என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் நேற்று மரணம் அடைந்தார்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடை அடைப்பு நடைபெறும்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் நாளை(12-ந்தேதி) அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் தாலுகா, பிச்சுவிளை கிராமத்தில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடை அடைப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மறைந்த வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி தெற்கு-வடக்கு மாவட்டத்தில் நாளை ஒருநாள் கடையடைப்பு நடத்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

    • இந்த கல்வியாண்டில் 6 மாதம் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த பயிற்சியை இன்று மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உடற்கல்வியை மேம்படுத்தும் வகையில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இந்த கல்வியாண்டில் 6 மாதம் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில் முதல் கட்டமாக இன்று கராத்தே, ஜூடோ, குத்து சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

    பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த பயிற்சியை இன்று மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். 6 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ந்து எடுத்து வாரத்தில் 2 நாட்கள் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவர்கள் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு மண்டல, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் இவர்களை பங்கெடுக்க செய்து, வெற்றி பெற வைப்பதுதான் இலக்காகும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

    பெரம்பூர், ராயபுரம், தண்டையார் பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவொற்றியூர் தொகுதியில் தலா ஒரு பள்ளி வீதம் கராத்தே பயிற்சி கொடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    • மகாவிஷ்ணு ஜாமீன் கேட்டும் சைதாப்பேட்டை கோர்ட் டில் மனுதாக்கல் செய்தார்.
    • மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

    சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சைதாப்பேட்டை கோர்ட்டில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனு நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மனு மீதான விசாரணை நேற்று நடைபெறவில்லை.

    இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று போலீஸ் காவல் கேட்கும் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதற்காக புழல் சிறையில் இருந்து மகாவிஷ்ணு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சைதாப்பேட்டை கோர்ட்டில் மதியம் 12.15 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து காவலில் எடுக்கும் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதன் முடிவில் மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

    இதற்கிடையே மகாவிஷ்ணு ஜாமீன் கேட்டும் சைதாப்பேட்டை கோர்ட் டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற இருந்தது.

    இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை மகாவிஷ்ணு திரும்ப பெற்றுள்ளார்.

    காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி ஜாமின் மனுவை மகாவிஷ்ணு வாபஸ் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

    • மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
    • சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள பெரியகோட்டையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜசுதா. குடும்ப தலைவியாக உள்ளார். இவர்களுக்கு ஹரீஸ் (வயது 13), கிஷோர் (11), ஆகிய 2 மகன்கள் உள்ளனர். எம்.எம்.கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல் மகன் 8ம் வகுப்பும், கிஷோர் 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிஷோருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். முதலில் காய்ச்சல் மட்டும் இருந்த நிலையில் பின்னர் வலிப்பு நோய் ஏற்பட்டு மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து கிஷோர் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமக உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கிஷோரின் உடல் இன்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.

    அங்கு சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. சிறுவயதில் தனது மகன் இறந்த சூழ்நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

    • தரவரிசை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.
    • கடந்த நிதியாண்டை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள், புறநகா் ரெயில் நிலையங்களுக்கான தரவரிசை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.

    முன்னதாக 2017-18 நிதியாண்டில் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு ரெயில்வே வாரியம் ரெயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.


    இது குறித்து ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் ரெயில் நிலையங்கள் அனைத்தும் கடந்த நிதியாண்டை (2023-24) அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப் பட்டுள்ளன. இதில் 5,945 புறநகா் அல்லாத ரெயில் நிலையங்கள், 578 புறநகா் ரெயில் நிலையங்கள், 2,286 ஹால்ட் ரெயில் நிலையங்கள் என 8,809 ரெயில் நிலையங்கள் மூலம் பயணிகள் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகின்றன.

    இதில் புறநகா் அல்லாத ரெயில் நிலையங்கள் 6 தரங்களிலும், புறநகா் ரெயில் நிலையங்கள் மற்றும் ஹால்ட் ரெயில் நிலையங்கள் 3 தரத்திலும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் புறநகா் அல்லாத ரெயில் நிலை யங்களில் முதல் தரத்தில் 28, 2-ம் தரத்தில் 113, 3-ம் தரத்தில் 307, 4-ம் தரத்தில் 335, 5-ம் தரத்தில் 1,063, 6-ம் தரத்தில் 4,099 ரெயில் நிலையங்கள் உள்ளன.

    இதில் புதுடெல்லி ரெயில் நிலையம் கடந்த நிதியாண்டில் 3.93 கோடி பயணிகளை கையாண்டு ரூ.3,337 கோடி வருவாய் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது. தொடா்ந்து ரூ.1,692 கோடி வருவாய் ஈட்டி அவுரா ரெயில் நிலையம் இரண்டாம் இடத்திலும், ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

    தொடா்ந்து முதல் பட்டியலில் தெற்கு ரெயில்வேயின் சென்னை எழும்பூா், தாம்பரம் ரெயில் நிலையங்கள் உள்ளன.

    அதுபோல் புறநகா் ரெயில் நிலையங்களுக்கான பட்டியலில் மும்பை ரெயில் நிலையங்கள் முதல் இடத்திலும், சென்னை புறநகா் ரெயில் நிலையங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

    புறநகா் அல்லாத ரெயில் நிலையங்களுக்கான பட்டியலில் முதல் 4 தரவரிசைக்குள் வரும் ரெயில் நிலையங்களுக்கு நீண்டகால தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப் படுத்தப்படும்.

    அதன்படி, எளிதாக ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வசதி, குறைந்தபட்சம் இரு வாகனநிறுத்தும் வசதி, வாகன நிறுத்தத்தில் இருந்து ரெயில் நிலையத்தை எளிதாக அடையும் வசதி, குடிநீா் மற்றும் கழிப்பறை வசதி, தகவல் மையம், நடைமேடையை எளிதாக கடக்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்.

    மேலும், முதல் தரத்தில் இருக்கும் ரெயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கான சக்கர நாற்காலி அல்லது பேட்டரி வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.
    • நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.

    நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
    • வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்ட ரீதியாக துணை புரிகிறது, நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இப்பயணத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் 7016 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று சிகாகோவில் போர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அது பற்றிய விவரங்கள் வருமாறு:-

    போர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் இரண்டாவது பெரிய அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். போர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டியர் பார்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டு உள்ளது.

    போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இச்சந்திப்பு நிகழ்வில், போர்டு நிறுவனத்தின் ஐ.எம்.ஜி. தலைவர் கே ஹார்ட், துணைத் தலைவர் (சர்வதேச அரசாங்க விவகாரங்கள்) மேத்யூ கோட்லெவ்ஸ்கி, போர்டு இந்தியா இயக்குநர் (அரசாங்க விவகாரங்கள்) டாக்டர். ஸ்ரீபாத் பட் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

    ஐடிசர்வ் கூட்டமைப்பு அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

    இது வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்ட ரீதியாக துணை புரிகிறது, நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது.

    ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் திறன் மிகுந்த இளைஞர்களுக்கு வேலைவாயப்பு அளித்திட தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
    • வீடியோவை வெளியிட்ட அமர்பிரசாத் ரெட்டி, கடுமையான தண்டனை கட்டாயம் தேவை என பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சில நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் நின்று கொண்டு இருக்கும் வந்தே பாரத் ரெயிலின் ஜன்னல் கண்ணாடியை வாலிபர் ஒருவர் சுத்தியலைக் கொண்டு உடைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வாலிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த வீடியோவை வெளியிட்ட அமர்பிரசாத் ரெட்டி, கடுமையான தண்டனை கட்டாயம் தேவை என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் இடம்பெறவில்லை. 

    • வெளிநாட்டு விமான சேவை குறைவு, ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது நேரக்கட்டுப்பாடு உள்ளது.
    • இரவு நேர சேவையை தொடங்க முன்வருமாறு விமான நிலையங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் தற்போது காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு விமான சேவை குறைவு, ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது நேரக்கட்டுப்பாடு உள்ளது.

    இந்நிலையில் இரவு நேர சேவையை தொடங்க முன்வருமாறு விமான நிலையங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் அக்டோபர் முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை வழங்க விமான நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையரகம் அழைப்பு விடுத்துள்ளது.

    தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு நேர சேவை இல்லாத நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    • படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன.
    • பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே புதிய அறிவிப்பு.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரெயில்களின் சில படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன.

    அதன்படி சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-ஐதராபாத் விரைவு ரெயில் (எண் 12603) 12 படுக்கை வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்ட நிலையில் ஜனவரி 20-ந் தேதி முதல் 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.


    புதுச்சேரி-மங்களூா் விரைவு ரெயில் (16855) ஜனவரி 16-ந் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-நாகா்கோவில் விரைவு ரெயில் (எண் 12689) ஜன.17-ந் தேதி முதலும், எா்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயில் (16361) ஜன.18-ந் தேதி முதலும், கொச்சுவேலி-நிலாம்பூா் ராஜ்ய ராணி விரைவு ரெயில் ஜன.19-ந் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

    இதேபோல் சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா விரைவு ரெயில் (22639), திருவனந்தபுரம்-மதுரை அமிா்தா விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-மைசூரு காவேரி விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு விரைவு ரெயில் (22651) ஜனவரி 20-ந் தேதி முதல் 4 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

    மேலும், விழுப்புரம்-கோரக்பூா் விரைவு ரெயில் (22604) ஜனவரி 21-ந் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு ரெயில் (12695), திருநெல்வேலி-புருலியா விரைவு ரெயில் ஜனவரி 22 முதலும், புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரெயில் ஜனவரி 26-ந் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

    இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துக்களின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
    • உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.

    வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையும் பத்திரப்பதிவு செய்யலாம் என்பதற்காக பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை.

    பத்திரப்பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய, நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையெல்லாம் பதிவு செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது.

    சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தருணத்தில் பத்திரப்பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செய்யப்பட வேண்டும். வருவாயை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு பத்திரப்பதிவுத்துறை செயல்படக்கூடாது.

    உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன. அவ்வாறு அபகரித்த சொத்துகளை ஒருவர் இன்னொருவருக்கு விற்க முயலும் போது, அதை எதிர்த்து சொத்தின் உண்மையான உரிமையாளர் வழக்கு தொடரும் நிலையில், அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை சொத்தை பதிவு செய்யாமல் இருப்பது தான் சரியானத் தீர்வு ஆகும். மாறாக, அந்த சொத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவில்லை என்பதற்காக சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டால், மோசடி செய்தவர் பெரும் லாபத்துடன் தப்பி விடுவார். சொத்தின் உரிமையாளரும், அதை வாங்கியவரும், வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகளும் தான் பாதிக்கப்படுவார்கள். இதை பத்திரப்பதிவுத்துறை உணர வேண்டும்.

    வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இரவு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பணிக்கு வந்த அந்த டாக்டர் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.

    மேலும் அவர் மதுபோதை மயக்கத்தில் ஆஸ்பத்திரி வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதனை கண்டு ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆஸ்பத்திரி உள்ளே செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் போதை மயக்கத்தில் இருந்த அந்த டாக்டர் ஆஸ்பத்திரிக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், போதை டாக்டரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார்.

    அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்நிலையில் டாக்டர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரேவதி உறுதி அளித்துள்ளார்.

    ×