என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 6 பேரும் பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினர்.
- சென்னை அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:
வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் தங்கி பணியாற்றுவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பதுங்கி இருப்பவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படையினர் திருப்பூர் மத்திய பஸ் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு வடமாநில தொழிலாளர்கள் போல் வேலைக்கு வந்துள்ளனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்தபோது, பனியன் நிறுவன தரப்பில் இருந்து அவர்களின் அடையாள ஆவணங்களை சரிபார்த்தபோது வங்கதேசத்தினர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை வேலைக்கு அமர்த்தாமல் அங்கிருந்து அனுப்பி விட்டனர்.
இதைத்தொடர்ந்து 6 பேரும் பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினர். உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கவுகாத்தியில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து திருப்பூர் வந்தது தெரியவந்தது. அவர்கள் வங்கதேச நாட்டின் நாராயண்கஞ்ச் பகுதியை சேர்ந்த தன்வீர் (வயது 39), ரசிப் தவுன் (43), முகமது அஸ்லம் (41), முகமது அல் இஸ்லாம் (37), முகமது ராகுல் அமின் (30), சவுமுன் ஷேக் (38) என்பது தெரியவந்தது. 6 பேரையும் தெற்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னை அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
- தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பிரவீன்குமார் கேட்டார்.
- தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன்குமார் சம்பவம் குறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை:
கோவை வேடப்பட்டி அருகே உள்ள ஹரி ஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது28).
இவர் வாட்டர் டேங்க் சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு திருப்பூரை சேர்ந்த மார்சல் பிரிட்டோ என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தான் தொழில் அதிபராக இருப்பதாகவும், துபாயில் பிபிஓ அலுவலகம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் துபாயில் பிபிஓ அலுவலகம் திறந்தால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம். எனவே நீங்கள் பணம் முதலீடு செய்தால் நாம் இருவரும் சேர்ந்து துபாயில் தொடங்கலாம். அதில் வரும் லாபத்தில் உங்களுக்கும் பங்கு தந்து விடுகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை பிரவீன்குமார் உண்மை என நம்பிவிட்டார். பின்னர் பிரவீன்குமார் அவரிடம் ரூ.48 லட்சம் பணத்தை கொடுத்தார். அதனை தொடர்ந்து பிரவீன்குமாரை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது தொழில் தொடங்கவில்லை. இதுகுறித்து மார்சல் பிரிட்டோவிடம் கேட்டதற்கு அவர், கொரோனா என்பதால் தொடங்கவில்லை என தெரிவித்து விட்டார்.
இதையடுத்து பிரவீன்குமார் அங்கிருந்து கோவைக்கு வந்தார். அதன்பிறகும் தொழில் தொடங்கவில்லை. இதனால் பிரவீன்குமாருக்கு மார்சல் பிரிட்டோ மீது சந்தேகம் ஏற்பட்டது.
தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பிரவீன்குமார் கேட்டார். அதனையும் அவர் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன்குமார் சம்பவம் குறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், தொழில் தொடங்குவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருப்பூர் தொழில் அதிபர் மார்சல் பிரிட்டோ மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
- பல உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் கூறியதாவது:-
* தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் என்பது துளியும் இல்லை.
* தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல. விமர்சனங்களை பார்த்து பழகியவர் அல்ல. தந்தையின் நிழலில் வளர்ந்தவர் தான்.
* பணியில் ஒருவர் இறந்தால் கருணை அடிப்படையில் வழங்குவது போல தான் தி.மு.க. தலைவர் ஆகியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதுபோலத்தான் தமிழகத்தில் முதல்வராகவும் ஆகியிருக்கிறார்.
* உண்மைகளை சவுக்கு மீடியா ஏறக்குறைய 8 மாதங்கள் எடுத்துக் கூறியதன் காரணமாக தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
* நாட்டில் நடக்கும் உண்மைகள் எந்த வகையில் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மற்றும் அவரது மகன் ஆகியோர் மிக கவனமாக இருக்கின்றனர்.
* டிசம்பர் 2023-ல் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாக கடத்தப்படுகிறது. உடனடியாக இதை தடுக்கப்பட வேண்டும். தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டதுபோல் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்று உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தின் மீது தமிழக முதல்வர் நடுவடிக்கை எடுத்து இருந்தால் என்றால் 66 உயிர்கள் பலியாகி இருக்காது, இதுபோன்ற பல உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.
இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.
- சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள பள்ளபாளையத்தில் சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சிறுமிகளுக்கு ஜீப் ஓட்ட கற்றுக்கொடுத்து இந்த வீடியோவை அவர் படம் பிடித்துள்ளார்.
சிறுமிகள் ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் இந்த வீடியோவிற்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.
ஆபத்தான முறையில் சிறுமி வாகனத்தை இயக்கியது சட்டப்படி குற்றம்தான். தனது சொந்த விவசாய நிலத்தில் உரிமையாளர், வாகனத்தை சிறுமியிடம் கொடுத்து இயக்கச் சொல்லியுள்ளார். சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
- பக்தர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விரைவு தரிசனத்திற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது.
கந்த சஷ்டி திருவிழாவின் போது ஆயிரம் ரூபாய் செலுத்தி விரைவு தரிசனத்தில் சென்று முருகப்பெருமானை தரிசிக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கு பக்தர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 1000 ரூபாய் விரைவு தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும் பொது தரிசனமும், ரூ.100 சிறப்பு தரிசனம் மட்டுமே அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
- விபத்தில் காயமடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
- காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், மேட்டத்தூர் கிராமம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் J.S.நகர் அருகில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் TN73 M 8384 என்ற பதிவெண் கொண்ட வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இராணிப்பேட்டை மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவி, செல்வம், ராமலிங்கம், முருகன், துரை மற்றும் சக்தி ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நகராட்சி அலுவலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் சோதனை நடத்தப்பட்டது.
- சோதனையின் போது ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
விழுப்புரம்:
விழுப்புரம் சென்னை சாலையில் நகராட்சி அலுவலகம் செயல்ப்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்கள், லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையில் போலீசார் இன்று காலை 11.50 மணிக்கு ஜீப்பில் அங்கு சென்றனர்.
அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். நகராட்சி அலுவலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிவில் தான் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது தெரியவரும்.
- எஸ்பிபி வாழ்ந்த இல்லம் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என அறிவிப்பு.
- பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், எஸ்பிபி வாழ்ந்த இல்லம் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயர் சூட்டப்படுகிறது.
மேலும், "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவரது இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பெரியார் நகர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை.
- மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாசாலை, புதுப்பேட்டை, அடையாறு, வடபழனி, கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அதே போல், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பெரியார் நகர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக நகரின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
30-ந்தேதி மற்றும் 1-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (இன்று மற்றும் நாளை) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 28-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை மோகன் ஜி தெரிவித்தார்.
- மோகன் ஜியை சொந்த ஜாமினில் விடுவித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.
பராசூரன், திரவுபதி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் நேற்று சென்னையில் இருந்த மோகன் ஜியை கைது செய்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவரை சொந்த ஜாமினில் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே மோகன் ஜி மீது பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜாமினில் வெளியே வந்த மோகன் ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். அவர் அவ்வாறு தெரிவித்த தைரியத்தில் தான் நான் பேசினேன். ஆந்திராவில் முதல்வரே இப்படி கூறும்போது, தமிழ்நாட்டில் இப்படி நடப்பதாக எனக்கு செவிவழி செய்தி கிடைத்ததே... இந்த மாதிரி இருக்கலாம் இருந்திருக்கலாம் ஒருவேளை இருந்தால் அதை சரி செய்திருக்கலாம் என்ற நோக்கத்தில் தான் பேசினேன். ஆனால் நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
எனக்கு ஆதரவளித்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த எச். ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் , இயக்குனர் பேரரசு ஆகியோருக்கு நன்றி" என்று அவர் தெரிவித்தார்.
- சில நிமிடங்கள் கழித்து காரில் வந்தவர்கள் காரை எடுக்க வந்தனர்.
- போலீசார் விரைந்து வந்து காரில் வந்த 6 பேரையும், காரையும் வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நேற்று திருப்பூரில் இருந்து ஒரு காரில் 6 பேர் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் வால்பாறையில் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, இரவு 7 மணியளவில் அக்காமலை எஸ்டேட் செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே சென்ற போது காரில் இருந்தவர்கள் தங்களது காரை சாலையில் நிறுத்தினர்.
பின்னர் காரை விட்டு இறங்கி வெளியில் சென்றனர். 20 நிமிடங்கள் ஆகியும் அவர்கள் வரவில்லை. இந்த சாலையில் ஒரு வாகனத்தை நிறுத்தினால் மற்றொரு வாகனம் செல்ல முடியாது. இந்த நிலையில் அக்காமலை எஸ்டேட்டில் இருந்து வால்பாறை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை சரவணன் என்பவர் ஓட்டி வந்தார்.
சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே பஸ் வந்த போது, சாலையில் கார் நிற்பதை சரவணன் பார்த்தார். காரை எடுத்தால் தான் பஸ் செல்ல முடியும் என்பதால் 20 நிமிடத்திற்கும் மேலாக அங்கே பஸ் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதேபோல் சாலையின் மறுபுறமும் ஒரு பஸ் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
சில நிமிடங்கள் கழித்து காரில் வந்தவர்கள் காரை எடுக்க வந்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
காரை எடுக்குமாறு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த 6 பேரும், அரசு பஸ் டிரைவர் சரவணன் மற்றும் கண்டக்கரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை தகாத வார்த்தைகளாலும் திட்டினர்.
இதை பார்த்த பயணிகள் வந்து, காரை எடுக்குமாறு தெரிவிக்க, பயணிகளிடமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து காரில் வந்த 6 பேரையும், காரையும் வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் பஸ் அங்கிருந்து வால்பாறை நோக்கி சென்றது. போலீசார் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த முரளி தரன்(35), சசிக்குமார்(42), துரைமுருகன்(36), வெங்கடேஷ்(25), அருண்(30), திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த கோதண்டம்(46) என்பதும் தெரியவந்தது.
இவர்களில் முரளிதரன், சசிக்குமார் ஆகியோர் திருப்பூர் பா.ஜ.க மண்டல பொதுச்செயலாளர்களா கவும், துரைமுருகன் திருப்பூர் பா.ஜ.க கொங்கு மண்டல இளைஞர் அணி தலைவராகவும், வெங்கடேஷ் பா.ஜ.க கொங்கு மண்டல இளைரணி துணைத் தலைவராகவும், அருண் திருப்பூர் மண்டல பா.ஜ.க இளைஞர் அணி செயலாளராகவும் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே இவர்கள் 6 பேர் மீதும் அரசு பஸ் டிரைவர் சரவணன், இவர்கள் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக வால்பாறை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 6 பேரையும் பொள்ளாச்சி சப் ஜெயிலில் அடைத்தனர்.






