என் மலர்
நீங்கள் தேடியது "Rekha Patra"
- சாதாரண பெண்ணான ரேகா பத்ரா அங்கே தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
- தேர்தல் கமிஷன் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தும் என நீங்கள் உறுதியளித்து இருக்கிறீர்கள்.
புதுடெல்லி:
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், ஷாஜகான் ஷேக்.
இவரும், இவரது ஆதரவாளர்களும் சேர்ந்து அங்குள்ள பெண்களின் நிலங்களை ஆக்கிரமித்ததாகவும், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அந்த பெண்கள் பல நாட்கள் அங்கு தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் சந்தேஷ்காலியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரான ரேகா பத்ராவை, சந்தேஷ்காலியை உள்ளடக்கிய பசிரத் தொகுதியின் வேட்பாளராக பா.ஜனதா களமிறக்கி இருக்கிறது. சாதாரண பெண்ணான ரேகா பத்ராவும் அங்கே தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
அவரை பிரதமர் மோடி நேற்று திடீரென தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம் தேர்தல் பிரசாரத்துக்கான தயார் நிலை, மக்களிடம் பா.ஜனதாவுக்கு இருக்கும் செல்வாக்கு உள்ளிட்ட விஷயங்களை கேட்டறிந்தார்.
அப்போது ரேகா பத்ரா பிரதமர் மோடியிடம் கூறியதாவது:-
இங்குள்ள சூழல் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஓட்டு போடாமல் இருந்து வந்தேன். ஆனால் தேர்தல் கமிஷன் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தும் என நீங்கள் உறுதியளித்து இருக்கிறீர்கள்.
நீங்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பதால் சிறப்பாக உணர்கிறேன். எங்களுடன் இருக்கும் ராமபிரான்தான் நீங்கள்.
நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் முதலில் என்னை எதிர்த்தனர். ஆனால் தற்போது எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எனக்கு யாருடனும் பகை இல்லை.
நான் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். எனது கணவர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பணி செய்து வருகிறார். இனிமேல் யாரும் வேலைக்காக இவ்வளவு தூரம் செல்லாமல் இருக்கும் வகையில் ஏதாவது செய்வேன். அவர்களுக்கு இங்கேயே வேலை கிடைக்கும்.
இவ்வாறு ரேகா பத்ரா கூறினார்.
அப்போது மோடி அவரிடம், 'சந்தேஷ்காலியில் நீங்கள் போராடினீர்கள். நீங்கள்தான் சக்தியின் வடிவம்' என பாராட்டினார். மேலும் அவர், 'மக்கள் மத்தியில் பணியாற்றுங்கள். திரிணாமுல் காங்கிரஸ் அரசு மக்களுக்கு எதிராக எப்படி பிரச்சனைகளை உருவாக்குகிறது என்ற செய்தியை அவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள். மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்த அவர்கள் அனுமதிக்காமல், ஊழலில் ஈடுபடுவதையும், திட்டங்களின் பெயர்களை மாற்றுவதையும் மக்களிடம் சொல்லுங்கள்' என்றும் அறிவுறுத்தினார்.






