என் மலர்
மத்தியப்பிரதேசம்
- இந்திய ஒற்றுமை பயணம் என அழைக்கப்படும் இந்த பாதயாத்திரை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை தொடரும்.
- மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது.
போபால்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார்.
இந்திய ஒற்றுமை பயணம் என அழைக்கப்படும் இந்த பாதயாத்திரை, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை தொடரும். இதுவரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என தென்னிந்தியப் பகுதிகளை முடித்துக்கொண்டு மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்றார். அதன்பின், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச எல்லைக்குள் வந்த அவர் தொடர்ந்து பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்களும் மூவர்ண கொடியை ஏந்தியபடி உற்சாகமுடன் நடந்து செல்கின்றனர்.
மத்திய பிரதேசத்தில், ராகுல் காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது. அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்தூரில் செய்தியாளர்ளைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.க. எனது தோற்றத்தினைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவழித்துள்ளது என அதிரடியாக குற்றம் சாட்டினார்.
அவர்கள் என்னை பற்றிய ஒரு தோற்றம் உருவாக்கி வைத்துள்ளனர். அது தீங்கு தரக்கூடியது என மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது எனக்கு நன்மையே. ஏனெனில், என்னிடம் உண்மை உள்ளது. என்மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் நான் சரியான திசையில் செல்கிறேன் என்று எனக்கு எடுத்துக்கூறுகிறது என தெரிவித்துள்ளார்.
- அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவருமே எங்களுக்கு தேவை.
- டிசம்பர் 4-ந் தேதி, ராஜஸ்தானில் பாதயாத்திரை நுழைகிறது.
இந்தூர் :
ராஜஸ்தானில், அசோக் கெலாட்டை முதல்-மந்திரியாக கொண்ட காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
அசோக் கெலாட் சமீபத்தில் அளித்த பேட்டியில், சச்சின் பைலட் ஒரு துரோகி, அவர் முதல்-மந்திரி ஆக முடியாது என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு சச்சின் பைலட், ''அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும், இழிவான சொற்களையும் பயன்படுத்துவது ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல'' என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ராகுல்காந்தி பாதயாத்திரைக்கிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அமைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவருமே எங்களுக்கு தேவை. அசோக் கெலாட் சில குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கக்கூடாது.
இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண காங்கிரஸ் தலைமை பரிசீலித்து வருகிறது. அதற்கு காலவரையறை நிர்ணயிக்க முடியாது. காங்கிரஸ் தலைமைதான் காலவரையறை நிர்ணயிக்கும்.
ராஜஸ்தான் பிரச்சினையில், கட்சியை வலுப்படுத்தக்கூடிய முடிவை எடுப்போம். ஒருவேளை கடினமான முடிவு எடுக்க வேண்டி இருந்தால், அதை எடுக்க காங்கிரஸ் தயங்காது. ஒருவேளை இரு அணிகளுக்கு இடையே சமரசம் உருவாக்குவதாக இருந்தால், அதையும் செய்வோம்.
டிசம்பர் 4-ந் தேதி, ராஜஸ்தானில் பாதயாத்திரை நுழைகிறது. மற்ற மாநிலங்களைப் போல் அங்கும் பாதயாத்திரை வெற்றி பெறும்.
பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விவாதம் நடக்க வேண்டும். ஆனால், குஜராத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக, இத்தகைய பிரித்தாளும் பிரச்சினையை பா.ஜனதா எழுப்புகிறது. தேர்தலுக்கு பிறகு அதை மறந்து விடும். குஜராத்தில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. கீழ்மட்டத்தில் ஆம் ஆத்மி பலமாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் வெறுப்பை வளர்க்கவில்லை, என் இதயத்தில் காதல் மட்டுமே மலர்ந்தது.
- உங்கள் இதயத்தில் உள்ள பயத்தைப் போக்குங்கள், வெறுப்பு மறைந்து விடும்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. அம்பேத்கரின் பிறந்த இடமான மோவ்வில் உள்ள அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் பேசிய ராகுல்காந்தி கூறியுள்ளதாவது:

அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட பெரிய ஆளுமைகள் நமக்கு அரசியலமைப்பை வழங்கினர். நமது அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கி உள்ளது. மாநிலங்களவை, நீதித்துறை மற்றும் நாட்டின் அதிகார அமைப்புகள், அரசியலமைப்பிலிருந்து தோன்றியவை.
அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல, ஒரு வாழும் சக்தி, ஒரு சிந்தனை. அந்த எண்ணத்தை ஆர்.எஸ்.எஸ் அழிக்க விரும்புகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.அதன் அலுவலகங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றாததற்காக, அதன் எதிர்ப்பாளர்களால் விமர்சிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவும் அரசியல் அமைப்பு சட்டத்தை வெளிப்படையாக அழிக்க முடியாது. அவர்களுக்கு அந்த தைரியம் கிடையாது. அவர்கள் அதை முயற்சித்தால், நாடு அவர்களை தடுத்து நிறுத்தும். அதனால் அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பின்கதவு வழியாக முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், தனது ஆட்களை, முக்கிய அமைப்புகள், நீதித்துறை, ஊடகங்களில் ஈடுபடுத்தி வருகிறது.

என் பாட்டி 32 தோட்டாக்களை உடலில் வாங்கி கொல்லப்பட்டார், என் தந்தை கொல்லப்பட்டார். ஆனால் யாரிடமும் எனக்கு வெறுப்பு இல்லை. வெறுப்பு என்னை விட்டு விலகிய நாள், என் இதயத்தில் காதல் மட்டுமே மலர்ந்தது, வேறொன்றுமில்லை. வெறுப்பின் ஒரு துளி கூட என்னிடம் இல்லை. நான் வெறுப்பை வளர்க்கவில்லை.
அதனால் பாஜக, பிரதமர் மோடி ஜி, அமித் ஷா, ஆர்எஸ்எஸ்காரர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் இதயத்தில் உள்ள பயத்தை கைவிடுங்கள், வெறுப்பு மறைந்து விடும். உங்கள் பயமே நாட்டில் வெறுப்பை உண்டாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. அன்பு உள்ளவர்கள் ஒரு போதும் பயப்பட மாட்டார்கள், அஞ்சம் கொண்டவர்களால் நேசிக்க முடியாது. இதுவே எனது பாதயாத்திரையின் செய்தியும் கூட. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.
தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என ராகுல் காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
கடைசியாக குஜராத்தில் நடைபயணம் முடிவடைந்த நிலையில், நேற்று காலை மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.
இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்கு வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது.
அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.
இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ராவும் யாத்திரையில் இணைந்துள்ளார்.
- ராகுல் காந்தி நாளை மத்தியப் பிரதேசத்தில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.
- உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறை.
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.
தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என தற்போது குஜராத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
நேற்றுடன் குஜராத் பயணம் முடிவடைந்த நிலையில், ராகுல் காந்தி நாளை மத்தியப் பிரதேசத்தில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி நாளை மத்திய பிரதேசத்தில் நுழையும்போது பாதயாத்திரையில் பிரியங்கா காந்தி வத்ரா இணைந்துக் கொள்வார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறை.
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், " பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துகொண்டு தொடர்ந்து நான்கு நாட்கள் பங்கேற்பார்" என்றார்.
- அபிஜீத் வெளியிட்ட வீடியோவில், அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறார்.
- அபிஜீத் வெளியிட்ட 3-வது வீடியோவில், ‘செல்லம்... நாம சொர்க்கத்தில் சந்திப்போம்’ என்றும் கூறியிருக்கிறார்.
போபால் :
குஜராத்தை பூர்வீகமாக கொண்ட அபிஜீத் படிதார் என்ற வாலிபர், மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டான் நகரில் வசித்து வந்தார்.
எண்ணெய் மற்றும் சர்க்கரை தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், 'துரோகம் செய்யக்கூடாது' என்று அபிஜீத் கூறுகிறார். பின்னர், படுக்கையில் கிடக்கும் ஒரு உருவத்தின் மீது மூடப்பட்ட போர்வையை விலக்கிக்காண்பிக்கிறார். அதில், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு இளம்பெண் இறந்து கிடக்கிறார்.
அபிஜீத் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறார். மேலும் தனது காதலியான அப்பெண், தன்னுடைய தொழில் பங்குதாரரான ஜிதேந்திரகுமார் என்பவருடனும் உறவு வைத்திருந்திருக்கிறார். அவரிடம் ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். ஜிதேந்திரகுமார் சொன்னதன் பேரில்தான் நான் அவளை கொன்றேன் என்று கூறியிருக்கிறார்.
அபிஜீத் வெளியிட்ட 3-வது வீடியோவில், 'செல்லம்... நாம சொர்க்கத்தில் சந்திப்போம்' என்றும் கூறியிருக்கிறார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷில்பா ஜாரியா (வயது 22). அவரும் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அந்த பெண், ஜபல்பூரில் உள்ள ஒரு ரிசார்ட் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கொலை செய்ததாக கருதப்படும் அபிஜீத் தலைமறைவாகிவிட்டார். அவர் தான் கொலை செய்த காதலியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில்தான் முதலாவது வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அபிஜீத்தின் தொழில் பங்குதாரராக கருதப்படும் ஜிதேந்திரகுமாரையும், அவரது உதவியாளரான சுமித் படேல் என்பவரையும் பீகாரில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும், கொலையாளி அபிஜீத் பதுங்கியுள்ள இடத்தையும் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவரை மடக்கிப்பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளதாகவும் மத்தியபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம்.
- மற்றவர்கள் உரிமைக்காக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் பணியாற்றும் சூழலை நாம் உருவாக்க வேண்டும், அப்போதுதான் அவர்களின் முழு ஆற்றலை பயன்படுத்த முடியும். இந்தியா வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அதிக அளவில் பெண்களின் பங்களிப்பு அவசியமாகும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் அதிக அளவிலான பங்களிப்பு, பொருளாதாரம், சமுதாயம் மற்றும் நாட்டை வலுப்படுத்தும். பெண்கள் ஒருவொருக்கொருவர் ஊக்குவித்து, உதவி செய்து, மற்றவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம். வளர்ச்சியின் பல்வேறு திசைகளில் அவர்களை முன்னேற்ற இது உதவுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பழங்குடியின பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்கள், இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூலம் நுகர்வோரை சென்றடைவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நமது சகோதரிகளும், புதல்விகளும் தங்களது வாழ்வாதாரத்திற்காக உழைத்து பொருளாதார தன்னிறைவு அடைந்து வருகின்றனர். இதன் பயனாக ஊரக குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி நமது நாட்டு பெண்களின் முன்னேற்றத்திலேயே அடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தண்டவாளத்தின் நடுவில் தந்தை நிற்பதைக் கண்ட மகன் காப்பாற்ற ஓடியுள்ளார்.
- வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் நகர ரயில் நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஹரி சிங் நர்வாரியா(55). நேற்று தனது குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து விரக்தியில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக ரயில் பாதையில் நின்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த அவரது மகன் முன்னேஷ் (19), தண்டவாளத்தின் நடுவில் தனது தந்தை நிற்பதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். அவரைக் காப்பாற்ற டிராக்கில் அவர் ஓடியுள்ளார். ஆனால் விரைவாக வந்த ரயில் இருவரும் மீது மோதியது.
இதில் உடல் துண்டான நிலையில் தந்தையும் மகனும் உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மீனா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
- விவசாயிகளின் வருமானம் இருமடங்காக அதிகரிக்க பிரதமர் வலியுறுத்தல்,
- செலவைக் குறைத்து, வருமானத்தை அதிகரிப்பது அவசியம்.
மொரேனா:
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் நிறைவு நாளில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நமது நாட்டில் விவசாயம் முக்கிய தொழில். வேளாண்மையை நாம் வலுப்படுத்தினால், நாடும் வளமாகும். வேளாண் பொருளாதாரத்தில் பெரும் ஆற்றல் உள்ளது. ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும்போது, வேளாண் துறையே பாதுகாவலாக இருக்கும்.
முன்பு, வேளாண்மை சார்ந்த திட்டங்கள் உற்பத்தி சார்ந்ததாக இருந்தன. தற்போது அவை விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்பின், மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள் ஒன்று சேர்ந்து இந்தத் திசையில் பயணித்து வருகின்றனர்.
வேளாண்மைக்கு ஆகும் செலவைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது அவசியம். உற்பத்தி பொருட்களின் தரமும் மிகவும் உயர்தரத்துடன் இருப்பது அவசியமாகும். விவசாயத்துக்கு தண்ணீர் செலவு குறைக்கப்பட்டு, நுண்ணீர் பாசனத்துக்கு மாற வேண்டும்.
யூரியா, டி.ஏ.பி. உரங்களின் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். உயிரி உரம், நானோ யூரியா பயன்பாடு அதிகரிக்க வேண்டும். இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்பட வேண்டும். இயற்கை முறையில் உரத்தைத் தயாரித்தால், செலவு குறைவதுடன், ஆரோக்கியத்துக்கும் நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா தண்ணீரை பாதுகாப்பது குறித்து பேசினார்.
- தண்ணீர் வரி செலுத்துகிறோம், மின்சார வரி உள்பட மீதமுள்ள வரிகளை நீங்கள் தள்ளுபடி செய்யுங்கள்.
மத்திய பிரதேசம் மாநிலம், ரேவாவில் தண்ணீரைப் பாதுகாப்பது குறித்து ரேவா தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் (எம்பி) ஜனார்தன் மிஸ்ரா சர்ச்சைக்குறிய வினோதமான கருத்தை தெரிவித்துள்ளார்.
ரேவா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ் கபூர் ஆடிட்டோரியத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா தண்ணீரை பாதுகாப்பது குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒன்று குட்கா சாப்பிடுங்கள், மதுபானம் அருந்துங்கள், திண்ணரை முகருங்கள், சுலேசன் (ஒரு வகையான பிசின்) அல்லது அயோடெக்ஸ் என்று எது வேண்டும் என்றாலும் சாப்பிடுங்கள். ஆனால் தண்ணீரின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்.
எந்த அரசு தண்ணீர் வரியை தள்ளுபடி செய்வதாக அறிவிதாலும், நாங்கள் தண்ணீர் வரி செலுத்துகிறோம், மின்சார வரி உள்பட மீதமுள்ள வரிகளை நீங்கள் தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறுங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிஸ்ரா தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவது இது முதல் முறை அல்ல. அவர் செய்யும் எதிர்பாராத மற்றும் விசித்திரமான செயல்கள் மூலம் தலைப்புச் செய்தியில் தொடர்ந்து இடம் பெறுகிறார். சமீபத்தில், அவர் தனது கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
- விபத்தில் நசுங்கிய காரில் இருந்து மீதமுள்ள உடல்களை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பெதுல் என்ற இடத்தில் நேற்று இரவு கார் ஒன்று பேருந்து மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
11 தொழிலாளர்கள் மகாராஷ்டிராவின் அமராவதியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, குட்கான் மற்றும் பைஸ்தேஹி இடையே ஜல்லார் காவல் நிலையம் அருகே அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மீட்பு குழுவினரின் உதவியுடன் காரில் இருந்து ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்தில் நசுங்கிய காரில் இருந்து மீதமுள்ள உடல்களை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருவதாக பெதுல் உயர் போலீஸ் அதிகாரி சிமலா பிரசாத் கூறினார்.
மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டியபோது டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- நோயுற்ற உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து
- தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள குவாலியர்- மொரேனா சாலையில் கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குவாலியர் பகுதியில் இருந்து நோயுற்ற உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு மொரேனாவில் உள்ள பித்தோலி கிராமத்திற்கு காரில் 8 பேர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சம்பவ இடத்தில் இருந்து தப்பிய லாரி ஓட்டுனரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






