என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை.
    • கூட்டணி தொடர்பாக கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த சில நட்களுக்கு முன்பு "ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்" என்று வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது மது விலக்கு தொடர்பாக கோரிக்கைகளை நேரில் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டில் தி.மு.க.வும் பங்கேற்க முடிவு செய்துள்ளது. இதனால் தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் இடையே நீடித்து வந்த சலசலப்பு அடங்கியது. இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மது விலக்கு தொடர்பாக மீண்டும் பரபரப்பான பதிவுகளையும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

    இதற்கிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி இல்லாமல் வடமாவட்டங்களில் தி.மு.க. வெல்ல முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார். இவரது இந்த கருத்து தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதி.மு.க. எம்.பி. ஆ.ராசா வலியுறுத்தி இருந்தார். இதனால் தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே மீண்டும் சலசலப்பு உருவாகி உள்ளது.

    இந்த நிலையில், வரும் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவிருக்கும் தி.மு.க.வின் பவள விழாவிற்கு வருகை தரும்படி கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை "சகோதரர்" என குறிப்பிட்டு, அவர் இந்த விழாவில் மற்ற கூட்டணித் தலைவர்களுடன் உரையாற்றவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தல் மட்டுமல்ல, 2029 பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் கூட்டணி தொடர்பாக கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என்றார்.

    • அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    பராசூரன், திரவுபதி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார்.

    இதனையடுத்து அவர் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் நேற்று சென்னையில் இருந்த மோகன் ஜியை கைது செய்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவரை சொந்த ஜாமினில் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே மோகன் ஜி மீது பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு குறித்து சர்ச்சையான கருத்துகளை பரப்பிய கோவையைச் சேர்ந்த பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் செல்வக்குமார், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் மீது பழனி அடிவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் மோகன் ஜி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 65 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • சுற்றுப்பயணம் செங்கல்பட்டில் நேற்று தொடங்கியது.

    சென்னை:

    பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா மாவட்டம் வாரியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலக செயலாளர் எம்.சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வின் அமைப்புரீதியான 65 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி அவரது சுற்றுப்பயணம் செங்கல்பட்டில் நேற்று தொடங்கியது.

    இன்று அவர் தென் சென்னை, சென்னை கிழக்கு, மத்திய சென்னை கிழக்கு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். நாளை (26-ந்தேதி) காஞ்சீபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, சென்னை மேற்கு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.

    வருகிற 27-ந்தேதி மத்திய சென்னை மேற்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.

    அதைத்தொடர்ந்து அவர் திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு பணிகளில் ஈடுபடுகிறார்.

    அக்டோபர் 17-ந்தேதி நீலகிரியில் அவர் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த சுற்றுப்ப யணத்தின் ஒருங்கிணைப்பாளராக கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பவ செந்தில் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், பாம் சரவணன் ஆந்திராவுக்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
    • சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடி ஒழிப்பு பிரிவு போலீசாருடன் மற்ற பிரிவுகளை சேர்ந்த போலீசாரும் கை கோர்த்து செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு பிறகு சென்னையில் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி திருவேங்கடம் கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    இதைத் தொடர்ந்து கடந்த 18-ந்தேதி ரவுடி காக்காத்தோப்பு பாலாஜியும், நேற்று முன்தினம் சீசிங் ராஜாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களை தவிர 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தலைமறைவாக இருந்த முக்கிய ரவுடிகளில் சீசிங் ராஜா, காக்கத்தோப்பு பாலாஜி இருவரும் என்கவுண்டர் செய்யப்பட்டு விட்ட நிலையில் ரவுடி சி.டி.மணிக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடும் போது சி.டி.மணி தவறி விழுந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் தலைமறைவாக உள்ள ரவுடிகள் சம்பவ செந்தில், பாம் சரவணன் இருவரையும் பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சம்பவ செந்தில் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், பாம் சரவணன் ஆந்திராவுக்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

    2 ரவுடிகளுக்கும் மிகவும் நெருக்கமான நபர்கள் யார்-யார்? என்பதை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவர்களின் செல்போன் எண்களை வைத்தும் துப்பு துலக்கி வருகிறார்கள். இதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடி ஒழிப்பு பிரிவு போலீசாருடன் மற்ற பிரிவுகளை சேர்ந்த போலீசாரும் கை கோர்த்து செயல்பட்டு வருகிறார்கள்.

    இதனால் சம்பவ செந்தில், பாம் சரவணன் இருவரும் விரைவில் சிக்குவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • டபேதார் மாதவி திடீரென்று மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • டபேதார் மாதவி சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் ரிப்பன் கட்டிடத்தில் மகளிர் தின விழா நடந்தபோது பேஷன் ஷோவில் பங்கேற்றது விவாதமானது.

    சென்னை:

    சென்னை மேயர் பிரியாவின் டபேதாராக மாதவி (வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் ஆவார். சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்கும்போது அவருடன் டபேதார் மாதவி செல்வார். மாதவி உதட்டில் கலர் கலராக "லிப்ஸ்டிக்" பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். இதனால் "லிப்ஸ்டிக்" பயன்படுத்தக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து "லிப்ஸ்டிக்" பூசி வந்துள்ளார்.

    கடந்த மாதம் மேயர் பிரியாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற டபேதார் மாதவி "லிப்ஸ்டிக்" பயன்படுத்தி உள்ளார். இதனை மேயர் பிரியாவின் உதவியாளர் கண்டித்தார்.

    இந்த நிலையில் டபேதார் மாதவி திடீரென்று மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களினால் இவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் பணிக்கு உரிய நேரத்தில் வராதது, மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை மதிக்காதது ஆகிய காரணங்களுக்காக மேயரின் கடந்த ஆகஸ்டு 6-ந்தேதி மெமோ அனுப்பப்பட்டது.

    அந்த மெமோவுக்கு பதிலளித்த மாதவி, ''நான் லிப்ஸ்டிக் அணியக்கூடாது என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால் நான் லிப்ஸ்டிக் அணிந்தேன். இது குற்றம் என்றால் லிப்ஸ்டிக் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை காட்டுங்கள். சென்னை மாநகராட்சி போன்ற ஒரு அமைப்பில் மனித உரிமைகளை மீறும் வகையிலான இத்தகைய விதிமீறல் கவலையளிக்கிறது'' என கூறி இருந்தார்.

    இதற்கு முன்பு டபேதார் மாதவி சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் ரிப்பன் கட்டிடத்தில் மகளிர் தின விழா நடந்தபோது பேஷன் ஷோவில் பங்கேற்றது விவாதமானது.

    இதுபற்றி மேயர் பிரியா கூறுகையில், ''மகளிர் தினத்தின்போது பேஷன் ஷோ ஒன்றில் டபேதார் பங்கேற்றது விமர்சனத்துக்குள்ளானது. அவர் மேட் லிப்ஸ்டிக் அணிந்திருந்தார். லிப்ஸ்டிக் அணிந்திருக்கும்போது அது கவர்ச்சிகரமாக இருந்தது. மேயர் அலுவலகம் என்பது அடிக்கடி அமைச்சர்கள், அதிகாரிகள் வந்து செல்லும் இடம். மேலும் இதுபோன்ற ஷேடுகளில் லிப்ஸ்டிக் போட வேண்டாம் என்று எனது உதவியாளர் அவரிடம் கூறினார். ஆனால் டபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், இந்த லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை'' என்றார்.

    இதுகுறித்து டபேதார் மாதவி கண்ணீர் மல்க கூறியதாவது:-

    என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பணியிட மாற்றம் செய்துவிட்டனர். நான் வசிக்கும் இடத்தில் இருந்து அருகே உள்ள அண்ணாநகர், அம்பத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்யாமல் மணலிக்கு மாற்றம் செய்துவிட்டனர்.

    எனது மூத்த அதிகாரிகள் கொடுத்த உத்தரவுகளை மீறியதை தவிர, சரியான நேரத்தில் வேலைக்கு வரவில்லை என்பதற்கான ஆதாரத்தை கொடுங்கள்.

    கடந்த ஆகஸ்டு 6-ந்தேதி வெறும் 30 நிமிடம் தாமதமாக வந்தேன். காலை 10.30 மணிக்கு அலுவலகத்தை அடைந்தேன். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தாமதம் ஆனது. மேயரின் உதவியாளர்கள் தொடர்ந்து என் லிப்ஸ்டிக்கை குறைக்க சொன்னார்கள். நான் பளபளப்பான புடவைகளை அணிந்திருப்பதாக அவர்கள் என் மீது குற்றம் சாட்டினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 19 பெண் காவலர்கள் அவர்களது விருப்பப்படி சென்னை பெருநகர காவலில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பணிமாறுதல் ஆணையினை பெற்று சென்றுள்ளனர்.
    • சென்னை போலீஸ் கமிஷனர் அருண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின ஆணையினை செயல்படுத்தி உள்ளார்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும் போது அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்கு வசதியாக, அவர்கள் மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பிய பிறகு அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சேர்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணி மாறுதல் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார்.

    அவரது ஆணைக்கிணங்க அரசு உத்தரவினை நிறைவேற்றும் வகையில் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 19 பெண் காவலர்கள் அவர்களது விருப்பப்படி சென்னை பெருநகர காவலில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பணிமாறுதல் ஆணையினை பெற்று சென்றுள்ளனர்.

    சென்னை போலீஸ் கமிஷனர் அருண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின ஆணையினை செயல்படுத்தி உள்ளார்.

    • விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
    • காவல்துறையினர் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் மாநாட்டில் நிறுத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளன.

    நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்)27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாநாடுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சி நிர்வாகிகள், வக்கீல்களுடன் சென்று மனு அளித்திருந்தார். மாநாடு நடத்துவதற்கு 33 நிபந்தனைகளை காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்டு அனுமதிக்காக காத்துள்ளனர்.

    இந்நிலையில் மாநாடு நடைபெறும் நாளன்று தீயணைப்பு வாகனம் பாதுகாப்பிற்கு நிறுத்த விக்கிரவாண்டி தீயனைப்பு நிலையத்திலும் ஆம்புலன்ஸ் நிறுத்த முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், சாலைகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம், ரெயில்வே நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் தயார் செய்து வருவதால் காவல்துறையினர் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட மைய நூலகத்தில் நேற்று தனது 200-வது ஆய்வை நிறைவு செய்துள்ளார்.
    • அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மொழி சிறுபான்மையினருக்கான பள்ளிகள் என 77 வகைகளில் ஆய்வு செய்து வருகின்றார்.

    சென்னை:

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று, பள்ளிக்கூடம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.

    அந்த வகையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2 வருடத்திற்கு முன்பு தனது முதல் ஆய்வை ஆரம்பித்து, நேற்று ராமநாதபுரம் தொகுதியில் (24-ந்தேதி ) 200-வது ஆய்வை நிறைவு செய்துள்ளார்.

    பள்ளிகளில் மாணவ-மாணவிகள் கற்கும் முறை, ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் விதம், நூலகங்கள், கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மொழி சிறுபான்மையினருக்கான பள்ளிகள் என 77 வகைகளில் ஆய்வு செய்து வருகின்றார்.

    இப்போது ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட மைய நூலகத்தில் நேற்று தனது 200-வது ஆய்வை நிறைவு செய்துள்ளார். அங்குள்ள பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்ததுடன் நூலகத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை துரிதபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆணையிட்டுள்ளார்.

    தொடர்ந்து மற்றத் தொகுதிகளுக்கும் ஆய்வினை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கடைசியாக 234-வது ஆய்வாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு கொண்டு தகவல் கூறி உள்ளார்.
    • குழந்தைகளை விற்பனை செய்த விவரம் குறித்தும், அதற்கு துணையாக செயல்பட்ட புரோக்கர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தூர் கிராமம், திம்பத்தியான் வளவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (32). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி குண்டுமல்லி இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதுவரை இவர்கள் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

    சேட்டு-குண்டுமல்லி தம்பதிக்கு அண்மையில் 6-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் குழந்தையை சேட்டு புரோக்கர்கள் மூலம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சி செய்து உள்ளார். ஆனால் அவர் இந்த குழந்தையை சட்டபூர்வமாகவே தான் தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக கூறி, சேலத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு கொண்டு தகவல் கூறி உள்ளார்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சேட்டுவை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, ஏற்கனவே தனக்கு பிறந்த 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையை தலா ரூ. 1 லட்சத்துக்கு புரோக்கர்கள் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ததும், தற்போது பிறந்த பெண் குழந்தையை குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதனை அடுத்து சேட்டுவை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்கள் குழந்தைகளை விற்பனை செய்த விவரம் குறித்தும், அதற்கு துணையாக செயல்பட்ட புரோக்கர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 164 பேரின் தேர்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
    • அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது தான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் தமிழாசிரியர் பணிக்கு 518 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், 164 பேரின் தேர்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    அவர்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள். அந்தப் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு அடிப்படைத் தகுதியான பி.ஏ. தமிழ் இலக்கியம் பட்டத்திற்கு இணையானது இல்லை என்பதால் அவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத, சமூகநீதிக்கு எதிரான, ஒருதலைபட்சமான முடிவாகும்.

    சென்னையில் கடந்த 11.4.2023-ந் தேதி நடைபெற்ற தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் சமத்தகுதி நிர்ணயக்குழுவின் கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் பி.ஏ. (தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதைக் காரணம் காட்டி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது.

    பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தில் உள்ள 70-80 சதவீத பாடங்களைக் கொண்ட எந்த படிப்பும் பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கு இணையானதாகவே பார்க்கப்பட வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள், அதை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர்; அதைத் தொடர்ந்து ஆசிரியர் வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தமிழாசிரியர் ஆக தகுதி பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் பொருந்தாதக் காரணங்களைக் கூறி 164 பட்டதாரி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதியை களைய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.

    எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது தான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர் பான வழிகாட்டுதல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு உயர் கல்வி மாமன்றத்துடன் இணைந்து உயர்கல்வித் துறை வழங்க வேண்டும், அதன் மூலம் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.லிட் பட்டதாரிகள் 164 பேருக்கும் தமிழாசிரியர் பணி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும்.
    • பாதுகாப்புடன் தொண்டர்களை மாவட்ட நிர்வாகிகள் அழைத்து வர வேண்டும்.

    சென்னை:

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.

    இதையொட்டி மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் பற்றி விஜய், கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    மாநாட்டு பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும் போது மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி தொண்டர்களுக்கு கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


    இது பற்றிய விபரம் வருமாறு:-

    மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும். எந்த வகையிலும் நமது கட்சி தலைவர் விஜய் மீதுள்ள மரியாதை குறையாத வண்ணம் தொண்டர்களும் நிர்வாகிகளும் நடந்து கொள்ள வேண்டும்.

    குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    வெளி மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு தயாராகி வருவோர் ஆங்காங்கே தங்குவதற்கு திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து விதிகளை பின்பற்றி மிகவும் பாதுகாப்புடன் தொண்டர்களை மாவட்ட நிர்வாகிகள் அழைத்து வர வேண்டும்.

    மாநாட்டில் மூத்த குடிமக்கள், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு தனியாக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    குறிப்பாக மாநாட்டுக்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. மீறி மது அருந்தி விட்டு வருவோர் மாநாட்டு பந்தலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டது.
    • பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை பரமக்குடி, அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பிரேமாவுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றுதலைமைச் செயலகத்தில், 2023-24-ம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு பரிசுத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், போட்டி தேர்வு மூலம் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 2.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

    இதில் மாநில அளவில் பட்டு ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சந்திரசேகரனுக்கும், இரண்டாம் பரிசினை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் குமரேசனுக்கும், மூன்றாம் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் புகழேந்திக்கும் வழங்கினார்.

    பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை பரமக்குடி, அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பிரேமாவுக்கும், இரண்டாம் பரிசினை பரமக்குடி, லோக மான்ய திலகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் டி.எஸ். அலமேலுவுக்கும், மூன்றாம் பரிசினை கோயம்புத்தூர், வதம்பச்சேரி ஸ்ரீ நடராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மகாலெட்சுமிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ×