என் மலர்tooltip icon

    டெல்லி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்
    • கைது செய்யப்பட்டாலும், டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அமலாக்கத்துறை காவல் முடிவடைவதை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    கைது செய்யப்பட்டாலும், டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும், நீதிமன்றம் எவ்வாறு, இதில் தலையிட முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. 

    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அடுத்த மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.
    • இதில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நீரை பெற, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றையே ஒவ்வொரு முறையும் தமிழகம் நாட வேண்டியுள்ளது.

    இந்த அமைப்புகள் கூடும் கூட்டத்தில் தமிழகம் தனக்கு தேவையான, உரிமையுள்ள தண்ணீரை தர கர்நாடகத்தை வலியுறுத்துமாறு கேட்பதும், அதனை பரிசீலனை செய்து, அதன்பேரில் ஒரு முடிவு எடுத்து குறிப்பிட்ட அளவு நீரை திறக்க கர்நாடகத்தை அந்த அமைப்புகள் வலியுறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூட உள்ளது. இது 29-வது கூட்டம் ஆகும். இந்தக் கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பெங்களூரு குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வேண்டும் என கர்நாடக கோரிக்கை விடுத்து வருகிறது.

    இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகளுக்கு ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டது.
    • நிதியாண்டு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளதால், அதே தேதியில் இந்த அரசாணை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு வழங்கும் தின கூலியை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டது.

    நிதியாண்டு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளதால், அதே தேதியில் இந்த அரசாணை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    தமிழ்நாட்டிற்கு 8.5 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.319 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 27 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரிக்கும் 319 ரூபாய் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊதியம் உயர்த்தப்பட்ட மாநிலங்களில் அதிகபட்சமாக அரியானாவில் 374 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக அருணாச்சல பிரதேசத்தில் 234 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது.

    • அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு துணிச்சலான தேசபக்தர். உண்மையான நபர்.
    • டெல்லி முதல்-மந்திரியின் உடல்நலம் மற்றும் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.அமலாக்கத்துறை காவல் முடிவடைவதை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    அப்போது அவர் இந்த வழக்கின் உண்மைகளையும், ஆதாரங்களையும் கோர்ட்டில் வெளியிடுவார் என அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    அமலாக்கத்துறை காவலில் இருக்கும் கெஜ்ரிவாலை நான் சந்தித்தபோது, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்த 2 நாட்களாக 250-க்கு மேற்பட்ட முறை சோதனை நடத்தியும் ஒரு பைசாவை கூட கண்டுபிடிக்கவில்லை என அவர் என்னிடம் கூறினார்.

    ஆம் ஆத்மி தலைவர்கள் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியும் எந்த பணமும் கிடைக்கவில்லை.

    எங்கள் (முதல்-மந்திரி வீடு) இடத்தில் இருந்து வெறும் ரூ.73 ஆயிரம் மட்டுமே கண்டுபிடித்தனர். மதுபான கொள்கை ஊழல் பணம் எங்கே?

    இந்த வழக்கில் உண்மைகளை 28-ந்தேதி (இன்று) கோர்ட்டில் வெளியிடுவேன் என்றும், ஆதாரங்களை சமர்ப்பிப்பேன் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு துணிச்சலான தேசபக்தர். உண்மையான நபர். அவர் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தபோதிலும் அவரது மனஉறுதி மிகவும் வலுவானது.

    அமலாக்கத்துறை காவலில் இருந்துகொண்டே மாநில நீர்வளத்துறை மந்திரி அதிஷிக்கு எனது கணவர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால் மத்திய அரசு இதை பிரச்சனை ஆக்குகிறது. டெல்லியை அழிக்க அவர்கள் நினைக்கிறார்களா?

    இந்த விவகாரத்தில் எனது கணவர் மிகுந்த வருத்தம் அடைந்தார்.

    டெல்லி முதல்-மந்திரியின் உடல்நலம் மற்றும் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

    இவ்வாறு சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    அமலாக்கத்துறை காவலில் இருக்கும் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவாலுக்கு ஒருகட்டத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு 46 மி.கி. அளவுக்கு குறைந்ததாகவும், இது மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் கூறியிருப்பதாகவும் கட்சித்தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் டெல்லி சட்டசபையில் நேற்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக கெஜ்ரிவாலை விடுதலை செய்ய வலியுறுத்தி சட்டசபைக்கு வெளியே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். இதில் மந்திரிகள் அதிஷி, சவுராப் பரத்வாஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    அப்போது அதிஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முதல்-மந்திரி கெஜ்ரிவால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதை எதிர்த்து இன்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். நாட்டில் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. நாட்டிலேயே முதல் முறையாக முதல்-மந்திரி ஒருவர் அதுவும் பொதுத்தேர்தலுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருக்கிறார்' என குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே அமலாக்கத்துறை காவலில் இருந்து கெஜ்ரிவால் உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு துணைநிலை கவர்னர் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'சிறையில் இருந்துகொண்டு ஆட்சி நடத்தப்படாது என்று டெல்லி மக்களுக்கு என்னால் உறுதியளிக்க முடியும்' என கூறினார்.

    • ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.
    • போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது:-

    பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நன்றாக சந்தித்து விட்டு, பின்னர் திரும்பிச் சென்று ஒருவேளை இல்லை என பதில் அளித்தேன். போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.

    நீங்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களா? இந்த மதத்தில் இருந்து வந்தவரா? இங்கிருந்து வந்தீர்களா? போன்ற வெற்றிக்கான அளவுகோல்களின் கேள்வியாக இருக்கும். இதையெல்லாம் செய்ய நம்மால் முடியும் என்று நான் நினைக்கவில்லை.

    என்னுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டதற்காக நான் நன்றியுள்ளவராக உள்ளேன். ஆகவே, நான் போட்டியிடவில்லை." என்றார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    • ஆபத்தான அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்பார்த்ததை விட உடல் நலனில் முன்னேற்றம்.
    • சத்குருவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவுக்கு ஈஷா நன்றி.

    கோவை ஈஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்.

    மகா சிவராத்திரி மற்றும் பிற கூட்டங்களில் கலந்துக் கொண்ட சத்குரு, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமயைில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சத்குருவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து, சத்குரு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

    ஆபத்தான அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்பார்த்ததை விட உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, சத்குரு இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    சத்குருவை நேரில் சந்தித்த தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி நலம் விசாரித்தார்.

    சத்குருவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவுக்கு ஈஷா அறக்கட்டளை நன்றி தெரிவித்தது.

    • ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப்பெற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
    • ஜம்மு-காஷ்மீர் சட்டம்-ஒழுங்கை அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் சட்டம், இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு குறித்து ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த குலிஸ்தான செய்தி நிறுவனத்த்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப்பெற நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீர் சட்டம்-ஒழுங்கை அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். என்கவுண்டரின்போது ஜம்மு-காஷ்மீர் போலீசாரை முன்னிறுத்தி அவர்களை வலுப்படுத்தி வருகிறோம். மெதுமெதுவாக துருப்புகளை திரும்ப பெறப்படும். இதற்கான திட்டம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் ப்ளூ பிரின்ட் உருவாக்கியுள்ளோம்.

    ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரம் சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து நிச்சயமாக பரிசீலனை செய்வோம். அங்குள்ள சூழ்நிலை சஜக நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த பரிந்துரையை விரைவாக பரிசீலனை செய்வோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி எக்ஸ் பக்கத்தில் "பிடிபி கட்சி படிப்படியாக துருப்புகளை திரும்ப பெற வேண்டும். அதேவேளையில் ஆயுதப்படை சிறப்பு பிரிவு சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். எங்களது திட்டத்தின் ஒரு பகுதியாக இது முக்கியத்துவம் பெறப்பட்டிருந்தது. தற்போது பா.ஜனதா முழு மனதோடு இதை ஏற்றுக்கொண்டுள்ளது" என்றார்.

    • டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
    • ஏழு நாள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அவரை ஏழு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

    அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் "இந்தியா ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான நிலைகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம்.

    குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மற்ற நபர்களை போலவே, கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர். இதில் அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை சார்பில், "அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக நாங்கள் காண்காணித்து வருகிறோம். நியாயமான மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சட்ட செயல்முறை ஆகியவற்றை டெல்லி அரசு உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செயல் துணை தலைவர் குளோரியா பெர்பெனாவுக்கு நேரில் ஆஜராகுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

    அதனைத் தொடர்ந்து அவர் நேரில் ஆஜரானார். சுமார் 40 நிமிடங்கள் அவரிடம் விளக்கம் கேட்ட அமைச்சகம், இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. இது ஆரோக்கியமற்ற முன்னுதாரணம் மற்றும் தேவையற்றது எனத் தெரிவித்துள்ளது.

    • வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நாட்டில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்கிடையே, ஒரு சில மாநிலங்களில் இதைத்தேர்தல்களும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மும்பை உயர் நீதிமன்றத்தின் (நாக்பூரில் உள்ள பெஞ்ச்) வழிகாட்டுதலின்படி, மகாராஷ்டிராவின் 30-அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
    • 28-ந்தேதி (நாளை) வரை அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ந்தேதி கைது செய்தது. அவரை 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே கைதை எதிர்த்தும், அமலாக்கத்துறை காவலில் வைத்துள்ளது சட்டவிரோதம் என்றும், உடனடியாக விடுதலை செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கு இன்று காலை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அமலாக்கத்துறையின் காவல் நாளையுடன் முடியும் நிலையில் இன்றே உத்தரவு பிறப்பிக்க முதல்-மந்திரி கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கை விடுத்தது.

    அமலாக்கத்துறை தரப்பு கூறும்போது, கெஜ்ரிவாலின் மனுவின் நகல் நேற்றுதான் கிடைத்தது. எனவே விரிவான பதில் அளிக்க 3 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.

    இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக இடைக்கால நிவாரணம் வழங்க வழக்கை முன் கூட்டியே விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    • சாதாரண பெண்ணான ரேகா பத்ரா அங்கே தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
    • தேர்தல் கமிஷன் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தும் என நீங்கள் உறுதியளித்து இருக்கிறீர்கள்.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், ஷாஜகான் ஷேக்.

    இவரும், இவரது ஆதரவாளர்களும் சேர்ந்து அங்குள்ள பெண்களின் நிலங்களை ஆக்கிரமித்ததாகவும், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக அந்த பெண்கள் பல நாட்கள் அங்கு தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    இந்த நிலையில் சந்தேஷ்காலியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரான ரேகா பத்ராவை, சந்தேஷ்காலியை உள்ளடக்கிய பசிரத் தொகுதியின் வேட்பாளராக பா.ஜனதா களமிறக்கி இருக்கிறது. சாதாரண பெண்ணான ரேகா பத்ராவும் அங்கே தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

    அவரை பிரதமர் மோடி நேற்று திடீரென தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம் தேர்தல் பிரசாரத்துக்கான தயார் நிலை, மக்களிடம் பா.ஜனதாவுக்கு இருக்கும் செல்வாக்கு உள்ளிட்ட விஷயங்களை கேட்டறிந்தார்.

    அப்போது ரேகா பத்ரா பிரதமர் மோடியிடம் கூறியதாவது:-

    இங்குள்ள சூழல் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஓட்டு போடாமல் இருந்து வந்தேன். ஆனால் தேர்தல் கமிஷன் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தும் என நீங்கள் உறுதியளித்து இருக்கிறீர்கள்.

    நீங்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பதால் சிறப்பாக உணர்கிறேன். எங்களுடன் இருக்கும் ராமபிரான்தான் நீங்கள்.

    நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் முதலில் என்னை எதிர்த்தனர். ஆனால் தற்போது எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எனக்கு யாருடனும் பகை இல்லை.

    நான் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். எனது கணவர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பணி செய்து வருகிறார். இனிமேல் யாரும் வேலைக்காக இவ்வளவு தூரம் செல்லாமல் இருக்கும் வகையில் ஏதாவது செய்வேன். அவர்களுக்கு இங்கேயே வேலை கிடைக்கும்.

    இவ்வாறு ரேகா பத்ரா கூறினார்.

    அப்போது மோடி அவரிடம், 'சந்தேஷ்காலியில் நீங்கள் போராடினீர்கள். நீங்கள்தான் சக்தியின் வடிவம்' என பாராட்டினார். மேலும் அவர், 'மக்கள் மத்தியில் பணியாற்றுங்கள். திரிணாமுல் காங்கிரஸ் அரசு மக்களுக்கு எதிராக எப்படி பிரச்சனைகளை உருவாக்குகிறது என்ற செய்தியை அவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள். மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்த அவர்கள் அனுமதிக்காமல், ஊழலில் ஈடுபடுவதையும், திட்டங்களின் பெயர்களை மாற்றுவதையும் மக்களிடம் சொல்லுங்கள்' என்றும் அறிவுறுத்தினார்.

    • டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல்.
    • அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்து வருகிறார்.

    முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, டெல்லி சட்டசபை கூட்டம் முதல் முறையாக இன்று நடைபெற இருக்கிறது. மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்கப்படுகிறார்.

    கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. இந்த மனுவை நீதிபதி ஸ்வர்ன காந்த சர்மா விசாரிக்கிறார்.

    கைது செய்யப்பட்ட நிலையிலும், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்து வருகிறார். அந்த வகையில், டெல்லியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு சூழல் நிலவுவது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் நடத்த சுகாதார துறை அமைச்சருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சுகாதார துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் டெல்லி சட்டசபை இன்று கூடுவதாக அறிவித்துள்ளார்.

    இன்றைய கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் இலவச பரிசோதனை மற்றும் மருந்துகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பார். மேலும் மருத்துவமனைகளில் கையிருப்பு எவ்வளவு மருந்துகள் உள்ளன என்ற விவரங்களையும் அவர் தாக்கல் செய்ய இருக்கிறார்.

    தான் கைது செய்யப்பட்ட நிலையிலும், டெல்லி மக்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியாக இருப்பதாக அமைச்சர் பர்தவாஜ் தெரிவித்தார். மேலும், டெல்லியில் மருத்து கையிருப்பு, மருத்துவமனைகளில் நடத்தப்படும் இலவச பரிசோதனைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், குறைகள் இருப்பின் அவற்றை எதிர்கொள்வதற்கான திட்டமிடல்களை தயார்படுத்த தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ×