என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • ஊறுகாய் வகைகளில் இருந்து சற்று மாறுபாடான சுவையுடையது.
    • மீன் மலிவாக கிடைக்கும் நேரங்களில் தயாரித்து வைத்துகொள்ளலாம்.

    மீன் ஊறுகாய் மற்ற ஊறுகாய் வகைகளில் இருந்து சற்று மாறுபாடான சுவையுடையது. மீன் மலிவாக கிடைக்கும் சமயங்களில் தயாரித்து வைத்துகொள்ளலாம். நேரம் கிடைக்கும்போது செய்து வைத்துகொண்டால் தேவைப்படும்போது உபயோகித்துகொள்ளலாம். ஆனால் மற்ற ஊறுகாய் போன்று அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. மீன் ஊறுகாய் மாறுபட்ட சுவையுடன் இருப்பதால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.

    கேரளா கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ளவர்களால் அதிகமாக செய்யப்படும் ஒரு சுவையான ஊறுகாய் இந்த மீன் ஊறுகாய். சுவையாக இருப்பதால் தற்போது அனைவரும் சமைக்கும் உணவு பட்டியலிலும் வந்துவிட்டது நீங்களும் ஒரு முறை சமைத்து பாருங்கள் இதன் சுவை உங்களுக்கும் பிடித்த வகையில் நிச்சயம் இருக்கும். இதே போன்று இறால் ஊறுகாயும் மிகவும் சுவையானது. இப்போது மீன் ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மீன் - 1/2 கிலோ (முள் இல்லாத மீன்)

    மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 4ஸ்பூன்

    வெந்தயப்பொடி - 1ஸ்பூன்

    பூண்டு - ௧ (நறுக்கியது)

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    வினிகர் - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    கடுகு - ஒரு ஸ்பூன்

    கறிவேப்பில்லை - சிறிது

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஊறுகாய் செய்வதற்கு தேவையான மீன்களை எடுத்து சுத்தம் செய்து சதுர வடிவில் வெட்டி வைக்க வேண்டு. பின்னர் இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்து வைத்துள்ள மீன்களுக்கு மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக மீன்களுக்கு மேல் படும்படி கலந்து விட வேண்டும்.

    இதனைத் தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உப்பு கலந்து வைத்திருக்கும் மீன்களை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகிய பொருட்களை போட்டு நன்றாக கிளர வேண்டும். பின்னர் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள மீன்களையும் சேர்க்க வேண்டும்.

    சரியாக 5 நிமிடங்கள் மீனை வேக விட்டு அரை கப் வினிகர் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க வைத்து விட்டு இறக்கினால் சுவையான மீன் ஊறுகாய் தயார்.

    பின்னர் ஆறியதும் ஊறுகாயை காற்று போகாத பாட்டிலில் போட்டு அடைத்து வைத்து தேவையான போது எடுத்து பரிமாறலாம்.

    • குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.
    • குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுவது பசி தான். இது பெரும்பாலும் சரியாக இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இது உண்மையாக இருக்காது. குழந்தைகள் அழுவதற்கு உளவில் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.

    பசிக்கு அடுத்தபடியாக குழந்தைகள் பெற்றோரை அழைக்கவே அதிகமான சந்தர்ப்பங்களில் அழுகின்றன. குழந்தைகளால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லா அசௌகரியங்களுக்கும் ஒரே விளக்கம் அழுகையாக தான் இருக்கும். இதனை சாதாரணமாக நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் குழந்தைகளின் உளவியல் பற்றிய அடிப்படை அம்சங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாகவும் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க குழந்தைகளின் உளவியல் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

    பொதுவாக பசியை தவிர்த்து குழந்தைகள் அழுவதற்கு பல நேரங்களில் குழந்தைகள் இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதால் அழ ஆரம்பிக்கிறார்கள். அதுமட்டுமன்றி, அவர்கள் இதனை சங்கடமாகவும் உணர்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு எப்போதுமே தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது அவர்களை சவுகரியமாக வைத்திருக்க துணைப்புரியும்.

    தாய் எதை சாப்பிட்டாலும், குழந்தைக்கு பால் கொடுப்பதன் மூலம் அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.

    மேலும் வறுத்த மற்றும் காரமான உணவுகளை தாய் அதிகமாக சாப்பிட்டால் அதன் தாக்கம் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும். இதனால் தான் குழந்தைகள் அழ தொடங்குகிறார்கள். உதாரணமாக, வயிற்று வலி அல்லது வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும்.

    பல நேரங்களில், தெரிந்தோ தெரியாமலோ, தாய் குழந்தைக்கு அதிக பால் கொடுப்பதுண்டு. அதேசமயம், சில சமயங்களில் அவசர அவசரமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதும் அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகள் அழுவதுண்டு.

    மேலும் சிறு குழந்தைகளின் எலும்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள் கையாளும் போது ஏற்படும் கவனக்குறைவால் அவர்களின் எலும்புகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

    ஒரு குழந்தையின் எலும்பு அதன் இடத்தில் இருந்து நழுவினால், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். அதனால் குழந்தைகளை கையாளும் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    ஒரு குழந்தை தினமும் மாலையில் ஒரே நேரத்தில் அழுதால், அவர் கோலிக் நோயால் பாதிக்கப் பட்டிருக்கலாம். இந்த நோயினால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலியை அனுபவிக்கிறார்கள்.

    அதனால் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக் கின்றார்கள். பெரும்பாலும் குழந்தைகள் மூன்று மாதங்களுக்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயில், குழந்தைகள் பல மணி நேரம் அழுவார்கள். அதனை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

    • செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
    • கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும்.

    நமது ஊர்களில் பலபேர் வீடுகளின் முன்பு சாதாரணமாக செம்பருத்தி செடி வளர்ந்து இருப்பதை பார்த்து இருப்போம். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

    தோல் நோய் வராமல் பாதுகாக்க காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்புக்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

    பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றம், சூழல், ரசாயன ஷாம்போ பாவனை இவற்றால் அது பலவீனமடைகின்றது. இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆங்கில மருத்துவத்திற்கு செல்வதற்கு முன் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு கை வைத்தியம் செய்வதால் ஆரோக்கியமான முடிவை பெற முடியும்.

    இதன்படி, செம்பருத்தி பூவை பயன்படுத்தி எண்ணெய் செய்து தடவுவதால் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் சரியாகின்றது என கூறப்படுகின்றது.

    செம்பருத்தி பூ வெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக காணப்படும் பூச்செடி. இதில் இருக்கும், இலை மற்றும் பூ உங்கள் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், செம்பருத்தியை தலைமுடி பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்துவது, அதன் நன்மைகள் என்ன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்...

    1. தேங்காய் எண்ணெய் + செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவினால் தலைமுடி உதிர்வு குறையும்.

    2. செம்பருத்தி எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் தலைமுடி பாதுகாக்கப்படுகின்றது.

    3. செம்பருத்தி எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தலைமுடியை பளபளப்பாக்கவும் உதவியாக இருக்கின்றது.

    4. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டம், புதிய முடி வளர்ச்சி மற்றும் சுழற்சியைத் தூண்டுதல் ஆகிய வேலைகளை செம்பருத்தி பார்க்கிறது.

    5. இந்த எண்ணெயை குளிக்கும் முன்னர் தடவுவதால் பலவீனமான தலைமுடிகள் உதிர்ந்து புதிய தலைமுடி வளர்வதற்கு உதவியாக இருக்கின்றது.

    6. சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிலை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு 2 முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.

    7. அதிக தலைமுடி உள்ளவர்களுக்கு பேன் ஈறு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து உறங்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

    • மாவில் வண்டு வராமல் இருக்க சிறிதளவு உப்பை போட்டு வைத்தால் போதும்.
    • இட்லி மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலையை போட்டு வைக்கலாம்.

    * கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்கு அதில் சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் போதும்.

    * காப்பர் பூசப்பட்ட பாத்திரம் மங்காமல் இருப்பதற்கு சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி, துணியால் அழுத்தி தேய்த்தால் போதும். பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

    * இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் அதன் உள்பகுதியை மாவில் போட்டு வைக்கவும். மாவு இரண்டு நாட்கள் வரை கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

    * மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். பின்பு நீரை ஊற்றிவிட்டு முயற்சி செய்தால் பிளேடை எளிதாக கழற்றலாம்.

    * மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைத்து இட்லி சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் சுவையாக இருக்கும்.

    * வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் மணமாக இருக்கும்.

    * சப்பாத்தியை சில்வர் பாயில் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரம் காயாமல் இருக்கும்.

    * ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

    * வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

    * தோசை சுடும்போது மாவில் சிறிது சர்க்கரையை சேர்த்தால் தோசை மொறுமொறுப்பாக வரும்.

    * முட்டைகோஸில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டு வைத்தால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

    • பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றியே பிள்ளைகள் வளர்கிறார்கள்.
    • குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றியே பிள்ளைகள் வளர்கிறார்கள். அதனால் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர்தான் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். தங்களின் நடை, உடை, பாவனைகள் பிள்ளைகளிடத்தில் பிரதிபலிக்கும் என்பதையும் உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோர் பின்பற்றும் கெட்ட பழக்கவழக்கங்களை பார்த்து பிள்ளைகளும் அவற்றை பின்தொடர்வார்கள். அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றியும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

    ஒழுங்கற்ற நடத்தை:

    தாய், தந்தையரில் சிலர் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்கமாட்டார்கள். காபி பருகினால் டம்ளரை பருகிய இடத்திலேயே வைத்துவிடுவார்கள். அவரசமாக புறப்படும்போது குளித்துவிட்டு வந்த டவலை நாற்காலியில் அப்படியே போட்டுவிடுவார்கள். ஆடை மாற்றும்போதும் ஏற்கனவே உடுத்தி இருந்த ஆடையை அறைக்குள் ஏதாவது ஒரு இடத்தில் வீசிவிடுவார்கள். படுக்கையை விட்டு எழும்போது போர்வையை நேர்த்தியாக மடித்து அலமாரியில் வைக்கமாட்டார்கள்.

    வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது வாசலுக்கு வெளியே காலணிகளை நேர்த்தியாக கழற்றி வைக்காமல் தனித்தனியாக சிதறி கிடக்கும் நிலையில் வைத்திருப்பார்கள். இதுபோன்ற பழக்க வழக்கங்களை பார்த்து வளரும் பிள்ளைகளும் அதனையே பின்பற்ற தொடங்குவார்கள். அது வாழ்நாள் முழுவதும் பின்தொடர வழிவகுத்துவிடும். அதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது. தங்கள் பழக்கவழக்கங்களில் ஒழுங்கற்ற நடத்தைக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

     போட்டி மனப்பான்மை

    பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு அவர்களின் திறன்களை மதிப்பிடுகிறார்கள். அப்படி செயல்படுவது குழந்தைகள் தங்களுடைய தனித்திறனை கண்டறியவோ, மெருகேற்றவோ வழி இல்லாமல் போய்விடும். மற்றவர்களுடன் கடுமையாக போட்டிப்போடும் மன நிலையே மேலோங்கும். அது அவர்களின் சுய மரியாதையை எதிர்மறையாக பாதிக்கலாம். இத்தகைய போட்டியில் வெற்றிபெற முடியாமல் போகும்போது விரக்தி, ஏமாற்றம், மனச்சோர்வு உண்டாகலாம். குழந்தைகள் சுயமாகவே தங்கள் திறமையை அறிந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கிவிடக்கூடாது.

    சுகாதாரம்

    தினமும் குளிப்பது, உள்ளாடைகளை மாற்றுவது, சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நேர்த்தியாக ஆடை அணிவது போன்ற பழக்கவழக்கங்களை பெற்றோர்களை பார்த்துதான் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். காலையில் எழுந்ததும் பல் துலக்கிய பின்பே எந்த உணவுப்பொருளையும் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் பல் துலக்காமல் எப்போதாவது சாப்பிடுவது தவறில்லை என்று கூறி அத்தகைய பழக்கத்தை பின்பற்றுபவராக இருந்தால் குழந்தைகளும் அப்படியே செயல்பட தொடங்கிவிடும். இது வாய்வழி சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். தினமும் குளிக்கும் வழக்கத்தை பின்பற்ற தவறினால் குழந்தைகளுக்கும் அத்தகைய பழக்கம் தொற்றிக்கொள்ளும்.

     மற்றவர்களை தாக்குதல்

    குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் அடித்து கண்டிக்கும் பழக்கத்தை பெற்றோர் பின்பற்றக்கூடாது. தவறு செய்தவர்களை அடிப்பதுதான் சரி என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் பதிந்துவிடும். தங்களிடம் பிரச்சினை செய்யும் மற்ற குழந்தைகளை அடிக்கும் பழக்கத்தை பின்பற்றிவிடுவார்கள். தவறு செய்யும்போது மென்மையாக கண்டிக்கும் அணுகுமுறையை பின்பற்றினால்தான் குழந்தைகளும் அத்தகைய பழக்கத்தை பின் தொடர்வார்கள்.

    வார்த்தைகள்

    குழந்தைகள் முன்பு பெற்றோர் உச்சரிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை. ஏனெனில் குழந்தைகள் பேச ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோர் பயன்படுத்தும் சொற்களை கொண்டு தங்களுடைய சொற்களஞ்சியத்தை உருவாக்குவார்கள். பெற்றோர் கெட்ட வார்த்தைகள் பேசினால் அதுவும் அவர்கள் மனதில் பதிந்துவிடும். தம்பதியர் குழந்தைகள் முன்னிலையில் சண்டையிடுவது, மற்றவர்களின் குடும்ப விஷயங்களை பேசுவது, பிறரை விமர்சனம் செய்வது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

     நகம் கடித்தல்

    மன அழுத்தத்தில் இருக்கும் போது சில பெற்றோர் நகம் கடிப்பார்கள். அதை பார்த்து குழந்தைகளும் கற்றுக்கொள்வார்கள். அந்த பழக்கத்தை குறிப்பிட்ட வயதுக்குள் கைவிட வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்தப்பழக்கம் தொற்றிக்கொள்ளும்.

     டிஜிட்டல் சாதனங்களை பார்வையிடுதல்

    மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், டி.வி. போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை பெற்றோர் அதிகமாக பயன்படுத்தினால் குழந்தைகளும் அந்த நடைமுறையை கையாள தொடங்கிவிடுவார்கள். குழந்தைகள் முன்னிலையில் குறிப்பிட்ட நேரமே பார்க்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அதன் மூலம் எலெக்ட்ரானிக் சாதனங்கள் மீது குழந்தைகள் மோகம் கொள்வதை தவிர்க்க முடியும்.

     ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்

    உணவு, நொறுக்குத்தீனி வகைகளை சாப்பிடும்போது அவை தரையில் விழாமல் சாப்பிட வேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் அப்படி சாப்பிட பழகுவார்கள். உடலுக்கு ஊட்டச்சத்து வழங்கும் உணவுப்பொருட்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கேக், மிட்டாய் போன்ற அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பதார்த்தங்களை உட்கொள்ளக்கூடாது. இத்தகைய கட்டுப்பாடுகளை பெற்றோர் பின்பற்றினால்தான் குழந்தைகளிடத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும்.

    • அருமையான சுவையில் பிரெட் டோஸ்ட்.
    • நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும்.

    பெரும்பாலும் காலையில் வேலைக்கு செல்லும் போதோ அல்லது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதோ, எப்போதும் நல்ல சுவையான காலை உணவை செய்ய முடியாது. அந்த நேரத்தில் மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு உணவுகளை தயாரித்து, அதனையே தான் காலையிலும் சாப்பிடுவோம். ஆனால் இப்போது சற்று எளிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடிய ஒரு சூப்பர் ரெசிபியை பார்க்கலாம்.

    பிரட்டுகளைக் கொண்டு ஒரு அருமையான சுவையில் பிரெட் டோஸ்ட் செய்வது தான். இந்த டோஸ்ட்டில் முட்டைகளை சேர்த்து செய்வதால், நிச்சயம் இது நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்களுக்கு சிறந்த ரெசிபியாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பிரட் துண்டுகள் - 4

    முட்டை - 2

    சீஸ் - 2 கட்டிகள் (துருவியது)

    பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்

    பெப்பர் தூள் - 1/2 டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    ப்ரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பிரட்டை இரண்டு பிரட் துண்டுகள் போன்று வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த இரண்டு பிரட் துண்டுகளுக்கும் இடையில், துருவிய சீஸை வைத்துக் கொள்ள வேண்டும். (அளவுக்கு அதிகமாக சீஸை துணித்து வைக்கக்கூடாது.) இதே போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் வெட்டி, சீஸ் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் முட்டை, உப்பு, பட்டை தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து தோசைக்கலை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை தடவி உருகியதும், வெண்ணெயானது உருகியதும், ஒவ்வொரு பிரட் துண்டுகளாக முட்டை கலவையில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் அதன் மேல் ப்ரஷ் க்ரீம் தடவி பரிமாறினால், சுவையான சீஸ் பிரெஞ்சு டோஸ்ட் ரெடி.

    • உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து எடை குறையும்.
    • குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால் எலும்புகள் வலுவடையும்.

    கொள்ளு உடலுக்கு மிகவும் வலிமையைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. அத்தகைய கொள்ளுவை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும். அதிலும் குழந்தைகளுக்கு அதிகம் செய்து கொடுத்தால், அவர்களது எலும்புகள் வலுவடையும். மேலும் கொள்ளுவை வைத்து இதுவரை ரசம் தான் செய்திருப்போம். ஆனால் இப்போது அந்த கொள்ளுவை வைத்து ஒரு குருமா செய்யலாம். அந்த கொள்ளு குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கப்

    வெங்காயம் - 2

    உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    அரைப்பதற்கு

    வெங்காயம் - 1

    தக்காளி - 3

    வரமிளகாய் - 6

    மல்லி - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    இஞ்சி - 1 நீளத்துண்டு

    பூண்டு - 7 பல்லு

    தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கசகசா - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் மிக்சியில் வெங்காயம், தக்காளி, மல்லி, சீரகம், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், கசகசா, வரமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, அதனை நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன்பிறகுகொள்ளுவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி, வேக வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விட வேண்டும்.

    அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை தொடர்ந்து வதக்க வேண்டும். வாசனை நன்கு வரும் போது, அத்துடன் உருளைக்கிழங்கு, வேகவைத்த கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்

    இப்போது சுவையான கொள்ளு குருமா ரெடி. இதன் மேல் கொத்தமல்லியை தூவி, சாதத்துடன் பரிமாறலாம்.

    • பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள்.
    • ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    இன்றைய ஃபேஷன் உலகில், பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். இந்த நோக்கத்திற்காக பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. சருமத்தின் அழகு மட்டுமின்றி, அவர்கள் அழகு நிலையத்திற்குச் சென்று, தலைமுடியை அழகாக்குவதற்கு, ஹேர் ஸ்ட்ரெய்டனிங் மற்றும் ஹேர் ஸ்மூத்திங் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

     தற்காலிக ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், பிறகு முடி மீண்டும் சிக்கலாகிவிடும். நீங்கள் அதே நிரந்தர ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், முடி 3-6 மாதங்களுக்கு நேராக இருக்கும். ஆனால்... இந்த சிகிச்சையில் சில வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    * ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    * ஏனெனில் தோல் எரியும் அபாயம் உள்ளது.

    * ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் சரியாக செய்யாவிட்டால், பொடுகு, முடி உதிர்தல், நரை, முடி பிளவு முனைகள் ஏற்படும்.

    * ஹேர் ஸ்மூத்திங் செய்தால் முடி உதிர்தல், உச்சந்தலையில் எரிச்சல், சிலருக்கு ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படலாம்.

    * கர்லிங் (சுருட்டையாக்குதல்) செய்யும்போது கூந்தல் முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவை வேறுபட்ட சூட்டைப் பயன்படுத்துகின்றன.

    * சுருட்டை முடியில் ஃபிளாட் அயர்னை பயன்படுத்துதல். ஃபிளாட் அயர்னை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை புளோ -டிரை செய்ய வேண்டும்.

    * கூந்தல் முழுவதையும் ஒரே நேரத்தில் அயர்ன் செய்யக்கூடாது. இதனால், சீரற்ற சூடும் அழுத்தமும் ஏற்படுகிறது. இவை இரண்டுமே சீரற்ற கூந்தல் நேராக்குதலுக்கு வழிவகுத்து விடும்.

    • வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது.
    • ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறை

    கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். உங்களின் கூந்தல் வறண்ட தன்மையுடையதா? இதோ, உங்கள் கூந்தல் பட்டு போன்று மிளிர சில குறிப்புகள் பின்வருமாறு:-

    1. வறட்சியால் முடி உதிர்வு எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்து தொடர்ந்து குளித்து வர, முடி உறுதி அடைவதோடு உதிர்வதும் நிற்கும்.

     2. வறண்ட கூந்தல் உள்ளவர்கள் 25 மில்லி 'ஈவினிங் ப்ரிம் ரோஸ் ஆயில்' உடன் (அனைத்து ஹெல்த் புராடக்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும்) தேங்காய்ப்பால் (கூந்தலின் தேவைக்கு ஏற்ப) கலந்து தலையில் தேய்த்து நான்கு மணிநேரம் ஊறவைத்துக் குளிக்க, கூந்தல் டால் அடிப்பது உறுதி

    3. ஒரு அவகாடோ பழத்தை மேஷ் செய்து முட்டையுடன் சேர்த்துக்கொள்ள வேண்டு. பின்னர் ஈரமான கூந்தலில் இந்த பேஸ்டை தடவி குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மேல் ஊற வைத்து கழுவினால் மென்மையான கூந்தலை பெறலாம்.

     4. வெண்ணையை வரண்ட முடிகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யலாம், பின்னர் அரை மணி நேரம் ஊறவைத்து வழக்கம் போல் ஷாம்பூ போட்டு தலைமுடியை சுத்தம் செய்யலாம். இப்படி செய்தால் பளபளப்பான கூந்தலை எளிதாக பெறலாம்.

     5. வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது. முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கூந்தல் பட்டு போல் அலைபாயும்.

    6. ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறையாகும். 1/2 கப் ஆலிவ் எண்ணெயை இதமான சூட்டில் காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வறண்ட உங்கள் கூந்தலில் இதனை தேய்த்து ஊறவைத்து பின்னர் கூந்தலை ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டு கவர் செய்யவும். 45 நிமிடங்களுக்கு பின்னர் ஷாம்பூ போட்டு அலசலாம். இதனை செய்து வந்தால் மென்மையான பளபளப்பான கூந்தலை பெறலாம்.

    7. வறண்ட கூந்தல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை மயிர்க்கால்களில் படும்படி தேய்க்கும் போது அது முடியின் வேர்க்கால்களுக்குள் நுழைந்து கூந்தல் வறண்டு போவதை தடுக்கிறது. கற்றாழை ஜெல்லை தடவிய பிறகு ஒரு ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளுங்கள்.

    8. ஆல்மண்ட் ஆயில்,ஆலிவ் ஆயில்,,நல்லெண்ணெய்,விளக்கெண்ணையை சமஅளவு எடுத்து,லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து குளிக்கலாம். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து குளிக்க உங்கள் கூந்தல் 'டால்' அடிப்பது உறுதி.

    • தைராய்டு அளவை சரியாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுதல்.
    • அயோடின் குறைபாடு இல்லாமல் இருப்பது அவசியம்.

    1. ஆறு மாதங்களுக்கு முன்பே கர்ப்பத்தை திட்டமிடத் தொடங்குங்கள்

    முடிந்தவரை, நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் முன்பு குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே கர்ப்பத்தை திட்டமிடத் தொடங்குங்கள். உங்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை பரிசோதிக்கவும், தைராய்டு அளவுகள் கருவுறுதலுக்கு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனையை கேட்பது அவசியம்.

    2. தைராய்டு அளவை சரியாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுதல்

    கருவுறுதல் மற்றும் கர்ப்பத்திற்கு உங்கள் தைராய்டு அளவை சரியாக வைக்க வேண்டும். உங்கள் தைராய்டு- ஹார்மோன் (TSH) அளவு 2.5 mIU/L -க்கும் குறைவாக இருக்கும்.

    உங்கள் TSH அளவுகள் அதிகமாக இருந்தால், உங்கள் மருத்துவர் உங்கள் தைராய்டு ஹார்மோன் அளவை உயர்த்த மற்றும் உங்கள் TSH அளவு 2.5 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் வரை உங்கள் அளவை மீண்டும் சரிபார்பார்கள்.

    3. அயோடின் குறைபாடு இல்லாமல் இருப்பது அவசியம்

    அயோடின் குறைபாடு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அயோடின் தைராய்டு ஹார்மோனின் முக்கியமான அமைப்பு ஆகும், மேலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் அயோடின் தேவை அதிகமாக இருக்க வேண்டும். கருத்தரிப்பதற்கு முன் அயோடின் குறைபாட்டை பரிசோதிக்க வேண்டும். உங்களிடம் அயோடின் குறைவாக இருந்தால், மருத்துவர் சரியான அளவிலான அயோடின் சப்ளிமெண்ட்டை பரிந்துரைக்கலாம்.

    அயோடின் அளவு குறையவில்லை என்றால், குறைந்தபட்சம் 150 μg அயோடைனை உள்ளடக்கிய மல்டி வைட்டமின் அல்லது மகப்பேறுக்கு முன்னால் உள்ள வைட்டமினை எடுத்துக்கொள்ள டாக்டர்கள் பரிந்துரைக்கின்றன.

    4. ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள்

    கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் ஃபோலிக் அமிலம் முக்கியமானது ஏனெனில், கர்ப்ப காலத்தில் குழந்தை ஆரம்பத்தில் வளரும் போது, ஃபோலிக் அமிலம் நரம்புக் குழாயை உருவாக்க உதவுகிறது. ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு போன்ற சில பெரிய பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க உதவும்.

    5. மருத்துவ ஆலோசனையை பெறுவது அவசியம்

    உங்கள் கர்ப்பத்தை திட்டமிடுவதை பற்றி குறித்து ஏதேனும் கவலைகள் இருந்தால் உடனே மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். ஆண்களுக்கும், பெண்களுக்கும், கர்ப்பத்திற்காக முயற்சிக்கும்போது தேவைப்பட்டால் உங்கள் மருந்து சிகிச்சையை மாற்ற வேண்டியிருக்கலாம். கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் முன், உங்கள் உடல்நிலை சரியாக பரிசோதனை செய்து, நீங்கள் ஹார்மோனின் சரியான அளவை பெறுவதும் முக்கியம். இது கர்ப்ப காலத்தில் உங்கள் உடலில் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தைராய்டு சப்ளிமெண்ட் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டாம்.

    • தைராய்டு சுரப்பி, குரல்வளை கீழே கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது.
    • கர்ப்பமாவதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

    பெண்கள் பல்வேறு காரணங்கலால் கர்ப்பமாவதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், சில சமயங்களில் அதற்கான சரியான காரணத்தை குறிப்பிடுவது கடினம். கருவுறுதல் பிரச்சனைகள் உள்ள பல பெண்கள் தங்களுக்கு தைராய்டு இருப்பதை கண்டறியாமல் இருப்பார்கள்.

     தைராய்டு என்றால் என்ன?

    தைராய்டு சுரப்பி, என்பது குரல்வளை கீழே கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது. இது பட்டாம்பூச்சி வடிவமானது மற்றும் மூச்சுக்குழாய் இருபுறமும் அமைந்துள்ள இரண்டு மடல்களைக் கொண்டுள்ளது. தைராய்டு சுரப்பி பொதுவாக வெளியில் தெரிவது இல்லை, கழுத்தில் விரல் கொண்டு அழுத்துவதால் அதை உணர முடியாது. தைராய்டு சுரப்பி உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இதயம், தசை, செரிமான செயல்பாடு, மூளை வளர்ச்சி மற்றும் எலும்பு பராமரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

    தைராய்டின் சரியான செயல்பாடு என்னவென்றால் நமது உணவில் இருந்து அயோடின் சத்தை பெறுவது. இந்த ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் செல்கள் ரத்தத்தில் இருந்து அயோடினை பிரித்தெடுத்து அதை தைராய்டு ஹார்மோன்களில் சேர்ப்பதில் முக்கிய வேலை ஆகும். தைராய்டு ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அது உங்கள் முழு உடலையும் பாதிக்கும்.

    உங்கள் உடல் தைராய்டு ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்தால், ஹைப்பர் தைராய்டிசம் என்ற நிலையை உருவாக்கலாம். உங்கள் உடல் தைராய்டு ஹார்மோனை குறைவாக உற்பத்தி செய்தால், அது ஹைப்போ தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நிலைகளும் தீவிரமானவை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    (ஹைப்பர் தைராய்டிசம்) அறிகுறிகள்:

    எரிச்சல் மற்றும் பதட்டம் அனுபவிக்கிறது.

    தூங்குவதில் சிக்கல் ஏற்படும்

    உடல் எடை குறையும்.

    தசை பலவீனம் மற்றும் நடுக்கம்.

    ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது உங்கள் மாதவிடாய் சுழற்சியை நிறுத்துதல்.

    உடலின் வெப்பத்தின் உணர்திறன் அதிகரிப்பது.

    பார்வை பிரச்சினைகள் அல்லது கண் எரிச்சல்.

    (ஹைப்போ தைராய்டிசம்) அறிகுறிகள்:

    உடல் சோர்வு

    எடை அதிகரித்தல்

    மறதி ஏற்படுதல்

    அடிக்கடி மற்றும் அதிகமான ரத்த போக்கு கொண்ட மாதவிடாய் ஏற்படுவது

    உடலில் வறண்ட மற்றும் அதிகமான முடி வளர்ச்சி

    கரகரப்பான குரல் கொண்டவர்

     கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுமா?

    ஆண்களில், ஹைப்பர் தைராய்டிசம் விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைப்பை ஏற்படுத்தும், இதன் விளைவாக கருவுறுதல் குறைகிறது. தைராய்டு நிலைக்கு சிகிச்சைய அளிக்கப்பட்டவுடன் விந்தணுக்களின் எண்ணிக்கை பொதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பும். தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெறும் ஆண்களுக்கு, குழந்தை பெறுவதில் எந்த ஆபத்தும் இல்லை. பெண்களுக்கு தைராய்டு நோய் இருப்பது கருவுறுதலையும், நீங்கள் கர்ப்பமாகிவிட்டால் குழந்தையையும் பாதிக்கும்.

    கர்ப்ப காலத்தில் உங்கள் தைராய்டு முக்கியமானது, ஏனெனில் தைராய்டு ஹார்மோன்கள் ட்ரையோடோதைரோனைன் (T3) மற்றும் தைராக்ஸின் (T4) உற்பத்தியை சரிசெய்கிறது, இவை இரண்டும் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கர்ப்ப காலத்தில் உங்களுக்கு தைராய்டு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், உங்கள் கர்ப்பம் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

    உங்களுக்கு தைராய்டு நிலையின் அறிகுறிகள் இருந்தாலும், ஆனால் நீங்கள் கண்டறியப்படவில்லை என்றால், மருத்துவர் உங்களுக்கு தெரியப்படுத்துவது முக்கியம், இதன் மூலம் உங்களையும் உங்கள் குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க சரியாக சிகிச்சை பெறலாம்.

    நீங்கள் ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், கருத்தரித்தல் கடினமாகிறது, ஏனெனில் இந்த இரண்டு நிலைகளிலும் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது, இது பெண்களுக்கு கருவுறுதல் ஏற்படுவதை நேரடியாக பாதிக்கிறது. மேலும், தைராய்டு கொண்ட கர்ப்பம் உங்கள் குழந்தைக்கு சில உடல்நல சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் ஆபத்துக்கள்:

    உடல் எடை குறைந்த குழந்தை பிறப்பு

    இதய செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய வேகமான இதயத் துடிப்பு

    குழந்தையின் மண்டை ஓட்டில் உள்ள மென்மையான இடத்தை முன்கூட்டியே மூடுவது

    மோசமான எடை அதிகரிப்பு

    கருச்சிதைவு

    ப்ரீ எக்லாம்சியா (Preeclampsia)

    குறைந்த IQ மெதுவான உடல் வளர்ச்சி

    முறையான சிகிச்சைக்குப் பிறகு, நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க திட்டமிட்டால், முதலில் உங்கள் தைராய்டு செயல்பாட்டை சரிபார்க்க ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.

    • குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் ரெம்பவும் பிடிக்கும்.
    • நம்மூர் ஸ்டைலில் செய்யப்படும் மக்ரோனி ஒரு தனிச்சுவை.

    குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் ரெம்பவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்தமான ரெசிபி என்றால் இந்த மக்ரோனிதான். காரணம், அதன் வழவழப்பு தன்மையும் பார்க்க அழகாக இருப்பதும்தான். அதிலும் நம்மூர் ஸ்டைலில் செய்யப்படும் மக்ரோனி ஒரு தனிச்சுவை பெற்றது. அதை தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

    தேவையான பொருடகள்:

    தண்ணீர்-1 லிட்டர்

    உப்பு - தேவைக்கேற்ப

    மக்ரோனி- 2 கப்

    வெஜிடபிள் ஆயில் - 2 ஸ்பூன்

    கடுகு - 1 ஸ்பூன்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    வெங்காயம், நறுக்கியது - 1

    சிறிய வடிவில் பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1-2

    பீன்ஸ் (சதுர வடிவில் நறுக்கியது மற்றும் வேக வைத்தது ) - 1/4

    சாம்பார் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    வெஜ் மயோனைஸ் - 5 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் அடுப்பில் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் உப்பு மற்றும் மக்ரோனி இரண்டையும் சேர்க்க வேண்டும்.

    மக்ரோனியை 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். மக்ரோனி பாத்திரத்தின் அடியில் ஒட்டாத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மக்ரோனி வெந்த பிறகு வடிகட்டியை கொண்டு தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். நன்றாக வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ், காலிபிளவர், சாம்பார் மசாலா, கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். நன்றாக கிளறி ஒரு நிமிடம் வரை காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.

    இப்பொழுது இதனுடன் வேகவைத்த மக்ரோனி தண்ணீரை சேர்க்க வேண்டும். பிறகு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் மயோனைஸ் சேர்த்து கிளற வேண்டும். மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து 1 நிமிடம் வரை குறைந்த தீயில் வைத்து கலவை கெட்டியாகும் வரை சமைக்க வேண்டும். இதனுடன் வேகவைத்த மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்பொழுது மக்ரோனி கலவையை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான நம்மூர் ஸ்டைல் மக்ரோனி ரெசிபி தயார்.

    ×