்கள் நடமாடக்கூடாதா?
விடுதலை போராட்டக்களத்தில் தலையில் தடியால் தாக்கப்பட்டு தன்னுயிர் நீத்த பின்பும் விடுதலைக்கொடியை வீழ்ந்துவிடாமல் காத்த பாட்டன் கொடி காத்த குமரன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?
மாடு கூட இழுக்கத் திணறுகிற செக்கை கோவை கொடுஞ்சிறையில் தாயக விடுதலைக்காக இழுத்து, தன் சொத்தை எல்லாம் இழந்து, இறுதியில் மண்ணெண்ணெய் விற்று மண்ணை விட்டு மறைந்த கப்பலோட்டிய தமிழர் பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?
இந்தி திணிப்பை எதிர்த்து 1938இல் தொடங்கிய முதலாவது மொழிப்போரில் 03.06.1938ஆம் நாள் கைது செய்யப்பட்டு முதலாவது வீரராக சிறைக்களம் புகுந்த மொழிப்போர் மறவர் பல்லடம் பொன்னுசாமி அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?
உலகெங்கும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கியே நீர் பாயும் என்ற இயல்புக்கு மாறாக, பள்ளத்திலிருந்தும் மேடான பகுதிக்கும் நீர் செல்லும் பாதையை உருவாக்க முடியும் என்பதைத் தம்முடைய நுண்ணறிவால் உணர்ந்து அறிவியல் வளர்ச்சியுறாத காலத்திலேயே பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போல் கால்வாய் வெட்டி காவிரியின் துணை ஆறுகளான பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைத்து, உலகம் வியக்க கீழிலிருந்து மேலாக நீரைத் திருப்பி, வறண்டு கிடந்த கொங்கு மண்டலத்தைப் பொன் விளையும் பூமியாக, பயிர் செழித்து உயிர் செழிக்கும் தாய்நிலமாக மாற்றிய பெரும்பாட்டன் காலிங்கராயன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?
கொங்கு நாட்டு மக்களால் அண்ணன்மார் சாமிகளாகப் போற்றி வணங்கப்பெறும் பண்பாட்டு நாயகர்களான பொன்னர் - சங்கர் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? உங்கள் தந்தையே அவர்களின் புகழ் வரலாற்றை பொன்னர் - சங்கர் திரைப்படமாக உருவாக்கினார்கள்தானே? அப்பெயரை வைத்திருக்கலாமே?
இவர்களின் பெயரையெல்லாம் விடுத்து ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததன் காரணமென்ன? ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் எடிசன் என்று எப்படி கூறுகிறீர்கள்? எடிசன் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. ஜி.டி.நாயுடு கண்டுபிடிப்புகளில் அப்படி எதுவொன்று இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது? எதற்காக அவர் பெயரை வைத்துள்ளீர்கள்?
ஜி.டி. என்பது உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? ஆங்கிலம் தானே?. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கியவர்கள் ஜி.டி. என்று ஆங்கில முன்னொட்டுக்களில் பெயர் சூட்டுவது ஏன்? இதுதான் திமுக ஆட்சியாளர்கள் தமிழை வளர்க்கும் முறையா?
எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது; எல்லாவற்றிலும் சாதியை ஒழித்துவிட்டோம் என்று பேசிய திராவிடத்திருவாளர்கள், பெயரின் பின்னால் சாதிப்பெயரை நீக்கிய திராவிட இயக்கம் என்று நூற்றாண்டு விழா கொண்டாடியவர்கள் ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன்? திராவிட இயக்கத்தின் பிதாமகர் பெரியாரின் உடனிருந்த உற்ற தோழரின் பெயரிலிருக்கும் சாதியையே ஒழிக்க முடியாதவர்கள் ஊரில் உள்ள சாதியை எப்படி ஒழிப்பீர்கள்? இதுதான் திராவிட இயக்கம் சாதியை ஒழித்த முறையா?
சென்னையில் நந்தனம் சாலைக்கு முதலில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத்தேவர் சாலை என பெயர் வைத்துவிட்டு பிறகு அதை முத்துராமலிங்கனார் சாலை என்று மாற்றிய இவ்வரசு பாலத்திற்கு சாதியோடு பெயரை சூட்டுவது ஏன்?
பொது இடங்களுக்கு தேவர், தேவேந்திரர் பெயர்களை வைத்தால் சாதி கலவரம் வரும்? வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு, நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி? நாங்கள் வாண்டையார் என்றால் வரும் சாதி, நாங்கள் படையாட்சி என்றால் சாதி, நீங்கள் நாயுடு என்றால் மட்டும் வராதா? நாயுடு என்பது சாதிப்பெயர் அல்லாமல் பொதுப்பெயரா?
தமிழர்கள் நாங்கள் படையாட்சி, கவுண்டர், வாண்டையார், தேவர் என்று பேசினால், உடனடியாக சாதிவெறி என்று கூச்சலிடும் திராவிடத் திருவாளர்கள், ஜி.டி. நாயுடு என்று பெயர் வைப்பதற்கு மட்டும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காப்பது ஏன்? இது சாதிவெறி அல்லாமல் சிரங்கு சொறியா? இதுதான் பகுத்தறிவு, முற்போக்கு பெரியார் உரி உரியென உரித்த வெங்காயங்களா? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களை இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? ஊரில் உள்ள தமிழ் சாதியை எல்லாம் ஒழித்துவிட்டு தங்கள் சாதியை காப்பாற்றுவதுதான் திராவிடத்தின் சாதி ஒழிப்பா?
இன்று ஒரு பக்கம் சாதிப் பெயர்களை நீக்குதல் / மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆணையாக வெளியிட்டுவிட்டு இன்னொரு பக்கம் சாதியோடு பாலத்திற்கு பெயரிடும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர் தான் திராவிட மாடலா? கடந்த ஜூன் மாதம் தெருக்களுக்கு சாதிப்பெயரை நீக்க அரசாணை வெளியிட்டது திமுக அரசு. ஆதிதிராவிட நல விடுதி என்பதை சமூகநல விடுதி என்று வெறும் கட்டிடத்திற்குப் பெயர் மாற்றியதையே, சமூகநீதி சாதனைபோல் பேசிய திமுக அரசு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று சாதிப்பெயரைச் சூட்டுவது அயோக்கியத்தனமல்லவா? தமிழர் மண்ணில் தமிழர்க்கென்று எந்த தனித்த அடையாளமும் இருக்கக்கூடாது என்ற தீய எண்ணத்தை தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்? இது தமிழ்ப்பேரினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும்.
ஆகவே, கோவை - அவினாசி சாலை மேம்பாலத்திற்கு ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைக்கும் முடிவை கைவிட்டு, தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களாக, கொங்கு மக்களின் பண்பாட்டுப் பெருமைகளாகத் திகழும் பாட்டன்கள் தீரன் சின்னமலை, கொடி காத்த குமரன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், முதல் மொழிப்போர் வீரர் பல்லடம் பொன்னுசாமி, மாமன்னர் காலிங்கராயன், அண்ணன்மார் சாமிகளான பொன்னர் - சங்கர் ஆகியோரின் பெயர்களில் ஒன்றைச் சூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- புதிய உச்சமாக நேற்று தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்தது.
- தங்கம் விலை நேற்று 2 முறை உயர்ந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது.
இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது. தொடர்ந்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.
கடந்த மாதம் 8-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. அதன்பின்னரும் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் சவரன் ரூ.89 ஆயிரத்து 480-க்கும், கிராம் ரூ.11 ஆயிரத்து 185-க்கும் விற்பனையானது.
புதிய உச்சமாக நேற்று தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்தது. நேற்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை நேற்று 2 முறை உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2-வது முறையாக ரூ.680 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.11,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.171-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.31 ஆயிரத்து 200 அதிகரித்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080
07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600
06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000
05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-10-2025- ஒரு கிராம் ரூ.170
07-10-2025- ஒரு கிராம் ரூ.167
06-10-2025- ஒரு கிராம் ரூ.167
05-10-2025- ஒரு கிராம் ரூ.165
04-10-2025- ஒரு கிராம் ரூ.165
- ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.
- கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்ற கூட சொல்ல தெரியாதவர் இ.பி.எஸ்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் நேற்று இரவு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
மருத்துவமனைகளில், 'பயனாளிகள்' என்று சொல்ல வேண்டுமாம். பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாமா? அப்பா, அம்மா என்ற இரண்டு பெயரை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள். விட்டால், அந்த பெயர்களையும் மாற்றி விடுவார். எல்லாவற்றுக்கும் இரண்டாவது பெயர் வைக்கும், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது என்று பேசினார்.
இந்நிலையில் அப்பா, அம்மா என்ற பெயரை மாற்றி விடாதீர்கள் என்ற எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி உணர்வு மிக்கவர்.
* ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.
* தன்னை போலவே அனைவரையும் எண்ணுகிறார் இ.பி.எஸ்.
* மருத்துவ பயனாளர்கள் என கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.
* கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்ற கூட சொல்ல தெரியாதவர் இ.பி.எஸ்.
* பாக்கெட்டில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை வைக்க பயப்படுபவர்கள்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசும் முன் யோசித்து பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- தேவி ஈஸ்வரி நகர், விவேகானந்த நகர், தென்றல் நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், செந்தில் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
மயிலாப்பூர்: டிடிகே சாலை, பீமன்னா முதலி 1வது மற்றும் 2வது தெரு, சிபி ராமசாமி தெரு, பீமன்னா கார்டன் சாலை, பாவா சாலை, ஆனந்தா சாலை, சிவி ராமன் சாலை, டாக்டர் ரெங்கார்ட், ஆனந்தபுரம், ஸ்ரீ லப்தி காலனி, சுந்தரராஜன் தெரு, லம்பேத் அவென்யூ, அசோகா தெரு, சுப்பிரமணியன் சல்லம் தெரு, மேரிஸ் சாலை, ஆர்.ஏ.புரம், விசாலாட்சி தோட்டம், வி.கே.அய்யர் சாலை, ஸ்ரீனிவாசா சாலை, வாரன் சாலை, வெங்கடேச அக்ரஹாரம், ஜெத் நகர் 1 முதல் 3 தெரு, டிவி பேட்டை தெரு, விநாயகம் தெரு, வி.சி கார்டன் 1 முதல் 3 தெரு, தெற்கு மாட தெரு, ஜே.ஜே. சாலை, டிரஸ்ட்பாக்கம் வடக்கு மற்றும் தெற்கு, ஸ்ரீநிவாஸ் சாலை, ஸ்ரீநிவாசாரா கோலோன், சீதம்மாள் பகுதி ஸ்ரீனிவாஸ் கோலன் கார்டன் தெரு, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை பிரதான தெரு, பெருமாள் கோவில் தெரு.
பெசன்ட் நகர்: 4வது அவென்யூ, ஊரூர் ஆல்காட் குப்பம், தாமோதரபுரம், கற்பகம் கார்டன், ஜீவரத்தினம் நகர், வெங்கரத்தினம் நகர், பெசன்ட் அவென்யூ, அருணாச்சலபுரம், வசந்தா பிரஸ் ரோடு, பிரிட்ஜ் ரோடு.
திருமுல்லைவாயல்: போண்டேஸ்வரம் மாகரல், தாமரை பாக்கம், கரணி, சரஸ்வதி நகர் சிடிஎச் சாலை, ஆர்த்தி நகர், கொம்மாகும்பேடு, தேவி ஈஸ்வரி நகர், விவேகானந்த நகர், தென்றல் நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், செந்தில் நகர், ஜேபி நகர், பவர் லைன் சாலை.
ஆவடி: காந்தி நகர், ஆவடி பேருந்து நிலையம் மற்றும் டிப்போ, எச்விஎஃப் சாலை, பிவி புரம், ஓசிஎஃப் சாலை.
திருமங்கலம்: அண்ணா நகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், W-பிளாக், B, C மற்றும் D பிரிவு, 11வது முதல் 20வது பிரதான சாலை, பேஸ் பில்டர்ஸ் பிளாட்கள், மெட்ரோசோன் பிளாட்கள், NVN நகர், திருவள்ளீஸ்வரர் நகர், CPWD குவார்ட்டர்ஸ், பாடிகுப்பம் சாலை, எமரால்டு பிளாட்கள், கிளாசிக் அபார்ட்மென்ட்கள் சத்யசி நகர், வெல்கம் காலனி பிளாக் 1 முதல் 49A வரை, பென் பவுண்டேஷன்ஸ், டிவி நகர், ஜேஎன் சாலை, ஆசியாட், ரோகிணி, பயனியர் காலனி, சிந்து அபார்ட்மென்ட், ஜவஹர் காலனி, சக்தி காலனி, பழைய L, Z பிளாக், AL பிளாக், 4வது அவென்யூ, பழைய திருமங்கலம், மங்கலம் காலனி, 12வது மெயின் ரோடு AF பிளாக், 2வது அவென்யூ C பிளாக், நேரு நகர், 15வது மெயின் ரோடு 11வது மெயின் ரோடு, AE பிளாக்.
- 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
- காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 4½ ஆண்டுகளாக அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் சார்பாக ஜாக்டோ-ஜியோ முன்வைத்த கோரிக்கைகளில் சரண் விடுப்பு ஒப்படைப்பு தவிர வேறு எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற 16-ந்தேதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்த அனைத்து தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதேபோல, வரும் நவம்பர் 18-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






