search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரம்மோற்சம் நிறைவு: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பஞ்சமி தீர்த்தம்
    X

    பிரம்மோற்சம் நிறைவு: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பஞ்சமி தீர்த்தம்

    • புஷ்கரணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி:

    திருச்சானூர் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று காலை பஞ்சமி தீர்த்தம், இரவு கொடியிறக்கம் நடந்தது. பத்ம சரோவரம் புஷ்கரணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை உற்சவர் பத்மாவதி தாயார் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கோவிலில் இருந்து உற்சவர்களான பத்மாவதி தாயார், சுதர்சன சக்கரத்தாழ்வார் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக பஞ்சமி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சிக்காக அந்த மண்டபம் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் ஒரு டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த அலங்காரம் பக்தர்களை கவர்ந்தது.

    உற்சவர்களான பத்மாவதி தாயார், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. திருமஞ்சனம் முடிந்ததும் துளசி, ஏலக்காய் மாலைகள், பல வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தைப் பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    மதியம் 12 மணியில் இருந்து 12.10 மணி வரை உற்சவர்களான பத்மாவதி தாயார், சுதர்சன சக்ரத்தாழ்வாருக்கு சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது அர்ச்சகர்கள் சுதர்சன சக்கரத்தாழ்வாரை பத்ம சரோவரம் புஷ்கரணிக்கு எடுத்துச் சென்று 3 முறை நீரில் மூழ்கி எடுத்தனர். அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனக் கோஷமிட்டு 3 முறை நீரில் மூழ்கி புனித நீராடினர்.

    இரவு தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு கொடியிறக்கத்துக்கான நிகழ்ச்சிகள் நடந்தது. கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடக்க நாளில் கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கொடியை இரவு இறக்கியதும் 9 நாட்கள் நடந்து வந்த வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை புஷ்ப யாகம் நடக்கிறது.

    Next Story
    ×