என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.

    மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசில் மாணவி ஒருவர் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், நான் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் அளவு எடுப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுதொடர்பாக வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால், அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறிவிட்டார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் கூறினேன். அவர்களும் அது பற்றி கண்டுகொள்ளவில்லை.

    பள்ளிக்கு வந்த ஆண் டெய்லர் அளவெடுத்தபோது என்னிடம் அத்துமீறினார். உடல் பாகங்களை தொட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். எனவே, அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.

    இதில், பள்ளிக்கு வந்து சீருடைக்காக அளவெடுத்தபோது மாணவியிடம் அத்துமீறியதாக 60 வயதுடைய டெய்லர் மற்றும் அவரது சகோதரியான மற்றொரு டெய்லர், இதற்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவியிடமும், அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் மாணவிகளுக்கு சீருடை அளவெடுத்த விவகாரம் தொடர்பாக 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 டெய்லர்கள், அளவெடுக்க வைத்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மாணவி அளித்த புகாரின் பேரில் டெய்லர்கள் பாரதி மோகன், கலாதேவி, மாணவியை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியை சாராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மக்களை சந்திக்கும் முன்பே த.வெ.க.வின் வாக்கு சதவீதம் 20 விழுக்காடு இருக்கும் என கூறுகிறார்கள்.
    • தலைவர் விஜய் மக்களை சந்தித்தால், வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்?

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து பொதுக்குழுவில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-

    ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகிவிட்டோம். பலமான உட்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மாநில அரசு மூட பார்த்தது.

    டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சிகிறார்கள்.

    அண்ணாமலையை செட் செய்து தி.மு.க. வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவோம்.

    மக்களை சந்திக்கும் முன்பே த.வெ.க.வின் வாக்கு சதவீதம் 20 விழுக்காடு இருக்கும் என கூறுகிறார்கள். தலைவர் விஜய் மக்களை சந்தித்தால், வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்?

    இன்றுவரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் அழைத்த நம்முடைய தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்.

    எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தியது போல், தற்போது த.வெ.க. தலைவர் விஜயை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. பற்றிய உண்மை தெரியவந்த காரணத்தினால் தான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.

    Work From Home அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம்.

    என்ன சார் போராட்டம் நடத்துறாங்க? எல்லாம் நடிக்கிறாங்க! வெயிட் பண்ணுங்க... இன்னும் ரெண்டே மாசம்... உண்மையான போராட்டம்ன்னா என்னன்னு விஜய் காண்பிப்பார் என்றார். 

    • 2-ந்தேதி முதல் 5 நாட்கள் நடக்கிறது.
    • பொதுக்கூட்டம் பாண்டி கோவில் அருகே நடைபெற உள்ளது.

    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

    மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் மற்றும் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயன், பிருந்தா காரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மாநாட்டின் முதல் நாளான 2-ந்தேதி காலை பொது மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா. சி.பி.ஐ. (எம்எல்) விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியார், ஆர்.எஸ்.பி. பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியார், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவ ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசுகின்றனர்.

    சி.பி.எம். எம்.எல்.ஏ.வும், வரவேற்பு குழு தலைவருமான கே.பாலகிருஷ்ணன் வரவேற்கிறார். வரவேற்பு குழு செயலாளர் சு.வெங்கடேசன் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

    முன்னதாக 1-ந்தேதி தமுக்கம் மைதானத்தில் கட்சியின் வரலாற்று கண்காட்சி, பாசிசத்தின் கோர முகங்களை வெளிப்படுத்தும் கண்காட்சி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்த கண்காட்சி, புத்தக கண்காட்சி போன்றவைகள் அங்கு அமைக்கப்பட உள்ளது.

    இந்த கண்காட்சியை மூத்த பத்திரிக்கையாளர்கள் தோழர் என்.ராம், பரமேஸ்வரன் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள். அன்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் போற்றப்படுகிற மற்றும் ஆக்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகளின் சுடர் பெறப்படுகிறது.

    குறிப்பாக சென்னையில் இருந்து சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுச் சுடர், சேலம் சிறை தியாகிகள் நினைவுச் சுடர், கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுச்சுடர், மாணவத் தியாகிகள் சோமசுந்தரம் செம்புலிங்கம் நினைவுச் சுடர், மதுரை தியாகிகள் நினைவுச் சுடர், அதேபோல மாநாட்டில் ஏற்றப்பட உள்ள வெண் மணி தியாகிகள் நினைவு கொடி பிரசார இயக்கமாக எடுத்து வரப்பட உள்ளது.

    இந்த நினைவுச் சுடர் அனைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களால் 1-ந்தேதி மாலை பெறப்படுகிறது.

    2-ந்தேதி காலை மேற்குவங்க மூத்த தலைவர் பீமன் பாசு கொடியேற்றி வைக்கிறார். அன்று மாலையில் இருந்து ஒவ்வொரு நாளும் தமிழகத்தினுடைய தலைசிறந்த கலை குழுக்கள் மற்றும் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும்.

    திரைக்கவிஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கங்கள் தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மாநாடு நிறைவு பெறும் 6-ந்தேதி மாலை 25 ஆயிரம் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    அன்று மாலை தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் பாண்டி கோவில் அருகே நடைபெற உள்ளது.

    தமுக்கம் மைதானத்தில் 2-ந்தேதி நடைபெறும் கருத்தரங்க நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குனர்கள் ராஜூமுருகன், சசிகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    3-ந்தேதி மாலை கூட்டாட்சி கோட்பாடு இந்தியாவில் வலிமை என்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் கேரளா முதல்வர் பினராய் விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    4-ந்தேதி மாலை நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 5-ந்தேதி மாலை நடிகை ரோகினி வழங்கும் ஒரு ஆள் நாடகம் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் திரைப் பட இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ஞானவேல் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர்.

    6-ந்தேதி வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரளா முதல் மந்திரி பினராய் விஜயன், ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    முன்னதாக பாண்டி கோவில் அருகில் இருந்து துவங்கும் அணிவகுப்பை 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்க உள்ளனர். மாநாட்டையொட்டி அதற்கான அழைப்பிதழை மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டார்.

    • மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • மேட்டுப்பாளையத்தில் இருந்து கோடைகால சிறப்பு மலை ரெயில் இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நூற்றாண்டு பழமையான இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டு கோடைகால விடுமுறை நாட்களில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மார்ச் 28-ந்தேதி முதல் ஜூலை 6-ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து கோடைகால சிறப்பு மலை ரெயில் இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

    மேலும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடைக்கால சிறப்பு மலை ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும். அதேபோல சனி மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் சிறப்பு மலை ரெயில், மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.
    • வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.

    சண்முகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை (பொ) அருள் செல்வி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.

    வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன. பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை வைத்திருந்தார்கள். உலக வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் போன்ற தலைப்பில் வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் கருத்துரையாற்றினார்கள்.

    பள்ளியில் அனைத்து மாணவ-மாணவிகளும் கண்காட்சியை கண்டு களித்தனர். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் தங்கபாண்டி மற்றும் கணித ஆசிரியை பர்வீன் ராணி மற்றும் ஆய்வக உதவியாளர் லதாவும் செய்திருந்தார்கள். சிறந்த படைப்புகளுக்கு வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் புத்தக பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டி ஊக்கமளித்தார்.

    • நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
    • நிகழ்ச்சி பொழுதுபோக்கு, சிரிப்பு மற்றும் திறமைகளின் சங்கமமாக விளங்கியது.

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'அலப்பறை கிளப்பறோம்' என்ற தலைப்பில் எதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பிரபல தமிழ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான புகழ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியை அக்ஷிதா தொகுத்து வழங்கினார்.


    இந்த நிகழ்ச்சி பொழுதுபோக்கு, சிரிப்பு மற்றும் திறமைகளின் சங்கமமாக விளங்கியது. மாணவர்கள் தங்கள் பல்வேறு திறமைகளை ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் உற்சாகமான வேடிக்கையான விளையாட்டுகள் மேலும் மெருகூட்டின.

    இளைஞர்களின் வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு உணர்வுகளை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி ஒரு ரம்யமான சூழலை கல்லூரி வளாகத்தில் வெளிப்படுத்தியது. 

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.
    • வியாபாரிகள் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். அதன்படி நேற்று காலை ஆட்டுச்சந்தை தொடங்கியது.

    இதற்காக பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெள்ளாடு, செம்மறியாடு உள்பட சுமார் 800-க்கும் மேற்பட்டவவை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.

    மேலும் சிலர் ஆட்டுக்குட்டிகளையும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ரம்ஜான் பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுவதால், பொள்ளாச்சி சந்தையில் சுமார் 800 முதல் 1000 வரையிலான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.

    மேலும் அவற்றை வாங்கி செல்வதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதன்காரணமாக பொள்ளாச்சி சந்தையில் ஆடுகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

    தொடர்ந்து அங்கு 8 கிலோ முதல் 25 கிலோ வரையிலான ஆடுகள் எடைக்கு ஏற்ப தரம் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதாவது 8 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5500 வரையும், 20 கிலோ ஆடு ரூ.16-17 ஆயிரம் வரையும், 25 கிலோ ஆடு ரூ.22 ஆயிரம் வரையும் விலை போனது.

    பொள்ளாச்சி சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகளின் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் அவற்றின் விலையில் சிறிதும் சரிவு ஏற்படவில்லை. இருந்தபோதிலும் வியாபாரிகள் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.

    இதன் காரணமாக பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில் நேற்று மட்டும் ரூ.80 லட்சம் வரை ஆடுகளின் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    • தி.மு.க. அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • மதுரை காவலர் கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

    சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் காவலர் கொலை தொடர்பாக அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    * சட்டசபையில் என்ன பேச போகிறோம் என்பதை அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சபாநாயகரிடம் கூற வேண்டும்.

    * என்ன பிரச்சனை எழுப்பப் போகிறோம் என்பதை அ.தி.மு.க.வினர் சொல்லவில்லை.

    * அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

    * விதிகளை மீறி அ.தி.மு.க.வினர் பேச முற்பட்டனர்.

    * அ.தி.மு.க.வினர் சட்டமன்றத்தை அவமரியாதை செய்தனர்.

    * தி.மு.க. அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * காவலர் பணியில் இல்லாதபோது தனிப்பட்ட பகையில் மதுரையில் காவலர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    * மதுரை காவலர் கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

    * பொதுமக்கள் இடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மக்களுக்காக சட்டமன்றம், சட்டமன்றத்திற்காக மக்கள் அல்ல.

    சட்டசபையில் கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் அவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

    கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து, காவலர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களை வெறியேற்றினர்.

    சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஜீரோ ஹவரில் பேச அனுமதி கேட்டபோது அனுமதி அளிக்கவில்லை.

    * மதுரையில் காவலர் கொலை தொடர்பாக பேச அனுமதி அளிக்கவில்லை.

    * தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை சுதந்திரமாக நடக்கிறது.

    * காவலரையே கொல்லும் அளவிற்கு தமிழகத்தில் கஞ்சா போதை அதிகரித்துள்ளது.

    * போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    * காவல்துறையினர் இனியாவது காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும்.

    * மக்களின் பிரச்சனைகளை பேச அனுமதிக்கவில்லை.

    * துணை முதலமைச்சர் பேசும்போது இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக வெளியேற்றம். இன்றைய தினம் திட்டமிட்டு எங்களை வெளியேற்றி உள்ளனர்.

    * தமிழக அரசு மக்களை பற்றி கவலைப்படாத அரசு.

    * மக்களுக்காக சட்டமன்றம், சட்டமன்றத்திற்காக மக்கள் அல்ல.

    * தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

    * சர்வாதிகார போக்கை சட்டமன்றத்தில் அரங்கேற்றி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    • நிர்வாகிகள் தங்களின் செல்போன்களை மண்டபத்தின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது.

    தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்கவிழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திருவான்மியூருக்கு வரத் தொடங்கினார்கள். காலை 7 மணிக்கெல்லாம் நிர்வாகிகள் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் குவிந்னர். அவர்கள் அனைவரும் தோளில் கட்சி நிற துண்டு அணிந்திருந்தனர்.

    காலை 7.30 மணிக்கு நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை பரிசோதித்து உள்ளே அனுப்புவதற்காக 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 10 மாவட்டத்துக்கு ஒரு கவுண்டர் அமைக்கப்பட்டு இருந்தது.

    ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் எந்த கவுண்டர் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகை நுழைவு வாயிலிலேயே வைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுண்டர்கள் வழியாக உள்ளே சென்றனர்.

    பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. அந்த அடையாள அட்டை வைத்திருந்த நிர்வாகிகள் மட்டுமே பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று உள்ளே சென்றனர். கூட்டத் தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 2,500 பேர் பங்கேற்று உள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர்கள், 10 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒரு பெண் பிரதிநிதி என மொத்தம் 16 பேர் வந்தனர்.



    மாவட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    நிர்வாகிகள் தங்களின் செல்போன்களை மண்டபத்தின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதையடுத்து செல்போன்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

    பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குள் ஆண்கள் மற்றும் பெண்கள் அமர தனி வரிசை ஒதுக்கப்பட்டு இருந்தது. மாவட்ட செயலாளர்களுக்கு தனி வரிசையும், மாநில நிர்வாகிகளுக்கு தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

    பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவர் விஜய் பனையூரில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்கு வந்தார். அவர் பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில் வந்தபோது வழிநெடுக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் திரண்டு நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    மேலும் மண்டப நுழைவு வாயிலில் விஜய்க்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட 82 கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும் 2 குதிரைகளில் வீரர்கள் போல அமர்ந்திருந்த கட்சி தொண்டர்களும் வரவேற்பு அளித்தனர். மண்டபத்தின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 செயற்கை யானைகள் தும்பிக்கையை தூக்கியபடி விஜய்க்கு வரவேற்பு அளித்தது. பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தின் நுழைவு வாயில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.

    காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.

    மேடையின் நடுவில் கட்சித்தலைவர் விஜய் அமர்ந்திருந்தார். மேலும் மேடையில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கட்ராமன், இணை செயலாளர் தாஹிரா, துணை செயலாளர் சி.டி. நிர்மல் குமார், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், உறுப்பினர் சேர்க்கை பிரிவு செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

     


    முதலில் கட்சியின் கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. அதன் பிறகு கட்சியின் கொள்கை தலைவர்கள் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் உருவப்படத்துக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் தாமு என்கிற தாமோதரன் வரவேற்றார்.

    பின்னர் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேசினார்கள். அதன் பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

    தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது பற்றி முறையாக விசாரித்து குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எனவே சட்டம்-ஒழுங்கில் தனி கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பரந்தூர் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது. எனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கியாஸ் தட்டுபாடு ஏற்படும்.
    • பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் பாதிப்பு.

    சேலம்:

    தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

    மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்து 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் மூலம் லோடு ஏற்றி ஒப்பந்த அடிப்படையில் 6 மாநிலங்களில் உள்ள கியாஸ் பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாசை எடுத்து வரும் பணியை சங்க உறுப்பினர்களின் லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.

    இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் 2 அச்சு லாரிகளை பயன்படுத்த கூடாது, 3 அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுனர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் வதிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் எண்ணை நிறுவன கிடங்குகளில் இருந்து பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து நேற்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தி னருடன் எண்ைண நிறுவன அதிகாரிகள் கோவையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் அறிவித்து ள்ளனர். அதன் படி 2-வது நாளாக இன்றும் கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .

    இது குறித்து தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறிய தாவது-

    ஆயில் நிறுவன அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படாததால் தென் மண்டலத்தில் கியாஸ் டேங்கர் லாரிகள் போராட்டத்தில் ஈடுப ட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கியாஸ் டேங்கர் லாரிகளும் இந்த போராட்டத்தில் ஈடு பட முன் வந்துள்ளன. ஆனாலும் இன்னும் ஒரு வாரங்களுக்கு கியாஸ் தட்டப்பாடு வராது. அதன் பின்னர் கியாஸ் தட்டுபாடு ஏற்படும்.

    தென் மண்டலத்தில் 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடினாலும், 3 ஷிப்டுகளாக அந்த லாரிகள் பிரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1500-க்கும் மேற்பட்ட லாரிகளில் கியாஸ் நிரப்பி பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

    அந்த பணிகள் முற்றிலும் தற்போது முடங்கி உள்ளதால் நாள் ஒன்றுக்கு 18 லட்சம் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி பாதிக்க ப்பட்டுள்ள நிலையில் 2 நாட்களில் மட்டும் 36 லட்சம் கியாஸ் சிலிண்டர்க ளில் கியாஸ் நிரப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஒரு டேங்கர் லாரியில் 18 ஆயிரம் கிலோ கியாஸ் நிரப்பப்பட்டு கொண்டு செல்லப்படும். அதன் மூலம் 1200 சிலிண்டர்கள் நிரப்பபடும். கடந்த 2 நாட்களில் 3 ஆயிரம் டேங்கர் லாரிகள் இயங்காததால் 36 லட்சம் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி தடை ஏற்பட்டுள்ளது.

    இந்த வேலை நிறுத்தத்தால் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 200 கோடி ரூபாய் வீதம் 2 நாட்களில் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோரிடம் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் முறையிட உள்ளோம்.

    மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக இது வரை எந்த தகவலும் இல்லை.

    கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார். 

    ×