என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கங்கையில் நீராட யாத்ரீகர்கள் டிராக்டரில் பயணம்.
    • காருடன் மோதுவதை தவிர்க்க டிரைவர் டிராக்டரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில்  யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று பவுர்ணமி என்பதால் கங்கையில் நீராட அவர்கள் கதர்கஞ்ச் என்ற இடத்திற்குச் சென்றனர். டிராக்டரின் டிராலியில் பயணம் செய்தோர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும்  ஆவார்கள்.

    இந்த டிராக்டர் கஸ்கஞ்ச்  பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே வழியில் சென்ற காருடன் மோதாமல் இருக்க டிரைவர் டிராக்டரை திருப்பியுள்ளார். அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் 15 யாத்ரீகர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். இதில் 8 பேர் குழந்தைகள் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளா்.

    • ஆக்ராவில் நடக்கும் ராகுல் காந்தி பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.
    • மார்ச் மாதம் முதல் வாரம் ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேசத்துக்கு செல்ல உள்ளது.

    லக்னோ:

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த பாத யாத்திரை உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மொரதாபாத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

    இருவரும் காரின் மேலே அமர்ந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். பொதுமக்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்தபடியும், கைகளை அசைத்தபடியும் சென்றனர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் பலர் ஆர்வமுடன் கை குலுக்கினர். பாதயாத்திரையை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதேபோல் சம்பல், அம்ரேகா, கத்ரஸ், அலிகர், ஆக்ரா, பதேப்பூர் சிக்கிரி மாவட்டங்களில் நடக்கும் பாத யாத்திரையிலும் பிரியங்கா கலந்துகொள்வார் என தெரிய வந்துள்ளது.

    ஆக்ராவில் நாளை நடக்கும் ராகுல் பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொள்வார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

    இதையடுத்து, மார்ச் முதல் வாரம் ராகுல் காந்தியின் யாத்திரை மத்திய பிரதேசத்துக்குச் செல்ல உள்ளது. அந்த யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நல்ல நிலையிலான குடிமக்களின் வாழ்க்கைத்தரம் கொண்ட ஒரு நாடுதான் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இருப்பதாக அர்த்தம்.
    • அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடித்து விடும்.

    மகராஜ்கஞ்ச்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உத்தரபிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டார். இதில் 40,011 பேருக்கு ரூ.1,143 கோடி கடன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

    நல்ல நிலையிலான குடிமக்களின் வாழ்க்கைத்தரம் கொண்ட ஒரு நாடுதான் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இருப்பதாக அர்த்தம். அதன் மூலம் ஒவ்வொருவரும் பலனடைவார்கள்.

    அந்தவகையில் உலக பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி தலைமையின் கீழ் 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இது அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடித்து விடும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • உத்தர பிரதேச இளைஞர்கள் தங்களது மாநிலத்தைக் கட்டமைத்து வருகின்றனர்.
    • சிறு விவசாயிகள், தொழில்முனைவோர்கள் தூதராக செயல்பட்டு வருகிறேன் என்றார் பிரதமர் மோடி.

    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், சந்த் ரவிதாசின் 647-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளில் வாரணாசியில் வளர்ச்சியானது பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களின் தூதராக செயல்படுகிறேன்.

    குடும்ப அரசியல் மற்றும் ஊழல் காரணமாக உத்தர பிரதேச மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கியது. காங்கிரசின் இளவரசர் காசி மற்றும் உத்தர பிரதேச இளைஞர்களை அடிமைகள் என்கிறார். என்ன மாதிரியான விமர்சனம் இது? அவர்கள் உ.பி. இளைஞர்கள் மீது விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இளைஞர்கள் தங்களது மாநிலத்தைக் கட்டமைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    • வீடியோ வைரலான நிலையில் வாலிபர்களின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.
    • காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை பிடித்து அவர்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    நொய்டாவில் சாலையில் வேகமாக செல்லும் ஒரு காரில் இருந்து வாலிபர் ஒருவர் பணத்தை காரின் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    செக்டார் 20 பகுதியில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், இரவு நேரத்தில் சாலையில் சொகுசு கார் ஒன்று வேகமாக செல்கிறது. அந்த காரில் வாலிபர்கள் சிலர் இருக்கின்றனர். அதில், ஜன்னல் ஓரம் இருந்த வாலிபர் ரூபாய் நோட்டுகளை எடுத்து சாலையில் வீசும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் வாலிபர்களின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன. இதுபோன்ற செயல்களால் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படும் என விமர்சனங்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து நொய்டா போலீசார் விசாரணையில் இறங்கினர். காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை பிடித்து அவர்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • வாரணாசி ஒரு மினி பஞ்சாப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.
    • இந்தியா இன்று சாந்த் ரவிதாஸின் தகவல்களை ஏற்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியை தாக்கி, அதன் உறுப்பினர்கள் சாதிவெறியின் பெயரால் மக்களைச் சுரண்டுவதாக குற்றம் சாட்டினார்.

    அவர் தனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் சாந்த் ரவிதாஸின் 647-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். முன்னதாக, இங்கு புதிதாக நிறுவப்பட்ட சாந்த் ரவிதாஸ் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார். 

    அப்போது பிரதமர் மோடி பேசுகையில்," சாந்த் ரவிதாஸின் பிறந்தநாளின் புனிதமான நிகழ்வில், உங்கள் அனைவரையும் அவரது பிறந்த இடத்திற்கு வரவேற்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் தொலைதூர இடங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள். குறிப்பாக பஞ்சாபில் இருந்து வந்திருக்கும் என் சகோதர சகோதரிகள். வாரணாசி ஒரு மினி பஞ்சாப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.

    இந்தியா இன்று சாந்த் ரவிதாஸின் தகவல்களை ஏற்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. அவரது ஆசீர்வாதத்தால் இவை அனைத்தும் சாத்தியமானது.

    தங்களின் குடும்பத்தினரின் நலன் மீது மட்டுமே அக்கறை கொண்டவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலன் பற்றி சிந்திக்க முடியாது. பழங்குடியின பெண் ஒருவரை இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்" என்றார்.

    • உத்தர பிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது.
    • இந்த முறை காங்கிரசுக்கு 17 இடங்களை சமாஜ்வாதி ஒதுக்கியுள்ளது.

    லக்னோ:

    2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இந்தக் கூட்டணி தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் தான் சிக்கல்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை காங்கிரசுக்கு அதிக இடங்கள் கொடுக்க மறுத்துள்ளது.

    இதற்கிடையே, ராகுல் காந்தி தற்போது உத்தர பிரதேசத்தில்நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    நாங்கள் தரும் இடங்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்துகொள்வேன் என அகிலேஷ் யாதவ் கண்டிஷன் போட்டதாகத் தெரிகிறது.

    உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே நேற்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தனது கண்டிஷனுக்கு காங்கிரஸ் கட்சி ஓகே சொன்னதால், ராகுல் காந்தி யாத்திரையில் அகிலேஷ் பங்கேற்கிறார்.

    இதுதொடர்பாக அகிலேஷ் கூறுகையில், ஆக்ராவில் நடைபெறும் யாத்திரையில் நான் பங்கேற்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • பாலிவுட் பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
    • நாட்டின் 73 சதவீத மக்களான ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினர் கலந்து கொள்ளவில்லை.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் ராமர் சிலை பிரதிஷ்டை, ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நேரடியாக கலந்து கொள்ள நாட்டில் உள்ள பெரும்பாலான பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெரும்பாலானோர் நேரில் கலந்து கொண்டனர்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகனும் நடிகருமான அபிசேக் பச்சன், அபிசேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அழைப்பிதழ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பா.ஜனதா மற்றும் மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பாலிவுட் பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் அழைக்கப்பட்டனர். அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினர் என யாரும் கலந்து கொள்ளவில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 73 சதம்வீதம் பேர் எனத்தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே ஐஸ்வர்ரா ராய் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தியை பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. "இந்திய மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட விரக்தியில் ராகுல் காந்தி இந்தியாவின் பெருமைக்குரிய ஐஸ்வர்ரா ராயை இழிவுப்படுத்தும் புதிய மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

    நான்காவது தலைமுறை அரசியல் வம்சம், எந்தவித சாதனையும் இல்லாததோடு, ராகுல் காந்தியின் முழு குடும்பத்தையும் விட இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா ராய் மீது இப்போது அவதூறுகளை கையாள்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.

    ஐஸ்வர்யா ராயை இழிவு படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசிய பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ள பா.ஜனதா, கர்நாடகத்தை சேர்ந்தவர் இழிவுப்படுத்தப்படும்போது சித்தராமையா அமைதியாக இருக்கிறார் எனவும் விமர்சனம் செய்துள்ளது.

    "உங்களுடைய தலைவர் தொடர்ந்து சக கன்னடியரை இழிவு படுத்தும் நிலையில், உங்கள் கன்னட பெருமையை நிலைநாட்டி, அத்தகைய அவமரியாதைக்கு எதிராக பேசுவீர்களா அல்லது உங்கள் முதல்வர் நாற்காலியை பாதுகாக்க அமைதியாக இருப்பீர்களா? என சித்தராமையாவுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளது.

    • உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி என்றார் அகிலேஷ் யாதவ்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே இன்று தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரசுக்கு வாரணாசி, ரேபரேலி, அமேதி, பாரபங்கி, ஜான்சி, காசியாபாத் உள்ளிட்ட 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ல 63 இடங்களில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், எல்லாம் நன்றாகத்தான் முடிந்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி உறுதியாகி உள்ளது. எங்களுக்குள் மோதல் இல்லை. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என தெரிவித்தார்.

    • ராகுல் காந்தியின் நடைபயணம் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.
    • உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 இடங்களை அகிலேஷ் யாதவ் ஒதுக்கியுள்ளார்.

    லக்னோ:

    2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இந்தக் கூட்டணி தாக்குப் பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரசுக்கு அகிலேஷ் யாதவ் ஒதுக்கியுள்ளார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தற்போது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராகுல் காந்தி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் கூட்டணி முறியும். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கு தொண்டர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைகிறது என தெரிவித்தார்.

    • சமாஜ்வாடி கட்சியில் தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர்.
    • எம்எல்சி-யாகவும் இருந்த நிலையில், கட்சி உறுப்பினர் பதவி என அனைத்தில் இருந்தும் விலகல்.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் கடந்த 13-ந்தேதி தேசிய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அப்போது தனக்கு எதிராக பாகுபாடு பார்ப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் உத்தர பிரதேச மாநில மேல்சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

    அவர் அகிலேஷ் யாதவுக்கு எழுதிய கடிதத்தில் "உங்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கடந்த பிப்ரவரி 12-ந்தேதி உங்களுடன் பேசிய பிறகு, தேசிய பொதுச்செயலாளர் பதவியை 13-ந்தேதி ராஜினாமா செய்தேன். என்னுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் முன்முயற்சி எடுக்கப்படாததால், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு கடிதத்தில் "நான் சமாஜ்வாடி கட்சி சார்பில் மேல்சபைக்கு தேர்வு செய்யப்பட்டேன். இந்த நிலையில கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மேலும் எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ராம்சரித்மனாஸ் மற்றும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், கட்சி சார்பாக யாரும் குரல் கொடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜாராகவில்லை.
    • ராகுல் காந்தி நேரில் ஆஜராக சுல்தான்பூரில் உள்ள மாவட்ட சிவில் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.

    சுல்தான்பூர்:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கர்நாடகா தேர்தலின் போது 2018-ம் ஆண்டு பெங்களூரில் நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சித்ததாக பா.ஜனதாவை சேர்ந்த விஜய் மிஸ்ரா 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி வழக்கு தொடர்ந்தார்.

    பா.ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாக கூறுகிறது. ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி தலைவராக இருக்கிறார் என்று ராகுல் காந்தி கூறியதை புகாராக அவர் மனுவில் குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் இந்த கருத்தை தெரிவித்தபோது அமித்ஷா பா.ஜனதா தலைவராக இருந்தார்.

    அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜாராகவில்லை.

    ராகுல் காந்தி இன்று காலை நேரில் ஆஜராக உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள மாவட்ட சிவில் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.

    இதை தொடர்ந்து ராகுல் காந்தி சுல்தான்பூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார். அவர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் கோர்ட்டில் இருந்து வெளியேறினார்.

    முன்னதாக இந்த வழக்கை தொடர்ந்த பா.ஜனதா பிரமுகர் விஜய் மிஸ்ரா கூறும்போது, 'பா.ஜனதா நாட்டின் மிகப்பெரிய கட்சி. அதன் அப்போதைய தலைவரை கொலைகாரன் என்று அழைப்பது நியாய மற்றது' என்றார்.



    ×