என் மலர்
தமிழ்நாடு
பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: ஆந்திர முதல்வரே பேசினார்.. அந்த தைரியத்தில் தான் பேசினேன்- மோகன் ஜி
- பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை மோகன் ஜி தெரிவித்தார்.
- மோகன் ஜியை சொந்த ஜாமினில் விடுவித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.
பராசூரன், திரவுபதி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் நேற்று சென்னையில் இருந்த மோகன் ஜியை கைது செய்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவரை சொந்த ஜாமினில் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே மோகன் ஜி மீது பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Reason For #MohanG Arrest...Thooki Ulla Vainga Thappey Illa... pic.twitter.com/K1dv5PsZ5u
— Rajasekar Russalayan (@iamrajesh_pov) September 24, 2024
ஜாமினில் வெளியே வந்த மோகன் ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். அவர் அவ்வாறு தெரிவித்த தைரியத்தில் தான் நான் பேசினேன். ஆந்திராவில் முதல்வரே இப்படி கூறும்போது, தமிழ்நாட்டில் இப்படி நடப்பதாக எனக்கு செவிவழி செய்தி கிடைத்ததே... இந்த மாதிரி இருக்கலாம் இருந்திருக்கலாம் ஒருவேளை இருந்தால் அதை சரி செய்திருக்கலாம் என்ற நோக்கத்தில் தான் பேசினேன். ஆனால் நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
எனக்கு ஆதரவளித்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த எச். ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் , இயக்குனர் பேரரசு ஆகியோருக்கு நன்றி" என்று அவர் தெரிவித்தார்.