search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disabled"

    • ராஜபாளையத்தில் இமானுவேல் சேகரனார் பிறந்தநாளையொட்டி மாற்று திறனாளிகளுக்கு சீருடைகள் வழங்கும் விழா நடந்தது.
    • அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் தியாகி இமானுவேல் சேகரனார் 100-வது பிறந்தநாளையொட்டி, மாவீரன் சுந்தரலிங்கம் அமைப்புசாரா கட்டுமான மற்றும் ஆட்டோ தொழிலாளர் கள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு சீருடை வழங்கும் விழா இருளப்ப சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க செயலாளரும், புதிய தமிழகம் நகர துணை செயலாளருமான விங்கம் தலைமை தாங்கினார். மாற்றுதிறனாளிகள் நல ஆர்வலர் முத்துகிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் ராதாகிருஷ்ணராஜா வரவேற்றார்.

    புதியதமிழகம் மாநில பொதுசெயலாளர் வி.கே.ஐயர் சிறப்புரையாற்றினார். தேவேந்திரர் குல வேளாளர் மகாசபை தலைவர் முத்துக்காளை, மாற்றுத்திற னாளிகளுக்கு சீருடைகளை வழங்கினார். செந்தட்டியாபு ரம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. முடிவில் வனராஜ் நன்றி கூறினார்.

    • காலை 11.30 மணிக்கு தனுஷ்கோடி அருகிலுள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தார்.
    • மகனை அவரது தாய் நிர்மலா கட்டியணைத்து உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றார்.

    ராமேசுவரம்:

    சென்னை திருவான்மியூரை சேர்ந்த சேர்ந்த பரத் மோகன்-நிர்மலா தேவி தம்பதியின் மகன் ஹரிஷ் (வயது 17). இவர் ஆட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஆவார். இருந்தபோதிலும் கல்வி, விளையாட்டு உள்ளிட்டவைகளில் மற்றவர்களை விட அதிக திறன் கொண்டவராக வலம் வந்தார்.

    அதேபோல் ஹரிஷ் சிறுவயது முதலே நீச்சலில் கூடுதல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனை அவரது பெற்றோர் சாதனை யாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதற்காக சிறு வயது முதல் நீச்சல் பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கத் தொடங்கி னர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.

    உள்ளூர் போட்டிகளில் மனதைரியத்துடன் பங்கேற்ற ஹரிஷ் ஏராளமான பரிசுகளை குவிக்க தொடங்கினார். இதையடுத்து கடலில் நீந்தி சாதனை படைக்க ஹரிஷை அவரது பெற்றோர் ஊக்கப்படுத்தினர். அதற்கான ஏற்பாடுகளையும், பயிற்சிகளையும் தொடர்ந்து ஹரிஷ் மேற்கொண்டார். சிறப்பு பயிற்சியாளர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.

    இதையடுத்து இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான அதிக கடல் நீரோட்டம் கொண்ட பாக்ஜலசந்தியை கடக்க முடிவு செய்த ஹரிஷ் தனது பெற்றோரிடம் கூறினார். அதனை ஏற்றுக் கொண்டு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர் அரசிடம் உரிய அனுமதியும் பெற்றனர்.

    அதன்படி கடந்த 6-ந் தேதி ஹரிஷ் தனது தந்தை பரத்மோகன் மற்றும் 24 நீச்சல் வீரர்களுடன் ராமேசுவரத்தில் இருந்து இலங்கை சென்றனர். பின்னர் அன்று இரவு 11 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கிய ஹரிஷ் மறு நாள் (7-ந்தேதி) காலை 11.30 மணிக்கு தனுஷ்கோடி அருகிலுள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தார்.

    28 கிலோமீட்டர் தொலைவை சுமார் 11 மணி நேரம் 52 வினாடிகளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். அரிச்சல் முனை வந்தடைந்த மகனை அவரது தாய் நிர்மலா கட்டியணைத்து உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றார்.

    அப்போது சுங்கதுறை கண்காணிப்பாளர் சம்பத், கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்டோரும் இயலாமை என்பதை இயலும் என்று மாற்றிக்காட்டி சாதனை படைத்த ஹரிசை கைதட்டி வரவேற்று பாராட்டினர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
    • எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகுபந்து போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற சிறுவன் தங்கம் வென்றுள்ளார். அவருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தம்பி இராஜ்குமாரின் மகன் பாலசுப்பிரமணியம், ஜெர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.

    'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்' எனும் தமிழ்மறையோன் நமது பெரும்பாட்டன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, தன் நிலை கண்டு துவண்டு, சோர்ந்து விடாமல், தொடர்ச்சியாக முயன்று, தனக்குக் கிடைக்கப்பெற்ற மிகச்சொற்ப வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமது அயராத முயற்சியினாலும், அபாரத் திறமையினாலும் உலக அரங்கில் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்துள்ள அன்புமகன் பாலசுப்பிரமணியமுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கடுமையான உழைப்பும், தளராத மன ஊக்கமும் இருந்தால் எத்தகைய சூழலிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, இளந்தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் அன்புமகன் பாலசுப்பிரமணியம் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது உள்ளம் கனிந்த புரட்சி வாழ்த்துகள்!" இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.

    • சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 3 கோட்ட அளவில் நடைபெற உள்ளது.
    • கும்பகோணம் பஸ் நிலையம் அருகில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழக அரசு மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறா தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 3 கோட்ட அளவில் நடைபெற உள்ளது.

    தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெறுகிறது.

    இதேபோல் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். வளாகம் பேருந்து நிலையம் அருகில் வரும் 18-ம் தேதியும், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கிராம சேவை கட்டிடத்தில் 22-ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றி தழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திற னாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
    • மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக 2023-2024-ம் நிதியாண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2000, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.6000, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, ஐடிஐ மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.8000, இளநிலை பட்டப்படிப்பிற்கு ரூ.12000 மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்கு ரூ.14000 வழங்கபட்டு வருகிறது.

    மேலும் பார்வையற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, ஐடிஐ மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.3000, இளநிலை படிப்பிற்கு ரூ.5000 மற்றும் முதுநிலை படிப்பிற்கு ரூ. 6000 வழங்கபட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் தங்களுடைய அடையாள அட்டை (அனைத்துப் பக்கங்களும் மருத்துவ சான்றுடன்), குடும்ப அட்டை, சென்ற ஆண்டின் மதிப்பெண் சான்று, கல்வி சான்று, வங்கி புத்தகநகல் ஆகியவற்றுடன் இணையதளத்தில் விண்ணப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணேசன் ( 55 ). வாய்பேச முடியாத நிலையில் உள்ள இவர் தாரமங்கலத்தில் கறி வெட்டும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
    • தனியார் பஸ் மோதியதில் கீழே விழுந்த கணேசன் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    சேலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் புகையிலைக்காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் ( 55 ). வாய்பேச முடியாத நிலையில் உள்ள இவர் தாரமங்கலத்தில் கறி வெட்டும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். காலையில் வழக்கம்போல் வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது தாரமங்கலத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே ஓமலூரில் இருந்து சங்ககிரி நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியதில் கீழே விழுந்த கணேசன் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.
    • மர்ம ஆசாமி யாரோ ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை திறந்துவிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு மும்பைக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பயணிகள் இறங்கியவுடன் ரெயில் பெட்டிகளை ரெயில்வே ஊழியர்கள் பூட்டினர். அந்த ரெயில் 3-வது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது.

    இதனை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக கருதி அங்கு விரைந்து சென்றனர்.

    இதனை பார்த்த பயணிகளும் பதட்டம் அடைந்து அலறி அடித்து ஓடினர். உடனே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.

    ரெயில் பெட்டி அருகில் சென்று பார்த்த போது, தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்கு ரெயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் தீயணைப்பான் கருவியில் இருந்து புகை வெளியேறியது தெரியவந்தது. இதனால் ரெயில்வே ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்.

    மர்ம ஆசாமி யாரோ ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை திறந்துவிட்டுள்ளனர். இதனால் தான் அதிலிருந்து புகை வந்துள்ளது என்பது தெரியவந்தது. தீயணைப்பான் கருவியை திறந்து விட்ட ஆசாமி யார்? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் பெட்டியில் இருந்து திடீரென்று புகை வந்த சம்பவத்தால் புதுவை ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை முகாம் நடைபெற்று வந்தது.
    • 3-வது செவ்வாய்க்கிழமைகளில் உத்திரமேரூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது செவ்வாய்க்கிழமைகளில் அரசு ஆஸ்பத்திரி எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை முகாம் நடைபெற்று வந்தது.

    இனி வரும் காலங்களில் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியிலும் மாதத்தின் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், 3-வது செவ்வாய்க்கிழமைகளில் உத்திரமேரூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நடைபெறும் முகாமில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 போன்றவற்றுடன் கலந்துக்கொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையுங்கள்.

    • திவாகர் (வயது 8) தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்.
    • இவர் தனக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்க மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட ம் திருக்கோவிலூர் கொழுந்தராபட்டு கிராம த்தைச் சேர்ந்த இருதயராஜ் மகன் திவாகர் (வயது 8) தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலி வழங்க மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்.மனுவை பெற்றுக்கொ ண்ட மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளி சிறுவ னின் மனுமீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிர மணிக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள மூளைமுடக்கு வாதத்தால் பாதிக்கப்ப ட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்கா லியினை ,மாற்றுத்திறனாளி சிறுவனு க்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார். மாற்றுத்தி றனாளி சிறுவன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த உடனே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகா ரிகளுக்கு உத்தரவி டப்பட்டு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறப்பு சர்க்கர நாற்காலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஓட்டலில் வேலை பார்த்த மாற்றுத்திறனாளி திடீரென பரிதாபமாக இறந்தார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த தம்பிபட்டியை சேர்ந்தவர் சுந்தரம்மாள். இவரது மகன் ராஜ்குமார்(வயது48), மாற்றுத்திறனாளி. விபத்தில் ஒரு காலை இழந்தவர். இவர் திருமங்கலம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அதே ஓட்டல் மாடியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் நேற்று இறந்து விட்டார். இதுபற்றி சுந்தரம்மாள் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் சக் ஷம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக் கான சுயம்வரம் நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலி யூரில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மணமகன் மற்றும் மணமகள்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

    கடலூர்:

    சிகரம் உன்னால் முடியும் தோழா மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் சக் ஷம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக் கான சுயம்வரம் நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலி யூரில் நடைபெற்றது. இதற்கு சையத் முஸ்தபா தலைமை தாங்கினார். வள்ளிவிலாஸ் உரிமையா ளர் பாலு, பொருளாளர் குமரவேல், துணைத்தலை வர் சுந்தர மூர்த்தி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்ராயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மணமகன் மற்றும் மணமகள்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மணமகன் மற்றும் மணமகள்கள் தங்களுக்கு தகுதியான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர்.

    முன்னதாக தாமரைச் செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் , கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் முத்துக் குமாரசாமி முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், ராஜன், அருண், குளோபல் மனவளர்ச்சி சிறப்பு பள்ளி இயக்குனர் கோபால், கிறிஸ் டாோபர், இக்னைட் முதி யோர் காப்பக இயக்குனர் ஜோஸ் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி சாதனை படைத்துள்ளார்.
    • ஏற்கனவே கடலூர் அருகே 5 கி.மீ. தூரம் கடலில் நீந்தி ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்.

    ராமேசுவரம்:

    இந்தியா-இலங்கை இடையே உள்ள கடல் பகுதியில் நீந்தி பலர் சாதனை படைத்துள்ளனர். இலங்கை தலை மன்னார்-தனுஷ்கோடி இடையேயான பாக் ஜலசந்தி கடற்பகுதியை 1994-ம் ஆண்டு குற்றாலீஸ் வரன் தனது 12 வயதிலும், 2019-ம் ஆண்டு தேனியை சேர்ந்த ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும் நீந்தி கடந்தனர்.

    அதேபோல் ஆட்டி சத்தால் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த ஜியாராய் என்ற 13 வயது சிறுமி 2012-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதியும், தேனியை சேர்ந்த சினேகன் என்ற 14 வயது சிறுவன் அதே மாதத்தில் 29-ந்தேதி யும் தலைமன்னார்-தனுஷ் கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்தனர்.

    இவர்களை போன்றே பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இந்த கடல் பகுதியை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி சாதனை படைத்துள்ளார்.

    சென்னை வடபழனியை சேர்ந்த ராஜசேகரன்-வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ்(வயது29). கால், கைகள் செயல்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி வாலிபரான இவர் நீச்சலில் ஆர்வம் கொண்டவர். தனது 4 வயதில் இருந்தே நீச்சல் பயிற்சி பெற்று வரும் இவர், அதில் பல சாதனைகளை படைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தார்.

    ஏற்கனவே கடலூர் அருகே 5 கி.மீ. தூரம் கடலில் நீந்தி ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். இந்த நிலையில் இலங்கை தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது பெற்றோர் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருடன் ராமேசு வரத்திற்கு வந்தார்.

    அவர் தனது சாதனை பயணத்தை தொடங்குவதற்காக இலங்கை தலை மன்னார் ஊர்முனை கடல் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார். அன்று மாலை 5 மணிக்கு மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாஸ் தலைமன்னாரில் இருந்து நீச்சல் அடிக்க தொடங்கினார்.

    தொடர்ந்து இரவிலும் விடாமல் நீந்திய அவர், நேற்று மதியம் 1.30 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்து சேர்ந்தார். தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 32 கி.மீ. தூர கடல் பகுதியை 20 மணிநேரம் 20 நிமிடத்தில் கடந்துள்ளார்.

    இதன் மூலம் இந்த கடல் பகுதியை கடந்த முதல் மாற்றுத்திறனாளி வாலிபர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவருக்கு கொல்கத்தாவை சேர்ந்த யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாசுக்கு ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த வாலிபரை அவரது பெற்றோர், உறவினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். மேலும் பாரதீய ஜனதா கட்சியினரும் நேரில் சென்று வாலிபரை பாராட்டினர்.

    தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாசுக்கு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

    ×