என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
    • புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடின்மை அல்லது அடக்க முடியாத நிலைமையை சிறுநீர் கசிவு என்று அழைக்கிறோம். இது ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இது பொதுவாக நான்கு வகைப்படும்.

    அழுத்த கசிவு:

    உடல் ரீதியான செயல்பாட்டால் ஏற்படுவது. உதாரணமாக இருமல், தும்மல், அதிக எடை தூக்குதல், உடல் பருமன், மலச்சிக்கல் போன்ற காரணிகள் சிறுநீர்பையில் அழுத்தத்தை உண்டாக்கி சிறுநீர்கசிவை ஏற்படுத்துகிறது.

    அவசர சிறுநீர் கசிவு:

    சர்க்கரை நோய், வயது முதிர்வு அல்லது நரம்பியல் பிரச்சனை (அல்சைமர்ஸ், பார்கின்சன், மல்டிபிள் ஸ்கிளராஸிஸ் நோய்கள்), பக்கவாதம் பாதிப்பு, சிறுநீர்பாதை தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    நிரம்பி வழியும் சிறுநீர் கசிவு:

    இதில் சிறுநீர் கழித்த பிறகும் சிறுநீரை முக்கி வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெரும்பாலும் சர்க்கரை நோய் அல்லது புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    கலப்பு நீர்க்கசிவு:

    இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுநீர் கசிவு வகைகளின் அறிகுறிகள் இருக்கிறது.

    சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர் கசிவு ஏற்பட முக்கிய காரணம்:

    1) நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் அது சிறுநீர் பாதை தொற்றுக்கு வழி வகுத்து சிறுநீர் கசிவை ஏற்படுத்துகிறது

    2) உடல் பருமன் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர்ப்பையில் ஏற்படும் அழுத்தம்

    3) சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தும் நரம்புகளின் பாதிப்பு

    4) ஒரு சிலருக்கு கூடுதலாக உள்ள நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவு (டையூரிடிக்ஸ், கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், மன அழுத்தத்திற்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகள்)

    சிறுநீர் கசிவை கட்டுப்படுத்தும் வழிகள்:

    * ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    * புகை, மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

    * காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * இடுப்புக்குழி தசைகளும், சிறுநீர்ப்பை தசைகளும் துவண்டு விடாமல் இருக்க கீகல் பயிற்சி என்னும் அடி வயிற்று தசையை இழுக்கும் உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும்.

    * உடல் எடையை குறைக்க வேண்டும்.

    * சிறுநீர்ப்பை தசையை தளர்த்தும் மருந்துகள் (மைராபெக்ரான்), ஆண்டிகோலினர்ஜிக்ஸ் (டோல்டரோடைன், டாரிபெனாசின், சோலிபெனாசின்) போன்ற மருந்துகளை மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொண்டால், * சிறுநீர் கசிவு பிரச்சனையை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

    எக்காரணம் கொண்டும் மருத்துவர் அனுமதியின்றி இம்மருந்துகளை உபயோகிக்க கூடாது.

    • சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
    • குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை எழுந்ததும் பலர் கட்டாயம் காபி குடிப்பதை விரும்புவார்கள். காபி குடிக்காவிட்டால் அந்த நாளே ஓடாது என்று சொல்லுவார்கள். அதே போல், இன்றைய காலத்தில் நம் வாழ்வோடு குளிர்பானங்கள் இரண்டற கலந்துவிட்டன என்றே கூறலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதனை அருந்தாமல் இருக்க முடிவதில்லை.

    ஒருமுறை சுவை பழகி போனவர்களுக்கு இன்னும் சொல்லவே வேண்டாம். ஆனால், இயற்கையாக அல்லாத செயற்கையாக விற்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. அவற்றில் கெமிக்கல், சர்க்கரை மற்றும் தண்ணீர் இதைத் தவிர ஒன்றுமே இருக்காது. எந்த சத்துமில்லாத, ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள இவ்வகை குளிர்பானங்களை எதற்காக விரும்பி அருந்துகின்றனர் என்று தெரியாமலே பலர் அருந்தி வருகின்றனர்.

    சாப்பிட்டது செரிமாணம் ஆவதற்கு பலரும் குளிர்பானங்களை அருந்துவார்கள். சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில், குளிர்பானங்களை அருந்தாமல் இருப்பது உடலுக்கு பல வழிகளில் நல்லது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.

    குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் (பல் பற்சிப்பியை சேதப்படுத்துகிறது), அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் (குழிவுகளை உண்டாக்குகிறது) மற்றும் அசெசல்பேம் பொட்டாசியம் (புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது) உள்ளது என்று வோக்கார்ட் மருத்துவமனையின் டாக்டர் அனிகேத் முல் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறைச்சியின் தோலில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உருவாகத் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
    • இறைச்சியை வறுப்பதற்கு முன் 20 நிமிடங்கள் ஊற வைப்பதால் ஹெட்டோரோசைக்ளிக் அமின்களின் உருவாக்கத்தை குறைக்கலாம்.

    இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எல்லா சீசனிலும் டாப் டிரெண்டிங் உணவுகளில் ஒன்றாக இருப்பது கிரில் சிக்கன். சில நாடுகளில் கோடை காலத்தில் விரும்பி சாப்பிடப்படும் உணவாக வறுக்கப்பட்ட கிரில் சிக்கன் (Grilled meat) இருந்து வருகிறது.

    பல்வேறு உலக நாடுகளில் குக்அவுட்கள் மற்றும் பார்பிக்யூ, பர்கர்கள், ஹாட் டாக், ஸ்டீக்ஸ் மற்றும் சிக்கன் ஆகியவற்றை வார இறுதியில் கோடை உணவாக உள்ளன. நம் நாட்டில் சிறுவர்கள், இளைஞர்கள் என பெரும்பாலானோர் கிரில் சிக்கனை விரும்பு உண்கின்றனர். ஆனால் கிரில் சிக்கன் சாப்பிடுவதால் புற்றுநோய்க்கான ஆபத்து அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    மிகச்சிறந்த சமையல் முறை உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக இருக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஹீட்டோரோசைக்ளிக் அமின்கள் அல்லது HAs மற்றும் பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் அல்லது PAHs ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் ஆகும்.

    வறுக்கப்பட்ட இறைச்சி எப்படி புற்றுநோயாக மாறுகிறது?

    நீங்கள் அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது மற்றும் நேரடியாக தீயில் சமைக்கும்போது, இறைச்சியின் தோலில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உருவாகத் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    அவற்றில் இரண்டுதான் HCAகள் மற்றும் PAHக்கள். இவற்றை தொடர்ச்சியாக சாப்பிடும் போது பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இருப்பினும், எப்போதாவது பார்பிக்யூ செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    இறைச்சியில் உள்ள அமினோ அமிலங்கள், சர்க்கரைகள் மற்றும் கிரியேட்டின் ஆகியவை உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து ஹீட்டோரோசைக்ளிக் அமின்களை உருவாக்குகின்றன. HA-கள் மற்றும் PAH-கள் பிறழ்ந்தவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவை உயிரணுக்களின் டிஎன்ஏவில் மாற்றங்களுக்கு வழிவகுத்து அவற்றை புற்றுநோயாக மாற்றும்.

    வறுக்கப்பட்ட இறைச்சியில் புற்றுநோயைக் குறைக்கும் வழிகள்:

    இறைச்சியை வறுப்பதற்கு முன் 20 நிமிடங்கள் ஊறவைப்பதால் ஹெட்டோரோசைக்ளிக் அமின்களின் உருவாக்கத்தை 90 சதவிகிதம் குறைக்கலாம்.

    நிபுணர்களின் கூற்றுப்படி, உணவுகள் குறைந்த வெப்பநிலையில் சமைக்கப்பட வேண்டும். ஆனால், நீண்ட நேரம் சமைக்க வேண்டும்.

    ஒவ்வொரு உணவையும் அதற்கு ஏற்ற பக்குவத்தில் சமைத்து, சூடாகவே அதனை சாப்பிடுவது, சாப்பிடும் முறையில் அவசரம் இன்றி, உணவை முழுமையாக மென்று விழுங்குவது உள்ளிட்டவைகளை பின்பற்றினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவுக்கு குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • CPR பயிற்சி பற்றிய விழிப்புணர்வு அவசியம்.
    • மார்பில் கைகளை வைத்து 30 முறை அழுத்தவும்.

    இதய பிரச்சனை என்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து வயதினருக்கும் சர்வ சாதாரணமாக வரும் பிரச்சனையாக மாறிவிட்டது. தவறான பழக்கவழக்கங்கள், முறையில்லாத உணவுமுறை மற்றும் உடல் உழைப்பு இல்லாத வேலை, உடல் பருமன், மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.

    அந்த வகையில் இதயம் தொடர்பான பிரச்சனையில் ஒன்று திடீரென்று இதயம் செயல்படுவது நின்று போவது. இவ்வாறு இதயம் செயல்படுவதில் திடீரென்று தடை ஏற்படுவது CPR எனப்படும் உயிர் மீட்பு சுவாசம் பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தன்னிச்சையான ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்க மருத்துவ உதவி கிடைக்கும் வரை மூளையின் செயல்பாட்டை பாதுகாப்பதற்காக இது செய்யப்படுகிறது. இதனை அறிந்துகொள்வது மிகவும் எளிமையான செயல்முறையாகும்.

    முதலில் நோயாளியை ஒரு சமமான மேற்பரப்பில் படுக்க வைத்து உங்கள் இரு கைகளையும் மார்பின் மையத்தில் வைத்து வழக்கமான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

    மார்பில் கைகளை வைத்து 30 முறை அழுத்தவும். ஒவ்வொரு அழுத்தத்திற்கும் பிறகு மார்பு இயல்பு நிலைக்கு சில நொடிகள் இடைவெளி கொடுக்க வேண்டும். இதன் பின்னர் வாயோடு வாய் வைத்து CPR பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    நாம் CPR பயிற்சியை சரியாக கொடுத்தால் நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    உங்கள் கைகளை ஒன்றன் மீது ஒன்றாக இருக்குமாறு வைத்து விரல்களுக்குள் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மார்பின் மையத்தில் கைகள் வைக்கப்படும் அதே வேளையில் உங்களுடைய தோள்பட்டை கைகளுக்கு நேராக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கைகளுக்கு சரியான அழுத்தம் கிடைக்காது.

    CPR பயிற்சியின் போது மூச்சுக்காற்றை உட்செலுத்தும் நிலை வந்தால் நோயாளியின் தலையை ஒரு கையில் பின்னால் சாய்த்து பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் கன்னத்தை உயர்த்தி பிடித்துக் கொள்ள வேண்டும். இது நுரையீரலுக்கான காற்றுப்பாதை திறந்திருப்பதை உறுதி செய்கிறது. நீங்கள் 30 முறை மார்பில் அழுத்தம் கொடுக்கிறீர்கள் என்றால் மூச்சுக்காற்றை உட்செலுத்துவது 2 முறை பண்ணலாம்.

    BLS பயிற்சி குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், டிராபிக் போலீஸ், தீயணைப்பு படையினர் என அனைவருக்கும் விழிப்புணர்வாக மருத்துவர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.

    • வெற்றிலை போடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அதிகரிக்கும்.
    • வெற்றிலை பற்களை சுத்தம் செய்யும்.

    * வெற்றிலையில் உள்ள முக்கிய வேதிப்பொருள் செரிமானத்தை மேம்படுத்தும்.

    * வெற்றிலையை சாப்பிடுவது வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவும்.

    * வெற்றிலையை சூடேற்றி மூட்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

    * வெற்றிலை பற்களை சுத்தம் செய்யும்.

    * வெற்றிலையில் உள்ள 'அர்கோலைன்' என்ற வேதிப்பொருள் வாய், தொண்டை மற்றும் உணவுக் குழாயில் புற்றுநோயை ஏற்படுத்தும்.

    * வெற்றிலை போடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அதிகரிக்கும்.

    * பற்களை கறைபடுத்தும், ஈறுகளை பாதிக்கும், வாயில் புண்கள் ஏற்படுத்தும், பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

    * வெற்றிலை போடுவதால் சில நன்மைகள் இருந்தாலும், அதனால் ஏற்படும் தீமைகள் அதிகம். எனவே, வெற்றிலையை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

    • தலை மற்றும் கழுத்து புற்றுநோய் குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
    • முதல் 2 நிலைகளில் நோய் கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணப்படுத்தப்படுகின்றனர்.

    இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை நடத்திய ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    இதில் 1,869 புற்றுநோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் 26 சதவீதம் பேருக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

    டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை, மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை தனது ஹெல்ப்லைன் எண்ணில் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளைத் தொகுத்து இந்த ஆய்வை நடத்தியது.

     

    இது தொடர்பாக மூத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது:

    இந்தியாவில் அதிக புகையிலை நுகர்வு மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய், குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.

    சுமார் 80-90% வாய் புற்றுநோய் நோயாளிகள் புகையிலை அல்லது மெல்லும் புகையிலையை உபயோகிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    முதல் 2 நிலைகளில் நோய் கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணப்படுத்தப்படுகின்றனர். முறையான பரிசோதனை இல்லாததால்தான் இந்தியாவில் மூன்றில் 2 பங்கு பேருக்கு புற்றுநோய் தாமதமாக கண்டறியப்படுகிறது.

    எனவே புகையிலை பழக்கத்தை கைவிடவும், நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஆரம்ப பரிசோதனைகள் அவசியம் என்கிற விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும்.
    • உடலின் பழுதுபார்க்கும் செயல்முறைகளையும் ஊக்குவிக்கும்.

    காய்ச்சல் வந்தால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு அசவுகரியம், மந்தம், பலவீனம் போன்றவை ஏற்பட்டு அன்றாட செயல்பாடுகள் முடங்கிப்போய்விடும். அப்படி அடிக்கடி காய்ச்சல் வருவதோ, ஒருசில நாட்களை கடந்தும் நீடிப்பதோ ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

    ஆனால் எப்போதாவது திடீரென்று காய்ச்சல் வந்தால் அது உடல் நலனுக்கு நன்மை செய்யும். உடலின் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலை 99.1 டிகிரி பாரன்ஹீட் முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரைக்குள் இருந்தால் சில ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அவை பற்றி தெரிந்து கொள்வோம்.

    ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்

    காய்ச்சலின் போது, உடலில் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும். இந்த செல்கள்தான் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முன்னணி வீரர்கள்போல் செயல்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளை கண்டறிந்து அவற்றின் மீது தாக்குதல் தொடுப்பது இவற்றின் பணியாகும்.

    காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பது, எலும்பு மஜ்ஜையில் அதிக ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டும் என்பது ஆய்விலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்முறையின்போது நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு உடலின் செயல்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டு நோயின் தீவிரத்தையும் குறைக்கும்.

    பாக்டீரியா - வைரஸ் வளர்ச்சி குறையும்

    பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி அவை குறைவான அளவுக்கு வளர்வதற்கு சாதகமான சூழலை காய்ச்சல் உருவாக்கும். நமது உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (98.6 டிகிரி பாரன்ஹீட்). இந்த வெப்பநிலையை பல நோய்க்கிருமிகள், நுண்ணுயிரிகள் விரும்புகின்றன.

    காய்ச்சல் காரணமாக உடலின் வெப்பநிலை உயரும்போது இவற்றின் செயல்பாடுகள் முடங்கும். அதிக உடல் வெப்பநிலை, இன்புளூயன்ஸா வைரஸ் போன்ற சில வைரஸ்களின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் தடுக்கும். அவற்றின் வளர்ச்சியை குறைப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும். நோய்த்தொற்றுகளை அழிப்பதற்கு அதிக நேரத்தையும் அளிக்கும்.

    வைரஸ் எதிர்ப்பு செயல்பாட்டில் முன்னேற்றம்

    காய்ச்சலினால் ஏற்படும் அதிக உடல் வெப்பநிலை நோய்க்கிருமிகளை குறைப்பதோடு, சில நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். சைட்டோகைன்கள் எனப்படும் புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இவை உடலில் உள்ள ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மூலக்கூறுகளின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும்.

    மேலும் காய்ச்சல் ஏற்படுத்தும் வெப்பநிலை நியூட்ரோபில்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் செயல்திறனை மேம்படுத்தும். அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு முக்கியமானவை.

    பழுதுபார்க்கும் செயல்முறையை மேம்படுத்தும்

    காய்ச்சல் உடலின் பழுதுபார்க்கும் செயல்முறைகளையும் ஊக்குவிக்கும். அதிக வெப்பநிலை சேதமடைந்த புரதங்களை சரிசெய்ய உதவும். செல்களை அழுத்தத்தில் இருந்தும் பாதுகாக்கும்.

    இந்த புரதங்கள் செல்களை பராமரிப்பதிலும், அவற்றை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக வெப்பநிலை புரதங்களின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் காய்ச்சல் அல்லது வீக்கத்தால் சேதமடைந்த செல்கள் சரிசெய்யப்படுவதற்கு வழிவகை செய்யும்.

    நச்சுக்களை நீக்கும்

    காய்ச்சலின் போது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும். நச்சுத்தன்மை நீங்குவதற்கான செயல்முறைக்கும் உதவும். குறிப்பாக வளர்சிதை மாற்ற விகிதங்கள் அதிகரிப்பது வியர்வை மற்றும் நச்சுக்களின் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.

    வியர்வை உடலில் இருந்து சில நச்சுக்களை அகற்ற உதவும் என்பதை ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே, காய்ச்சலால் தூண்டப்பட்ட வியர்வை தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும்.

    நோய் எதிர்ப்பு திறன் கூடும்

    காய்ச்சல் உடலின் நோய் எதிர்ப்பு நினைவகத்தை மேம்படுத்தும். நோய்க்கிருமிகளுக்கு எதிராக நீண்டகால பாதுகாப்பிற்கு இது முக்கியமானது. அதிக வெப்பநிலை டி செல்கள் மற்றும் பி செல்கள் போன்ற நோய் எதிர்ப்பு நினைவக செல்களை உருவாக்குவதை மேம்படுத்தும். உண்மையில் காய்ச்சலை அனுபவிப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்கால நோய் தொற்றுகளுக்கு எதிராக பாதுகாக்க வழிவகை செய்யும்.

    • நீங்கள் கற்றுக் கொள்வது உங்களுக்காகத் தான்.
    • செய்யும் வேலைகளை முன்பை விட புதிய யுக்திகள், வேகத்தோடு அணுகுங்கள்.

    ஒவ்வொரு நாளும் நாம் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நாம் விருப்பத்துக்கும், இலக்குகளுக்கும் ஏற்றவாறு வேலை செய்கிறோம். என்னதான் மாதச் சம்பளம் என்ற ஒரு விஷயம் இருந்தாலும் சில விஷயங்கள் நம்மை சிறப்பாக வேலை செய்ய தூண்டும். அது நம் அலுவலக சூழல் என்பது தொடங்கி ஆர்வம், தேவை என பல விஷயங்களை பொறுத்து அமைகிறது. ஆனால் இந்த மூன்று காரணங்களுக்காக நீங்கள் வேலை செய்வது சம்பளம், பதவி என்பதைத் தாண்டி உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும்.

    நீங்கள் அலுவலகத்தில் மகிழ்ச்சியாக பணியாற்ற உதவும், 3 முக்கிய யுக்திகள் இவை...

    1. நீங்கள் கற்றுக்கொள்வது உங்களுக்காக!

    அலுவலகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். இங்கு கற்கும் விஷயங்கள் அலுவலக இலக்குகளுக்காக மட்டுமல்ல, நீங்கள் கற்றது கண்டிப்பாக உங்கள் வளர்ச்சிக்கும் உதவும் என்ற திறந்த மனதோடு கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக் கொள்வது உங்களுக்காகத் தான். இது உங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். அதிகம் கற்றுக்கொள்ளுங்கள்.

    2. நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்!

    நீங்கள் ஒரே வேலையைச் செய்கிறீர்கள். சம்பளம் மட்டும் மாறுகிறது, வேலை அதே வேலை தான் என நினைக்காமல், நீங்கள் செய்யும் வேலைகளை முன்பை விட புதிய யுக்திகள், வேகத்தோடு அணுகுங்கள். அந்த வேலையில் நிபுணத்துவம் பெறுங்கள். உங்களுக்கு அது நற்பெயரைக் கொடுக்கும். அந்த நற்பெயர் உங்களது பதவி உயர்வு, சம்பளம் ஆகியவற்றில் தானாகவே தாக்கத்தை ஏற்படுத்தும்.

    3. இன்ப்ளுயன்ஸ் செய்யுங்கள்!

    உங்களது வேலையைத் தாண்டி உங்களது குணத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துங்கள். அருகில் இருப்பவர்களை இன்ப்ளுயன்ஸ் செய்யுங்கள். இது செயல்திறனையும், தனிப்பட்ட முறையில் தலைமைப் பண்பையும் வளர்க்கும். அணியில் சில தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் நீங்கள் சொல்லும் போது அதனை ஏற்றுக் கொள்ளும் சூழலும், நீங்கள் தவறு செய்யும் போது உங்களிடம் தயக்கமின்றி கூறி அதனை திருத்தவும் அணியினருக்கு இந்த செயல்கள் உத்வேகத்தை தரும்.

    • உடலில் கபம் சேர்வதைத் தடுக்கிறது.
    • தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கிறது.

    பொதுவாக செரிமான சக்திக்கு நல்லது என்பதால் அந்த காலத்தில் மூன்று வேளையுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது. மற்றும் வெற்றிலை, பாக்கு போட்டால் பற்கள் கறையாகும் என்று பல் மருத்துவர்கள் அதை தவிர்க்க சொல்கிறார்கள்.

    வெற்றிலை, பாக்கு போடுவது மிகவும் சரியானதே. நோயில்லாத வாழ்க்கைக்கு நம் முன்னோர்கள் காலம் காலமாகப் பின்பற்றிய நல்ல வழக்கம் இது. இதை ஆரோக்கியத்துக்கான அன்றாடப் பழக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

    வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும், கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின், வைட்டமின் சி மற்றும் 44 அளவிலான கலோரி ஆகியவை நிறைந்துள்ளது.

    வெற்றிலை குறித்து அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ள வெற்றிலையை பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நம் உடலில் வாதம், பித்தம், கபம் என மூன்று விஷயங்கள் உண்டு. இந்த மூன்றும் குறையவும் கூடாது, அதிகரிக்கவும் கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும். வெற்றிலை போடுவது உடலில் கபம் சேர்வதைத் தடுக்கிறது.

    ஆஸ்துமா, தலையில் நீர்கோர்த்தல் போன்ற பல விஷயங்களுக்கு வெற்றிலை மருந்தாக செயல்படுகிறது. வெற்றிலை போடுவதால் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் கிடைக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது. எலும்புகளுக்கும் வலுசேர்க்கக்கூடியது. வாயுத்தொல்லை வராது.

    வெற்றிலையோடு வால்மிளகு, ஏலக்காய், கிராம்பு, சிறிது ஜாதிக்காய் சேர்த்து சாப்பிடுவது செரிமான சக்தியை இன்னும் சிறப்பாக்கும்.

    வெற்றிலை பாக்கு போடுவதால் சில வகையான தைராய்டு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வெற்றிலை போடுவதால் தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கிறது.

    தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு, தேவைப்பட்டால் கிராம்பு சேர்த்து போடுவதற்கு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது நல்ல மாற்றத்தினை உணரமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    • கருமுட்டை வளர்ச்சிக்கு சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.
    • மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள்.

    கருத்தரித்தலில் பெண்களுக்கு முக்கியமானது கருமுட்டை, அதே போன்று ஆண்களுக்கு விந்தணுக்களின் தரம் முக்கியமானது. இவற்றில் உண்டாகும் குறைபாடுகள் கருத்தரித்தலில் சிக்கலை உண்டு செய்துவிடும்.

    ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே மூன்று லட்சம் கருமுட்டைகளை கொண்டு தான் பிறக்கின்றன. குழந்தை வளரும் போது இந்த கருமுட்டையின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்.

    பெண் குழந்தை வளர்ந்து பூப்படையும் போது ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை மட்டுமே முழு வளர்ச்சி அடைந்து கர்ப்பபையை சென்றடையும். பிறகு இவை விந்துவுடன் இணைந்து கருத்தரித்தலை உண்டு செய்யும்.

    கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணையாத நிலையில் கர்ப்பப்பை சுவருடன் இணைந்து ரத்தமாக வெளியேறும். இந்த உதிரபோக்கு தான் மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.

    அதனால் தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருமுட்டை என்பது மிக முக்கியமானதாக பார்க்கபடுகிறது.

    கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் ஆரோக்கியம் என்பது உணவிலும் அடங்கியிருக்கிறது. முழு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் தரமான விந்தணுக்கள் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கும்.

    கருவுற விரும்பும் தம்பதியர்கள் மருத்துவரை அணுகும் போது கருமுட்டை வளர்ச்சி மற்றும் விந்தணுக்கள் குறைபாடு பற்றி கூறியிருந்தால் நீங்கள் உங்கள் உணவு திட்டத்தை மாற்றுங்கள்.

    அதில் முதலாவதாக புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிருங்கள். இருவரும் மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள். தூக்கம் போதுமான அளவு இருக்கட்டும்.

    விந்தணுக்கள் அதிகரிக்க மாத்திரைகள் டாக்டர் கொடுத்திருந்தாலும் வீட்டில் உணவு முறையில் ஆரோக்கியத்தை கொண்டு வரலாம். அதில் முதலாவது பச்சைகாய்கறிகள். குறிப்பாக கீரைகள். கீரையில் முருங்கைக்கீரை கொடுக்கலாம்.

    பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் போன்றவை சேர்க்க வேண்டும். பழங்காளில் ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.

    அதே போன்று காய்கறிகள், பழங்கள் என எதுவாக இருந்தாலும் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்கள், காய்கறிகள் எடுத்துகொள்ள வேண்டும்.

    பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் இந்த உணவுகள் உதவும் என்றாலும் அதோடு பெண்கள் சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.

    வாழைப்பழம், ஆரஞ்சு, அவகேடோ என இன்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த பழங்களை எடுத்துகொள்ள வேண்டும்.

    மேலும் நல்ல ஊட்டச்சத்து என்பது நீங்கள் விரும்பும் உணவுகளை தவிர்க்க வேண்டுமென்பது அல்ல. சரியான உணவுகளை எடுத்துகொள்வது. குழந்தையை பெற முயற்சிக்கும் போது புரதம், கார்போஹைட்ரேட், ஆரொக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சீரான உட்கொள்ளலுடன் ஆரோக்கியமான ஊட்டச்சத்து அவசியம்.

    • உணவு உண்ட பிறகு நடைபயிற்சி செய்வதும் உடலில் நல்ல செரிமானப் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது.
    • கூடுதல் கலோரிகளை எரிக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது வேகமாக நடக்க வேண்டும்.

    இன்றைய அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரமே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்வதன் மூலமாக தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

    ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்றுதான் பல காலமாக கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அதைவிட குறைந்த தூரம் நடப்பதன் மூலமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

    உடல் எடையை எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்க, உலகம் முழுவதும் உள்ள மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு நடைபயிற்சி.

    தினமும் 5,000 அடிகளுக்கும் குறைவாக நடப்பது மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று ஆய்வு முடிவு கூறுகிறது.

    இதற்கிடையே சாப்பிட்ட பிறகு உட்காருவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    ஒவ்வொரு உணவிற்கும் பிறகு நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நோய்களைத் தடுக்க ஒரு நாளைக்கு 100 நடைகள் (steps) நடக்க வேண்டும்.

    சரியாக சாப்பிடுவது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதற்கு உங்கள் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் ஆரோக்கியமும் அடங்கி உள்ளது.

    ஆயுர்வேதத்தின்படி, நீங்கள் சாப்பிட்ட பிறகு நடக்க வேண்டும், 100 நடைகள் போதும். இது "ஷட்பாவலி" என்று அழைக்கப்படுகிறது.

    "ஷட்பாவலி" என்பது ஒரு மராத்தி வார்த்தை என்று வல்லுநர்கள் விளக்குகிறார்கள். இந்த பழக்கம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது மற்றும் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உணவுக்குப் பிறகு நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

    நீங்கள் செரிமான பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 100 நடைகள் நடக்க முயற்சிக்க வேண்டும்.

    உணவு உண்ட பிறகு நடைபயிற்சி செய்வதும் உடலில் நல்ல செரிமானப் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது.

    விறுவிறுப்பான நடைபயிற்சியை முயற்சிக்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், உங்கள் செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.

    சாப்பிட்ட பிறகு 100 நடைகள் நடப்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்க உதவுகிறது.

    ஒவ்வொரு உணவிற்கும் பிறகு ஒரு சிறிய நடைபயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களைத் தடுக்க, உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடக்க முயற்சிக்க வேண்டும்.

    அதிக டிரைகிளிசரைடு அளவுகள் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளிட்ட பல நிலைமைகளை அதிகரிக்கலாம். இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை உயர்த்தும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது டிரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    கலோரிகளை எரிப்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழியாகும். நீங்கள் தினமும் போதுமான உடற்பயிற்சி செய்யவில்லை, ஆனால் உடல் எடையை குறைக்க விரும்பினால், உணவுக்குப் பிறகு நடக்க வேண்டும்.

    கூடுதல் கலோரிகளை எரிக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது வேகமாக நடக்க வேண்டும்.

    விறுவிறுப்பான நடைபயிற்சி சிறந்த வழி. எனவே, நீங்கள் எவ்வளவு விரைவாக நடக்கிறீர்களோ, அவ்வளவு கலோரிகளை எரிக்க முடியும்.

    உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது செரிமானத்தை மெதுவாக்கும். இது உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். தாகமாக உணர்ந்தால் உணவுக்கு இடையில் தண்ணீர் குடிக்கலாம்.

    சாப்பிட்ட உடனேயே தூங்க கூடாது. ஏனெனில் இது உடல் கொழுப்பை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. மேலும், உணவு சரியாக ஜீரணமாகாது.

    சாப்பிட்ட உடனேயே நீண்ட தூரம் நடப்பது உங்களுக்கு ஆரோக்கியமற்றது மற்றும் செரிமான பிரச்சனைகளை அதிகரிக்கிறது.

     

    உங்கள் செரிமான ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உணவுக்குப் பிறகு நீச்சல், பயணம் மற்றும் உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

    விறுவிறுப்பான நடைபயிற்சி உங்களுக்கு நல்லது என்றாலும், சாப்பிட்ட உடனேயே வேகமாக நடக்காதீர்கள். மெதுவான வேகத்தில் தொடங்கி வேகத்தை எடுக்க வேண்டும்.

    எனவே, சாப்பிட்ட பிறகு உட்காராதீர்கள். உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க உணவுக்குப் பிறகு குறைந்தது 100 நடைகள் நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    • நோயாளிகளின் சளி, உமிழ் நீர், வியர்வை மூலமாக பரவுகிறது.
    • தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும்.

    கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 50 பேருக்கும் மேற்பட்டோர் வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கேரளாவில் பரவும் நிபா வைரஸ் பாதிப்பு எல்லையோர தமிழக பகுதிக்குள் பரவாமல் இருக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை மற்றும் நீலகிரிக்கு பஸ்கள் மற்றும் வாகனங்களில் வருபவர்கள் எல்லையோரம் தீவிர மருத்துவ சோதனைக்கு பின்னரே இங்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு, தாளூர் ஆகிய 5 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு கண்காணிக்கிறார்கள். வாகனங்களில் வருபவர்கள் யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி பிரச்சனை உள்ளதா என சோதித்து பார்க்கிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளுக்கு துண்டுபிரசுரங்களையும் வினியோகித்து வருகிறார்கள்.

    அதே போல கோவை-கேரளா எல்லையில் வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பு தற்காலிக முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நிபா வைரசின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து நீலகிரி மாவட்ட

    நிர்வாகம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றி ஆகியவற்றின் சிறுநீர், எச்சில் மற்றும் இதர திரவங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சளி, உமிழ் நீர் மற்றும் வியர்வை மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் கடித்த பழங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

    நோய் அறிகுறிகள்

    கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவிழத்தல், மனக்குழப்பம், கோமா ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும். கிருமி தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் வெளிப்படும். மேலும் அறிகுறிகள் தென்பட்ட 24 மணி முதல் 48 மணி நேரத்துக்குள் தீவிர மயக்க நிலை, சுயநினைவிழத்தல் மற்றும் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தடுக்கும் முறைகள்

    1. விலங்குகள் கடித்த பழங்கள், காய்கறிகளை உபயோகப்படுத்தக் கூடாது.

    2. காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

    3. இறந்த வவ்வால்கள், பன்றிகள் இதர விலங்குகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    4. பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்த வேண்டும்.

    5. பொது இடங்களுக்கு சென்று வரும்போது சோப்பினால் கை கழுவுவதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    6. வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

    7. தேவையின்றி காடுகள் மற்றும் குகை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    8. காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    இதேபோல கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில் நிபா வைரஸ் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு உமிழ்நீர், சிறுநீர், சளி போன்றவை மூலம் நேரடியாகவும் பரவுகிறது.

    எனவே பொது இடங்களில் தும்மும் போதும், இருமும்போதும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.

    பொது சுகாதாரத்துறை சார்பாக தமிழ்நாடு- கேரளா எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் சுகாதாரக்குழு நியமிக்கப்பட்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். 

    ×