என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
    • கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    மும்பை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக கிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச சந்தையில் கடந்த நிதி ஆண்டோடு (2022-23) ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

    ஆனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

    இதனால் இந்நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022-23ம் நிதி ஆண்டில் இது ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்காக அதிகரித்துள்ளது.

    கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் சராசரியாக ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்தது.

    இந்த அதிக லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    எண்ணெய் நிறுவனங்கள் 2 வழிகளில் லாபம் ஈட்டுகின்றன. அவை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சில்லரை விற்பனை ஆகும். கச்சா எண்ணையின் விலை, அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விலையை கழித்தால் வரும் லாபம் எண்ணை நிறுவனங்களுடையது. மேலும் கச்சா எண்ணையை சுத்திகரித்த பின்பு கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலமும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.
    • அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.

    முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல் மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றcர்.

    அஜித் பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டம் பாந்திராவில் நடந்தது. அதன்பின், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பினர் மனு அளித்தார்.

    இதேபோல், சரத் பவார் தரப்பினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம்  மனு அளித்தனர்.

    இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சரத்பவார், அஜித்பவார் இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    • கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • சந்திராபூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 6 பேர் பலியாகினர் என போலீசார் தெரிவித்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மும்பையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே டெல்லி, தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சந்திராபூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர் என போலீசார் தெரிவித்தனர்.

    • காசநோயால் பாதிக்கப்பட்ட 23 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மரக்கட்டிலில் வாலிபர் உடலை கட்டினர்.

    மும்பை

    மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள குருஷ்னர் கிராமத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹேமல்காசா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சமீபத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நகர்பகுதியில் இருந்து தொலைவில் உள்ள கிராமத்துக்கு வாலிபரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே குடும்பத்தினர் வாலிபரின் உடலை மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் மரக்கட்டிலில் வாலிபர் உடலை கட்டினர். பின்னர் அவர்கள் அதை மோட்டார் சைக்கிளின் பின்புறம் வைத்து சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.

    ஆம்புலன்ஸ் கிடைக்காததால் வாலிபரின் உடல் மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லப்பட்ட அவல காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்தநிலையில் உடலை எடுத்து செல்ல வாலிபரின் குடும்பத்தினர் நகராட்சி நிர்வாகம் அல்லது சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ளவில்லை என கட்சிரோலி மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் உடல் எடுத்து செல்லப்படுவதை ரோந்து பணியில் இருந்த போலீசார் கவனித்து உள்ளனர். போலீசார் இதுதொடர்பாக உடனடியாக தாலுகா சுகாதாரத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஆம்புலன்ஸ் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்சில் வாலிபரின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்கமான நடைமுறைகள் முடிக்கப்பட்டது. அதன்பிறகு உடல் சுமார் 17 கி.மீ. தொலைவில் இருந்த வாலிபரின் சொந்த ஊருக்கு இறுதி சடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினாா்.

    • மகாராஷ்டிரத்தின் முதல்-மந்திரியை மாற்றுவது குறித்த பேச்சுக்கே இடம் இல்லை.
    • முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் போன்றவர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர அரசியலில் கடந்த 2-ந் தேதி நடந்த திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த அஜித்பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்தனர்.

    அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான், வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அஜித்பவார் அந்த பதவியில் அமர்த்தப்படுவார் என தெரிவித்தார்.

    இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    மகாயுதி கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் என்ற முறையில் அஜித்பவார் மகாராஷ்டிரத்தின் முதல்-மந்திரியாக ஆகமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    தேசியவாத காங்கிரஸ் பிரிவை சேர்ந்தவர்களுடன் மகாயுதி கூட்டங்கள் நடந்தபோதே அஜித்பவாருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்காது என்று தெளிவாக எடுத்து கூறப்பட்டு உள்ளது.

    ஏக்நாத் ஷிண்டே எப்போதும் போல முதல்-மந்திரியாக நீடிப்பார். இதில் எந்த மாற்றமும் ஏற்படாது.

    அதிகார பகிர்வு குறித்து அஜித்பவாருக்கு தெளிவாக கூறப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டதுடன், மகாராஷ்டிரத்தின் முதல்-மந்திரியை மாற்றுவது குறித்த பேச்சுக்கே இடம் இல்லை.

    மகாயுதி கூட்டணி குறித்து மக்களை குழப்புவதை இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் தலைவர்களுக்கு இடையே எந்த குழப்பம் இல்லை. ஆனால் தொண்டர்கள் குழம்பி உள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் போன்றவர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் ஏதாவது நடக்குமானால் அது மந்திரிசபை விரிவாக்கமாக இருக்கும். இதற்கு முதல்-மந்திரி அழைப்பு விடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அஜித்பவாரின கூட்டணியில் இணைந்தது தனக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தல் இல்லை என ஏக்நாத் ஷிண்டே முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மும்பையில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராய்காட், ரத்னகிரி, சிந்துத்ரக், புனே, கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மும்பையிலும் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • பாரத் கெய்க்வாட் அமராவதியில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.
    • பாரத் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டதில் நெஞ்சில் குண்டு பாய்ந்த தீபக் சுருண்டு விழுந்து உயிர் இழந்தார்.

    புனே:

    மகாராஷ்டிர மாநிலம் புனே பாலேவாடி பகுதியை சேர்ந்தவர் பாரத் கெய்க்வாட் (வயது 57). அமராவதியில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மோனி கெய்க்வாட் (44) இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    பாரத் கெய்க்வாட் அமராவதியில் தங்கி பணிக்கு சென்று வந்தார். மனைவி மற்றும் மகன்கள் புனேவில் உள்ள வீட்டில் வசித்தனர். அவர்களுடன் உறவினர் தீபக் (35) என்பரும் தங்கி இருந்தார்.

    பாரத் கெய்க்வாட் வாரம் ஒருமுறை விடுமுறை நாளில் புனேவில் உள்ள வீட்டுக்கு வருவார். வழக்கம் போல நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பாரத் கெய்க்வாட் படுக்கையில் இருந்து எழுந்தார். திடீரென அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தூங்கி கொண்டிருந்த மனைவி மோனியை நோக்கி சுட்டார். இதில் தலையில் குண்டு பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த மகன் மற்றும் உறவினர் தீபக் ஆகியோர் எழுந்து கதவை திறந்து கொண்டு வீட்டை விட்டை வெளியேற முயன்றனர். அப்போது பாரத் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டதில் நெஞ்சில் குண்டு பாய்ந்த தீபக் சுருண்டு விழுந்து உயிர் இழந்தார்.

    இதை பார்த்த பாரத்தின் மகன் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் போலீஸ் அதிகாரி பாரத் கெய்க்வாட் அதே துப்பாக்கியை தன் தலையில் வைத்து சுட்டார். இதில் அவரது தலையை குண்டு துளைத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் அவரும் இறந்தார்.

    இதுபற்றி அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மனைவி மற்றும் உறவினரை சுட்டுக்கொன்று விட்டு பாரத் கெய்க்வாட் தானும் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று தெரியவில்லை. அவர் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அகமதாபாத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் அதிக நீர் சூழ்ந்துள்ளது.
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, பஞ்சாப், அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களில் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதேபோல மராட்டிய மாநிலத்திலும் கடந்த சில தினங்களாக பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

    இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜூனாகத் மாவட்டத்தில் பலத்த மழையால் கால்நடைகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    அகமதாபாத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் அதிக நீர் சூழ்ந்துள்ளது.

    அகமதாபாத் விமான நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்தது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விமான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விமானங்கள் புறப்படுவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. ராஜ்கோட் மாவட்டத்தின் தோராஜி நகரில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ஜூனாகாத், நவ்சாரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது.

    குஜராத்தில் மொத்த முள்ள 206 நீர் தேக்கங்களில் 43 நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன.37 நீர் தேக்கங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சவுராஸ்டிரா-தெற்கு குஜராத்தில் 22 தாலுக்காவில் மிக கனமழை பதிவாகி உள்ளது. ஜூனாகத்தில் உள்ள கிர்னார் பகுதியில் 355 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாளை வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்துக்கு சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் சூதாட்டக் கணக்கைத் திறப்பதற்காக தொழிலதிபருக்கு வாட்ஸ்அப்பில் இணைப்பைக் கொடுத்துள்ளார்.
    • தொழிலதிபர் சைபர் போலீசில் புகார் செய்தார்.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆன்லைன் சூதாட்டம் மூலம் 58 கோடி ரூபாயை இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பா போலீசார் நடத்திய விசாரணையில், நான்கு கிலோ தங்க பிஸ்கட்களுடன் ரூ. 14 கோடி ரொக்கம் நேற்று மீட்கப்பட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    குற்றம் சாட்டப்பட்ட நபர் சோந்து நவ்ரதன் ஜெயின் என்கிற அனந்த் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, நாக்பூரிலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ள கோண்டியா நகரில் உள்ள ஆனந்தின் இல்லத்திற்கு போலீசார் விரைந்தனர். ஆனால் அதற்குள் ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். குற்றம்சாட்டப்பட்ட நபர் துபாய்க்கு தப்பிச் சென்றுவிட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுகுறிதது நாக்பூர் போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறுகையில்,"ஆன்லைன் சூதாட்டத்தை லாபம் ஈட்டும் வழியாக பயன்படுத்துவதற்காக தொழிலதிபரை ஆனந்த் முதலில் நம்பவைத்துள்ளார். ஆரம்பத்தில் தயங்கிய தொழிலதிபர், இறுதியில் ஆனந்தின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து, ஹவாலா வியாபாரி மூலம் ரூ. 8 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார்.

    பின்னர், ஆன்லைன் சூதாட்டக் கணக்கைத் திறப்பதற்காக தொழிலதிபருக்கு வாட்ஸ்அப்பில் இணைப்பைக் கொடுத்துள்ளார். தொழிலதிபர் கணக்கில் ரூ. 8 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதைக் காண்பித்தார். பின்னர், அவர் சூதாட்டத் தொடங்கினார்.

    ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, தொழிலதிபரின் அதிர்ஷ்டம் கடுமையான சரிவைச் சந்தித்தது. ஏனெனில் அவர் ரூ. 5 கோடியை வென்றபோது ரூ.58 கோடியை இழந்தார்.

    தொழிலதிபர் பணத்தை இழந்ததால் சந்தேகமடைந்து தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் ஆனந்த் பணத்தை திரும்பி வழங்க மறுத்துள்ளார்.

    பின்னர், தொழிலதிபர் சைபர் போலீசில் புகார் செய்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் கோண்டியாவில் உள்ள ஆனந்தின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையின் விளைவாக ரூ. 14 கோடி ரொக்கம் மற்றும் நான்கு கிலோ தங்க பிஸ்கட்கள் உட்பட கணிசமான அளவு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயிரிழந்தவர்களில் ஒன்பது ஆண்கள், பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர்.
    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் இருந்து 25 பேர் மீட்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 16 பேர் பலியாகினர். தகவலறிந்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ராய்காட் மாவட்டம் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி

    நேற்று மேலும் 5 உடல்களை மீட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இதனால், பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.

    இந்நிலையில், இன்று மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இன்னும், 86 கிராமவாசிகள் கண்டுபிடிக்கப்படாததால் அவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது.

    உயிரிழந்தவர்களில் ஒன்பது ஆண்கள், பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மும்பை:

    தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 30 பழங்குடி குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் இருந்து 25 பேர் மீட்கப்பட்டனர். நேற்று வரை 16 பேர் பலியாகினர்.

    தகவலறிந்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ராய்காட் மாவட்டம் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 5 உடல்களை மீட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    • மும்பை ஆசாத் மைதான் போலீசாரின் வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது.
    • சமீபத்தில் மும்பையில் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர் சுஜித் பட்கர் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை நடத்தினர்.

    மும்பை:

    மும்பையில் 2020-ம் ஆண்டு கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உத்தவ் தாக்கரே கட்சி .பி. சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் சுஜித் பட்கர் போலி ஆவணங்கள் மூலம் கொரோனா சிகிச்சை மைய ஒப்பந்தத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

    இதுதொடர்பாக மும்பை ஆசாத் மைதான் போலீசாரின் வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது. சமீபத்தில் மும்பையில் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர் சுஜித் பட்கர் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை நடத்தினர். இந்தநிலையில் அமலாக்கத்துறையினர் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் சுஜித் பட்கர் மற்றும் டாக்டர் கிஷோர் பிசுரேயை அதிரடியாக கைது செய்தனர். டாக்டர் கிஷோர் பிசுரே தகிசர் ஜம்போ கொரோனா சிகிச்சை மைய டீனாக இருந்தவர் ஆவார்.

    கைது செய்யப்பட்ட இருவரும் பணமோசடி தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து மோசடி குறித்து விசாரணை நடத்த அவர்களை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. இதையடுத்து கோர்ட்டு வருகிற 27-ந்தேதி வரை அவர்களை அமலாக்கத்துறை காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டது.

    ×