என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலர் கவுரவத்துக்காக பதவியை வாங்கி வைத்திருப்பதாகவும், சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
    • சரியாக செயல்படாதவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அவ்வப்போது புது புது நடவடிக்கைகளை எடுத்துதான் பார்க்கிறார்கள்.

    பதவிகள் கிடைத்தால் நன்றாக உழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள். துணைத் தலைவராக 52 பேர், பொதுச்செயலாளர்களாக 52 பேர், செயலாளர்களாக 120 பேர் நியமிக்கப்பட்டார்கள்.

    250-க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக பதவி கொடுக்கப்பட்டது. இவ்வளவு பதவிகள் கொடுத்தும் கட்சி குறிப்பிடத்தக்க அளவு பலம் பெறவில்லை என்ற குறைபாடு உள்ளது. இதற்கு காரணம் என்ன என்று மாநில தலைமை நடத்திய ஆய்வில் பலர் கவுரவத்துக்காக பதவியை வாங்கி வைத்திருப்பதாகவும், சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    எனவே செயல்படாமல் இருப்பவர்களை கணக்கெடுக்கும்படி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநில நிர்வாகிகள் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    சரியாக செயல்படாத அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளார். பழைய நிர்வாகிகள் நீக்கப்படுவதற்கான காரணத்தையும் அவர்களுக்கு பதிலாக அந்த அந்த மாவட்ட நிர்வாகிகளின் கருத்து கேட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதையும் மேலிடத்துக்கு தெரிவித்து ஒப்புதல் பெற முடிவு செய்துள்ளார்கள். இவ்வாறு நிர்வாகிகள் கணக்கெடுக்கப்படுவது பலரது வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

    • அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும்.
    • அரசுத் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2024-ம் ஆண்டு குரூப்-4 போட்டித் தேர்வினை எழுதி விட்டு முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கும் எதிர்கால இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை ஓரளவுக்கு நிறைவேற்றும் வண்ணமும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளதைக் கருத்தில் கொண்டும், தொகுதி-4-ன்கீழ் வரும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரம் வரை அதிகரிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து, அரசுத் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் சுமார் 1138 கல்வி நிறுவனங்களில், சுமார் 1300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • தென் மாவட்டங்களில் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக தொலைதூர வட மாவட்டங்களுக்கு பணி மாறுதல் செய்யப்படுவதால் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும். மாணவ, மாணவியர் விடுதிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. மாணவியர் விடுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும். நிதி உதவி ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

    ஈமச் சடங்கிற்கான நிதி உதவி 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5ஆயிரமாக ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ், 2020-2021-ம் ஆண்டில் மட்டும் சுமார் 8 ஆயிரத்து 800 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.265 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

    இவ்வாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் அம்மாவின் அரசு செயல்படுத்திய திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    ஆனால், 41 மாத கால ஸ்டாலினின் தி.மு.க. அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் ஆதிதிராவிடர் நலத்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேலாண்மை கழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 90-க்கும் மேற்பட்ட மாவட்ட மேலாளர், துணை மேலாளர், உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் போன்ற பணியாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம், வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அல்லது அரசு விதிமுறைப்படி நியமிக்காமல், நேரடியாக நியமனம் செய்து அவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையற் கூடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து உணவுகள் விடுதிகளுக்கு எடுத்துச் செல்லும் முறையை இந்த அரசு அறிமுகப்படுத்தியது. இந்த ஒப்பந்தம் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் சாமான்ய மக்களின் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் சுமார் 1138 கல்வி நிறுவனங்களில், சுமார் 1300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    தற்போது இப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப திட்டமிட்டு உள்ளதாகவும், இதன்மூலம் திராவிட மாடல் அரசின் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்பு பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், தென் மாவட்டங்களில் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக தொலைதூர வட மாவட்டங்களுக்கு பணி மாறுதல் செய்யப்படுவதால் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில், ஸ்டாலினின் தி.மு.க. அரசு ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்படுவதை எனது முந்தைய அறிக்கைகளில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

    குறிப்பாக, பழங்குடியினர் நலத்துறையில், 'தொல்குடி' என்ற திட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களுக்கான மேம்பாட்டு வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயில், பல பணிகளை செய்யாமலேயே, செய்ததாகச் சொல்லி பலகோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஆதிதிராவிடர்களின் சம்பந்தி நான் என்று மறைந்த தி.மு.க. தலைவர் வாயளவில் அடிக்கடி கூறுவார். அதுபோலவே அவரது வழித் தோன்றலாக பரம்பரை ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினின் 41 மாத கால தி.மு.க. ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடையாமல் உள்ளதற்கும், நடைபெறும் முறைகேடுகளை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதற்கும் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனியாவது பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.
    • எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது.

    சென்னை:

    வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை தி.மு.க. அரசு மீட்டு கலைஞர் பூங்காவை உருவாக்கினால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வராது?

    சசிகலாவுக்கு வேண்டப்பட்டவரும் அ.தி.மு.க. பிரமுகருமான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் ஏற்கனவே அதிரடியாக மீட்கப்பட்டு இருந்தது. இத்தனை வருஷ ஆக்கிரமிப்பா என மலைக்க வைக்கும் அந்த ஆக்கிரமிப்பின் கதையை பார்ப்போம்.

    சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, கதீட்ரல் சாலையில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நிலம் 23 ஏக்கரில் பரந்து விரிந்திருந்தது. அந்த இடத்தை தோட்டக்கலை சங்கத்திற்காக 1910-ம் ஆண்டு அரசு வழங்கியது. காலப்போக்கில் அந்த நிலம் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் கைக்குச் சென்றது. 'விவசாய தோட்டக் கலைச் சங்கம்' என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தைப் பயன்படுத்தி வந்தார். அந்த இடத்திற்கு பட்டா பெற்று தோட்டக்கலை கிருஷ்ண முர்த்தி ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1989-ல் கலைஞர் ஆட்சியின் போது 17 ஏக்கர் நிலம் சட்டப்படி மீட்டகப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீதியுள்ள நிலத்தை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அந்த நிலத்தை ஒட்டி உட்லன்ஸ் ட்ரைவ்-இன் ஓட்டல் இருந்தது. ஒரு காலத்தில் சென்னையின் லேண்ட் மார்க்காக அந்த ஓட்டல் பிரபலம். காரில் அமர்ந்தபடியே வி.ஐ.பி.கள் எல்லாம் வந்து அந்த ஓட்டலில் சாப்பிடுவார்கள். அங்கு குத்தகை அடிப்படையில் செயல்பட்ட தனியார் டிரைவ்-இன் உணவு விடுதி வசம் இருந்த நிலத்தை கலைஞர் அரசு மீட்டு, செம்மொழிப் பூங்காவை உருவாக்கியது. மீதமுள்ள நிலத்துக்கு தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தனிநபர் பட்டா பெற்று அவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்த சட்டப் போராட்டத்தால் மீதியுள்ள 6 ஏக்கர் நிலம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். இந்த இடம் முழுவதுமாக அரசு கையகப்படுத்தி சீல் வைக்கப்பட்டுள்ளது. 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 115 கிரவுண்ட் நிலம் சட்டப் போராட்டம் மூலம் மீட்டதோடு ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் கலைஞர் பூங்காவாக மாற்றி திறந்து வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இந்த கோபம்தான் பழனிசாமிக்கு இப்போது ஜிப்லைன் பழுதில் வெளிப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ண மூர்த்தி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்ப பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே... என்ற ஆத்திரம்தான் காரணம்.

    எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது போல் ஜிப்லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

    பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை. மேலும் ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். சென்ற அந்த இருக்கைக்கு தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து வினாடி தேங்கினர். பின்னர் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு இறங்குதளம் சென்றடைந்தனர்.

    ஆகவே எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது. இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே. இப்பூங்காவிற்குள் நுழைய பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜிப்லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை, இசை நீறூற்று போன்றவை அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணங்களே பெறப்படுகின்றன. பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • பணிச்சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.
    • வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழி காட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018 முதல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை கடந்த ஜூன் 8-ந்தேதி வெளியிட்டது. அதில் 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் பணிச்சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கையை 210 தினங்களாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.

    இதைத் தொடர்ந்து திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

    அதில் 19 சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருந்ததை மாற்றி 4 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 2 சனிக்கிழமைகளில் வகுப்புகள் முடிந்து விட்டது.

    இதனுடன் பழைய நாட்காட்டியை பள்ளி இறுதி வேலை நாட்கள் ஏப்ரல் 25-ந்தேதியாக இருந்தது. அது தற்போது ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.
    • தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

    சென்னை:

    தென்மேற்கு பருவகாற்று தென் மாநிலங்களில் விலகும்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும். இதன் காரணமாக தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.

    அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் இறுதி வரை இந்த பருவ காலம் நீடிக்கும். வடகிழக்கு பருவமழை எனப்படும் இந்த காலக்கட்டத்தில் நல்ல மழை பொழிவும் இருக்கும். மிக கனத்த மழை பெய்து பாதிப்புகளையும் உருவாக்கும்.

    தற்போது அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக வலுவடைந்து வருகிறது. அதே நேரம் வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்பும் உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 18-ந் தேதி வரை பரவலாக நல்ல மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

    இன்று மாலை முதல் கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் மழை பெய்ய தொடங்கும். நாளை (திங்கள்) டெல்டா மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யக் கூடும்.

    எனவே இந்த பகுதிகளுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் 6 முதல் 11 செ.மீ. மழை வரை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது.

    வருகிற 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கடலூர் தொடங்கி நெல்லூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யலாம். எனவே ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த காலத்தில் 200 மி.மீட்டர் வரை மழை பெய்யலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்று (ஞாயிறு) திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதிகளிலும் 11 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எங்கெங்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது? எங்கெங்கு மின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்பதை கண்காணிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் மட்டும் 10 ஆயிரம் தன்னார்வலர்களும், அரசுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட தயாராக இருக்கிறார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

    • வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
    • தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது.

    குன்னூர் நகர பகுதி மட்டுமல்லாமல் அருவங்காடு, வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கரன்சி, காட்டேரி, பர்லியார், சேலாஸ், கொல கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை மழை பெய்து வருகிறது.

    அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்கிறது.

    இந்த மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே திடீர் மண் சரிவு ஏற்பட்டது. அத்துடன் சாலையில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் குன்னூர் டி.எஸ்.பி. வீரபாண்டி, இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜேசிபி எந்திர உதவியுடன் மண் மற்றும் மரங்களை அகற்றினர்.

    இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    இதேபோல் இன்று காலை குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்கா, அடார் செல்லும் சாலையில் ராட்சத மரம் மின் கம்பி மீது விழுந்தது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணிநேரம் போராடி மரத்தை அகற்றினர். இதேபோல் ஆங்காங்கே மழைக்கு மரங்களும், மண்சரிவும் ஏற்பட்டது. இது போன்ற நேரங்களில் மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மிதவேகத்தில் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் என வருவாய்த்துறையினர், போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஊட்டியிலும் காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    நேற்று பிற்பகலில் சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கொட்டு மழையில் அங்குள்ள மலர்களை கண்டு ரசித்தனர். 

    • கடந்த 2 வார காலமாக மழை சற்று குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தது.
    • நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 380 தண்ணீர் வரத்து இருந்தது.

    பொள்ளாச்சி:

    கோடை மழைக்கு பிறகு ஜூன் 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஆழியார் அணைக்கு வழக்கத்தை விட நீர்வரத்து அதிகமாக இருந்தது.

    பல நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து பெய்த மழையால் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் 110 அடியை அணை எட்டியது.

    அதன்பிறகும் மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. 118 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கடந்த 2 வார காலமாக மழை சற்று குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தது. இருப்பினும் மலைமுகடுகள், நீரோடைகள் வழியாக அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்தது.

    இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 75 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் 115 அடிக்கு மேல் நிரம்பியவாறு கடல்போல் காட்சியளிக்கிறது.

    நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 380 தண்ணீர் வரத்து இருந்தது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆழியார் அணையின் நீர்மட்டம் முழு அடியை எட்டி கடல்போல் ததும்புகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை வலுத்தால் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    மேலும் பாசனத்திற்கு போதுமான தண்ணீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆழியார் அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளது. நடப்பாண்டில் பெய்த தென்மேற்கு பருவமழையால் ஜூலை மாதம் இறுதியில் முழு அடியை எட்டியது. தொடர்ந்து சில மாதமாக அவ்வப்போது மழை பெய்வதால், 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் 2 மாதமாக 118 அடியாக இருந்தது.

    தற்போது 115 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 83 அடியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் 75 நாட்களுக்கு மேலாக 115 அடியையும் தாண்டி இருக்கிறது. வரும் நாட்களில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • நீர் இருப்பு 51.81 டி.எம்.சி. உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சிறிதளவு அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 4,938 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 6,445 கன அடி வீதம் தண்ணீர் அதிகரித்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி நீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 89.26 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 51.81 டி.எம்.சி. உள்ளது.

    • மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
    • திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

    தஞ்சையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்து குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7 மணியளவில் இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை சாந்தப்பிள்ளைகேட் ரெயில்வே கீழ்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    இதேப்போல் கும்பகோணம், ஒரத்தநாடு, வல்லம், பூதலூர், பாபநாசம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை கொட்டியது.

    இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சம்பா, தாளடி சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் தளர்வு அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதைப்போல் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வாக உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே தண்ணீரை கடந்து செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டது. மேலும் மழை நீர் வடிய அரசு வடிகால் வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர்.
    • உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பாகுமதி என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12578) இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3,040 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ரெயில் 53½ மணி நேரத்தில் 35 ரெயில் நிலையங்களில் நின்று சென்று தர்பங்காவை அடைகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலான இது நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பெரம்பூர் வந்தடைந்த இந்த ரெயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வியாசர்பாடி ஜீவா, கொருக்குப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் கூடூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த ரெயிலில் முன்பதிவு ஏ.சி. பெட்டிகள் 10, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 6, முன்பதிவில்லா பெட்டி 3, 2 சரக்கு கொண்டு செல்லும் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. முன்பதிவு பெட்டிகளில் 1,300 பயணிகளும், முன்பதிவு இல்லாத 3 பெட்டிகளில் 400 பேரும் என மொத்தம் சுமார் 1,700 பேர் பயணித்தனர்.

    இரவு 8.15 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை கடந்து மெயின் லைனில் சென்ற இந்த ரெயில், கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, லூப் லைனுக்கு மாறியது. இதனால், சந்தேகம் அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் (லோகோ பைலட்) ரெயிலின் வேகத்தை குறைத்தார்.

    சரியாக, இரவு 8.26 மணியளவில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் காலிப்பெட்டிகள் மீது 'டமார்' என்ற பயங்கர சத்தத்துடன் பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

    ரெயில் என்ஜின் மோதியதில், சரக்கு ரெயிலில் கடைசியாக இருந்த கார்டு பெட்டி தூக்கி வீசப்பட்டது. அடுத்ததாக இருந்த சரக்கு பெட்டியும் நிலைகுலைந்தது. அதே நேரத்தில், எக்ஸ்பிரஸ் ரெயிலில், என்ஜின் மற்றும் தொடர்ந்து இருந்த ஜெனரேட்டர் மற்றும் லக்கேஜ் பெட்டி, தொடர்ந்து இருந்த முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி 1 (எச்.1), இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 2 (ஏ.2, ஏ.1), 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 6 (பி 6, பி 5, பி 4, பி 3, பி 2, பி 1), 3-ம் வகுப்பு எக்கனாமி ஏ.சி. பெட்டி 1 (எம்.1), சமையல் அறை பெட்டி (பேண்டரி) ஆகியவை ஒன்றுடன் ஒன்று பலத்த சத்தத்துடன் மோதி இருபுறமும் சரிந்து விழுந்தன.

    ரெயில் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் 19 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் போல்டு, நட்டு ஆகியவை கழன்று கிடந்ததால் நாசவேலை காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்தது. இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இரண்டு முறை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில், ரெயில் விபத்து தொடர்பாக வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்துகிறார்.

    பாகமதி ரெயில் ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், கவரைப்பேட்டை ரெயில் நிலைய மேலாகர் ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • பொருளாதார குழுவில் 3 பேரும், சட்ட நிபுணர்கள் குழுவில் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
    • குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களுக்கான பணிகளை உடனே தொடங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் வரும் 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு பணிகளை மேற்கொள்ள குழுக்களை அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநாட்டுக்கான களப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் மாநாட்டு பணிகளுக்கென ஒருங்கிணைப்பு குழுக்கள் மற்றும் செயல் வடிவ குழுக்கள் அமைக்கப்படுகிறது. குழுவில் இடம்பெற்றுள்ள குழு தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் மாநாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விஜய் அமைத்துள்ள மாநாட்டு குழுவில், ஒருங்கிணைப்பு குழு தலைவராக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஒரு ஒருங்கிணைப்பாளர், 12 குழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர பொருளாதார குழுவில் 3 பேரும், சட்ட நிபுணர்கள் குழுவில் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

    மாநாட்டு வரவேற்பு குழுவில் 10, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் 14, சுகாதார குழுவில் 55 பேர், போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவில் 104 பேரும், வாகன நிறுத்த குழுவில் 41 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

    மகளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மகளிர் பாதுகாப்பு குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த பாதுகாப்பு மேற்பார்வை குழுவில் மாவட்ட தலைவர்களை ஒருங்கிணைப்பாளர்களாக கொண்டு 111 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேடை ஒருங்கிணைப்பு குழு, இருக்கை மேலாண்மை குழு, மாநாட்டு தீர்மான குழு, உபசரிப்பு குழு, பந்தல் அமைப்பு குழு, உணவு வழங்கல் குழுவினர் என 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களுக்கான பணிகளை உடனே தொடங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சட்ட நிபுணர்கள் குழுவினர், போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவினர் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்யவேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    ×