என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.
    • அரபிக்கடல், வங்க கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை பெய்யும்.

    தமிழகத்தின் வானிலை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தென் கிழக்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தஞ்சை, திருவாரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.

    15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.

    16ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.

    சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரித்து 15,16 தேதிகளில் அதிகனமழை பெய்யும்.

    முன்னதாக, அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 95.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    அரபிக்கடல், வங்க கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை பெய்யும்.

    மழை தொடர்பான அனைத்து தகவல்களும் அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மழை தொடர்பான அரசு அதிகாரிகளுடன், தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்.

    இயல்பான காலத்தில் பருவ மழை தொடங்குகிறது. அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்.

    கன மழை, மிக கனமழை, அதிகனமழை என்று தான் கூறமுடியும். எவ்வளவு செ.மீ மழை பெய்யும் என்பதை முன்கூட்டியே கணித்துக் கூறும் அளவுக்கு அறிவியல் வளரவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி ஜி.என்.சாய்பாபா கைது செய்யப்பட்டார்.
    • 2017ஆம் ஆண்டு பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா நேற்று உயிரிழந்தார்.

    கடந்த 2014 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி ஜி.என்.சாய்பாபா கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கல்லூரியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இவ்வழக்கில் 2017ஆம் ஆண்டு பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாய்பாபாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அவரை விடுவித்தது. கிட்டதட்ட 10 ஆண்டு சிறைவாசத்திற்கு பின் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பேராசிரியர் ஜி.என். சாய்பாபா மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஒத்து தொடர்பான அவரது பதிவில், "பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்களது மறைவு மனித உரிமைச் செயற்பாட்டுச் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். தனது சுதந்திரமும் உடல்நிலையும் அச்சுறுத்தலில் இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி அவர். பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் காட்டிய நெஞ்சுரம் வாய்மைக்கான நிலைத்த அடையாளமாக என்றும் நினைவுகூரப்படும்.

    அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது அன்புக்குரியோர்க்கும் இந்தக் கடினமான வேளையில் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • தீ விபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பார்சல் பொருட்கள் எரிந்து சேதமானது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    சேலத்தில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் இருந்து நேற்று நள்ளிரவு பார்சல் பொருட்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு வந்தது. அந்த வேனை ஓமலூரைச் சேர்ந்த டிரைவர் வீரமணி (வயது36) என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த வேன் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டிநாய்க்கனபள்ளி அருகே வந்தபோது திடீரென்று வண்டியில் இருந்து புகை வெளியேறியது.

    இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து உடனே டிரைவர் வீரமணிக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே டிரைவர் வீரமணி வண்டியை சாலையோரமாக நிறுத்தி விட்டு பார்த்தபோது வேனில் திடீரென்று தீப்பிடிக்க தொடங்கியது.

    அப்போது அவர் அந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால், அவரால் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் அந்த வண்டி முழுவதும் தீ பரவியது.

    இதுகுறித்து வீரமணி கிருஷ்ணகிரி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் அந்த வழியாக சென்றவர்கள் டிரைவருக்கு உடனே தகவல் தெரிவித்தால், அவர் வண்டியை சாலையோரம் நிறுத்தினர். இதனால் அதிர்ஷ்டவசமாக டிரைவர் வீரமணிக்கு எந்தவித தீக்காயமின்றி உயிர் தப்பினார். இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பார்சல் பொருட்கள் எரிந்து சேதமானது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தால், சில பார்சல் பொருட்கள் எரியாமல் மீட்கப்பட்டது.

    இந்த தீ விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரித்தபோது, பார்சலில் யாரோ பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருட்கள் அனுப்பி வைத்தள்ளனர். அந்த பார்சலில் இருந்து தான் தீப்பிடிக்க தொடங்கி மற்ற பொருட்கள் மீது தீ பரவியது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புக்கள் கட்டித் தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வெள்ளிசந்தை:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கேசர்குளிடேம் அருகே உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் 80 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால் வேறு பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புக்கள் கட்டித் தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இவர்களின் கோரிக்கையை ஏற்று கேசர்குளிடேம் அருகில் உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் புதிய குடியிருப்புக்களை கட்டிய தமிழக அரசு இப்பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய், சுடுகாடு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் கடந்த மார்ச் மாதம் அவசரகதியில் இலங்கை அகதிகளை இம்முகாமில் குடியமர்த்தின.

    கடந்த 7 மாதங்களாக இது குறித்து பல முறை தமிழக முதலமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை விடுத்தனர் அரசு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை,

    இந்த நிலையில் இந்த முகாமை சேர்ந்த ரூபன் (வயது55) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இவரது உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாததாலும், பழைய முகாமில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல வழியில்லாததாலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாததால் மயானத்திற்கு இடம் கேட்டு பாலக்கோடு-கேசர்குளி சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டு வந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த பாலக்கோடு போலீசார், தாசில்தார் ரஜினி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள், மயானத்திற்கு இடம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுகொண்ட அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.
    • அரக்கோணத்தில் 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பருவமழை தொடங்க காரணமாக அமைய உள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், இந்தாண்டு முன்கூட்டியே தொடங்குகிறது.

    இதன் எதிரொலியால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.

    அரக்கோணத்தில் 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன் நேரடி தொடர்பில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளனர்.

    • பாபா சித்திக் மும்பையில் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.

    பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும்.

    பாபா சித்திக் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஓட்டல்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • விசாரணை முடிவில் மிரட்டல் குறித்து விவரங்கள் வெளியாகும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரில் விமான நிலையப் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    கடந்த வாரம் பள்ளி, கல்லூரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அது புரளி என்பது தெரியவந்தது.

    இதனால் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருச்சியில் 4 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு இமெயில் மூலம் இன்று காலை ஒரு தகவல் வந்தது. அதில் திருச்சி மாநகரில் உள்ள பிரபலமான 4 ஓட்டல்களின் பெயர் குறிப்பிட்டு அந்த ஓட்டல்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து 4 ஓட்டல்களுக்கும் போலீசார் விரைந்தனர். ஓட்டல்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் 4 பிரிவுகளாக சென்று 4 ஓட்டல்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஓட்டல் அறைகள், வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து இதுபற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? எந்த முகவரியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    சைபர் கிரைம் போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணை முடிவில் இந்த மிரட்டல் குறித்து விவரங்கள் வெளியாகும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • லாரி உட்பட கனரக வாகனங்கள் 50-க்கும் மேற்பட்டவை குடி நீரில் சிக்கிக் கொண்டது.
    • வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டு வாகன ஒட்டிகள் தெரிவித்து வருகின்றனர்.

    மதுரை:

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. மதுரையில் நேற்று இரவு மட்டும் 16 செ.மீட்டர் மழை பெய்தது.

    மதுரை தமுக்கம் மைதானம், அண்ணா நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்த நிலையில், மதுரை மாநகரின் பிரதான பகுதியான மாட்டுத்தாவணியை ஒட்டியுள்ள டி.எம்.நகர் மற்றும் அதனை ஒட்டிய பல்வேறு பகுதிகளை கடந்து செல்லும் சாத்தையார் ஓடையில் கனமழையின் காரணமாக உடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து தற்போது நகருக்குள் குடியிருப்புகளை சுற்றி ஓடைநீர் புகுந்து வருகிறது. ஏற்கனவே சாத்தையார் ஓடையில் தடுப்புச் சுவர் அமைக்க பலமுறை அதிகாரிகளிடம் குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிக அளவில் மழை நீருடன் ஓடை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.


    இதேபோல், மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் மூலம் குடிநீர் தொட்டிக்கு செல்லக்கூடிய பைப்பு லைனில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாகி வருகிறது.

    மேலும் குடிநீர் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு பண்டக சாலை, கார் பார்க்கிங், கூட்டுறவு மருந்தகம் உள்ளிட்டவைகளில் லட்சக்கக்கணக்கான லிட்டர் குடி தண்ணீர் புகுந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்த வெள்ளத்தில் எம்.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் வாகனம் மற்றும் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட லாரி உட்பட கனரக வாகனங்கள் 50-க்கும் மேற்பட்டவை குடி நீரில் சிக்கிக் கொண்டது.

    இதனால் வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டு வாகன ஒட்டிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது வரை பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாகி எம்.டி.சி. பண்டக சாலைக்குள் புகுந்து வருகிறது.

    • கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • கடந்த 3 நாட்களில் மட்டும் 23 ஆயிரத்து 527 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை நாட்கள் மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களை கட்டியது. இந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக இருந்தனர்.

    அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் தொடர் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்றும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் காலை 8 மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 23 ஆயிரத்து 527 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    ஆயுதபூஜை விடுமுறை நாளான கடந்த 11-ந்தேதி அன்று 7 ஆயிரத்து 642 பேரும், விஜயதசமியான நேற்று பரிவேட்டையையொட்டி மதியம் 12 மணியுடன் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பகல் 12 மணி வரை 5 ஆயிரத்து 885 பேரும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுமார் 10 ஆயிரம் பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    அதேபோல வட்டக்கோட்டைக்கு இயக்கப்படாமல் முடங்கி கிடந்த சொகுசு படகுகள் 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 10-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் 345 பேர் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரிசெய்து உள்ளனர். நேற்று 75 பேரும், நேற்று முன்தினம் 136 பேரும், 10-ந்தேதி 134 பேரும் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செய்துள்ளனர்.

    ஆயுத பூஜைதொடர் விடுமுறையையொட்டி வட்டக்கோட்டைக்கு கடந்த 3 நாட்களாக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 சொகுசு படகுகளும் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • முரசொலி செல்வம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சி.பி. ராதாகிருஷ்ணன் மு.க.ஸ்டாலினுக்கும், செல்விக்கும் ஆறுதல் கூறினார்
    • பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோரும் சென்றனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அக்காள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

    இதையறிந்து மராட்டிய கவர்னரான சி.பி. ராதாகிருஷ்ணன் கோபாலபுரத்தில் உள்ள செல்வியின் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றார்.

    அப்போது அங்கிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை வரவேற்றார். அங்கு முரசொலி செல்வம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சி.பி. ராதா கிருஷ்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், செல்விக்கும் ஆறுதல் கூறினார்.

    அவருடன் பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சக்கர வர்த்தி ஆகியோரும் சென்றனர்.

    • பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

    ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு படையெடுத்தனர்.

    இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. நீண்ட நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    • பருவமழையை எதிர் கொள்வதற்காக மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் நாளை, நாளை மறுநாள் அதிகனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு சென்றார்.

    அங்குள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின் மழைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.

    மழை தீவிரம் அடையும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார். அப்போது மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மழைக்காக மாநகராட்சி செய்துள்ள முன்னேற்பாடுகளை உதயநிதி ஸ்டாலினுக்கு விளக்கி கூறினார்கள்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பருவமழையை எதிர் கொள்வதற்காக மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்தோம்.

    வானிலை எச்சரிக்கை அடிப்படையில், அமைத்து வருகின்ற சில நாட்களில் தமிழ்நாட்டில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதாவது 20 செ.மீட்டருக்கு மேல் மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு எடுத்து வருகிறது.


    பொதுமக்களின் உயிரும் உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் முதல் நோக்கமாகும். அதை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து பணிகளையும், மேற்கொண்டு வருகிறோம்.

    மழைக்காலத்தில் பொது மக்களுக்கு பிரத்யேக உதவி எண்ணாக 1913 என்ற நம்பர் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுப்பாட்டு அறையில் மொத்தம் 150 பேர் 4 ஷிப்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்கள் பொது மக்களுக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் தொலைபேசி மூலம் வழங்குகிறார்கள். அவசர உதவி தவிர மீடியா, வாட்ஸ்அப், நம்ம சென்னை தளம் ஆகியவற்றிலும் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    அரசுடன் இணைந்து செயல்பட 13 ஆயிரம் தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர். தண்ணீர் தேங்கினால் வெளியேற்றுவதற்காக 113 எண்ணிக்கையிலான 100 எச்.பி. பம்புகள் தாழ்வான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கக் கூடிய இடங்களில் 31 ரெயில்வே கல்வெட்டுகள் ஆழமாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த எம்.எல்.ஏ.க்கள் நிவாரண மையங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட விஷயங்களை அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி உறுதி செய்வார்கள்.

    இது மட்டுமின்றி அரசு சார்பாக தமிழ்நாடு அலெர்ட் என்ற புதிய செயலி உருவாக்கி உள்ளோம். அதனை டவுன்லோடு செய்து பொதுமக்கள் மழை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

    பல்வேறு வானிலை மாதிரிகளை பயன்படுத்தி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம். தற்போது ஓரிரு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் இருந்தால், அவற்றை சுற்றி வேலி அமைக்கவும் உத்தரவிட்டு உள்ளோம்.

    பொதுமக்கள் பார்வைக்கு அப்படி ஏதாவது மூடாமல் இருக்கும் கழிவுநீர் பாதைகள் பற்றி தகவல் வந்தால் அதனை உடனே மாநகராட்சிக்கு சோஷியல் மீடியா, சமூக வலைதளம் மூலம் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.


    ரோட்டில் கிடக்கும் அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை மின்சார வாரியத்துக்கு தெரிவித்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    எனவே பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ வாட்டர் 356 பம்பிங் ஸ்டேஷனும் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெட்ராடிங், உள்ளிட்ட 673 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×