என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Rearing"

    • புதுமண தம்பதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் கே.டி.சி. நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
    • மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கி முத்தையா குழந்தைகள் வளர்ப்பு பற்றி எடுத்துக் கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் புதுமண தம்பதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் பாளையை அடுத்த கீழநத்தம் ஊராட்சி கே.டி.சி. நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அனுராதா ரவி முருகன் குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் இந்திரா முன்னிலை வகித்தார்.

    கருத்தரங்கில் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கி முத்தையா கலந்துகொண்டு குழந்தைகள் வளர்ப்பு பற்றி புதுமண தம்பதிகளிடம் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் பாளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிபா, வட்டார சுகாதார ஆய்வாளர் முத்துசாமி, அங்கன்வாடி சீதாலட்சுமி, மக்கள் நல பணியாளர் மாரியம்மாள், பணி தள பொறுப்பாளர் சோபனா, வார்டு உறுப்பினர் சுரேஷ் மற்றும் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கருத்தரங்கில் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    • பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள்.
    • குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.

    புதிதாக பெற்றோர்களாகி இருப்பவர்களும் சரி, சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோராகி இருப்பவர்களும் சரி. அவர்கள் செய்ய நினைக்கும் ஒரே விஷயம், `தங்கள் குழந்தைகளை முறையாக வளர்க்க வேண்டும்' என்பதுதான். இதற்கு காரணம், நமக்கு பெற்றோர்களாக இருந்தவர்கள் செய்த தவறை நாம் நமது பிள்ளைகளுக்கு செய்து விட கூடாது எனும் எண்ணம் மேலோங்கி உள்ளதால் தான். சரி, இப்போதைய இளம் தலைமுறை பெற்றோருக்கு ஏற்ற சில டிப்ஸ்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம்.

    பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள். இந்த முறையில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் அவர்களுக்கு ரூல்ஸ் போடுவது,, சில பழக்க வழக்கங்களை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்வர். இந்த முறையில் பிள்ளைகளை வளர்ப்பது நண்மைதான் என்றாலும், குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கான சுய அடையாளத்தை மறந்து முழுக்க முழுக்க தங்களது பெற்றோர் சொல்லிக்கொடுத்தபடி ரூல்சில் வாழ வேண்டியதாக இருக்கும். ஆகையால், எதில் விதிமுறை இருக்க வேண்டும், எதில் குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.

    உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்த்திருக்கிறீர்களோ, அதை பொறுத்துதான் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குறிப்பாக, குழந்தைகளிடம் பேசும்போது எப்போதுமே எதிர்மறை கருத்துக்களை குறைத்து கொண்டு நேர்மறையான கருத்துக்களுடன் பேச வேண்டும். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் பிஞ்சு மனங்களில் உங்கள் வார்த்தைகள் ஆழமாக பதியும். ஆகவே, உங்கள் வார்த்தைகள் மதிப்பு மிகுந்தவையாக இருக்க வேண்டும்.

    குழந்தைகளை குறைத்து மதிப்பிதல் கூடாது

    உங்களுடைய குழந்தைகளுக்கும் உணர்வுகள் இருக்கும். உங்களை அவமானப்படுத்தும்பொழுது உங்களுக்கு எவ்வாறு வலிக்குமோ அதுபோல் தான் உங்களுடைய குழந்தைகளுக்கும் வலிக்கும். இதை தான் சைல்டு ஷேமிங் என்கிறோம். முதலாவது ஒரு குழந்தையை பார்த்து உனக்கு ஒரு மண்ணும் தெரியாது. உனக்கு ஒன்னும் தெரியாது. உனக்கென்ன தெரியும் என்று அவர்களை குறைவாக மதிப்பிடுவது.

    இரண்டாவது நல்ல குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும். உன்னைவிட உன்னுடைய நண்பர்கள் ஒரு செயலை நன்றாக செய்கின்றனர் என்று உங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பார்த்து கூறுவது. அதற்கு அவர்கள் திருப்பி நம்மிடம் (பெற்றோர்) என் ஃபிரண்டோட அம்மா டாக்டர், என்ஜினீயர், வசதியாக இருக்கிறாங்க நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க என்று அவர்கள் கேட்டால் நம்மிடம் எந்த பதிலும் இருக்காது.

    மூன்றாவது வயதை வைத்து ஒப்பிட்டு காட்டுவது. அதாவது மற்ற குழந்தைகளுக்கு முன்னாள் அவர்களை தரக்குறைவாக மதிப்பிடுவது, 8 வயதாகிறது இதுகூட தெரியாதா? எருமைமாடு வயதாகிறது உனக்கு இதுகூட தெரியலையா? என்று வயதுக்கு மூத்தவர்களுடன் குழந்தைகளை ஒப்பிட்டு கூறுவது.

    பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது. ஆண்பிள்ளை அழக்கூடாது. பெண் குழந்தை தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது.

    • தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
    • சிறு சிறு தவறுகளை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை.

    குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயலாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களை குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்ற குழந்தைகளும் வளர வேண்டும் என்று அவசியமில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

    பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது குழந்தைகளின் மீது அதிகமாகவே உள்ளது.

    தான் நினைக்கும் படி தான் தன் குழந்தை நடக்க வேண்டும். தான் சொல்வதை தான் குழந்தை கேட்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் குழந்தைகள் மீது திணிக்க கூடாது. பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உறவு மிகவும் தனித்துவமானது என்றாலும்கூட அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்கள் வளரும் சூழல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

    பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது தவறு அல்ல. குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை அவர்களிடம் எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பல நேரங்களில் குழந்தைகள் செய்யும் தவறுக்காக பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பார்கள்.

    கண்டிப்பு தவறல்ல கண்டிக்கும் முறை தான் முக்கியம். உங்களின் கண்டிப்பு வரும் காலங்களில் உங்கள் குழந்தைக்கு மோசமான சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிமுறைகளை பார்க்கலாம் மிகவும் கண்டிப்பான பெற்றோர்கள் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையில் இருந்து தப்பிக்க பொய் சொல்பவர்களாக மாற வாய்ப்புள்ளது சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு.

    இந்த பழக்கவழக்கங்களால் நாளடைவில் குழந்தைகள் பெரியவர்களை மதிக்காமல் நடப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல நேரங்களில் உங்கள் குழந்தை பெற்றோரை போலவே தன்னுடன் பயிலும் சக மாணவர்களிடமும் அதிகார தனத்துடன் நடந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.

    தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும். நீ இதை செய்தால் உனக்கு இது கிடைக்கும், நீ அதை செய்தால் உனக்கு அது கிடைக்கும் என்று குழந்தைகளுக்கான கோல்களை ஏற்பாடு செய்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். சில நேரம் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்க்குகளை அவர்கள் முடிக்கவில்லை என்றால் அவர்களை குறைசொல்லாமல், அடிக்காமல் அதற்கான மாற்று வழியை சிந்திக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளின் மீது மதிப்பும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இதனால் பெற்றோர்கள்-குழந்தைகள் உறவில் நல்ல உறவு ஏற்படும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி மற்றும் இதர விஷயங்களிலும் குழந்தைகளுக்கு சப்போர்ட்டாக, துணையாக இருக்க வேண்டும்.

    ஒரு நண்பனை போல் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் முன் கடுமையான வார்த்தைகளையோ அல்லது தகாத வார்த்தைகளையோ பேசுதல், நடந்து கொள்வது கூடாது. குழந்தைகளுக்கு தேவையான அளவு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு சில வேலைகளை கொடுத்து அவர்கள் அதை செய்வதற்கும், செய்யும் வேலைகளில் அவர்களை துணைக்கு அழைத்து கற்றுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தலாம்.

    அவர்களே அவர்களுயைய வேலைகள செய்வதற்கு கற்றுக் கொடுப்பதற்கும், அதனை குறையேதும் சொல்லாமலும், நன்றாக செய்தால் பாராட்டுவதற்கும் தயங்க கூடாது. ஒவ்வொரு செயலின்போதும் பாராட்டுவதும், பரிசு பொருட்கள் அளிப்பதும் அவர்களை இன்னும் ஊக்குவிப்பதற்கு உதவும்.

    சில பெற்றோர்கள் குழந்தைக்கு அதிகமான சுதந்திரத்தை அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது அவர்களை கண்டு கொள்வதும் இல்லை. இதுபோன்ற நிலையில் குழந்தைகள் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பன போன்ற அடிப்படை விஷயங்களையும் கண்டுகொள்வதில்லை.

    இதனால் குழந்தைகள் வளர்ந்து போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை சின்னாபின்னமாக மாற்றிக் கொள்வதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக அமைகின்றனர். (உதாரணத்திற்கு அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் அல்லது சொந்த தொழில் செய்பவர்கள், வெளியூரில் இருப்பவர்கள், தாத்தா, பாட்டி வீட்டில் வளரும் குழந்தைகள்) குழந்தைகளின் செயல்பாட்டில் இன்னும் முயற்சி எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தைகளை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருப்பது, அறிவுரை கூறிக்கொண்டிருப்பது, குழந்தைகளை தண்டிப்பது, குழந்தைகளிடம் அன்பான முகத்தை காட்டாமல் எப்பொழுதும் கோபத்துடனும் எரிச்சலுடன் நடந்துகொள்வது, குழந்தை கேட்கும் கேள்விகளை மதிக்காமல் இருப்பது, தன் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற செயல்களை குழந்தைகளிடம் வெளிப்படுத்தக்கூடாது.

    இதனால் குழந்தைகள் வருங்காலத்தில் ஆளுமை இல்லாத நபர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்ற பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம் அதற்கேற்ப குழந்தைகளை நாம் நல்லமுறையில் வளர்க்க வேண்டும். முடிந்த அளவு உங்கள் குழந்தையை சரியான வழியில் வருங்காலத்தில் ஆளுமை மிக்க நபர்களாக மாற்ற இப்போதே முயற்சி செய்யுங்கள்.

    அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தைகளை கூட்டி சென்று ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம்.

    சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் சிறந்த குழந்தையாகவும், நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். அந்த மாதிரி குழந்தைகளை அவர்களது விருப்பத்தை பொறுத்து அதில் சிறந்த பயிற்சி கொடுக்க வேண்டும்.

    • `டீன்ஏஜ் என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது.
    • வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமான முறையில் புரிய வைக்க வேண்டும்.

    `டீன்ஏஜ் என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது. இளம் பருவத்தில் உடல் அளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு விதமான எண்ணங்களாலும், சிந்தனைகளாலும் ஆக்கிரமிக்கும். காதலும், காமமும் இரண்டறக் கலந்த எண்ணங்கள், எதிர்பாலினர் மீதோ அல்லது சம பாலினர் மீதோ ஈர்ப்பு ஏற்பட்டு பாலியல் குறித்த தேடலை அதிகரிக்கச் செய்யும்.

    மேலும் நண்பர்களின் அழுத்தம், திரைப்பட பாடல்கள், இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் மற்றும் கையிலேயே ஒட்டிக்கிடக்கும் ஆண்ட்ராய்டு இணையதள வசதி கொண்ட மொபைல் போன்கள் பல சந்தேகங்களை அவர்களுக்குள் எழுப்புகிறது. அந்த உந்துதலால்தான் காதல் என்றால் என்ன, தனக்குப் பிடித்தமான ஒரு நபரை பார்க்கும்போது மட்டும் ஏன் இனம்புரியாத ஈர்ப்பும், கிளர்ச்சியும் ஏற்படுகிறது என்ற புரிதலை சில வளரிளம் பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள்.

    அந்த கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய தேடல் அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆரோக்கியமான முறையில் பாலியல் குறித்த விழிப்புணர்வையும், நமது உடல் அமைப்புகளையும் வளர் இளம் பருவத்தினருக்கு நம் சமூகம், கலாசாரம் மற்றும் பண்பாடு என்ற போர்வையிலும், ஆண், பெண் சமூக பாலின வேறுபாட்டிலும் புதைத்துள்ளது.

    இப்படியான சபலங்களுக்கு ஆளாகும் பிள்ளைகள் பெற்றோர்களின் வளர்ப்பு முறை மற்றும் வழி காட்டுதலாலும், நல்ல நட்பு வட்டத்தின் காரணமாகவும் அதை எளிதில் கடந்துவிடுகின்றனர். ஆனால், இப்படியான சூழல் கிடைக்கப் பெறாத சில பிள்ளைகள், தங்கள் பாலியல் தேவைகள் பூர்த்தியாகுமா என வாய்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில் எதிர் பாலினரிடமோ, சம பாலினரிடமோ அல்லது தனிமையிடமோ பதின் பருவத்து ஈர்ப்பில் விழுந்துவிடுகிறார்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் சமூகம், ஊடகம், நட்பு, திரைப்பட, கலாசாரம், பண்பாடு என்ற போலியான பிம்பங்கள் மூலமாகவே பாலியல் அறிமுகப்படுத்தப் படுவதால் தான் நம் குழந்தைகள் இப்படியான தடுமாற்றங்களை சந்திக்கிறார்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன், அரசும் இணைந்து செயல்பட்டால் நம் குழந்தைகளை இப்படியான சிக்கல்களில் இருந்து எளிதில் மீட்டெடுக்க முடியும்.

    பெற்றோர்களின் பங்கு

    பதின் பருவத்து பிள்ளைகளை ஆரோக்கியமான கட்டுபாடுகளுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம். தாங்கள் நினைத்ததை செய்யக்கூடிய தைரியம் அவர்களுக்கு வருவதற்குள் வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமான முறையில் புரிய வைக்க வேண்டும்.

    • பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்ள முடியும்.
    • உணவு இடைவேளை மிகவும் முக்கியம்.

    பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவுதான் உணவு எடுத்துக்கொள்ள முடியும். தாய்ப்பால் கொடுத்த உடனே,குழந்தைக்கு திட உணவு கொடுத்தால் அதனால் சாப்பிட முடியாது. எனவே உணவு இடைவேளை மிகவும் முக்கியம். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்துக்கும், திட உணவு கொடுக்கும் நேரத்துக்கும் இடைவெளி தேவை.

    அதாவது, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு நேரத்தில் திட உணவுகளை கொடுக்கலாம். இடைப்பட்ட நேரத்தில், அதாவது, காலையில், முற்பகலில், மாலையில், இரவு தூங்க செல்லும் முன் தாய்ப்பால் கொடுக்கலாம். பசியானாலும் சரி, வயிறு நிறைந்துவிட்டாலும் சரி, குழந்தைகள் சில அசைவுகள் மற்றும் சத்தங்கள் மூலம் நமக்கு உணர்த்தும்.

    சாப்பாட்டை அருகில் கொண்டு போகும்போது வாயை திறக்கும். உணவின் மணம் உணர்ந்தாலே ஆர்வமாகும். சில சத்தங்களை எழுப்பி, கை அசைவுகளை காட்டி, தனக்கு இன்னும் பசிக்கிறது என்பதை உணர்த்தும். உணவு இருக்கும் இடத்தை நோக்கி நகரும் அல்லது கையை காட்டும்.

    வயிறு நிறைந்துவிட்ட நிலையில், குழந்தை உணவை ஏற்காமல், தள்ளிவிடும். உணவு கொடுக்கும்போது வாயை திறக்காமல் அடம்பிடிக்கும். உணவு இருக்கும் திசையில் இருந்து விலகி, தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளும். அசைவுகள் மற்றும் சத்தங்களின் மூலம் தனக்கு வயிறு நிறைந்துவிட்டதை உணர்த்தும்.

    திட உணவுகளை கொடுக்க தொடங்கும்போது குழந்தை, புதிய சுவைகளுக்கு பழகுகிறது. அந்த நேரத்தில் கட்டாயப்படுத்தி உணவை ஊட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்படி வற்புறுத்தி ஊட்ட ஆரம்பித்தால் குழந்தைக்கு உணவின் மீது வெறுப்பு ஏற்படலாம்.

    தனக்கு எவ்வளவு சாப்பாடு வேண்டும் என்பதை குழந்தைகளே தீர்மானிக்கட்டும். நீங்கள் கொண்டு வந்த உணவு முழுவதையும் குழந்தை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காகூடாது, நிர்பந்திக்க கூடாது.

    • ஒரு நாளைக்கு 11 முதல் 13 மணி நேர தூக்கம் அவசியம்.
    • ஏராளமான தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.

    மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித் தூக்கம் போட வைத்தால், அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மதியம் ஒரு மணி நேரம் தூங்கி எழுந்தால், அவர்கள் அன்று காலை வகுப்பில் படித்த பாடங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

    40 சிறுவர்களிடம் மாசாசூசெட்ஸ் ஹம்ஹர்ஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த தொடர் பரிசோதனை மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டதாம். குழந்தைகளின் மூளைத்திறன் மேம்பாடு மதியம் தூங்கி எழுந்த பின்னர் அதிகரிப்பதுடன், மறுநாளும் இது நீடிக்கிறதாம். குழந்தைகளின் நினைவாற்றலை உறுதிப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் ஆரம்பகால கற்றலுக்கும் இந்த மதிய தூக்கம் அவசியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    மதிய உணவுக்குப் பிறகு தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் பார்த்துக் கற்றவற்றை நினைவு கூர்வதில் சிறப்பாக செயல்பட்டதாகவும், மதிய நேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட இவர்களின் நினைவாற்றல் அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வு முடிவு சொல்கிறது.

    இந்த பரிசோதனையில் பங்கேற்ற குழந்தைகள் தூங்கும்போது, அவர்களின் மூளையில் கற்றலுக்கு பொறுப்பான பகுதிகள் வேகமாக செயல்படுவதையும் கண்டறிந்தனர். தங்களின் இந்த ஆய்வின் மூலம் மழலையர் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய நேர தூக்கம் அவசியம் என்பதை மருத்துவரீதியில் உறுதி செய்திருப்பதாக தெரிவித்தார் இந்த ஆய்வுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் ரெபேக்கா ஸ்பென்சர்.

    மழலை வயதில் குழந்தைகள் இயற்கையாகவே தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்து ஏராளமான தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இந்த தகவல்களையெல்லாம் அவர்களின் மூளை, பகுத்துப் பார்த்து, சேமித்து வைத்துக் கொள்வதற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 11 முதல் 13 மணி நேர தூக்கம் அவசியம். எனவே இரவு நேரத் தூக்கத்தைப் போலவே, மதிய நேர தூக்கமும் இந்த மழலையர்களுக்கு மிகவும் அவசியம் என்கிறார், ராயல் கல்லூரியின் சிறார் ஆரோக்கியம் குறித்த சிறப்பு மருத்துவர் ராபர்ட் ஸ்காட் ஜுப்.

    மதியம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகள், களைப்படைந்தும் எரிச்சலுடனும், கவனம் செலுத்தி கற்க முடியாமலும் திணறுவார்கள் என்றும் அவர் சொல்கிறார். மதிய உணவுக்குப் பிறகு தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் பார்த்துக் கற்றவற்றை நினைவு கூர்வதில் சிறப்பாக செயல்பட்டதாகவும், மதிய நேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட இவர்களின் நினைவாற்றல் அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வு முடிவு சொல்கிறது.

    • படுக்கையை ஈரமாக்குவது, இரவு நேர அடங்காமை என்று அழைக்கப்படுகிறது.
    • 7 வயதுக்குள் படுக்கையை நனைப்பது கவலைக்குரியது அல்ல.

    படுக்கையை ஈரமாக்குவது, இரவு நேர அடங்காமை என்று அழைக்கப்படுகிறது. தூங்கும் போது அறியாமல் சிறுநீர் கழிப்பதை குறிக்கிறது. இது எல்லா வயதிலும் நடக்க கூடியது தான். குழந்தைகள் குறிப்பாக 7 வயதுக்குள் படுக்கையை நனைப்பது கவலைக்குரியது அல்ல. ஆனால் வளர்ந்த பிள்ளைகள், பதின்ம வயது பிள்ளைகள், டீன் ஏஜ் வயதினர், நடுத்தர வயதினர், வயதானவர்கள் இந்த பிரச்சனையை கொண்டிருந்தால் எப்படி கட்டுப்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    சிறு குழந்தைகள் அதாவது 7 வயதுக்குள் இருக்கும் குழந்தை படுக்கையை நனைப்பது இயல்பானது. இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பருவ வயது வந்த பிறகும் படுக்கையில் சிறுநீர் கழிப்பது, குழந்தைப்பேறுக்கு பிறகு பெண்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்வது, மெனோபாஸ் காலத்தில் பெண்கள் இந்த பிரச்சனையை கொண்டிருப்பது என எல்லாமே கவனிக்க வேண்டிய ஒன்று. அதேபோன்று வயதானவர்கள் 60 வயதை கடந்தவர்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை எதிர்கொள்வது என வயதுக்கேற்றார் போல இந்த பிரச்சனையை எதிர்கொள்வதை பார்க்க முடிகிறது.

    தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது தன்னை அறியாமல் வெளியேறும் ஒரு நிகழ்வு தான். 7 வயதுக்குட்பட்ட குழந்தை சிறுநீர் கழிப்பதை நாம் நாளடைவில் அதில் இருந்து சரியான பழக்க வழக்கம் மூலம் விடுவிக்கலாம். குழந்தை தூங்குவதற்கு முன்பு அவர்களை சிறுநீர் கழிக்க சொல்லிய பிறகு படுக்க வைக்கலாம். நள்ளிரவிலும் ஒரு முறை குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்க சொல்லி படுக்க வைக்கலாம்.

    பெரியவர்கள் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அதற்கு காரணம் உடலில் உள்ள ஹார்மோன் குறைவாக சுரப்பதுதான். தூக்கமின்மை காரணம் கூட அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணமாகிறது. தூக்கமின்மை பிரச்சனைக்கு மருந்துகள் எடுப்பது, உளவியல் ரீதியிலான பாதிப்புக்கு மருந்துகள் எடுப்பது கூட படுக்கையை நனைக்க காரணமாக இருக்கலாம். சர்க்கரை நோயாளியாக இருக்கும் போது சர்க்கரை கட்டுக்குள் வைக்காத போது அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

    மேலும் கட்டுக்கடங்காமல் சிறுநீர் வெளியேறவும் செய்யும். அதனாலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம். பெண்களாக இருந்தால் அவர்களுக்கு கருப்பை இறக்கம் இருந்தால் அவர்களுக்கும் படுக்கையில் சிறுநீர் கழியலாம். சிறுநீரகப்பாதையில் தொற்று இருப்பவர்களுக்கு படுக்கையில் தங்களை அறியாமல் சிறுநீர் பிரிவது இருக்கும். பெல்விக் வலிமையாக இல்லாத பெண்களுக்கும் கூட சிறுநீர் தானாக வெளியேறலாம்.

    சிலருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். கீழே விழுந்து காயம் பட்டிருப்பார்கள். இதனால் சிறுநீரகப்பையிலும் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கலாம். இதனாலும் சிறுநீர் தானாக வெளியேறலாம். இது போன்று பெண்களுக்கு கருப்பை வீக்கம், ஆண்களுக்கு புரோஸ்டேட் விரிவாக்கம், தூக்கமின்மை, சிறிய விஷயத்துக்கெல்லாம் பயம், மன அழுத்தம் , குடலில் பூச்சிகள் இருப்பது என இவையெல்லாம் தூக்கத்தில் தானாக சிறுநீர் வெளியேறுவதற்கு காரணமாக சொல்லலாம். படுக்கையில் சிறுநீர் கழிக்க என்ன காரணமாக இருந்தாலும் அதை சரிசெய்ய சிறந்த மருந்து சித்தமருத்துவத்தில் சொல்லப்படும்

    அமுக்கிரா சூரணம். அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் இந்த சூரணம் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும். இது நரம்புகளை வலுப்படுத்தக்கூடியது. சித்த மருத்துவத்தின்படி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அனைத்தும் இந்த அஸ்வகந்தாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூரணத்தை அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் அறியாமல் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை குணப்படுத்த முடியும்.

    • சீக்கிரம் படுத்து தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மை அதிகம் இருக்கும்.
    • தாமதமாக தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு குறைவாகவே இருக்கும்.

    தூக்கத்திற்கும், மனித உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், குழந்தைகளை இரவில் சீக்கிரமே தூங்க வைத்தால் அவர்கள் உடல் பருமன் இல்லாதவர்களாகவும், சோம்பல் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள் எனக் கண்டறிந்துள்ளது.

    9 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட 2,200 குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தி தூங்கும் நேரம், உடற்பயிற்சி, வேலையின் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதன்படி இரவில் காலதாமதமாகத் தூங்கி காலையில் மிகவும் தாமதமாக எழும் குழந்தைகளை விட, இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளின் எடை கச்சிதமான அளவில் இருந்ததாம்.

    `சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மையும் அதிகம் இருக்கும்' என்கிறார், இந்த ஆய்வை நடத்திய கரோல் மகேர்.

    மேலும், `தாமதமாக தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு குறைவாகவே இருக்கும். தாமதமாகத் தூங்கும் குழந்தைகள், மற்ற குழந்தைகளைவிட, மூன்று மடங்கு அதிகமாக டி.வி. பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் ஈடுபாடு கொள்வதிலும் நேரத்தை செலவழிப்பார்கள்' என்கிறார் டாக்டர் கரோல். ஆகவே 'முன் தூங்கி முன் எழுவதே உடலுக்கு நல்லது' என்கிறார் கரோல்.

    சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மையும் அதிகமாக இருக்கும்.

    • மற்ற குழந்தைகளை போல் தனது குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
    • குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன.

    இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் விரும்பும் ஒரே விஷயம் மற்ற குழந்தைகளை போல் தனது குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று தான். அதற்காக பல வழிகளை கையாளுவதும் உண்டு. ஆனால், உடலுக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுக்காமல் என்ன செய்தாலும் பலனில்லை. அதாவது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன. அவற்றை அவர்களுக்கு சரிவர கொடுத்துவந்தாலே குழந்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமான இருப்பார்கள். குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க....

    பால்

    புரோட்டீன், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்த பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மிகவும் அவசியமானது. குழந்தைகள் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்கும்போது, அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு நல்ல பல் ஆரோக்கியம் இருக்கும், பலவீனமான ஈறுகள் மற்றும் பல் சிதைவு அபாயமும் குறையும். அதேபோல், தயிரிலும் துத்தநாகம், பி 12 மற்றும் செலினியம் போன்ற மூளை வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மீன்

    ஞாபக சக்தி அதிகரிப்பதில் முக்கியமான உணவுப்பொருளாக மீன் மற்றும் பிற கடல் உணவுகள் விளங்குகின்றன. காரணம், இவற்றில் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் புரோட்டீன், துத்தநாகம், இரும்பு, கோலின், அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. அந்தவகையில், நண்டு, இறால், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி மீன் போன்றவற்றை சமைத்துக் கொடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை கொடுக்கலாம். இருப்பினும், பாதரசம் அதிகம் உள்ள டுனா மற்றும் வாள்மீன் போன்ற மீன்களை தவிர்க்கவும். மீன் உண்பவர்களுக்கு சாம்பல் சத்து அதிகம் இருப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    முட்டை

    முட்டையின் நன்மைகளை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால், நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. அவை குழந்தைகளின் ஞாபக சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல், குழந்தையை நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும் "செரடோனின்" என்ற மகிழ்ச்சி ஹார்மோன் உருவாக்கத்திற்கு முட்டை உதவுகிறது. எனவே தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.

    நட்ஸ்:

    வால்நட் மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஃபோலேட், டிஹெச்ஏ, இரும்பு மற்றும் புரதம் அதிகளவு காணப்படுகிறது. இவை குழந்தையின் மூளைக்கு எரிபொருளை அளித்து, நினைவாற்றலை மேம்படுத்தவும், குழந்தைகளின் மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், இவை மூளையில் வரக்கூடிய அல்சைமர் என்ற நோய் குழந்தைகளை தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. எனவே, தினமும் 5 அல்லது 6 பாதாம் அல்லது ஒரு வால்நட் பருப்பையாவது சாப்பிட கொடுக்க வேண்டும்.

    ஆரஞ்சு பழம்:

    ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்பி உள்ளது, இது ஆரோக்கியமானது. மூளைக்கு இன்றியமையாதது. ஆரஞ்சு பழங்களை உட்கொள்வதால் குழந்தைகளின் செயல்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. எனவே, ஒருநாள் விட்டு ஒரு நாள் முழு ஆரஞ்சு பழத்தை சாப்பிட கொடுக்கலாம். சிறுகுழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

    • 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள்.
    • தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம்.

    உலகளாவிய ரீதியில் 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள். அந்த வகையில் ஒவ்வொரு 4௦ விநாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. விபத்துக்கள் மூலம் நிகழும் மரணங்களை விட தற்கொலை மூலம் நிகழும் மரணங்களே அதிகம்.

    ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து அவனை அழுத்தும் போது அவன் தற்கொலை செய்ய முயற்சிக்கிறான்.

    தற்போது தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் (டீன்ஏஜ்) பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம். அந்தவகையில் ஒருவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கான காரணம் மற்றும் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எவ்வாறு நடந்துக்கொள்வார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

    தற்கொலை செய்வதற்கான காரணம்

    குடும்பத்தில் பிரச்சினை, காதலில் பிரச்சனை, மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி என்று சின்ன சின்ன காரணங்கள் தான் தற்கொலை எண்ணங்கள் முடிவாகின்றன. தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு ஒரு நிமிடத்தில் வருவதில்லை. வருகின்ற பிரச்சினையை எப்படி கையாளுவது என்று தெரியாமல் தவிக்கும் போது அவர்களுக்கு ஒரே முடிவாக தெரிவது தான் தற்கொலை.

    அந்தவகையில் நம்முடன் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்யப்போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு சில அறிகுறிகள் மூலம் இவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் இருகின்றார் என தெரிந்துக்கொள்ள முடியும்.

    அறிகுறிகள்

    நடத்தையில் மாற்றம்

    தற்கொலை செய்துக்கொள்ள நினைக்கும் ஒருவர் எதிர்மறையான எண்ணத்தில் இருப்பார்கள். வாழ்க்கையே வெறுத்து போகின்றது என அடிக்கடி கூறுவார்கள். பேசும் விதம், நடந்து கொள்ளும் விதத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அவர்களை தனியாகவிடக்கூடாது. அவர்கள் தோற்றத்தை அழகுபடுத்த விரும்பமாட்டார்கள். மற்றவர்களுக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தங்களுடைய தோற்றத்தை புறக்கணிக்க ஆரம்பிப்பார்கள். தன்னுடைய நிலையை பார்த்து யாரும் பரிதாபப்பட மாட்டார்களா என்று நினைப்பார்கள்.

    நண்பர்களுடன் தற்கொலை பற்றி பேசுவது, தற்கொலை பற்றிய புத்தகங்கள், படங்கள், நாவல்கள், பாட்டுகள் அனைத்தையும் பார்ப்பது. துப்பாக்கி எங்கு வாங்குவது, தூக்கு எப்படி போடுவது, பாய்சன் மருந்துகளை எங்கு வாங்குவது போன்ற கேள்விகளை கேட்க ஆரம்பித்தால் அவர்களை தனியாக விட்டுவிட வேண்டாம். இந்த மாதிரியான அறிகுறியானது மறைமுகமாக எடுத்துக்கூறிகின்றது என அர்த்தம்.

    போதை மற்றும் மது

    மனதில் ஏற்படும் துன்பத்தை, வலியை மறைக்க மது பழக்கத்திற்கு அடிமையாகுவது. போதையில் ஏற்படும் மனக்கிளர்ச்சி தற்கொலை செய்ய தூண்டுகிறது.

    மனநிலையில் மாற்றம்

    தீவிர கோபத்தை வெளிப்படுத்துவது, எரிந்து எரிந்து விழுவது மற்றவர்கள் பேச வந்தால் கூட தனிமையை நாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த பிரச்சினையை உடனே சரி செய்யவில்லை என்றால் அது தற்கொலையாக கூட மாறும்.

    இழந்ததை நினைத்து கவலைப்படுதல்

    மூக அவமானம், உறவு முறிவு போன்றவை தற்கொலை எண்ணத்தை தூண்டி விடுகிறது. தீவிர உடல் நோய், பிற உயிர் இழப்புகள், நிதி நிலைமை போன்றவை தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன. அந்தவகையில் தான் இழந்தவற்றை நினைத்து வருந்துவதும் கூட தற்கொலை எண்ணங்களை உருவாக்கி விடும்.

    தூங்குவதில் சிரமம், எடை அதிகரிப்பு, எடை இழப்பு, குற்ற உணர்வு, தேவையில்லாத கவலைகள், எரிச்சல், சோகம், கோபம், வாழ்க்கையை பற்றிய பயம், நம்பிக்கையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

    தற்கொலை தடுப்பு

    தற்கொலை அறிகுறிகளை கவனித்து எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் பல தற்கொலைகளை தடுக்க முடியும். தற்கொலை செய்துக்கொள்ளும் அறிகுறியில் யார் இருந்தாலும் அவர்களை தனியாக விடமால் கூடவே இருந்து கவனித்துக்கொள்வதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

    • தலைக்கு அதிகமாகக் குளிக்க வைக்கக் கூடாது.
    • சருமம் தாங்கும் அளவிற்குத்தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    பொதுவாகக் குழந்தைகளைத் தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாகக் குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் என பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இதுபோன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    * குழந்தைகளைக் கோடைக்காலத்தில் குளிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதில் குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்குத்தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    * பச்சிளம் குழந்தை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தை என்றால் முதலில் அந்த தண்ணீரை நம் கைகள் வைத்து வெதுவெதுப்பாக உள்ளதா என பார்க்க வேண்டும்.

    * அதற்குப் பிறகு தான், குழந்தைகளின் காலில் ஊற்றி அதற்கு சரியாக இருந்தால் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். இல்லை என்றால் அதில் சிறிதளவு குளிர்ந்த நீர் சேர்த்து குளிக்க வைக்கலாம்.

    * ஆறு மாத குழந்தை என்றால் அந்த குழந்தையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு குளிக்க வைக்கலாம். ஆனால் சூடான நீராக இருந்தால் முதலில் நம்மால் தாங்க முடியும் என்றால் மட்டும் குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம்.

    * பச்சிளம் குழந்தை மற்றும் ஆறுமாதம், ஒரு வருட குழந்தையாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க வைத்தால் தூக்கம் நன்றாக வரும் மற்றும் உடலுக்கு நல்லது என சொன்னால் அது சரியில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் 5-ல்இருந்து 7 நிமிடங்களுக்குள் குளிக்க வைக்க வேண்டும்.

    * கோடைக்காலத்தில் ஆறு மாதங்கள் ஆன குழந்தையாக இருந்தால் மிகவும் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரை பயன்படுத்தலாம்.

    * குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு அல்லது வீட்டில் உள்ள கடலைமாவும் பயன்படுத்தி குழந்தைகளை குளிக்க வைக்கலாம்.

    * ஆறுமாதம் ஆன குழந்தை என்றால் கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் தலைக்கு என கடைகளில் விற்கும் ஷாம்பு அல்லது வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு கூட பயன்படுத்தலாம்.

    * குழந்தைகளின் தலைக்கு குளிக்க வைக்கும் போது முகத்தில் தண்ணீர் வராமல் இருக்க கண்களுக்கு மேல் உள்ள இடத்தில் கைகள் வைத்து குளிக்க வைக்க வேண்டும்.

    * தலைக்கு குளிக்க வைத்த பிறகு, உடலுக்கு குளிக்க வைக்க வேண்டும். சளி பிடித்து இருந்தால் அதிகமாக தலைக்கு குளிக்கவைக்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தலைக்கு குளிக்க வைப்பதை தவிர்க்கலாம்.

    • குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பல பெற்றோர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கிறது.
    • குழந்தைகளை கடுமையாக திட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

    குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பல பெற்றோர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கிறது. சிறு தவறு செய்தால் கூட குழந்தைகளை கடுமையாக திட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். படிப்பு விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் விளையாடுவதற்கு கூட நேரம் ஒதுக்காமல் எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இத்தகைய அணுகுமுறை குழந்தைகளை மனதளவில் பலவீனப்படுத்தும்.

    எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் விதைத்து பெற்றோரை எதிரியாக பாவிக்க வைத்துவிடும். குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள் குறித்தும், அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

    பாதுகாப்பு

    குழந்தைகள் மீது கொண்டிருக்கும் அன்பினால் அவர்களின் நலன் மீது பெற்றோர் கூடுதல் அக்கறை கொள்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கத்தில் வெளி இடங்களுக்கு செல்லும்போது கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சில பெற்றோர் அருகில் இருக்கும் பகுதிக்கு கூட குழந்தைகள் தனியாக செல்ல அனுமதிப்பதில்லை.

    சமூகம் மீது தவறான புரிதலை குழந்தைகளிடத்தில் விதைப்பதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது. தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்ட வேண்டுமே தவிர, பயத்தையும், பீதியையும் மனதில் பதிய வைத்துவிடக்கூடாது.

    வெளி இடங்களுக்கு குழந்தைகள் சுதந்திரமாக சென்று வர வேண்டும். ஏதேனும் பிரச்சினையை சந்திக்க நேர்ந்தால் கூட அதை துணிச்சலோடு எதிர்கொள்ள பழக்கப்படுத்த வேண்டும். தற்காப்பு பயிற்சிகள் கற்றுக்கொடுக்கலாம். அது மன வலிமையை அதிகப்படுத்தும். சுய பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தும். துன்பங்களையும், சவால்களையும் சமாளிக்க போராடும் ஆற்றலையும் கொடுக்கும்.

    படிப்பு

    இன்றைய போட்டி நிறைந்த உலகில் தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள். படிப்பை முன்னிறுத்தி அவர்களின் தனித்திறமைகளை புறந்தள்ளி விடுகிறார்கள். வெறும் படிப்பு மட்டுமே ஒரு குழந்தையை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லாது. தனித்திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமயோசிதமாக செயல்படும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். அவற்றை வளர்ப்பதற்கு முயற்சிக்காமல் கல்வியில் மட்டுமே சாதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு கூட மதிப்பளிப்பதில்லை.

    இத்தகைய போக்கு குழந்தைகளிடத்தில் பதற்றம், மன அழுத்தம், சோர்வுக்கு வித்திடும். குழந்தைகளின் விருப்பங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை கேட்டறிந்து அதில் போதுமான நேரத்தை செலவளிக்க அனுமதிக்க வேண்டும். படிப்புடன் தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்ளும் குழந்தைகள் வாழ்க்கையில் சாதிக்கிறார்கள். அதனை புள்ளி விவரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

    தனிப்பட்ட விருப்பம்

    பெரும்பான்மையான பெற்றோர் தங்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதற்கு குழந்தைகளை நிர்பந்திக்கிறார்கள். குழந்தைகளின் தேவைகளை விட தங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். தங்களுடைய விருப்பப்படி நடந்து கொள்ளாவிட்டால் கடுமையாக தண்டிக்கவும் செய்வார்கள். குழந்தைகளின் தனிப்பட்ட விருப்பங்களை கவனத்தில் கொள்வதில்லை. உங்கள் விருப்பங்களை குழந்தைகளிடத்தில் திணிப்பது சுயநலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களை வழிநடத்துவதே சரியானது.

    தண்டனை வழங்குதல்

    குழந்தைகள் சிறு தவறு செய்தால் கூட கடுமையாக திட்டுவது, அடிப்பது, மனரீதியாக காயப்படுத்துவது போன்ற கடுமையான அணுகுமுறையை பல பெற்றோர் கையாளுகிறார்கள். குழந்தைகளை திருத்துவதற்கு இந்த அணுகுமுறைதான் சரியானது என்று கருதுகிறார்கள். அப்படி கடுமையாக நடந்து கொள்வது உறவில் விரிசலை ஏற்படுத்தும். மீண்டும் தவறு செய்தால் பெற்றோரிடம் கூறாமல் மறைப்பதற்கு முயற்சிக்கும். அது தவறான பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்வதற்கு அடிகோலிடும். செய்த தவறுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக இனி தவறு நடக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிடலாம். அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளலாம். அவர்களின் பேச்சில் வெளிப்படும் தவறுகளை திருத்துவதற்கு முயற்சிக்கலாம்.

    ஒப்பிடுதல்

    குழந்தைகளை சக குழந்தைகள், உடன்பிறந்தவர்களுடன் ஒப்பிடுவது இயல்பானது. இந்த அணுகுமுறை குழந்தையின் சுயமரியாதைக்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைகளிடமும் தனித்திறமைகள் வேறுபடும். அவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளின் தனித்துவமான குணங்கள் மற்றும் சாதனைகளை கொண்டாடுங்கள். அவர்களின் ஆர்வங்களை ஊக்குவியுங்கள். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிருங்கள். ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்குங்கள்.

    ×