search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வேலைக்கு தாமதமானதால் சிறுவனை விளாசிய முதலாளி: பல்காரில் பயங்கரம்
    X

    வேலைக்கு தாமதமானதால் சிறுவனை விளாசிய முதலாளி: பல்காரில் பயங்கரம்

    • நண்பர்களுடன் விளையாட சென்றதால், வேலைக்கு தாமதமாக வந்தான்
    • நியாயம் கேட்க சென்ற அனைவரையும் சீதாராம் அவமதித்து விரட்டியடித்தார்

    மகாராஷ்டிர மாநிலத்தின் கொங்கன் பகுதியில் உள்ளது பல்கார் நகரம்.

    இங்குள்ள கம்லோலி கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திர சீதாராம் பாட்டில். இவர் தனது வீட்டில், வீட்டு வேலைகளை செய்வதற்கு ஒரு 13 வயது சிறுவனை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியிருந்தார். அந்த சிறுவனும் அதே கிராமத்தில் வசித்து வந்தான். பல வருடங்களுக்கு முன்பே அச்சிறுவனின் தாயார் இறந்து விட்டார். அவன் தந்தை காசநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குடும்ப வறுமையை குறைக்க அவன் வேலைக்கு சென்றான்.

    அவனுக்கு ராஜேந்திர சீதாராம் தனது வீட்டிலேயே தங்கும் வசதியுடன் மாத சம்பளமாக ரூ.1100 அளித்து வந்தார்.

    மூன்று தினங்களுக்கு முன் விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தை காண சென்ற அந்த சிறுவன் வரும் வழியில் அவனது நண்பர்களை கண்டதும் அவர்களுடன் விளையாட சென்றான். அதனால் ராஜேந்திராவின் வீட்டிற்கு வேலைக்கு வருவதற்கு தாமதமாகி விட்டது.

    அவன் தாமதமாக வந்ததால் கோபமடைந்த ராஜேந்திர சீதாராம், அவனை சரமாரியாக அடித்தார். அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற அச்சிறுவன் தனது தந்தையிடம் புகாரளித்தான். இதனையடுத்து அவன் தந்தையும், சில கிராமவாசிகளும் சீதாராமிடம் காரணம் கேட்க சென்றனர். ஆனால், அவர்களையும் ராஜேந்திர சீதாராம் தகாத வார்த்தைகளை கூறி விரட்டி விட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் காவல்துறையினரிடம் சென்று புகாரளித்தனர்.

    விசாரித்த காவல்துறை அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளில் சீதாராம் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவரை இதுவரை கைது செய்யாத காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பலத்த காயங்களடைந்த அந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

    Next Story
    ×