search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்
    X

    புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள்சார் பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி  தமிழகம்  முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், உடையார்பாளையம், மீன் சுருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 4500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 80 சதவீதத்திற்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள், மெடிக்கல் கடைகள், பெட்டிக்கடைகள், பால் பூத்துகள் ஆகியவை மட்டும் திறந்து இருந்தன. ஆட்டோக்கள், பஸ்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடின.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி,  கந்தர்வக்கோட்டை, விராலிமலை ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ்  நிலையம், அண்ணா சிலை, பிருந்தாவனம், மேல ராஜ வீதி, கீழராஜ வீதி, டி.வி.எஸ்., திலகர் திடல் ஆகிய பகுதிகளில்  உள்ள பெரிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில சிறிய கடைகள்  மட்டும்  திறந்து உள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதி, வடக்கு மாதவி சாலை, பெரம்பலூர் மதர்ஷா சாலை, எளம்பலூர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் ஓடியது. 

    கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான  கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை. கரூரில் ஜவகர் பஜார், கோவை சாலை, மேற்கு பிரதட்சணம் சாலை, காமாட்சியம்மன் கோவில் தெரு, செங்குந்தபுரம், பழைய திண்டுக்கல் சாலை ஆகிய இடங்களில்  செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் இன்று வழக்கம்போல் திறந்திருந்தன. அனைத்து பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. 

    இந்த  முழுஅடைப்பு போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம், ம.தி.மு.க., மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய  யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன.
    Next Story
    ×