என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • சிறப்பு பூஜைகள் செய்து திருமணம் செய்து வைத்தனர்.
    • பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிப்போனது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து.

    இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். விஜயவாடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளதால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கருகி நாசமானது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சத்ய சாய் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் ஆறுகள், ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. காரிப் பருவத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிப்போனது.


    இந்த நிலையில் வருண பகவானை மகிழ்விப்பதற்காக 2 கழுதைகளை குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம், மாலை யிட்டு, பட்டாசு வெடித்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    மேலும் கோவில் வளாகத்தில் வைத்து கழுதைகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து திருமணம் செய்து வைத்தனர்.

    இதனால் வருண பகவான் மனம் குளிர்ந்து மழை தருவார் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • தேருக்கு தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
    • தேர் நிறுத்துவதில் ஏற்பட்ட பகையின் காரணமாக தேர் எரிக்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ஹனகனஹால் கிராமத்தில் ராமர் கோவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக மரத்திலான தேர் செய்யப்பட்டது.

    தேரை நிறுத்துவது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் கோவிலுக்கு அருகிலேயே கொட்டகை அமைத்து தேர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் தேர் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த தேருக்கு தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

    அதிகாலையில் தேர் தீப்பிடித்து ஏறிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் தேரின் ஒரு பகுதி முழுவதும் எரிந்து நாசமானது.

    இது குறித்து தகவல் இருந்த அனந்தபூர் கலெக்டர் வினோத்குமார், போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

    விசாரணையில் தேர் நிறுத்துவதில் ஏற்பட்ட பகையின் காரணமாக தேர் எரிக்கப்பட்டது தெரியவந்தது.

    சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்.
    • இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே விரும்பினேன்.

    சினிமா சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கூறினார்.

    இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார். இந்த நிலையில், நடிகர் கார்த்திக்கு பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்தார்.



    இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "உங்கள் அன்பான உணர்வையும் விரைவான பதிலையும், எங்கள் மரபுகளுக்கு நீங்கள் காட்டிய மரியாதையை நான் மனதாரப் பாராட்டுகிறேன். திருப்பதி மற்றும் அதன் உயர்வான லட்டுகள் போன்ற நமது புனிதத்தன்மை பற்றிய விஷயங்கள் கோடிக் கணக்கான பக்தர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகளை கொண்டுள்ளன. மேலும் இதுபோன்ற தலைப்புகளை நாம் அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்."

    "எந்த நோக்கமும் இல்லாமல் இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே விரும்பினேன். மேலும் நிலைமை தற்செயலாக இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். பொது நபர்களாக நாம் ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்ப்பது மற்றும் நமது கலாச்சாரம், ஆன்மீக விஷயங்களுக்கு மரியாதை அளிப்பது நம் பொறுப்பு. சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில் இந்த விஷயங்களை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம்."

    "அர்ப்பணிப்பும் திறமையும் கொண்டு சினிமாவை வளப்படுத்தி வரும் நடிகர்களாக உங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும், சூர்யாவுக்கும், ஜோதிகா மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் குழுவினர் அனைவருக்கும் மெய்யழகன்/ சத்யம் சுந்தரம் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். இந்தப் படம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • லட்டு கவுண்டர்களில் வழக்கம் போல் பக்தர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் லட்டுளை வாங்கிச் சென்றனர்.
    • தினமும் சராசரியாக 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

    இதனால் ஏழுமலையான் கோவிலில் நேற்று மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.

    பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வழக்கம் போல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என அறிவித்தனர்.

    லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டுக்களை வாங்கி செல்கின்றனர். லட்டு கவுண்டர்களில் வழக்கம் போல் பக்தர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் லட்டுளை வாங்கிச் சென்றனர்.

    இந்நிலையில், கடந்த 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை சுமார் 14 லட்சம் திருப்பதி லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    செப்டம்பர் 19 அன்று மொத்தம் 3.59 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 20 அன்று 3.17 லட்சமும், செப்டம்பர் 21 அன்று 3.67 லட்சமும், செப்டம்பர் 22 அன்று 3.60 லட்சமும் விற்பனையாகியுள்ளன. தினமும் சராசரியாக 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகின்றன.

    • உறவினர்களுக்குக் கொடுப்பதற்காக அங்கிருந்து லட்டு பிரசாதம் வாங்கி வந்துள்ளார்.
    • புகையிலை பொருட்கள் உதிருவதாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் திருப்பதி லட்டில் குட்கா புகையிலை பொருட்கள் இருப்பதாக பக்தர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி திருப்பதி கோவிலுக்குச் சென்றுள்ளார். உறவினர்களுக்குக் கொடுப்பதற்காக அங்கிருந்து லட்டு பிரசாதம் வாங்கி வந்துள்ளார்.

    அதை உறவினர்களுக்கு எடுத்துக் கொடுக்கும்போது அதிலிருந்து குட்கா புகையிலை பொருட்கள் உதிருவதாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டைத் திருப்பதி தேவஸ்தானம் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    • திருப்பதியில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
    • சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்' என்ற அமைப்பை நிறுவ வேண்டும் என்று பவன் கல்யாண் வலியுறுத்தல்

    திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கள் தயாரிப்பில் ஜெகன்மோகன் ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் , நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற பிரச்சனைகளை ஆராய தேசிய அளவில் 'சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்' என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது என்று தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியிருந்தார்.

    இந்நிலையில் பவன் கல்யாணின் இந்த கருத்துக்கு நடிகரும் அரசியல் வாதியுமான பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த விவகாரம் நீங்கள் துணை முதல்வராக உள்ள மாநிலத்தில் நடந்துள்ளது. உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் வழியைப் பாருங்கள்.

    அதைவிட்டுவிட்டு ஏன் இந்த பிரச்சனையை தேசிய அளவில் ஊதி பெரிதாக்கி அச்சத்தைப் பரப்புகிறீர்கள். நாட்டில் ஏற்கவே போதுமான அளவு வன்முறைகளும் பதற்றமும் மலிந்துள்ளது [அதற்கு மத்தியில் ஆட்சி புரியும் உங்களின் நண்பர்களுக்கு நன்றி] #justasking என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில் பிரகாஷ் ராஜ் கருத்துக்கு பவன் கல்யாண பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "நான் இந்து மதத்தின் புனிதம் மற்றும் உணவுக் கலப்படம் போன்ற பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறேன், இந்த விஷயங்களைப் பற்றி நான் ஏன் பேசக்கூடாது? பிரகாஷ் ராஜ் அவர்களை நான் மதிக்கிறேன், மதச்சார்பின்மை என்று வரும்போது, அது பரஸ்பரமாக இருக்க வேண்டும்.

    ஏன் என்னை விமர்சிக்கிறீர்கள் என்று புரியவில்லை. சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நான் பேசக்கூடாதா? பிரகாஷ் பாடம் கற்க வேண்டும். திரையுலகினரும் மற்றவர்களும் இந்தப் பிரச்சனையை அலட்சியப்படுத்தக் கூடாது. நான் சனாதன தர்மத்தை தீவிரமாக எடுத்து கொள்பவன்.

    பல விமர்சகர்கள் ஐயப்பனையும் சரஸ்வதி தேவியையும் குறிவைத்து வருகின்றனர். சனாதன தர்மம் மிகவும் முக்கியமானது. இந்த விஷயத்தில் ஒவ்வொரு இந்துவும் பொறுப்பேற்க வேண்டும். மற்ற மதங்களிலும் இதுபோன்ற பிரச்சனைகள் எழுந்தால், பரவலான போராட்டம் நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    • கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார்.
    • கேவலமான அரசியல் மனம் கொண்டவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக தேவஸ்தானம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி நேற்று திருப்பதி மலைக்கு வந்தார். இதனால் மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அப்போது காரில் வந்த பூமண கருணாகர ரெட்டி, எம்.பி. குருமூர்த்தி அவரது மகன் அபிநய ரெட்டி ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது திருப்பதி மலையில் ஆத்திரமூட்டும் வகையில் அரசியல் எதுவும் பேசக்கூடாது என விதிமுறை உள்ளதாக போலீசார் நோட்டீஸ் அளித்தனர். தான் எந்த அரசியலும் பேச வரவில்லை, சாமியை தரிசிக்க வந்துள்ளதாக போலீசார் கொடுத்த நோட்டீசில் பூமண கருணாகர ரெட்டி கையெழுத்திட்டார். பின்னர் போலீசார் அவரை மலைக்குச் செல்ல அனுமதித்தனர்.

    திருப்பதி மலைக்கு வந்த பூமண கருணாகர ரெட்டி நேராக வராக சாமியை தரிசனம் செய்தார். பின்னர் புஷ்கரணிக்கு சென்று நீராடி விட்டு மாட வீதி வழியாக கோவில் முன்பாக வந்த அவர் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

    அப்போது அவர் நான் எந்த தவறும் செய்யவில்லை. நெய்யில் கலப்படம் செய்து இருந்தால் என்னுடைய குடும்பம் ரத்த வெள்ளத்தில் அழிந்து போய் இருக்கும் என கூறியபடி கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார். மேலும் என் மீதான குற்றச்சாட்டுகளால் நான் நெருப்பில் இருப்பது போல் உணர்கிறேன். கோவிலில் கேவலமான அரசியல் மனம் கொண்டவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

    சுத்தப்படுத்த வேண்டியது ஏழுமலையான் கோவிலை அல்ல. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் நாக்கை தான் சுத்தபடுத்த வேண்டும் என்றார். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பதி மலை மீது அரசியல் மற்றும் அவதூறு பேசக்கூடாது என நோட்டீசில் தெரிவித்திருந்தும் விதிமுறை மீறி பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.

    பூமண கருணாகர ரெட்டி மீது பக்தர்களின் மனதை புண்படுத்தியது, அநாகரிக, அவதூறு அரசியல் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். 

    • விரிவான விசாரணை நடத்துமாறு வேண்டுகோள்.
    • பாதுகாத்தார்களா விற்று விட்டார்களா என்று சந்தேகம் எழுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 11 நாட்கள் விரதம் இருந்து ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க போவதாக துணை முதல் மந்திரி நடிகர் பவன் கல்யாண் அறிவித்தார்.

    அதன்படி அவர் விரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் மீது நம்பிக்கையுடன் பக்தர்கள் தங்கள் சம்பாதித்த சொத்தை கடவுளுக்கு வழங்கும் பொருட்டு காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உள்ளிட்ட பல மாநிலங்களில் அசையா சொத்துக்கள் கோவிலுக்கு உள்ளன. மும்பை, ஐதராபாத் நகரங்களில் பல கட்டிடங்கள் உள்ளன.

    சுவாமியின் சொத்துக்களை பாதுகாப்பதை விட அவற்றை விற்று விடுவதற்கு அப்போதைய அரசு அமைத்த தேவஸ்தான குழு துடித்தது ஏன்? அவர்களை அவ்வாறு வழி நடத்தியது யார்? என்பதை நாங்கள் வெளியே கொண்டு வருவோம்.

    ஏழுமலையான் சொத்துக்களை முந்தைய அறங்காவலர் குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் பாதுகாத்தார்களா அவற்றை விற்று விட்டார்களா என்று சந்தேகம் எழுகிறது.

    ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்து நகைகள் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நேற்று கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

    இதனால் ஏழுமலையான் கோவிலில் நேற்று மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.

    பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வழக்கம் போல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என அறிவித்தனர்.

    லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டுக்களை வாங்கி செல்கின்றனர். லட்டு கவுண்டர்களில் வழக்கம் போல் பக்தர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் லட்டுளை வாங்கிச் சென்றனர்.


    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. நேற்று முதல் இன்று அதிகாலை வரை 65 ஆயிரத்து 604 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24,266 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்படாமல் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக 6 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு பரிகாரங்கள் மற்றும் சாந்தி ஹோமம் நடத்தினர்.
    • திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சபதம்.

    திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சர், முன்நாள் முதல்வர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

    லட்டு விவகாரம் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தியுள்ள நிலையில் திருப்பதி தேவாஸ்தான அதிகாரிகள் கோவில் வளாகம் முழுக்க தோஷங்களை நீக்கும் வகையில், சிறப்பு பரிகாரங்கள் மற்றும் சாந்தி ஹோமம் நடத்தினர்.

    இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி திடீர் சபதம் ஏற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவில் குளத்தில் மூழ்கி, ஈர உடையுடன் வந்த கருணாகர ரெட்டி "உனது நைவேத்தியம், சர்வதேச புகழ்பெற்ற லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்திருந்தால் நானும், என்னுடைய குடும்பமும் சர்வ நாசமாக போக வேண்டும்," என்று உணர்ச்சியுடன் சபதம் ஏற்றார்.

    இதோடு ஏழுமலையான் கோவில் எதிரில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த கருணாகர ரெட்டியை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஜெகன் மோகன் ஆட்சி, அவரது தந்தை ராஜசேகர ரெட்டி ஆட்சிகளில் கருணாகர ரெட்டி இரண்டு முறை அறங்காவலர் குழு தலைவராக இருந்தவர் ஆவார்.

    • இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    • விளக்கேற்றி மந்திரம் படித்தால் தோஷம் விலகும் என நம்பிக்கை.

    திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தை தொடர்ந்து, பக்தர்கள் தங்களின் வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    அதன்படி, பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, "ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹே" என மந்திரம் படிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    ஏழுமலையானை வேண்டி மந்திரம் உச்சரிக்குமாறு பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், விளக்கேற்றி மந்திரம் படித்தால், கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் விலகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு யாகம் பரிகார பூஜைகள் நடக்கிறது.
    • நெய் சேமித்து வைக்கக்கூடிய இடம், லட்டு தயாரிப்பு கூடம் உள்ளிட்ட பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டு அங்கும் பூஜைகள் செய்யப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின்போது விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட லட்டுகள் பிரசாதத்தை விநியோகம் செய்ததற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    அப்போது கோவிலை சுத்தப்படுத்தி 3 நாட்கள் யாகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு யாகம் பரிகார பூஜைகள் நடக்கிறது.

    ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க கிணறு அருகே யாக சாலை அமைக்கப்பட்டு இன்று காலை 6 மணிக்கு பூஜைகள் தொடங்கியது.

    காலை 10 மணி வரை சாந்தி ஹோமம் சிறப்பு யாகம் பரிகார பூஜைகள் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மகா சாந்தி யாகம் நடத்தினர். தேவஸ்தான அதிகாரிகள் ஜே.ஷியாமளா ராவ், வெங்கையா சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நெய் சேமித்து வைக்கக்கூடிய இடம், லட்டு தயாரிப்பு கூடம் உள்ளிட்ட பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டு அங்கும் பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற உள்ளது. 

    ×