search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bread Recipe"

    • அருமையான சுவையில் பிரெட் டோஸ்ட்.
    • நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும்.

    பெரும்பாலும் காலையில் வேலைக்கு செல்லும் போதோ அல்லது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதோ, எப்போதும் நல்ல சுவையான காலை உணவை செய்ய முடியாது. அந்த நேரத்தில் மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு உணவுகளை தயாரித்து, அதனையே தான் காலையிலும் சாப்பிடுவோம். ஆனால் இப்போது சற்று எளிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடிய ஒரு சூப்பர் ரெசிபியை பார்க்கலாம்.

    பிரட்டுகளைக் கொண்டு ஒரு அருமையான சுவையில் பிரெட் டோஸ்ட் செய்வது தான். இந்த டோஸ்ட்டில் முட்டைகளை சேர்த்து செய்வதால், நிச்சயம் இது நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்களுக்கு சிறந்த ரெசிபியாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பிரட் துண்டுகள் - 4

    முட்டை - 2

    சீஸ் - 2 கட்டிகள் (துருவியது)

    பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்

    பெப்பர் தூள் - 1/2 டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    ப்ரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பிரட்டை இரண்டு பிரட் துண்டுகள் போன்று வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த இரண்டு பிரட் துண்டுகளுக்கும் இடையில், துருவிய சீஸை வைத்துக் கொள்ள வேண்டும். (அளவுக்கு அதிகமாக சீஸை துணித்து வைக்கக்கூடாது.) இதே போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் வெட்டி, சீஸ் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் முட்டை, உப்பு, பட்டை தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து தோசைக்கலை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை தடவி உருகியதும், வெண்ணெயானது உருகியதும், ஒவ்வொரு பிரட் துண்டுகளாக முட்டை கலவையில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் அதன் மேல் ப்ரஷ் க்ரீம் தடவி பரிமாறினால், சுவையான சீஸ் பிரெஞ்சு டோஸ்ட் ரெடி.

    • வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம்.
    • எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும்.

    ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ஈஸியா செய்யலாம் சீஸ் சிக்கன் பிரெட் ரோல். இந்த சுவையான பிரெட் ரோல் ரொம்ப ரொம்ப சிம்பிளா சட்டுன்னு செய்து முடிச்சிடலாம். அதுலயும் இந்த மாதிரி வித்தியாசமா பிரெட்ல ரோல் பண்ணி கொடுக்கும் போது டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும். எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க செய்து கொடுத்தது டக்குனு காலி ஆகிடும். சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கூட இந்த பிரட் ரோல் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரெட்- 6

    வெங்காயம்- 1

    தக்காளி-1

    சிக்கன் - கால் கிலோ

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    மிளகாய்தூள்- கால் டீஸ்பூன்

    மல்லி தூள்- கால் டீஸ்பூன்

    கரம் மசாலா தூள்- கால் டீஸ்பூன்

    இஞ்சிபூண்டு விழுது- கால் டீஸ்பூன்

    மொசரல்லா சீஸ்- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் பிரெட் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்னர் சிக்கனை சமைக்க ஆரம்பிக்கலாம். சிக்கனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விடுது போட்டு வதக்க வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மசாலா தூள்களை வரிசையாக சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளரி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் சிக்கன் மசாலா தயார்.

    இப்போது வேகவைத்துள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி எடுத்து விட்டு அதனை சப்பாத்தி கட்டையை வைத்து தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதன் நடுவே வேகவைத்த சிக்கன் மசாலாவை வைத்து அதனுடன் சீஸ்சை துருவி மசாலாவுடன் வைத்து பிரெட்டை ரோல் செய்து மூடிக்கொள்ள வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட் ரோல்களை எடுத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுத்தால் சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் தயார்.

    • ஷாகி துக்கடா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
    • ஒரு புதுமையான ஸ்நாக்ஸ் ரெசிப்பி

    பள்ளி விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் உங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையான ஸ்னாக்ஸ் செய்து தர வேண்டும். அதிலும் அந்த ஸ்னாக்ஸ் அவர்களுக்கு பிடிக்கின்ற வகையிலும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான்.

    நாவில் கரையும் பால் ரப்பிடியுடன், மொறுமொறுவென்று நெய்யில் வறுத்த ரொட்டியின் சுவையும், ஏலக்காயின் மணமும் சேர்ந்து இனிப்புப் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் ஷாகி துக்கடா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரெட்- 6

    மில்க்மெய்டு- ஒரு கப்

    ஏலக்காய் தூள்- தேவையான அளவு

    தேங்காய் தூள்- ஒரு கப்

    முந்திரி, பாதாம், பிஸ்தா- தேவைக்கேற்ப

    எண்ணெய்- பொறிப்பதற்கு

    செய்முறை:

    முதலில் பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது அரை லிட்டர் பால் நன்றாக வற்றி வரும் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு பவுலில் தேங்காய் தூள், பாதாம், முந்திரி, பிஸ்தா கலவை மற்றும் மில்க்மெய்டு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டிவிட்டு அதனை சப்பாத்தியை திரட்டுவது போல ஒவ்வொரு பிரெட் துண்டுகளையும் தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பிரெட் துண்டுகளின் நடுவில் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள கலவையை வைத்து உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த உருளைகளை வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த ஷாகி துக்கடாக்களை ஒரு பிளேட்டில் வரிசையாக வைத்து அதில் நன்றாக காய்ச்சி ஆர வைத்த பால் அல்லது மில்க் மெய்டு கலவையை ஊற்றி பரிமாறினால் டேஸ்டியான, ரிச்சான ஷாகி துக்கடா தயார். பண்டிகை தினங்கள் மட்டுமின்றி பார்ட்டி நாட்களிலும் உங்களது வீடுகளில் செய்து அசத்துங்கள்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
    • நீங்களும் இந்த பிரெட் ஸ்ப்ரிங் ரோல் ரெசிபியை செய்து பாருங்கள்

    பிரெட் ஸ்ப்பிரிங் ரோல்

    இன்றைய சமையல் பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அப்படி நினைப்பவர்களுக்காக தான் இந்த பதிவு. வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த பிரெட் ஸ்பிரிங் ரோல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம்- 2 (நறுக்கியது)

    உருளைக்கிழங்கு- 2 (வேகவைத்தது)

    மைதா மாவு 1/4 கப்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

    மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

    மல்லித்தூள்- ஒரு ஸ்பூன்

    கரம் மசாலா- 1/2 ஸ்பூன்

    மஞ்சள் தூள்- சிறிதளவு

    பச்சை பட்டாணி- 1/2 கப்

    கொத்தமல்லி- சிறிதளவு

    எலுமிச்சை சாறு- ஒரு ஸ்பூன்

    பிரெட்- 10

    பிரெட் தூள்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியதும் அதில் ஒரு ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம்மசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மாவு போல மசித்து எடுத்து கொள்ளுங்கள். மசாலா வெந்ததும் அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு சிறிதளவு கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை நன்றாக கிண்ட வேண்டும். உருளைக்கிழங்கும் மசாலாவும் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

     பின்னர் ஒரு கிண்ணத்தில் மைதா மாவை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

    அதன்பிறகு பிரெட் எடுத்து கொள்ளுங்கள். பிரெட்டின் நான்கு ஓரங்களையும் வெட்டி எடுத்துவிட்டு பின்னர் ஒவ்வொரு பிரெட்டையும் சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள்.

    அதில் நாம் செய்து வைத்துள்ள மசாலாவை பிரெட்டில் வைத்து உருட்டி கொள்ளுங்கள். அதன்பிறகு மைதா மாவு கலந்து வைத்துள்ள தண்ணீரை தொட்டு பிரெட்டின் ஓரங்களை ஒட்டிக்கொள்ள வேண்டும்.

    அடுத்து மசாலா வைத்து உருட்டி வைத்துள்ள பிரெட்டை மைதா மாவு கலந்து வைத்துள்ள தண்ணீரில் நனைத்து எடுத்து, பின்னர் பிரெட் தூளில் போட்டு புரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள பிரெட் ரோலை போட்டு பொறிக்க வேண்டும். பிரெட் ரோல் பொன்னிறமாக வந்ததும் எண்ணெய்யில் இருந்து எடுத்து விட வேண்டும்.

    அவ்வளவு தான் நண்பர்களே..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய பிரெட் ஸ்ப்ரிங் ரோல் ரெடி..! நீங்களும் இந்த பிரெட் ஸ்ப்ரிங் ரோல் ரெசிபியை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

    ×