என் மலர்tooltip icon

    அரியலூர்

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமத்தை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 30). இவரது மனைவி அம்பிகா(28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. அனுஷ்யா(9), சபரி(7) என 2 குழந்தைகள் உள்ளனர். பாக்யராஜ் கடந்த 3 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்தார். அப்போது முதல் அடிக்கடி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    அப்போது பாக்யராஜ், அம்பிகாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் பாக்யராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்க வருகிற 9-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு- குறு விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதிஉதவி வழங்கும் திட்டத்தில், தற்போது 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் நிதிஉதவி வழங்கும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உயர் வருவாய் பிரிவினர் மற்றும் நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்களை தவிர பிற விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்வதற்கு உடனடியாக கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக வருவாய்த்துறை, வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுகளுக்கும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே இதுவரையில் தங்களது தாய் மற்றும் தந்தை பெயரில் நிலங்கள் இருக்கும் விவசாயிகள், அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வருகிற 9-ந் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து இத்திட்டத்தில் பயன் பெறலாம். மேலும் மாவட்டத்தில் இதற்கென சிறப்பு முகாம் வருகிற 9-ந்தேதி அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், அனைத்து கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. மேற்கண்ட நிதி உதவியினை பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், வங்கி கணக்கு பாஸ் புத்தகம், பட்டா சிட்டா நகல், ரேஷன் கார்டு நகல், மொபைல் எண் ஆகியவற்றை உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் இணைத்து ஒப்படைக்க வேண்டும். எனவே, மேற்கண்ட திட்டத்தில் நிதி உதவி பெற விவசாயிகள் சிறப்பு முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    செந்துறை அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பழமலைநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் அனிதாவிற்கும், காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமாருக்கும் நேற்று காலை காசாங்கோட்டை கிராமத்தில் திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர், மணமகள் வீட்டில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க பழமலைநாதபுரம் நோக்கி நேற்று மாலை ஒரு வேனில் சென்றனர்.

    வேனை செந்துறை அருகே உள்ள குறிச்சிக்குளத்தை சேர்ந்த சரவணன்(வயது 37) ஓட்டினார். செந்துறை அருகே உள்ள நமங்குணம் பெரிய ஏரிக்கரை என்ற இடத்தில் சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் உள்ள ஏரியில் இறங்கி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த மணமக்கள் அனிதா, சதீஷ்குமார் மற்றும் அனிதாவின் உறவினர் பழனிவேல், 3 குழந்தைகள் உள்பட 25 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இதில் பழனிவேல் உள்பட 3 பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமக்கள் வீட்டிற்கு திரும்பினர். திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல், வறண்ட நிலையில் உள்ளது. தண்ணீர் இருந்திருந்தால் வேனில் இருந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம். தண்ணீர் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக செந்துறை போலீசார், வேன் டிரைவர் சரவணனிடம் விசாரணை நடத்தினர். வேனின் ஸ்டியரிங் பட்டை உடைந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி முகத்தில் சாம்பல் பூசியபடி அதிகாரியிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் தாலுகாவை சுற்றியுள்ள 7 கிராமங்களில் ஓ.என்.ஜி.சி. மற்றும் தனியார் நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்க தொடங்கினர். அப்போது பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன் வைத்து, அந்த பணியினை தடுத்து நிறுத்தினர். தற்போது அந்த நிறுவனங்கள் அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்த திட்டத்தை அனுமதித்தால் தமிழ்நாடு பாலைவனமாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மாநில அரசு இப்பிரச்சினைகளை முன்னெடுத்து மேற்கண்ட நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் தடுப்பது கடமையாகும். இதற்காக விவசாயிகள் தங்களது கோரிக்கை கொண்ட மனு முதல்- அமைச்சருக்கு சென்று சேரும் வகையில் ஆண்டிமடத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    விவசாயிகள் மணலை கையில் ஏந்தியும், விவசாயம் அழிந்து சாம்பலாகும் என்பதை உணர்த்தும் வகையில் முகத்தில் சாம்பல் பூசிக் கொண்டும் கோரிக்கை மனுவை ஆண்டிமடம் துணை தாசில்தார் வேலுமணியிடம் வழங்கினர்.
    திருமானூரில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க போர்கால நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க போர்கால நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருமானூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    இதில் மாவட்ட செயலாளர் உலக நாதன், சிறப்புரை ஆற்றினார். கலியபெருமாள், பரிசுத்தம், கனகராஜ், கல்யாண சுந்தரம், ராஜேந்திரன், மதியழகன், பாலகுரு, கரும்பாயிரம், முருகேசன், சுப்பிரமணியன், மருதமுத்து மற்றும் சி.பி.ஜ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் செய்திருந்தார்.
    அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனருமான சரவணவேல்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக ரூ.15 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 704 நீர் ஆதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதால், குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டது. தற்போது 72 ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளும், புதிய குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்க 20 திட்ட பணிகளும், 12 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கான பணிகளும் என மொத்தம் 104 திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சித் துறை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), தாசில்தார்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
    அரியலூர் அருகே கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த போட்டோவை வாட்ஸ்அப்பில் வெளியிட்டதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நம்மங்குணம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சுடர்மணி. இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை.

    சுடர்மணியுடன் அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். ஒரே கிராமத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் இருவரும் நண்பர்களாக பழகிவந்தனர். இருவரும் கிராமத்திற்கு வரும்போது சுடர்மணி வீட்டிற்கு சரவணன் அடிக்கடி வந்துள்ளார். அப்போது சுடர்மணியின் மனைவி சங்கீதாவிற்கும் சரவணனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சுடர் மணிக்கு சரவணன் அடிக்கடி மது வாங்கி கொடுத்துவிட்டு அவர் மனைவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஆபாசமான முறையில் இதனை தனது செல்போனிலும் சரவணன் செல்பியும் எடுத்துள்ளார்.

    இது சுடர்மணிக்கு தெரிய வந்தது. இது குறித்து கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக கணவனை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் சங்கீதா வசித்து வருகிறார்.

    சரவணன், சங்கீதாவுடன் உல்லாசமாக இருந்த போது சங்கீதாவிற்கு தெரியாமல் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு எனது ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லை யென்றால், இந்த படத்தை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக சரவணன் தொடர்ந்து மிரட்டி உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 19-ந் தேதி சங்கீதாவின் உறவினர் அறிவழகன் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சரவணன் அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி சங்கீதாவின் உறவினர் அறிவழகன் கேட்டதால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து சங்கீதாவின் தந்தை பெரியசாமி செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தனது மகள் தற்கொலைக்கு சரவணன் தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆனாலும் சம்பந்தப்பட்ட நபர் மீது இதுவரை போலீசார் எந்தவிதமான நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்று சங்கீதாவின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் செந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ஜெயங்கொண்டம் அருகே சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓரேப் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு குமாரி என்ற மனைவியும், இந்துமதி, காந்திமதி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். செல்வராஜ் நேற்று மாலை ஒரேப் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் அவர் மணக்கரைக்கும், சின்ன வளையம் கிராமத்திற்கும் இடையே உள்ள குன்றான்குழி ஏரியின் அருகே சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த மர்மகும்பல் ஒன்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    செல்வராஜ் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து செல்வராஜ் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கொலை செய்த மர்மநபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளியை மர்மநபர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குடிநீர் குழாய்கள் மற்றும் வால்வுகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 750 ஊரக குடியிருப்புகளுக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சிக்கும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 17.01 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 7 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் அதனுடைய மதிப்பை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குடிநீர் செல்லும் குழாய்களையும், வால்வுகளையும் அடிக்கடி தெரியாத நபர்கள் மூலம் சேதப்படுத்தப்படுவதாலும், விதிகளுக்கு புறம்பாக மெயின் குடிநீர் குழாய்களில் இணைப்பு செய்து தண்ணீர் எடுப்பதாலும் கடைகோடி கிராமங்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது.

    தற்போது மழை பெய்யாத காரணத்தாலும் உள்ளூரில் உள்ள குடிநீர் ஆதாரங்களின் நீர்மட்டம் குறைந்து கொண்டேயிருப்பதாலும், கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளின் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலையில், வெகு தொலைவில் இருந்து கொண்டு வரும் குடிநீரின் மதிப்பை உணர்ந்து வீணாக்காமல், விதிமுறைகளுக்கு புறம்பாக குழாய் இணைப்பு செய்யாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும். யாரேனும் குழாய் உடைப்பு செயலிலும், வால்வுகளை சேதப்படுத்தும் பணியிலும், விதிமுறைகளுக்கு புறம்பாக குழாய் இணைப்பு பணியிலும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சேதப்படுத்தப்பட்ட பணிக்கான தொகையுடன், அபராத தொகையும் சேர்த்து மூன்று மடங்காக சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யப்படும். விதிமுறைக்கு புறம்பாக ஊராட்சியின் மூலமாகவோ, தனிப்பட்ட முறையிலோ குடிநீர் குழாய் இணைப்பு செய்திருந்தால் துண்டிப்பு செய்து கொள்ள வேண்டும். அதிகாரிகளின் மூலம் கண்டறியப்பட்டால் மிகவும் கடுமையான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அனைவரும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு கலெக்டர் விஜயலட்சுமி அறிவுரை வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அஸ்தினாபுரம் கிராம ஊராட்சியில் மாதிரி பள்ளி வளாகத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறு குளங்கள், குட்டை மற்றும் ஏரிகளை தூர்வாரி மழை நீரை சேமிக்க வேண்டும். புதிதாக மரக்கன்றுகளை நடுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புதிதாக கட்டப்படும் வீடுகள், சமுதாயக்கூடங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து, மழை நீரை சேமிக்க வேண்டும்.

    ஏற்கனவே உள்ள கட்டிடங்களில் மழை நீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மழை நீர் சேகரித்தல் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளிலுள்ள பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் நாடகங்கள், நடனம், தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற பாடல்கள் மூலமாக மழை நீர் சேகரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களிலுள்ள சுவர்களில் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து விளம்பரங்கள் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர் விஜயலட்சுமி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன் மற்றும் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அரியலூர் அருகே சாக்குப்பையில் கட்டி வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள நாகம்பந்தல் கிராமத்தில் வீரனார் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தனர். அப்போது சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில், பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். உடனே குழந்தையை மீட்டு ஆண்டிமடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்தது.

    பிறந்து சில மணி நேரமே ஆன அந்த குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. தகாத உறவில் பிறந்ததால் அந்த குழந்தையை தாய் சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாநில அளவிலான நெட்பால் போட்டிக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டத்தில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான நெட்பால் போட்டி வருகிற ஜூலை மாதம் 29, 30-ந் தேதிகளில் தத்தனூர் எம்.ஆர்.சி. வித்யாலயா பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மாணவர்கள் தேர்வு ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். 

    இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். 
    ×