என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு காது, மூக்கு, தொண்டை நோய்கள், கண் மருத்துவம், பல் நோய்கள், நுரையீரல் நோய்கள், இருதய நோய்கள், நரம்பியல் நோய்கள், காசநோய் மற்றும் தொழுநோய் போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டனர்.

    இம்முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக 34 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு பேறுகால ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச காலணி ஆகியவை வழங்கப்பட்டது. இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம் செய்திருந்தார். இதில் சுகாதார ஆய்வாளர் குமார், ராமமூர்த்தி, அருள் பிரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி, கரைமேடு கிராமத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அதற்கு தேவையான உபகரணங்களை அப்பகுதிக்கு கொண்டு வந்தனர். கிராமமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை தடுத்து நிறுத்தினர்.

    தற்போது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி கேட்டு ஓ.என். ஜி.சி.யும், வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் மனு அளித்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்ட விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் விவசாயம் பெரிதும் பாதிக்கும். எனவே அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை இன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் அறிவித்திருந்தது.

    அதன்படி இன்று காலை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூரில் நாளை புத்தக திருவிழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.
    அரியலூர்:

    அரியலூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழக பண்பாட்டு  பேரமைப்பு, மாவட்ட நிர்வாகம் சார்பில் 5-வது புத்தக திருவிழா நாளை (19-ந்தேதி) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை நடைபெறுகின்றது. நாளை நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனிபால கிருஷ்ணன் தலைமை தாங்கு கிறார். செயலாளர் ராமசாமி வரவேற்று பேசுகிறார். மாவட்ட கலெக்டர் டாக்டர் வினய் பொன்னாடை போர்த்துகிறார். மாவட்ட போலீஸ் எஸ்.பி. சீனிவாசன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்கிறார். 

    தமிழக அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், ஆர்.டி.ராமச்சந்திரன், புத்தகத் திருவிழா ஒருங்கி ணைப்பாளர் பொருளாளர் நல்லப்பன், ரகுநாதன், துணைத்தலைவர் இளங்கோ, துணை செயலாளர் ஜோதி ராமலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் செல்லப்பாண்டி யன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 

    விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து புத்தக திருவிழாவை துவக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமி ழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி வருகிறார். 

    திருச்சியிலிருந்து கார் மூலமாக பெரம்பலூர் விருந்தினர் மாளிகை சென்று பின்னர் ராமகிருஷ்ணா கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கார் மூலமாக அரியலூர் சென்று புத்தக திருவிழாவை  தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். பின்னர் கல்லங்குறிச்சி கலியுகவரதராஜ பெருமாள் கோவில் சென்று சாமி தரிசனம் செய்கிறார். 
    பின்னர் அரியலூர் விருந்தினர் மாளிகை சென்று விட்டு கார் மூலமாக திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு எஸ்.பி. சீனிவாசன்  உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. இளஞ்செழியன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    அரியலூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டிராதித்தம் கிராமத்தில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு அரியலூர் தொகுதி செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கி, காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கண்டிராதித்தம் மற்றும் மேட்டுதெரு ஆகிய இரு கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு- புத்தகம், பேனா ஆகியவற்றை வழங்கினர். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமை தாங்கி, காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காமராஜரின் வாழ்க்கை குறிப்பு குறித்து மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவும், தேசிய இளைஞர் திறன் நாள் விழாவும் கொண்டாப்பட்டது. விழாவிற்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எம்.ஆர்.கல்லூரியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரஜாமணிக்கம் கலந்து கொண்டு, காமராஜரை பற்றி பேசினார். தொடர்ந்து பள்ளியில் 15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டது. மேலும் காமராஜர் பற்றி சிறப்பாக பேசிய மாணவிகளுக்கு பரிசுவழங்கப்பட்டது. முடிவில் தேசிய இளைஞர் திறன் நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஆண்டிமடம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு வட்டார தலைவர் குடியரசு தலைமை தாங்கி, காமராஜர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கிராம கமிட்டி துணை தலைவர்கள் தண்டபாணி, கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ஜெயங்கொண்டம் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தொடங்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு என நகராட்சி மூலம் குடிநீர் வழங்க கடந்த 1998-ம் ஆண்டு கரடிகுளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அருகே ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர்த்தேக்கத் தொட்டி மூலம் நீர் ஏற்றி 18-வது வார்டில் வசிக்கும் அனைத்து சமூக மக்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆங்காங்கே வறட்சி நிலவிவருவதால் அந்த ஆழ்குழாய் கிணற்றின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் நகராட்சி நிர்வாகத்தினர் நகராட்சி குடிநீர் வாகனம் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கி வந்தனர். இந்த நிலையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

    இதேபோல் 18-வது வார்டில் வசிக்கும் இருளர் சமூக மக்களும் தாங்களுக்கு தனி ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என மனு அளித்தனர். இதையடுத்து 18-வது வார்டு பொதுமக்களுக்கு என பொதுவாக ஏற்கனவே இருந்த ஆழ்குழாய் கிணற்றிற்கு அருகே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க பூமி பூஜை நேற்று காலை நடைபெற இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இருளர் சமூக மக்கள் ஆழ்குழாய் கிணறு தாங்களுக்கு வந்ததை தான், பொதுவாக அமைக்கிறார்கள் என நினைத்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் இடத்தில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ரவி ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில், இது 18-வார்டு பொதுமக்களுக்கு பொதுவாக அமைக்க வந்தது எனவும், தாங்களுக்கு என தனியாக ஏதும் வரவில்லை எனவும் எடுத்து கூறி, அதற்கான நகலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காண்பித்தனர். அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் மாவட்ட விவசாய சங்க பொருளாளர் உத்திராபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். செய்தி உண்மை தன்மையை அறிந்த இருளர் சமூக மக்கள் தாங்களுக்கு தனி ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது நகராட்சி நிர்வாகத்தினர், அதிகாரிகளிடம் இதுகுறித்து கூறி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்போது தட்டுப்பாடின்றி தொடர்ந்து குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் நகராட்சி நிர்வாகத்தினர் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை நடத்தி பணியை தொடங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா அரியலூரில் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா அரியலூரில் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் 33 மாற்றுத்தினாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 76 ஆயிரத்து 660 மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். விழாவில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தங்க நாணயங்களும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி கைக்கடிகாரம் வழங்கப்பட்டது.

    இதில் அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி காமாட்சி, முடநீக்க வல்லுனர் ராமன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    2-வது கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது மகனை கொன்றுவிட்டு தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    வி.கைகாட்டி:

    2-வது கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது மகனை கொன்றுவிட்டு தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

    நாகை மாவட்டம், குத்தாலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் சுமிதா (வயது 34). இவருடைய முதல் கணவர் இறந்து விட்டார். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் புதுமார்க்கெட் மெயின்ரோட்டை சேர்ந்த சரக்கு வாகன டிரைவரான ஜெயக்குமாரை சுமிதா 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    ஜெயக்குமாரின் முதல் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். ஜெயக்குமார்-சுமிதா தம்பதிக்கு 2 வயதில் ரித்திஷ் என்கிற மகன் உள்ளான். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஜெயக்குமார் வேலைக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் மகனுடன் தனியாக இருந்த சுமிதா தனது தாய் அமுதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் திருமணத்திற்காக எனக்கு போட்ட நகை மற்றும் பொருட்களை எடுத்து செல்லுங்கள் என கூறிவிட்டு உடனடியாக தொடர்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை.

    இதற்கிடையே வேலைக்கு சென்றிருந்த கணவர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் உள்ள அறையில் ஒரே சேலையில் மனைவி சுமிதாவும், மகனும் ரித்திசும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவலறிந்த கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுமிதா, ரித்திஷின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுமிதாவின் தாய் அமுதா கொடுத்த புகாரின்பேரில், கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2-வது கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சுமிதா தனது 2 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமிதாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளை ஆவதால் அரியலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.
    பெரம்பலூர் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்கரையில் உள்ள மாவட்ட பெருந்திட்ட அலுவலக நுழைவு வாயிலில் நேற்று நடந்தது. ஊர்வலத்தை திட்ட இயக்குனர் (ஊராட்சிகளின் முகமை) சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி, கிறிஸ்டோபர் செவிலியர் கல்லூரி, பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த மாணவ- மாணவிகள் “ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் பிறப்பு இடைவெளி 3 ஆண்டுகள் அவசியம்”, “குழந்தை ஆணா, பெண்ணா என நிர்ணயிப்பது ஆணின் உயிரனுவே”, “அளவான குடும்பம், வளமான வாழ்வு” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர். ஊர்வலம் ரோவர் ஆர்ச் வரை சென்று மறுபடியும் பாலக்கரை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

    முன்னதாக ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில், உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இதில் துணை இயக்குனர் (மருத்துவம்) சிவப்பிரகாசம் உஷ, பொது சுகாதாரத் துறையின் திட்ட மேலாளர் கலைமணி, புள்ளியியல் உதவியாளர் கோடீஸ்வரன், பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக வாழ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. கருத்தரங்கில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
    அரியலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு ரூ.2½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மருதையாறு வடி நிலக்கோட்டம் சார்பில் முதல்–அமைச்சரின் குடிமாமரத்து பணிகளுக்கான அரியலூர் மாவட்ட பாசனதாரர்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

    தமிழக முதல்–அமைச்சரின் குடிமராமத்து திட்டம் 2019–20 ஆண்டிற்கான பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அரியலூர் மாவட்டத்தில் மருதையாறு வடிநில கோட்டம் அரியலூர் மூலம் அயன் ஆத்தூர் உடையான் ஏரிக்கு ரூ.15 லட்சமும், அயன் ஆத்தூர் பெரிய ஏரிக்கு ரூ.24 லட்சமும், விளாங்குடி ஓடை அணைக்கட்டுக்கு ரூ.29 லட்சத்து 50 ஆயிரமும், பொய்யூர் கல்லார் ஓடை அணைக்கட்டுக்கு ரூ.29 லட்சத்து 50 ஆயிரமும் குடிமாமரத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல கல்லக்குடி பெரிய ஏரிக்கு ரூ.25 லட்சமும், அருங்கால் ஓடை அணைக்கட்டுக்கு ரூ.18 லட்சமும், மல்லூர் நைனேரிக்கு ரூ.20 லட்சமும், மல்லூர் மணிவாசகர் ஓடை அணைக்கட்டுக்கு ரூ.12 லட்சமும், குருவாலப்பர் கோவில் பொன்னேரிக்கு ரூ.20 லட்சமும், சித்தமல்லி அணைக்கு ரூ.28 லட்சமும் குடிமாமரத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 10 குடிமாமரத்து பணிகளுக்கு ரூ.2 கோடியே 21 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது 9 பாசனதாரர்கள் சங்கம் அமைக்கப்பட்டு 9 பணிகள் தொடங்கப்பட்டு, கரைகள் பலப்படுத்துதல், சட்டர் பழுதுபார்த்தல் போன்ற புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும், அரியலூர் மாவட்டத்தில் ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் திருச்சி மூலம் புள்ளம்பாடி பிரதான கால்வாய்கள் குடிமாமரத்து பணிகளுக்கு 10.6 கிலோ மீட்டர் வரைக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகள் யாவும் அந்தந்த பாசனதாரர்கள் சங்கம் மூலமே நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், அரசு வழிகாட்டியுள்ள நெறிமுறைகளை பின்பற்றி பணிகள் தரமாக செய்யப்பட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க நேரிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை) தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, வேல்முருகன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், நில அளவைத்துறை அலுவலர், பதிவுத்துறை மற்றும் மாவட்ட பாசனதாரர்கள் சங்கத்தினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி கண்டியன் கொல்லை கீழத்தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் குடிநீருக்காக அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஜெயங்கொண்டம்- செந்துறை சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதாஸ், ஊராட்சி எழுத்தர் ஸ்டாலின், ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இதில் அதிகாரிகள் கூறுகையில், விரைவில் கண்டியன்கொல்லை கீழத்தெருவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம்- செந்துறை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரியலூர் அருகே பா.ம.க. பிரமுகர் கொலையில் தி.மு.க. செயலாளர் மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே உள்ள அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல். அரியலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருக்கிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பா.ம.க. ஒன்றிய செயலாளர் கருணாநிதி. இவர்கள் இருவருக்கும் இடையே பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இதனால் இருதரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. ஒன்றியச் செயலாளரின் மகன் விக்கி மற்றும் அவரின் நண்பர் ராஜா ஆகியோர் ஏலாக்குறிச்சி பெட்ரோல் பங்க்கில் வைத்து மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டனர்.

    இந்த வழக்கில் பா.ம.க. செயலாளர் கருணாநிதியின் ஆதரவாளரான செட்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரை முக்கிய குற்றவாளியாக கருதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவரும் பா.ம.க.வில் பொறுப்பில் இருந்து வந்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் சில மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கள்ளூர் பாலம் அருகேயுள்ள கருப்பசாமி கோவிலின் முன்பு அந்த வழியாக வந்த சரண்ராஜை வழிமறித்தனர். பின்னர் அவரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அரியலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோதிவேலின் மகன் பூவரசன் மற்றும் அவரது ஆதரவாளர்களான சூர்யா, அஜித், முத்துப்பாண்டி, மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவான ஜோதிவேலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    அரியலூர் அருகே திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள இலந்தைக்கூடத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திருவையாறில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் செல்வியும் இலந்தைகூடத்தை சேர்ந்த அஜித்காந்த் (18) என்பவரும் பிளஸ்-2 வகுப்பில் ஒன்றாக படித்தனர். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    சம்பவத்தன்று செல்வி வீட்டில் தனியாக இருக்கும் போது அங்கு சென்ற அஜித்காந்த், செல்வியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பிறகு அஜித்காந்த், செல்வியுடன் பழகுவதை நிறுத்தி விட்டார்.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வி இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின்கீழ் அஜித்காந்தை கைது செய்தனர். இதையடுத்து அவரை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி, 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அஜித்காந்த் அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×