என் மலர்tooltip icon

    அரியலூர்

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
    அரியலூர்:

    வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுனன் பரிசு வழங்கினார்.

    பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை யொட்டி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பிச்சை பிள்ளை முன்னிலை வகித்தார். பின்னர் காற்று மாசுபடுதல் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதேபோல கொட்டரை அரசு உயர்நிலைப்பள்ளியிலும் மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மங்களமேட்டை அடுத்துள்ள அத்தியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் ‘காற்று மாசுபாட்டை தவிர்ப்போம்‘ என்பதை வலியுறுத்தி பள்ளி தலைமை ஆசிரியர் அருள்நம்பி தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதனை லப்பைக்குடிக்காடு அரசு டாக்டர் அசோக்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.
    ஆண்டிமடம் அருகே 56 பவுன் நகைகளை கொள்ளையடித்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 59). இவர் ஆண்டிமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்று வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    அதே ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 5 நாட்களாக திருவிழா நடைபெற்று வந்த நிலையில் மே 22-ந் தேதி கூழ்காய்த்து ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதற்காக ராமச்சந்திரன் தன்னுடைய மனைவி இந்திரா மற்றும் மகள் கார்த்திகா ஆகியோரை முன்னரே அனுப்பிவிட்டு ராமச்சந்திரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இரவு 7 மணியளவில் சாமிக்கு தீபாராதனை நடைபெறும் நேரத்தில் கார்த்திகா தந்தைக்கு போன் செய்து கோவிலுக்கு அழைத்துள்ளார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டார். 

    சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பூட்டை திறந்து பார்த்தபோது கதவின் உள்பக்கம் தாழ்ப்பாள்போடப்பட்டிருந்தது. பின்னர் பின்பக்க கதவு வழியாக சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் உள்ள இரும்பு பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பார்த்தபோது வீட்டின் மேல்பகுதியில் உள்ள ஓட்டை பிரித்து உள்ளே சென்ற மர்மநபர்களால் பீரோவில் இருந்த 56 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அடுத்த சில தினங்களில் நடைபெற இருந்த மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த நகை, பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது

    இதனை அடுத்து ராமச்சந்திரன் ஆண்டிமடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் போலீசாரின் விசாரணையில், ராமச்சந்திரன் வீட்டின் எதிர்புறம் வசிக்கும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் சுரேஷ் என்பவரின் மனைவி வசந்தி(29) திட்டமிட்டு தனக்குத் தெரிந்த இருவரின் துணையோடு கொள்ளையடித்தது தெரியவந்தது. 

    வசந்தி அவருக்கு தெரிந்த ஈரோட்டை சேர்ந்த பூட்டு பழுது பார்க்கும் காஜா முகைதீன்(33). இவரது நண்பர் குனியமுத்தூரை சேர்ந்த சார்லஸ்அசோக்குமார்(56) ஆகியோரது துணையுடன் ராமச்சந்திரன் கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் 3 நாட்களாக திருட முடியாமல் கடைசி நாளன்று பணம்- நகையை திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 

    இதையடுத்து வசந்தி, காஜாமுகைதீன், சார்லஸ் அசோக் குமார் ஆகிய 3 பேரையும் ஆண்டிமடம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 18 பவுன் நகைகளை மீட்டனர்.
    அஸ்தினாபுரத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்பக்கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வி.கைகாட்டி:

    அரியலூரில் அரசு சிமெண்டு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பதற்காக அஸ்தினாபுரம், காட்டுபிரிங்கியம், வெளிப்பிரிங்கியம், நெறிஞ்சிகோரை ஆகிய கிராமங்களில் இருந்து கடந்த 1996-ம் ஆண்டு 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இந்த நிலையில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு பல ஆண்டு களாகியும் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது தற்போது நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக உள்ளன. இதனால் நிலம் கொடுத்த விவசாயிகள் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது குறைந்த அளவு இழப்பீடு தொகையே வழங்கப்பட்டது. எனவே அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பி தரவேண்டும். துண்டிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கான மின் மோட்டார்களின் மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என கூறி அரியலூர் அருகே அஸ்தினாபுரம் கிராமத்தில் அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரியலூர் அருகே விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

    அரியலூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒரு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மோசடி வழக்கு சம்பந்தமாக அரியலூர் மாவட்டம் வெங்கனூரை சேர்ந்த அமிர்தராஜ் (வயது 42) என்பவரிடம் விசாரிக்க திருவெறும்பூர் போலீஸ்காரர்கள் மணி, வசந்தகுமார், இன்பமணிஆகியோர் வெங்கனூருக்கு சென்றனர்.

    அப்போது அமிர்தராஜ் அங்குள்ள டாஸ்மாக்கடை அருகே இருப்பது தெரிய வந்தது. உடனே 3 போலீஸ்காரர்களும் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அமிர்தராஜ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் விரட்டி சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அமிர்தராஜ் மகன் வினித் (21) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். இதையடுத்து தந்தை-மகன் 2 பேரும் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து 3 போலீஸ்காரர்களையும் தாக்கினர். இதில் 3 பேருக்கும் பாட்டில் குத்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து போலீஸ்காரர் மணி வெங்கனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் வழக்குப் பதிவு செய்து அமிர்தராஜ், வினித் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

    திருமண மொய்ப்பணம் தகராறில் தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50), தொழிலாளி. இவரது மகன் இளமதி (23). நேற்று முன்தினம் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை சண்முகம் வைத்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று இளமதி, தந்தையிடம் மொய் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், திருமணத்திற்கு அதிக செலவு ஆகி விட்டது. எனவே அந்த பணத்தை வைத்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இளமதி தன்னிடம் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதனால் தந்தை -மகன் இடையே மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த இளமதி, உருட்டுக்கட்டையால் சண்முகத்தை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரி ழந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் உடையார் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் அருகே குடும்ப தகராறில் கணவரை கொடூரமாக கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழ மாளிகை காலனி தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 60) தொழிலாளி. இவரது மனைவி அசலம்பாள்(55), மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று அப்பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது. அதில் பங்கேற்று விட்டு இரவு ராமு வீட்டிற்கு வந்து படுத்து தூங்கினார்.

    அவர் தூங்கிய சிறிது நேரத்தில் திடீரென எழுந்த அசலம்பாள் வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து ராமுவை சரமாரி தாக்கினார். இதில் ராமு பலத்த காயமடைந்து தூங்கிய நிலையிலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதையடுத்து உடலில் ரத்தம் படிந்த கறையுடன் கோவிலுக்கு சென்ற அசலம்பாளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்தனர். அப்போது ராமு கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து , ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமுவை கொன்ற அசலம்பாளை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் அவர் கணவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொலை செய்ததும் கோவிலுக்கு சென்ற அசலம்பாள், 30 வருட பகையை தீர்த்து விட்டேன் என்றுகூறி சூடம் ஏற்றி வழிபட்டுள்ளார். அசலம்பாளிடம் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலுர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி.யான சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான இவர், முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.

    சிவசுப்பிரமணியன் 1998-2004ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மேலும், 1989ம் ஆண்டில் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

    இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரான ஆண்டிமடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
    நீதிமன்றங்களில் வழக்குகள் குறைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி திறந்து வைத்தார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை கடந்த 1995-ம் ஆண்டு புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டது. அப்போது முதல் செந்துறையில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் செந்துறையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து செந்துறை மேலராஜ வீதியில் உள்ள தனியார் கட்டிடத்தில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி பேசுகையில், மக்களை தேடி நீதிமன்றம் என்ற வகையில், உங்கள் ஊருக்கு இந்த நீதிமன்றம் வந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்குகள் குறைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதே சமயத்தில் நீதிமன்றம் சார்ந்த பல்வேறு பணிகள் உள்ளன. அதனை இப்பகுதி மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், இந்த நீதிமன்றம் வந்துள்ளதால் வருவாய்த்துறையில் இருந்து வரும் வழக்குகளை விரைவாக முடிக்க ஏதுவாக இருக்கும். இந்த நீதிமன்றத்திற்கு வழக்குகளே வராமல் இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும், என்றார்.

    புதிதாக திறக்கப்பட்ட இந்த நீதிமன்றத்தில் செந்துறை தாலுகாவில் உள்ள செந்துறை, இரும்புலிக்குறிச்சி, தளவாய் மற்றும் குவாகம் போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குற்ற சம்பவங்கள் மற்றும் நில உடைமை உள்ளிட்ட சிவில் வழக்குகள் விசாரிக்கப்படும். ஏற்கனவே இப்பகுதியில் இருந்து அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும், செந்துறை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் வரவேற்றார். திறப்பு விழா முடிந்ததும், நீதிமன்ற பணிகள் தொடங்கின.

    செந்துறை நீதிமன்றத்தின் முதல் நீதிபதி மாணிக்கம் இருக்கையில் அமர்ந்து, வழக்கு விசாரணை மேற்கொண்டார். திறப்பு விழாவில் அரியலூர் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் பழனிச்சாமி, அட்வகேட் அசோசியேஷன் தலைவர் செல்வராஜ், ஜெயங்கொண்டம் வக்கீல்கள் சங்க தலைவர் ஜெயராமன், ஜெயங்கொண்டம் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    அரியலூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்க கோரி தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

    அரியலூர், ஜூன். 12-

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் எழிலரசன், பொதுக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செய லாளர்கள் திருமானூர் ராஜ்குமார், ஜெகதீசன், தா.பழுர் அறிவழகன், ஆண்டிமடம் குமாரதேவன், அரியலூர் மணிகண்டன், செந்துறை செல்வராஜ், ஜெயங் கொண்டம் நகர செயலாளர் ரவி, உடையார்பாளையம் பேரூராட்சி செயலாளர் முனியசாமி கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2-வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரி விக்கப்பட்டது. அனைத்து ஏரி, குளம் , வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகள், கிளைகளில் கட்சி கொடி யேற்றி புதிய பெயர் பலகை திறந்து வைக்க வேண்டும், அரியலூர் பேருந்து நிலையத்தில் 24மணி நேரமும் காவலர்களை நியமிக்க வேண்டும், பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள மின்விளக்குகள் சரியாக பயன்பாட்டில் இல்லை. அதைசீர் செய்திட வேண்டும். அரியலூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில் ஒன்றிய பொருளாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

    ஜெயங்கொண்டம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மெக்கானிக் பலியானார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் சதீஷ்(வயது 22). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது நண்பர்கள் சின்ன வளையம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் பாலமுருகன்(22), குருவாலப்பர் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சிற்றரசு மகன் பிரபாகரன்(22)ஆகிய 3 பேரும் திருச்சி- சிதம்பரம் சாலையில் புதுச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சதீஷ், பாலமுருகன் ஆகிய இருவரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அரியலூர்- பெரம்பலூர் மாவட்டம் உள்ளடக்கிய செயற்குழு கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வநம்பி தலைமை தாங்கினார்.

    மேலிட பொறுப்பாளர்கள் பாவரசு, குணவழகன், பாரிவேந்தன், கோவேந்தன், கனியமுதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்துவது. அதன்படி வருகிற 13-ந் தேதி ஜெயங்கொண்டத்திலும், 14-ந் தேதி அரியலூரிலும் 15-ந் தேதி குன்னத்திலும் செயற்குழு நடத்துவது. இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் தலித்மக்கள் பாதிக்காத வண்ணம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    பொன்பரப்பி கலவரத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பிற சமூகத்தினர் மனதை புண்படுத்தும் வகையில் எந்த வித பதிவையும் பதிவேற்றம் செய்யக்கூடாது. மீறி பதிவேற்றம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம் வரையிலான உற்பத்தி, ரூ.3 லட்சம் வரையிலான சேவை மற்றும் ரூ.1 லட்சம் வரையிலான வியாபாரம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்க 25 சதவீதமாக அதிக பட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம ்மானியத்துடன் வங்கி கடன் பெற ஏதுவாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற தமிழக அரசின் திட்டம் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பொது பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 35 வரையும் சிறப்பு பிரிவினருக்கு 18 முதல் 45 வயது வரையும் இருத்தல் வேண்டும். திட்டத்தின் பங்கு தொகையாக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் பொது பிரிவினரும், 5 சதவீதம் சிறப்பு பிரிவினரும் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்திற்கு 2019- 20-ம் ஆண்டிற்கு இலக்கீடாக 75 நபர்கள் ரூ.45 லட்சம் என நிர்ணயித்து வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க தகுதியுடைய, ஆர்வமுடைய படித்த வேலை வாய்ப்பற்ற தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 2 விண்ணப்ப நகல்களுடன் குடும்ப அட்டை, கல்வி சான்று, சாதிச்சான்று, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை மற்றும் உறுதி மொழி பத்திரம் ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட தொழில் மையம், அரியலூர் என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    ×