என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்கள் ஓட்டுநர் எங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓட்டும் போது ஆம்லெட் எப்படி சமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறார்.
    • கேப் ஓட்டுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

    ஓலா கேப் வாடிக்கையாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    மும்பையை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் பிஸியான சாலையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஆம்லெட் செய்யும் செய்முறை வீடியோக்களை பார்ப்பதைக் காட்டுகிறது.

    இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வாடிக்கையாளர், ஓட்டுநரின் நடத்தைக்காக ஓலாவை கடுமையாக சாடி உள்ளார்.

    டார்க் நைட் என்ற எக்ஸ் தள பயனாளர் இந்த வீடியோவை வெளியிட்டு அதில், அன்புள்ள ஓலா, உங்கள் ஓட்டுநர் எங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓட்டும் போது ஆம்லெட் எப்படி சமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறார். உங்கள் ஸ்கூட்டர்கள் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்துள்ளன. இதுவும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாக மாறுவதற்கு முன்பு நீங்கள் சரியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    கேப் டிரைவரின் நடத்தையை கடுமையாக சாடிய அவர், தற்போதைய விவகாரத்தில் நிறுவனம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    வைரலான வீடியோ தொடர்பாக மும்பை காவல்துறை அவரது எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்தது.

    கேப் ஓட்டுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இருப்பினும், பரபரப்பான சாலைகளில் வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதறடிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    வாகன ஓட்டுநரின் கவனக்குறைவானது, காரில் பயணிப்போர் மற்றும் சாலையில் செல்லும் குடிமக்களின் உயிர்களை இழக்கும் பெரும் சோகத்தில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளது.

    • பாம்பை பார்த்தவுடன் வழக்கு விசாரணைக்காக வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர்.
    • கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு, வழக்கு விசாரணை பாதியில் நிறுத்தப்பட்டது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டின் 27-வது அறையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கோர்ட்டு வளாகத்திற்குள் 2 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை அங்கிருந்த காவல் அதிகாரி பார்த்து அனைவரையும் எச்சரித்தார்.

    பாம்பை பார்த்தவுடன் வழக்கு விசாரணைக்காக வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு, வழக்கு விசாரணை பாதியில் நிறுத்தப்பட்டது. கோர்ட்டு அறைக்குள் இருந்த கோப்புகளுக்கு இடையில் அந்த பாம்பு பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பாம்பு பிடிப்பவர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வந்து தேடியபோது பாம்பை காணவில்லை. சுமார் ஒரு மணி நேரம் தேடிய பிறகும் பாம்பு பிடிபடாததால், சிறிது நேரத்திற்கு பிறகு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது. சுவற்றில் இருந்த ஓட்டை வழியாக அந்த பாம்பு வெளியேறி சென்றிருக்கலாம் என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். அருகில் காட்டுப் பகுதி இருப்பதால் அங்கிருந்து சில நேரம் பாம்புகள் கோர்ட்டு வளாகத்திற்குள் வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • மனைவியை பார்ட்டிக்கு அழைத்துச்சென்று தனது முதலாளியுடன் உறவுகொள்ள வற்புறுத்தியுள்ளார்.
    • கணவன் மீது முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    மகாராஷ்டிர மாநிலம் கல்யான் நகரில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனது முதலாளியுடன் உறவு வைத்துக்கொள்ள மறுத்த  தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

     டிசம்பர் 19 அன்று 45 வயதான அந்த நபர் தனது 28 வயதுடைய 2வது மனைவியை அலுவலகத்தில் பார்ட்டிக்கு அழைத்துச்சென்று தனியறையில்  தனது முதலாளியுடன் உறவுகொள்ள வற்புறுத்தியுள்ளார்.

    இதற்கு மனைவி மறுக்கவே, பெற்றோரிடமிருந்து ரூ.15 லட்சம் வாங்கித் தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே தனது 2வது மனைவிக்கு அவர் உடனே முத்தலாக் கூறி வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்ய பணம் கேட்டு அந்த நபர் 2வது மனைவியை உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சம்பாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து முத்தலாக் கூறிய கணவன் மீது முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 2019 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி சட்டக்கல்லூரியில் படித்து வந்தார்
    • இது ஒரு 100 சதவீத லாக் அப் மரணம். காவல்துறை அவரை கொன்றுவிட்டது.

    மகாராஷ்டிர மாநிலம் பர்பானி [Parbhani] நகரில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரெயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பு பிரதியை எரிதத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

    பகுஜன் அகாடி (VBA) கட்சியினர் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு கலவரத்தில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்தியதாக [vandalism] 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

     

     

    அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 35 வயதான பகுஜன் அகாடி (VBA) தலித் செயல்பாட்டாளர் சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷி என்பவர் டிசம்பர் 15 காலையில் அவர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார்.

    நெஞ்சுவலி காரணமாக சூர்யவன்ஷி உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது. ஆனால் போராட்டத்தின்பின் பின் வீடியோ பதிவுடன் நடத்தப்பட்ட பிரேத  பரிசோதனையில் சூர்யவன்ஷியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்த காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் உயிர் பிரிந்துள்ளது என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். எனவே போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உயிரிழந்தது உறுதியானது.

    நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, படிப்பு செலவுக்காக சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தவர். இவரது சகோதரரும் தாயும் புனேவில் உள்ள சாக்கனில் கூலி வேலை செய்து வந்தனர்.

     

    பகுஜன் அகாடி கட்சியுடன் இணைந்து உள்ளூர் செயல்பாட்டாளராக சூர்யவன்ஷி இருந்துள்ளார்.

    சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர். அவரது உடலை பர்பானிக்கு கொண்டு வர போலீஸ் அனுமதிக்கவில்லை. ஆனால் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்பால் போலீஸ் பின்வாங்கியது.

     

    காவல்துறை வேண்டுமென்றே தலித் குடிசைகளுக்குள் நுழைந்து சொத்துக்களை அழிப்பதை உள்ளூர் வாசிகளால் பதிவுசெய்யப்பட்ட பல வீடியோக்கள் காட்டுகிறது. 

     பர்பானிக்கு மாவட்டத்தில் தலித்-பகுஜன் அம்பேத்கரிய இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் அளவை சூர்யவன்ஷியின் மரணம் எடுத்துக்காட்டுவதாகவும் இந்த விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முற்றிலும் தோற்றுப் போயுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    இன்னும் பர்பானியில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, போலீஸ் சித்திரவதையில் உயிரிழந்த சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷியின் குடும்பத்தினரை நேற்று [திங்கள்கிழமை] நேரில் சென்று சந்தித்துள்ளார்.

     

    மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்தித்த பின் பேசிய ராகுல் காந்தி, தலித் என்ற காரணத்திற்காகவும், அரசியல் சாசனத்தைக் காத்ததற்காகவும் இளைஞன் கொல்லப்பட்டான்.இது ஒரு 100 சதவீத லாக் அப் மரணம். காவல்துறை அவரை கொன்றுவிட்டது.

    காவல்துறையை பாதுகாக்க சட்டசபையில் முதல்வர் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அரசியல் சாசனத்தை துடைத்தெறிவதே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் நோக்கம் துடைத்து என்று ராகுல் தெரிவித்தார்.

    இதற்கிடையே புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தி அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இங்கு வந்தார். மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துவதே அவரது வேலை. கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகிறோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்று தெரிவித்தார். 

    • இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.
    • சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார்.

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக்குறைவால் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரது ரசிகர்களில் ஒருவரால் வினோத் காம்ப்ளி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சரியான காரணங்களைக் கண்டறிய முடியவில்லை என்றாலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.


    1993-2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.

    உடல் நலம் பதிக்கப்பட்டுள்ள உள்ள வினோத் காம்ப்ளி சமீபத்தில் அங்குள்ள சிவாஜி பூங்காவில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

    சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார்.

    • இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இவர் இயக்கிய 'அங்கூர்' படம் அமைந்தது.
    • படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

    மும்பை:

    திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ஷியாம் பெனகல். இவர் கடந்த 14-ம் தேதியன்று தனது 90 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர்.

    இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இவர் இயக்கிய 'அங்கூர்' படம் அமைந்தது. 900-க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் தயாரித்துள்ளார். புனே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியாவின் தலைவராக இருந்தார். 'எ சைல்ட் ஆப் தி ஸ்ட்ரீட்ஸ்', 'ஜவஹர்லால் நேரு', 'சத்யஜித் ரே' உள்ளிட்ட இவரது ஆவணப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

    வங்கதேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை கதையை 'முஜிப்: த மேக்கிங் ஆப் எ நேஷன்' என்ற பெயரில் இவர் இயக்கிய படம் 2023-ல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

    வயது முதுமை மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகளால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை மருத்துவமனையில் காலமானார்.

    • விஷால் மேஷ்ரம் மீது 2 கொலை உட்பட 27 வழக்குகள் உள்ளது.
    • திரையரங்கிற்கு வந்த போலீசார் முதலில் விஷால் மேஷ்ரமின் காரை பஞ்சராக்கிவிட்டு திரையரங்கிற்குள் நுழைந்தனர்.

    அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5-ந்தேதி 'புஷ்பா 2' திரையரங்குகளில் வெளியானது. ஆனால் அதற்கு முன் வெளியான சிறப்பு காட்சியில் இருந்து சர்ச்சைக்குள்ளானது 'புஷ்பா 2'. கடந்த 4-ந்தேதி வெளியான சிறப்பு காட்சியை காண அல்லு அர்ஜூன் வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் கூட்டநெரிசலில் மயக்கமடைந்த அப்பெண்ணின் மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே, மும்பை பாந்த்ராவில் உள்ள திரையிரங்கில் 'புஷ்பா 2' படம் ஓடிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென ஸ்பிரே ஒன்றை அடித்தார். இதனால் படத்தை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக படம் பாதிலேயே நிறுத்தப்பட்டது.

    இதனிடையே பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் கைதாகி பின்னர் ஜாமினில் விடுதலையானார். தெலுங்கு சட்டசபையில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பேசிய முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டைகளை முன் வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அல்லு அர்ஜூன், தான் சட்டத்தை மதிப்பதாகவும், தனது பெயரை கெடுக்க சதி நடப்பதாகவும் கூறினார். இதற்கிடையே ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    இப்படி சர்ச்சை சம்பவங்கள் 'புஷ்பா-2' வெளியானது முதல் நடைபெற்று வரும் நிலையில், படத்தை பார்க்க வந்த போதைப்பொருள் குற்றவாளியை போலீசார் க்ளைமாக்ஸ் காட்சியில் கைது செய்துள்ள சம்பவம் நாக்பூரில் நடைபெற்றுள்ளது.

    போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியான விஷால் மேஷ்ரம் மீது 2 கொலை உட்பட 27 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இவர் தற்போது 'புஷ்பா-2' படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திரையரங்கிற்கு வந்த போலீசார் முதலில் விஷால் மேஷ்ரமின் காரை பஞ்சராக்கிவிட்டு திரையரங்கிற்குள் நுழைந்தனர். அப்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது விஷால் மேஷ்ரமை போலீசார் கைது செய்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • திருமணத்துக்கு முன்னதாக, சொகுசு கப்பலில் பிரம்மாண்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

    மும்பை:

    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ர்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

    4 மாதமாக நட்சத்திரங்கள், பிரபலங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு ஜூன் மாதம் இனிதே திருமணம் நடந்தது.

    இவர்களின் திருமணத்தின் விருந்தினர் பட்டியலில் இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் ஏராளமானோர் வருகை தந்து புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.


    இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான்கான், ஷாருக்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா, அத்வானி, சன்னி தியோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். டபிள்யூடபிள்யூஎப் குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ஜான் சீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    அம்பானியின் சொந்த ஊரான குஜராத்தின் ஜமாநகரில் திருமணத்திற்கு முந்தைய 3 நாள் நிகழ்வில் மெட்டாவின் மார்க் ஜூக்கர்பெர்க், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ், ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ப்ஹாய் உள்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.


    திருமண நிகழ்வின் ஒரு பகுதியாகஆனந்த் அம்பானி சார்பில் 50 பேருக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

    திருமணத்துக்கு முன்னதாக, சொகுசு கப்பலில் பிரம்மாண்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

    திருமணத்தில்பங்கேற்ற தனது நண்பர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கினார்.

    ஆனந்த் அம்பானியின் இந்தத் திருமணத்துக்கு சுமார் ரூ.5,000 கோடி செலவானதாக தகவல் வெளியானது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி வென்று 8 வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    இதில் சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் 42-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 47-30 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வென்றது.

    • சாலை விபத்தில், 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளான்.
    • விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 19 வயது இளைஞர் ஓருவர் காரை வேகமாக ஓட்டிச் சென்று பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில், 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளான்.

    இந்த விபத்து, வடலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் நடந்துள்ளது.

    உயிரிழந்த சிறுவன் ஆயுஷ் லக்ஷ்மன் கின்வாடேவின் குடும்பம் , நடைபாதையில் வசிப்பதாகவும், அவரது தந்தை ஒரு தொழிலாளி என்றும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஹூண்டாய் க்ரெட்டா காரை ஓட்டி வந்த சந்தீப் கோல் என்கிற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பையில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி உள்ளது. சமீபத்தில், மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (BEST) நிறுவனத்தால் இயக்கப்படும் மின்சாரப் பேருந்தின் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 42 பேர் காயமடைந்தனர்.

    இதேபோல், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி குர்லாவில் நடந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

    கடந்த ஐந்தாண்டுகளில் அதிக சாலை விபத்துகளை சந்தித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்தது.

    பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2018-2022 காலகட்டத்தில் இந்தியா முழுவதும் சாலை விபத்துக்களில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

    உத்தரப் பிரதேசத்தில் அதிக சாலை விபத்து இறப்புகள் (1,08,882), தமிழ்நாடு (84,316) மற்றும் மகாராஷ்டிரா (66,370) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • 27வது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய விருது வழங்கப்பட்டது
    • இந்தியாவின் பாரம்பரியத்திலிருந்து உலகம் கற்றுக்கொள்ள முடியும்

    மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது.

    இதில் பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.

    சுதந்திரத்தை நடுநிலைமையோடு ஒருபோதும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எங்களின் தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதைச் செய்வோம். எந்த பயமும் இல்லாமல் அதைச் செய்வோம்.

    எங்களின் முடிவுகளை மறுக்கும் அதிகாரத்தைப் பிறர் [பிற நாடுகள்] பெறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகள் மேல் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவின் பாரம்பரியத்திலிருந்து உலகம் கற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.  

    • மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டன.
    • துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு 3 இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.வைச் சேர்ந்த பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவியேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    சில தினங்களுக்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது. ஏக்நாத் ஷிண்டே உள்துறையை கேட்டு வந்ததாகவும், அதற்கு பா.ஜ.க. மறுத்து வந்ததாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.

    இதில் முதல் மந்திரி பட்னாவிஸ் உள்துறையை மீண்டும் தன்வசம் வைத்துக்கொண்டார். அதனுடன் எரிசக்தி, சட்டம் மற்றும் நீதி, பொது நிர்வாகம் ஆகிய துறையையும் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது.

    ஏக்நாத் ஷிண்டேக்கு நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய இலாகாக்களும், அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை, மாநில சுங்கத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

    ×