என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது.
- பொருளாதாரத்தில் தமிழ்நாடு சாதித்த விவரங்களை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை வெளிப்படுத்துகிறது
சென்னை:
2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழகத்தை உயர்த்தும் இலக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்து உள்ளார். அதன் அடிப்படையில் அரசுத் துறைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக தொழில்துறை கூடுதல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த இலக்கை எட்டும் வகையில் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஜப்பான், ஸ்பெயின், துபாய், அபுதாபி, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி அமெரிக்காவிற்கு சென்று அங்கு 17 நாட்கள் தங்கி இருந்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள சர்வதேச தொழில் அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதில் முக்கியமானது பார்ச்சூன் 500 நிறுவனமாகும்.
கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து முன்னெடுக்கப்பட்ட முதலீட்டாளர் சந்திப்புகள், உலக முதலீட்டாளர் மாநாடு போன்ற பல்வேறு நடவடிக்கைகள், தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சத்து 7 ஆயிரத்து 974 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. அதோடு, 19 லட்சத்து 17 ஆயிரத்து 917 நேரடி வேலை வாய்ப்புகளை சேர்த்து மொத்தம் 31 லட்சத்து 53 ஆயிரத்து 862 மொத்த வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
பொருளாதாரத்தில் தமிழ்நாடு சாதித்த விவரங்களை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி.) எடுத்துக்கொண்டால், இந்தியாவில் தமிழகத்தின் பங்கு 1960-61-ம் ஆண்டில் 8.7 சதவீதமாக இருந்தது. அது 2023-2024-ம் ஆண்டில் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இங்குள்ள தனி நபர் வருவாயை பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் 2023-2024-ம் ஆண்டில் 171.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2023-24-ம் ஆண்டில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்கை கொண்டிருக்கின்றன என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவே தமிழகத்தில் உள்ள தொழில் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
- விழாவில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்ப படிவம் வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது.
ராமேசுவரம்:
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது. திருவிழா அழைப்பிதழானது யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் மூலம் சிவகங்கை மறை மாவட்ட பிஷப், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, ராமேசுவரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு பின்பு பங்குத்தந்தை அசோக் வினோ கூறியதாவது:-
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வழங்க இருக்கிறோம். இந்த திருவிழாவுக்கு சென்று வர அரசிடம் அனுமதி பெற்றுத்தந்து, பயண ஏற்பாடுகள் செய்து தருவது தொடர்பாக கலெக்டரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு 75 விசைப்படகுகளும், 16 நாட்டு படகுகளும் செல்ல உள்ளன. 2500-க்கும் மேற்பட்டோர் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்ப படிவம் வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தை பிப்ரவரி 25-ந்தேதிக்குள் அனைவரும் பூர்த்தி செய்து படகு உரிமையாளர்களிடம் அல்லது விழா கமிட்டியிடம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்வதை கண்காணித்திட பரிசோதகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 22.01.2025 அன்று சிவகங்கை மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த போது சிவகங்கை-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் மகளிர் அறிவியல் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என கல்லூரி முதல்வர், முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். அக்கோரிக்கையினை பரிசீலனை செய்த முதலமைச்சர் உடனடியாக அக்கல்லூரி முன்பாக பேருந்துகள் நின்று செல்ல உத்தரவிட்டார்கள்.
மேற்படி உத்தரவிற்கிணங்க, என்னுடைய வழிகாட்டுதலின்படி, சிவகங்கை- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக அனைத்துப் பேருந்துகளும் 22.01.2025 முதல் நின்று செல்கின்றன.
இது குறித்து 28.01.2025 அன்று சில சமூக வலைதளங்களில் முதலமைச்சர் உத்தரவு பின்பற்றப்படவில்லை என தவறான தகவல் வெளியானது தெரிந்தவுடன், உடனடியாக காரைக்குடி துணை மேலாளர்(வணிகம்) பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று ஆய்வு செய்து, கல்லூரி முதல்வர் அவர்களிடம் சென்று பேருந்து நின்று செல்வதை உறுதி செய்தார்.
மேலும், துணை மேலாளர் அவர்களிடம் கல்லூரி முதல்வர், முதலமைச்சர் அவர்களுக்கும், தனக்கும் நன்றி தெரிவித்து பாராட்டுச்செய்தி கடிதம் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் பேருந்துகள் நின்று செல்கின்றன என்றும், சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்வதை கண்காணித்திட தீனதயாளன் என்ற பரிசோதகர் நியமிக்கப்பட்டுள்ளார். கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த அலுவலர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டதில் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இக்கல்லூரி முன்பாக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது. உண்மைக்குப் புறம்பானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
- தனுஷை வெட்டும்போது தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணும் காயம் அடைந்தார்.
- சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த குத்துச்சண்டை வீரர் தனுஷை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. அப்போது தனுஷை வெட்டும்போது தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணும் காயம் அடைந்தார்.
அரிவாள் வெட்டில் தலை, உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் தனுஷ் உயிரிந்தார். இச்சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கஞ்சா போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததால் கொலை நடந்துள்ளதாக தனுஷின் உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
- மிதுன் சக்கரவர்த்தி ஓட்டல் மேலாளரை தாதா என்று அழைப்பது வழக்கம்.
- நாக்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் சென்று உள்ளது தெரியவந்தது.
ஊட்டி:
பிரபல பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான மிதுன் சக்கரவர்த்திக்கு ஊட்டியில் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்தநிலையில், அந்த ஓட்டல் மேலாளரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்தது.
அதில், 'குன்னூரில் முக்கிய விஷயமாக பணியில் உள்ளேன். நான் இருக்கும் இடத்தில் செல்போன் சிக்னல் பிரச்சினை உள்ளது. எனவே, ஓட்டல் சம்பந்தமான வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது என்றும், அந்த பணத்தை நான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும்' கூறப்பட்டு இருந்தது.
வழக்கமாக மிதுன் சக்கரவர்த்தி ஓட்டல் மேலாளரை தாதா என்று அழைப்பது வழக்கம். அந்த பெயரில் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி வந்ததால், மேலாளருக்கு சந்தேகம் ஏற்படவில்லை.
அதற்கு பதில் அளித்த மேலாளர், 'ஓட்டலுக்கு சொந்தமான பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.70 லட்சமும், நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.30 லட்சமும் உள்ளது' என்று தெரிவித்து உள்ளார். முதல் கட்டமாக ரூ.20 லட்சம் உடனடியாக அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் வங்கி கணக்கு விவரங்களுடன் பதில் வந்து உள்ளது.
இதை நம்பிய மேலாளர், வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி விட்டார். இதையடுத்து நிரந்தர வைப்பு தொகையில் உள்ள ரூ.30 லட்சத்தையும், அதன் பின்னர் மற்ற கணக்குகளில் உள்ள ரூ.50 லட்சத்தையும் அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்தது.
இதற்கிடையில் மிதுன் சக்கரவர்த்தி, மேலாளரை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சத்தை, உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன் என்று மேலாளர் கூறியபோது தான், மோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டல் மேலாளர் ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிரந்தர வைப்பு தொகையில் இருந்த பணம் மற்றும் மற்ற கணக்குகளில் இருந்த பணத்தையும் அனுப்ப எடுத்த நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தினார். இதனால் ரூ.80 லட்சம் தப்பியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, எந்த வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரித்தனர்.
இதில் நாக்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் சென்று உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- விசிக கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் விலகிய நிலையில் இன்று விஜய்யை திடீரென சந்தித்துள்ளார்.
- தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன், ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார். விசிக கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் விலகிய நிலையில் இன்று விஜய்யை திடீரென சந்தித்துள்ளார்.
அப்போது, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பில், தவெக-வில் ஆதவ் அர்ஜுனா இணைவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா விரைவில் தவெகவில் இணைவார் என்றும் இதுதொடர்பான அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும், விஜய் ஆதவ் அர்ஜூனாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு இதுவரை ரூ. 2,125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தற்போது 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.500 கோடியை விடுவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்திற்கு இதுவரை ரூ. 2,125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக "அனைவருக்கும் வீடு" என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் "குடிசையில்லா தமிழ்நாடு" என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 இலட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி நடப்பு நிதியாண்டில் (2024-25) ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உட்பட, 360 சதுர அடியாகும். பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்படுகிறது.
வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ.1625.30 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு. பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.1350.99 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு (Steel) என ரூ.249.86 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.1600.85 கோடி இதுவரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.500 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. தற்போது வரப்பெற்றுள்ள ரூ.500 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.2125.30 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- காரை சின்னி திலங்க் என்பவர் கார் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறி உள்ளார்கள்.
- மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை, வேறொரு காரில் சென்றவர்கள் துரத்திச் சென்ற விவகாரம் குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 26.01 2025 அன்று செல்வி சின்னி திலங்க் என்ற பெண் கானத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி 25.012025 அன்று நள்ளிரவு சுமார் 02.00 AM அளவில் தான் (TN.13S5466) என்ற காரில் முட்டுகாடு பாலம் அருகே வந்த போது இரண்டு கார்களில் (TN-75-E-6004, TN-09-BR-9988) வந்த 7-8 நபர்கள் திடீரென வழிமறித்துள்ளனர்.
அங்கு நிற்காமல் தனது வீட்டிற்கு சென்ற செல்வி சின்னி திலங்க என்பவரை இரண்டு கார்களில் வந்த நபர்கள் துரத்தி சென்று கானத்தூரில் உள்ள அவரது வீட்டருகே நிறுத்தி பிரச்சனை செய்து அவர்களது காரை செல்வி. சின்னி திலங்க் என்பவர் கார் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறி உள்ளார்கள்.
மேலும் மேற்படிகாரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதற்காக செல்வி. சின்னி திலங்க என்பவர் வந்த காரை துரத்தியதாகவும் அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக வந்ததாக கூறியதை செல்வி. சின்னி திலங்க தரப்பு மறுத்துள்ளது.
மேற்படி புகாரின் பேரில் கானத்தூர் காவல்நிலைய மனு ரசீது எண் 22/2025 நாள் 26.012025 வழங்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து கானத்தூர் காவல் நிலைய குற்ற எண். 16/2025 u/s 126(2) 296(b), 324(2), 351(2) BNS r/w 4 of TNPHW Act பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் குற்றவாளிகள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் அதன் தொடர்சியான ஈசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து துரித புலன்விசாரணை செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- முதல் கட்டமாக நடிகர் விஜய் கடந்த 24ம் தேதி அன்று தமிழக வெற்றிக்கழகத்துக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்கள் தேர்வு.
- தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகியுள்ளனர். 120 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஒன்றியம், நகரம் மற்றும் கிராம அளவில் கிளை அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு முடித்ததும் விஜய் கட்சியில் மாநிலம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் நிர்வாகிகள் களப்பணியாற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
அதன்படி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். அதில் முதல் கட்டமாக நடிகர் விஜய் கடந்த 24ம் தேதி அன்று தமிழக வெற்றிக்கழகத்துக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.
இதைதொடர்ந்து, இன்று 2ம் கட்டமாக மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள தவெகவின் புதிய நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... இங்கே க்ளிக் செய்யவும்..
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதல் கட்டமாக நடிகர் விஜய் கடந்த 24ம் தேதி அன்று தவெகவுக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.
- விஜய் கட்சியில் மாநிலம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் நிர்வாகிகள் களப்பணியாற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளை தொடங்கி உள்ளார். கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு பெற உள்ள நிலையில் 2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திப்பதற்கு தயாராகவும் தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் சென்னை அருகே பரந்தூர் விமான நிலைய பிரச்சனை தொடர்பாக விவசாயிகளை சந்தித்து பேசிய அவர் தனது அரசியல் பயணம் புத்துணர்ச்சியுடன் தொடங்கி விட்டதாக அறிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய நடிகர் விஜய் முடிவு செய்தார். இதற்காக கடந்த சில மாதங்களாக அவர் 234 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியை செய்து வந்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி பணிகளை செய்வதற்கு என்று மாவட்ட செயலாளர் தலைமையில் வலுவான அணியையும் அவர் உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர் தலைமையில் இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள்.
இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள். 120 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஒன்றியம், நகரம் மற்றும் கிராம அளவில் கிளை அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு முடித்ததும் விஜய் கட்சியில் மாநிலம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் நிர்வாகிகள் களப்பணியாற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
அதன்படி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். அதில் முதல் கட்டமாக நடிகர் விஜய் கடந்த 24ம் தேதி அன்று தமிழக வெற்றிக்கழகத்துக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.
இதைதொடர்ந்து, இன்று 2ம் கட்டமாக மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட செயலாளர்கள் விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
- தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு விதிக்கப்பட்டது.
- சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் கனகராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து, சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரர் வினோத், வீடு புகுந்து கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியாவை வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். வர்ஷினி பிரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த ஆணவ படுகொலை சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு கோவை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி விவேகானந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார்.
அத்துடன் வினோத்குமாருக்கான தண்டனை விவரம் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி திட்டமிட்டு ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து இளம்தம்பதியை வெட்டிக்கொன்றது நிரூபனம் ஆனதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு சதித்திட்டம் தீட்டி கைது செய்யப்பட்ட சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
- ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.
- ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
ஆட்டோ கட்டணம் வருகிற 1-ந்தேதி முதல் உயருகிறது. புதிய கட்டணம் தொடர்பான விரிவான பட்டியலை அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது.
அதன்படி, குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கட்டணம் ஆகும். காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்ய, பகல் நேர கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. சில ஆட்டோ சங்கங்கள் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக போக்குவரத்து துறை கவனத்திற்கு வந்துள்ளது.
அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்.
புகாரின் அடிப்படையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.






