என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சை சோதனை செய்தனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து தும்பேரி வழியாக தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வெலத்தி காமணிபெண்டா மலை கிராமம் வரை தனியார் மினி பஸ் இயக்கப்படுகிறது.
இந்த பஸ் மூலமாக தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அதிக அளவில் ரேசன் அரிசி கடத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் பஸ் மலை கிராமத்திற்கு வாணியம்பாடியில் இருந்து புறப்பட்டு சென்றது.
அப்போது தும்பேரி அருகே மலையடிவாரத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சென்றபோது தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சை சோதனை செய்தனர்.
அப்போது பஸ்சில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தன அதனை பறிமுதல் செய்தனர். அப்போது பொதுமக்கள், தினமும் இந்த பஸ் மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.
அதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் பஸ் டிரைவர் மற்றும் அரிசி கடத்துபவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் மினி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. பஸ்சில் கடத்தப்பட்ட250 கிலோ ரேசன் அரிசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
- விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர்:
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கி இன்று 2-வது நாளாக நீடித்து வருகின்றது.
இதனால் தடையின்றி 100 சதவீத பஸ்களை இயக்கும் நோக்கில் போக்குவரத்து துறை, தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கடலூரிலும் நேற்று தற்காலிக ஊழியர்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்காலிக டிரைவர் வெங்கடேசன் என்பவர் கடலூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து அரசு பஸ்சை இயக்கிக் கொண்டு அண்ணா பாலம் வழியாக சென்றார்.
அப்போது சீமாட்டி சிக்னல் சாலையில் இருந்து ஜவான்பவன் சாலைக்கு திரும்புவதற்காக நின்று கொண்டிருந்த காரின் பின்பகுதியில் வெங்கடேசன் ஓட்டிச்சென்ற பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அரசு பஸ்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.

இதேபோல கடலூரிலிருந்து விருத்தாச்சலத்திற்கு இன்று காலை தற்காலிக பஸ் டிரைவர் ஒருவர் அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர்-சிதம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எந்தவித அச்சமும் இன்றி, அரசு உத்தரவை கடைபிடிக்காமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்போன் பேசிக்கொண்டு சென்றார். கடுமையான போக்குவரத்து பாதிப்பு உள்ள சாலையில் அரசு பஸ்சை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து பார்த்தனர். மேலும், நிரந்தர போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக டிரைவர்களை கொண்டு அரசு பஸ் இயங்கி வரும் நிலையில், பஸ் இயங்கினால் போதும் என்ற நிலைப்பாட்டில் அதிகாரிகள் இருப்பதால் இதுபோன்ற நிலை உருவாகி உள்ளது. உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- இளம்பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பூவாலூர் கிராமத்தை சேர்ந்த நவீன்- ஐஸ்வர்யா சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இளம்பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த பெற்றோரை பட்டுக்கோட்டை காவல்துறை கைது செய்தது.
கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தந்தை பெருமாள், தாய் ரோஜாவை கைது செய்த காவல்துறை, பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தை சேர்ந்த நவீன்- ஐஸ்வர்யா சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஐஸ்வர்யாவை துன்புறுத்தி பெற்றோர் கொலை செய்ததாக கணவன் நவீன் புகார் அளித்த புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
- மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவிலான 1025.12 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 64.51 லட்சம் ஆகும்.
இதனை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
- காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
விளாத்திகுளம்:
தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து பேரிலோவன்பட்டி, சிந்தலக்கரை வழியாக கோவில்பட்டி செல்லும் 78ஏ அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் சுப்ரமணியன் இன்று ஓட்டி சென்றார். வழக்கமாக இந்த பேரிலோன்பட்டி பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்து வழக்கம்.
அதன்படி இன்று 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் சிங்கிலிபட்டி கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் இறங்கி சேற்றில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஆனால் பஸ்சில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன் இருக்கை கம்பி மீது மோதியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று சென்றனர். பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இந்த பஸ் சாலையோரத்தில் சிக்கி சேற்றில் சிக்கி ஜே.சி.பி. வாகனம் மூலம் மீட்கப்பட்டு விளாத்திகுளம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மீண்டும் மாற்று டிரைவர் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
- தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி மாணவர்கள் நடத்தும் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
- போராட்டத்தில் மாணவர்கள் திரளாக பங்கேற்குமாறு தி.மு.க. மாணவரணி வேண்டுகோள் விடுத்து உள்ளது.
சென்னை:
காங்கிரஸ்-தி.மு.க. உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக போட்டியிட வியூகம் வகுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட 16 மாணவர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து யுனைடெட் இந்திய மாணவர் அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பில் தி.மு.க. மாணவரணி இணைந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி மாணவர்கள் நடத்தும் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
இதில் மாணவர்கள் திரளாக பங்கேற்குமாறு தி.மு.க. மாணவரணி வேண்டுகோள் விடுத்து உள்ளது.
- ரெயில் என்ஜின் எழும்பூர் ரெயில் நிலைய 1 மற்றும் 2 நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
- ஊழியர்கள் ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு ரெயில் பணிமனையில் இருந்து பெட்டிகளை இழுத்து சென்ற ரெயில் என்ஜின் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரெயில் என்ஜின் தடம்புரண்டது.

இதையடுத்து ஊழியர்கள் ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முரசொலி அலுவலகம் உள்ள நிலம், பஞ்சமி நிலம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த ரிட் வழக்கில் இது யாருடைய நிலம் என்று முடிவு செய்ய முடியாது.
- பஞ்சமி நிலம் என்று வந்த புகாரின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளைக்கு புதிதாக தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
சென்னை:
முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில் பா.ஜ.க., நிர்வாகி சீனிவாசன் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அவர் பிறப்பித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
மனுதாரர் நிலம் குறித்து வந்த புகாரின் அடிப்படையில், ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் பின்னர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆணையத்தின் நோட்டீசுக்கும், அதை தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கும் தடை விதிக்கும் விதமாக எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. விசாரணைக்கு தடை விதிக்க எந்த காரணத்தையும் மனுதாரர் கூறவில்லை.
தற்போது, இந்த விவகாரம் ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளது. தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதில் எந்த விதிமீறலும் இல்லை. தேசிய ஆணையத்தின் முன்பு மனுதாரர் தன் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க எந்த தடையும் இல்லை.
பஞ்சமி நிலம் என்பது எஸ்.சி., பிரிவினருக்கு சொந்தமானது. அந்த நிலத்தை வேறு பிரிவினர் அபகரித்துக் கொண்டாலோ, அல்லது அந்த நிலத்தை பயன்படுத்த எஸ்.சி. பிரிவினருக்கு தடை ஏற்பட்டாலோ, அது குறித்து விசாரிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
தற்போது, முரசொலி அலுவலகம் உள்ள நிலம், பஞ்சமி நிலம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த ரிட் வழக்கில் இது யாருடைய நிலம் என்று முடிவு செய்ய முடியாது.
மேலும், இந்த ஆணையத்தின் துணை தலைவராக இருந்த எல்.முருகன், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதால் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தற்போது எல்.முருகன் அந்த பதவியில் இல்லை. அவர் மத்திய மந்திரியாக உள்ளதால், இந்த புகார் குறித்து ஆணையம் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை.
எனவே, பஞ்சமி நிலம் என்று வந்த புகாரின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளைக்கு புதிதாக தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
பின்னர், அனைத்து தரப்புக்கும் வாய்ப்பு கொடுத்து, யாருடைய செல்வாக்கிற்கும் அடிபணியாமல், சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்.
- பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நேற்று 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
- தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எந்த இடையூறும் இல்லை.
சென்னை:
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நேற்று 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. வேலைநிறுத்தம் இன்று 2-வது நாளாக நீடித்து வரும் நிலையில் முழு அளவில் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
* தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எந்த இடையூறும் இல்லை.
* தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து பிடிவாதத்தில் இருக்கிறார்கள்.
* போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் இன்று பிற்பகலுக்கு பிறகு கிடைக்கும் தீர்ப்பை பொறுத்து மேல் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
- போக்குவரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.
தருமபுரி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க. தொழிற்சங்கத்தினரை வைத்து, அரசு தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்தை நிறுத்தாமல், பஸ்களை இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி நகர போக்குவரத்து பணிமனை அருகே அ.தி.மு.க, கம்யூனிஸ்ட், பா.ம.க. உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் ஊர்வலமாக பாரதிபுரம் போக்குவரத்து பணிமனை வரை நடந்து சென்றனர்.
அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.

தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து உடனடியாக பேச வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து பாரதிபுரம் போக்குவரத்து பணிமனை அருகில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க, தொ.மு.ச.வை சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோன்று பென்னாகரம் போக்குவரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்க போராட்டத்தில் தி.மு.க. தொழிற் சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், தருமபுரியில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் கையில் தொழிற்சங்க அடையாள அட்டையை வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
கேரள கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மதுரை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கின.
- மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
மதுரை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்களின் பணபலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 98 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பஸ் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று முதல் (9-ந் தேதி) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில் இதர தொழிற்சங்கத்தினர் பணிக்கு வந்ததால் மதுரை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கின.

இந்த நிலையில் போக்குவரத்து பணிமனை முற்றுகை, மறியல் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன. இதையடுத்து மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அங்கு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்கள் பணிமனைக்குள் செல்லாதவாறு பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் திடீரென பைபாஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






