என் மலர்tooltip icon

    அரியலூர்

    செந்துறை அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மகன் வசந்தகுமார் வயது 19. இவர் உடையார் பாளையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக் என்ஜினீயரிங் படித்து வருகிறார். 

    இவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக செந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் அதிகாலையில் வசந்தகுமார் வீட்டை ஆய்வு செய்தார். அப்போது வீட்டின் பின்புறம் இரண்டு கஞ்சா செடிகள் இருப்பதை கண்டு பிடித்தார். 

    அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மோகன் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் வசந்தகுமாரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
    அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. மழை நீரால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.இதன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டதோடு, பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நேற்று மாலை 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்லும் முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெய்த மழை குளிர்ச் சியை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே செந்துறை பகுதியில் நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தன. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே பருவ மழை காலத்திற்கு முன்பாக நீர்வரத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் மரங்கள் முறிந்து சாலையில் கிடப்பதை படத்தில் காணலாம்

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் போதிய அளவு மழை பெய்யாததால் அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால் ஆழ் குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை கறம்பக்குடி பகுதியில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் வயல் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழை மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கரூர் மாவட்டத்தில் கரூர் தாந்தோணி மலை, சுங்கவாயில், திருமாநிலையூர், லைட்ஹவுஸ் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் குளித்தலை பகுதியில் மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை லேசான தூரலுடன் மழை பெய்தது.#tamilnews
    திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர். இதில் வெற்றி பெற்றவர்கள் பரிசு பொருட்களை அள்ளிச் சென்றனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள திருமழபாடியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி மடத்துவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் முட்டியதில் கோவண்டாகுறிச்சியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 35), திருமழபாடியை சேர்ந்த கார்த்திக் (23), லால்குடியை சேர்ந்த சுரேஷ் (22), மெலட்டூரை சேர்ந்த கதிரேசன் (25) உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர் களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் நாற்காலி, கட்டில், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டிக் கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் திருமழபாடி பொதுமக்கள் செய்திருந்தனர். 
    உடையார்பாளையத்தில் மாயமான பெண்ணை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அப் பெண்ணுடன் இருந்த வாலிபரை கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே உள்ள பாணகிராயன் பட்டியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் இலக்கியா. இவர் உடுமலை பேட்டையில் உள்ள ஒரு மில் ஆலையில் வேலை பார்த்து வந்தார். 

    இந்நிலையில் 13.9.17 அன்று முதல் இலக்கியாவை காணவில்லை. இது குறித்து சங்கர் தனது மகள் இலக்கியாவை கடத்தி சென்று விட்டதாக உடையார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட இலக்கியா குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

    விசாரணையில் இலக்கியா கல்கத்தாவில் இருப்பது தெரியவந்தது. உடனே உடையார்பாளையம போலீசார் கல்கத்தா சென்றனர். பின்னர் கல்கத்தா போலீசாரின் உதவியுடன் இலக்கியாவை மீட்டனர். அவருடன் இருந்த கல்கத்தாவை சேர்ந்த வாலிபர் அபிசேக் தப்பி ஒடிவிட்டார். இலக்கியாவை மீட்ட உடையார் பாளையம் போலீசார் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

    கல்கத்தா போலீசார் அபிசேக்கை தேடி வந்தனர். இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அபிசேக்கை கல்கத்தா போலீசார் கைது செய்தனர். பின்னர் இது குறித்து உடையார் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் போலீசார் கல்கத்தா சென்று அபிசேக்கை கைது உடையார் பாளையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அபிசேக்கை சிறையில் அடைத்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டெய்லரை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 62). இவர், தனது வீட்டிலேயே டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரிடம், 15 வயதுடைய சிறுமி ஒருவர், துணி தைக்க சென்றார். அப்போது அந்த சிறுமியிடம் அளவு எடுக்க வேண்டுமென கூறி வீரமுத்து வீட்டுக்கு உள்ளே அழைத்து சென்று வாயில் துணியை வைத்து அமுக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

    பின்னர் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை வீரமுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு கர்ப்பம் கலைந்தது. பின்னர் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து வீரமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.
    அரியலூர்

    அரியலூர் அருகே உள்ள மண்டையன்குறிச்சியை சேர்ந்த சுந்தரராசு மனைவி வேம்பு(வயது 25). இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வேம்புவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் வேம்பு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். 

    இந்த வழக்கு சம்பந்தமாக பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா உசேன்நகரம் கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி மற்றும் சுதாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையும் மீட்கப்பட்டது.
    திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது திருமானூர், திருமழபாடி, அரண்மனைகுறிச்சி, ஆண்டிமங்கலம், ஏலாக்குறிச்சி உள்பட 32 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட மணல் குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் முத்துக்குமார் தலைமையில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.

    மேலும், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 201 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

    அந்த மனுக்கள் மீது துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முகாமில், மாற்றுத்திறனாளிகளை காத்திருக்க வைக்காமல் அவர்களிடம் கலெக்டரே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாற்றுத்திறனாளிகளிடம் நல அதிகாரிக்கு உத்தரவிட்டார்.  
    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டும், பேருந்துகளும் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். KaduvettiGuru
    ஜெயங்கொண்டம்:

    காடுவெட்டி குரு மரணமடைந்ததையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டும், பேருந்துகளும் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். KaduvettiGuru

    வன்னியர் சங்க தலைவர் குரு மரணமடைந்ததை தொடர்ந்து, அவருடைய உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    இந்நிலையில் குரு மரணமடைந்ததையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. ஜெயங்கொண்டம் செந்துறை பிரிவு ரோட்டில் உள்ள அரசு பணிமனைக்கு சென்ற 3 அரசு பஸ்களை வழிமறித்த மர்மநபர்கள் பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி ஓடினர்.

    இதேபோல் காட்டுமன்னார்குடியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசு பஸ்சை பொன்னேரியிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சை கல்லாத்தூரிலும் வழிமறித்த மர்ம நபர்கள் கண்ணாடிகளை உடைத்து விட்டு சென்றனர். திருச்சி-சிதம்பரம் சாலையில் சூரியமணலில் ஒரு பஸ்சின் கண்ணாடியையும், ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி அருகே 2 பஸ்களின் கண்ணாடியையும், வாரியங்காவலில் ஒரு பஸ்சின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் உடைத்தனர்.

    ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி பஸ் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அரியலூரிலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. இன்று (ஞாயிற்றுக் கிழமை) முகூர்த்த நாள் என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவதற்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆண்டிமடம் கடைவீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் போலீசாரால் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பிகளை எடுத்து சாலையின் குறுக்கே போட்டு, அதன்மேல் டயர்களை போட்டு எரித்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் அந்த கும்பலை எச்சரித்தனர்.

    ஆனாலும் அந்த கும்பல் போலீசாரை கண்டுகொள்ளாமல் 4 ரோடு சந்திப்பு மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ரோட்டில் உள்ள போலீஸ் கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தது. அங்கிருந்து அண்ணாசிலை வரை உள்ள வணிக வளாகங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது.

    தனியார் கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், டீக்கடை பெஞ்ச், தள்ளுவண்டி போன்ற பொருட்களை உடைத்தும், உடைத்த பொருட்களை நடுரோட்டில் போட்டும் எரித்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக கனரக, இலகுரக வாகனங்கள், செல்லவில்லை. மேலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவங்களால் ஆண்டிமடம் பகுதி கலவர பூமி போல் காட்சியளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டிமடம் நாட்டார் தெருவை சேர்ந்த செல்வம் (வயது 35), சூரக்குழி கிராமத்தை சேர்ந்த சரவணகுமார்( 28), அருள்பிரகாசம் (32), சிவகுமார் (30), ஜான்விக்டர் (31), கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (33), பார்த்திபன் (34), பிரகாஷ் (29), மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (35) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


    இந்தநிலையில் ஜெ. குருவின் உடல் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, தா.பழுர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன.

    ஜெயங்கொண்டம் பகுதியில் முற்றிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 13 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் அரியலூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடு பட்டு வருகின்றனர். #KaduvettiGuru
    உடல்நிலை குறைவால் உயிரிழந்த காடுவெட்டி குரு உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு ராமதாஸ், அன்புமணி, பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தினர். #KaduvettiGuru
    ஜெயங்கொண்டம்:

    பா.ம.க. முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், வன்னியர் சங்க தலைவராகவும் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஜெ.குரு (வயது 57) நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

    இதையடுத்து குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குருவின் உடலுக்கு வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க. தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்தநிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று காடுவெட்டிக்கு வந்து குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


    முன்னதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, முன்னாள் எம்.பி. பொன்னுச்சாமி, அ.தி.மு.க.வை சேர்ந்த அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராம ஜெயலிங்கம், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
    இன்று காலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காடுவெட்டிக்கு நேரில் சென்று குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு காடுவெட்டி குரு உடல் இன்று அடக்கம் செய்யப்படும். #KaduvettiGuru #Ramadoss #PonRadhakrishnan
    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. 9 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலை வரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஜெ. குரு நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு குருவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் அவர் மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த ஜெ. குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள காடுவெட்டிக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. ஜெ.குருவின் உடலுக்கு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மரணம் அடைந்த ஜெ.குரு 2001ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, அரியலூர், உடையார் பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நேற்றிரவு பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் பிறந்தவர் குரு. இதனால் அவரது கிராமத்தின் பெயராலேயே காடுவெட்டிகுரு என அழைக்கப்பட்டார். அவருக்கு ஹேமலதா என்ற மனைவியும், விருதாம்பிகை என்ற மகளும், கனல் அரசு என்ற மகனும் உள்ளனர்.

    குருவின் உடலுக்கு இன்று காலை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். நாளை காலை வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டதாலும், அரசு பஸ்கள் இயங்காததாலும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பஜார்கள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    அரியலூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 80). இவருக்கு பரமசிவம் (55) என்ற மகனும், வளர்மதி (52) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி அவருக்கு சொந்தமான சொத்துக்களை வளர்மதிக்கு எழுதி வைத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் பரமசிவத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் , கிருஷ்ணமூர்த்தியை தாக்கி காலால் மிதித்தார். இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பரமசிவத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள்சார் பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி  தமிழகம்  முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், உடையார்பாளையம், மீன் சுருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 4500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 80 சதவீதத்திற்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள், மெடிக்கல் கடைகள், பெட்டிக்கடைகள், பால் பூத்துகள் ஆகியவை மட்டும் திறந்து இருந்தன. ஆட்டோக்கள், பஸ்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடின.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி,  கந்தர்வக்கோட்டை, விராலிமலை ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ்  நிலையம், அண்ணா சிலை, பிருந்தாவனம், மேல ராஜ வீதி, கீழராஜ வீதி, டி.வி.எஸ்., திலகர் திடல் ஆகிய பகுதிகளில்  உள்ள பெரிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில சிறிய கடைகள்  மட்டும்  திறந்து உள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதி, வடக்கு மாதவி சாலை, பெரம்பலூர் மதர்ஷா சாலை, எளம்பலூர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் ஓடியது. 

    கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான  கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை. கரூரில் ஜவகர் பஜார், கோவை சாலை, மேற்கு பிரதட்சணம் சாலை, காமாட்சியம்மன் கோவில் தெரு, செங்குந்தபுரம், பழைய திண்டுக்கல் சாலை ஆகிய இடங்களில்  செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் இன்று வழக்கம்போல் திறந்திருந்தன. அனைத்து பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. 

    இந்த  முழுஅடைப்பு போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம், ம.தி.மு.க., மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய  யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன.
    ×