என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • வாட்ஸ் அப் குழுவில் அதே பகுதியை சேர்ந்த ரசாக், அகமது மற்றும் ஜாவேத் இருந்தனர்.
    • ரசாக், அகமது, ஜாவேத் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், காந்தி வேட்டாவை சேர்ந்தவர் பீம் தாஸ். இவர் அதே பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி நடத்தி வருகிறார். மேலும் இவர் உள்ளூர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார்.

    இவரது வாட்ஸ் அப் குழுவில் அதே பகுதியை சேர்ந்த ரசாக், அகமது மற்றும் ஜாவேத் இருந்தனர். இவர்கள் பீம்தாஸ் வாட்ஸ் அப் குழுவில் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் புதிய வாக்குறுதிகள் எதையும் அளிக்காமல் இஸ்லாமியர்களை ஏமாற்றி வருவதாக பதிவு செய்தனர்.

    இதனைக் கண்ட பீம் தாஸ் அவர்களை வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கினார்.

    இதனைக் கண்ட 3 பேரும் ஆத்திரமடைந்து பீம் தாஸ் வீட்டிற்கு சென்று ஏன் வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கினீர்கள் என்றால் தட்டி கேட்டனர்.

    இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. பீம் தாஸ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து 3 பேரையும் வயிற்றில் சரமாரியாக குத்தினார். அவர்களும் பீம் தாசை தாக்கினர். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பன்ஸ்வாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நிஜமாபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து ரசாக், அகமது, ஜாவேத் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பீம் தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் தன்னை துன்புறுத்தி வருவதாக சிரஞ்சீவியிடம் உமா தெரிவித்தார்
    • கணவர் காணாமல் போனதாக எலமஞ்சி போலீசில் உமா புகார் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், எஸ் ராயவரத்தை சேர்ந்தவர் கொண்டல ராவ் (வயது 49). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் காக்கிநாடாவில் பெண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ், பேக் உள்ளிட்டவை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிரஞ்சீவி கடைக்கு சென்ற உமாவுக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. கணவரிடம் சிரஞ்சீவி தனது தூரத்து உறவினர் என அறிமுகம் செய்து வைத்தார்.

    சிரஞ்சீவியும் உமாவும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கொண்டல ராவுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கொண்டல ராவ் மனைவியை துன்புறுத்தி வந்தார்.

    கணவர் தன்னை துன்புறுத்தி வருவதாக சிரஞ்சீவியிடம் உமா தெரிவித்தார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று கொண்டலராவை காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி காரில் அழைத்துச் சென்றார்.

    சிகிச்சை முடிந்து மறுநாள் இரவு காரில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். ராகில கொத்தூர் என்ற இடத்தில் வந்தபோது தயாராக இருந்த சிரஞ்சீவி மற்றும் அவரது நண்பர் சைதுர்கா ஆகியோர் காரை நிறுத்தினர். அவர்களுடன் உமாவும் சேர்ந்து கொண்டலராவை கழுத்து இறுக்கி கொலை செய்தனர்.

    பின்னர் ராவுல பாலம் அருகே உள்ள கோதாவரி ஆற்றில் கொண்டலராவின் பிணத்தை வீசினர். கணவர் காணாமல் போனதாக எலமஞ்சி போலீசில் உமா புகார் செய்தார்.

    கொண்டலராவின் உறவினர்கள் உமா, சிரஞ்சீவி என்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தனர். போலீசார் சிரஞ்சீவியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிரஞ்சீவி கொண்டலராவை அவரது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து உமா, அவரது கள்ளக்காதலன் சிரஞ்சீவி, அவரது நண்பர் சைதுர்கா ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.
    • சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). சாப்ட்வேர் என்ஜினீயரான ஜோதி குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா இடையான உலக கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியை தனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு வருவதை கண்டு சோர்ந்து போனார். கடைசியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரது நண்பர்கள் ஜோதி குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிர் இழந்ததாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு புஷ்பார்ச்சனை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் இரவு புஷ்ப யாகத்துக்கான அங்குரார்ப்பணம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக வசந்த மண்டபத்தில் சேனாதிபதி உற்சவம், மிருதங்கரஹணம், ஆஸ்தானம் மற்றும் யாக சாலையில் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடந்தது.

    இந்தநிலையில் நேற்று மதியம் பூந்தோட்ட அலுவலகத்தில் பல்வேறு வகையான மலர்களை தனித்தனியாக சேகரித்து, கூடைகளில் நிரப்பப்பட்டன. அந்த மலர்களுக்கு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி சிறப்புப்பூஜைகள் செய்தார். பூஜைகள் முடிந்துதும் பூந்தோட்ட அலுவலகத்தில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

    அப்போது தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி பேசுகையில், மொத்தம் 8 டன் எடையிலான 17 வகையான மலர்கள் மற்றும் இலைகளால் மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    அதில் 4 டன் மலர்கள் தமிழகத்தில் இருந்தும், தலா 2 டன் மலர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்தும் வந்தன. முன்னதாக காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது, என்றார்.

    புஷ்ப யாகத்தில் கோவில் துணை அதிகாரி லோகநாதம், தோட்டக்கலைத்துறை இயக்குனர் சீனிவாசலு, பறக்கும் படை அதிகாரி நந்தகிஷோர், பேஷ்கார் ஸ்ரீஹரி, பார்பதீடர் உமா மகேஸ்வரரெட்டி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சானூர்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்தது. அதையொட்டி நடந்த நித்ய கைங்கர்யங்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் அல்லாதவர்கள் மற்றும் பக்தர்கள் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், தேன், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு பல்வேறு மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

    கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 3 டன் எடையிலான பல்வேறு அலங்கார, பாரம்பரிய மலர்களால் புஷ்ப யாக மகோற்சவம் நடத்தப்பட்டது. அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

    • படகில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா எனவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், 50க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளது. மேலும், படகில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா எனவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு பணி துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • புஷ்கரணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி:

    திருச்சானூர் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று காலை பஞ்சமி தீர்த்தம், இரவு கொடியிறக்கம் நடந்தது. பத்ம சரோவரம் புஷ்கரணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை உற்சவர் பத்மாவதி தாயார் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கோவிலில் இருந்து உற்சவர்களான பத்மாவதி தாயார், சுதர்சன சக்கரத்தாழ்வார் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக பஞ்சமி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சிக்காக அந்த மண்டபம் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் ஒரு டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த அலங்காரம் பக்தர்களை கவர்ந்தது.

    உற்சவர்களான பத்மாவதி தாயார், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. திருமஞ்சனம் முடிந்ததும் துளசி, ஏலக்காய் மாலைகள், பல வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தைப் பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    மதியம் 12 மணியில் இருந்து 12.10 மணி வரை உற்சவர்களான பத்மாவதி தாயார், சுதர்சன சக்ரத்தாழ்வாருக்கு சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது அர்ச்சகர்கள் சுதர்சன சக்கரத்தாழ்வாரை பத்ம சரோவரம் புஷ்கரணிக்கு எடுத்துச் சென்று 3 முறை நீரில் மூழ்கி எடுத்தனர். அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனக் கோஷமிட்டு 3 முறை நீரில் மூழ்கி புனித நீராடினர்.

     இரவு தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு கொடியிறக்கத்துக்கான நிகழ்ச்சிகள் நடந்தது. கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடக்க நாளில் கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கொடியை இரவு இறக்கியதும் 9 நாட்கள் நடந்து வந்த வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை புஷ்ப யாகம் நடக்கிறது.

    • பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று பஞ்சமி தீர்த்தம் நடந்தது.
    • திருமஞ்சனத்தின்போது உற்சவருக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. அதையொட்டி நேற்று பஞ்சமி தீர்த்தம் நடந்தது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் தனது தெய்வீக மனைவியான பத்மாவதிக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் 5 கிலோ எடையிலான தங்க ஆபரணங்கள் மற்றும் பட்டு வஸ்திரத்தை வழங்கினார்.

    அந்த ஆபரணங்கள் மற்றும் பட்டு வஸ்திரம் திருமலையில் இருந்து திருச்சானூருக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு திருச்சானூர் கோவிலை அடைந்ததும், பஞ்சமி மண்டபத்தில் உள்ள பத்மாவதி தாயாரை வழிபடும் முன் அர்ச்சகர்கள் தங்க ஆபரணங்கள் மற்றும் பட்டு வஸ்திரத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்தனர். திருமஞ்சனத்தின்போது உற்சவருக்கு அந்த தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் பூமண. கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ, தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி , சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரிகள் சதாபார்கவி, வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாலாசா ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில் காதல் ஜோடி இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
    • ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் ஷேரிங் தாஹி செப்ரா. இவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சனா ராய் என்பவரும் காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இரு வீட்டாரின் பெற்றோரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

    நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம், பாலாசா ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்குள்ள 3-வது பிளாட்பாரத்தில் காதல் ஜோடி இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து பாலாசா நோக்கி சரக்கு ரெயில் வந்து கொண்டு இருந்தது. காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி ரெயில் முன்பாக திடீரென பாய்ந்தனர். ரெயில் அவர்களது உடல் மீது ஏறி இறங்கியதில் உடல்கள் சிதறி சம்பவ இடத்திலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டை மூலம் காதல் ஜோடி யார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, பீர் இதில் எதை மதுப்பிரியர்கள் அதிகம் வாங்குகின்றனர் என கணக்கெடுக்கப்பட்டது.
    • விற்பனையாகாத மதுபானங்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியான உடன் தனியாரிடம் இருந்த மதுபான கடைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

    கடந்த 4½ ஆண்டுகளில் ஆந்திர அரசுக்கு ரூ.1.10 லட்சம் கோடி மது விற்பனை மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

    இந்நிலையில் ஆந்திர அரசு மதுபான விற்பனையை அதிகரிக்க என்ன செய்யலாம் என பல்வேறு கோணங்களில் ஆலோசித்தது.

    மேலும் மதுபான விற்பனை குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். எந்த வகையான ஆல்கஹால் குடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, பீர் இதில் எதை மதுப்பிரியர்கள் அதிகம் வாங்குகின்றனர் என கணக்கெடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மதுபானங்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் 40 வரையிலும் புல் பாட்டிலுக்கு ரூ.10 முதல் 90 வரையிலும் உயர்ந்துள்ளது.

    சிலவகை மதுபானங்களின் வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதிகமாக விற்பனையாகும் மதுபாட்டில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விற்பனையாகாத மதுபானங்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அரசுக்கு பெரும் வருமானம் கிடைக்கும் விற்பனை அளவு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

    • மாணவர்கள் விடுதியில் படுக்கைக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் படுக்கைக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். இதையடுத்து பாம்பை மீண்டும் காட்டுக்குள் விட்டனர்.

    • தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க எண்ணெய் சட்டியில் கையை விட தயார் என கங்கம்மா ஒப்புக்கொண்டார்.
    • தொடர்ந்து பெண் அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தேன் பள்ளி பஞ்சாயத்து எஸ்.டி.காலனியைச் சேர்ந்தவர் குண்டய்யா. இவருடைய மனைவி கங்கம்மா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    கங்கம்மாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் தகாத உறவு இருப்பதாக குண்டய்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குண்டய்யா அந்த ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தார். இது சம்பந்தமாக அந்த கிராமத்தில் பஞ்சாயத்து கூடியது.

    அப்போது கங்கம்மா கொதிக்கும் எண்ணெயில் கையை விட வேண்டும். அவரது கையில் காயம் ஏற்பட்டால் நடத்தையில் தவறு இருப்பது உறுதி செய்யப்படும்.

    கையில் காயம் ஏற்படாமல் நன்றாக இருந்தால் அவர் பத்தினி குற்றமற்றவர் என்பதை ஒப்புக்கொள்வோம் என பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறினர்.

    இதனைக் கேட்டதும் கங்கம்மா அதிர்ந்து போனார். இது போன்ற விபரீத சோதனை வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். ஆனாலும் கண்டிப்பாக எண்ணெய் சட்டியில் கைவிட வேண்டும் என அவரை சித்ரவதை செய்தனர்.

    இதனை தொடர்ந்து தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க எண்ணெய் சட்டியில் கையை விட தயார் என கங்கம்மா ஒப்புக்கொண்டார்.

    தொடர்ந்து பஞ்சாயத்து நடந்த இடத்தில் எண்ணெய் நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்தனர். சட்டியில் வைத்து பஞ்சாயத்து முன்னிலையில் கொண்டு வந்து வைத்தனர். இதற்கிடையே அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து சமூக நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிருந்து பதறிப் போன சமூகநல அதிகாரி கவுரி என்பவர் சம்பவ இடத்திற்கு வந்தார்.

    கங்கம்மா எண்ணெய் சட்டியில் கைவிடுவதற்காக சென்றார். அந்த நேரத்தில் வந்த அதிகாரி கவுரி அதனை தடுத்து நிறுத்தினார்.

    இது போன்ற செயலில் ஈடுபடுவது தவறு என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவரது பேச்சை மதிக்காத கிராம மக்கள் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து பெண் அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் குண்டய்யா மற்றும் அவரது மனைவி கங்கம்மாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • திருப்பதியில் நேற்று 67,140 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,870 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
    • நேரடி இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    புஷ்ப யாகத்தின்போது கோவிலில் ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி உற்சவர்களுக்கு சம்பங்கி மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

    இதில் பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

    நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.

    இதற்காக 7 டன் வரை பலவிதமான பூக்கள் கொண்டுவரப்படுகிறது. மாலையில் சகஸ்ரதீப அலங்கார சேவை முடிந்து ஏழுமலையான் கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

    இதையொட்டி இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது.

    இன்று சகஸ்ரதீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பஞ்சமி தீர்த்தத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது.

    மேலும், புஷ்ப யாகத்தையொட்டி நாளை (ஞாயிறு) கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளது. தோமாலை மற்றும் அர்ச்சனை சேவைகள் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 67,140 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,870 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ.4.01 கோடி வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ×