என் மலர்
பொது மருத்துவம்
- நோய்க்கிருமிகள் ஈறுகள் வழியாக நமது இரத்த ஓட்டத்தில் சென்று உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- ஒரு சில பற்களை இழந்தவர்களைக் காட்டிலும், பெரும்பாலான பற்களை இழந்தவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகம்.
மனிதனுக்கு பற்கள் மிகவும் இன்றியமையாதது. உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் உதவுகிறது. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.
பற்களை இழப்பது எப்போதும் விரும்பத்தகாதது. பல் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தான இதய நோய்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
மேரிலாந்து பல்கலைக்கழகம், பெல்கிரேட் பல்கலைக்கழகம், ஷார்ஜா பல்கலைக்கழகம், கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் மற்றும் பலவற்றின் சர்வதேச நிபுணர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு ஜர்னல் ஆஃப் எண்டோடோன்டிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பற்கள் இழப்பு மற்றும் ஆபத்தான மாரடைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் சில ஆய்வுகள் இந்த இரண்டு விஷயங்களும் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றன, மற்றவை அவை அப்படியில்லை என்று கூறுகின்றன.
இதய நோய்களுடன் பல் இழப்பை இணைப்பது முதலில் ஒரு நீட்சியாகத் தோன்றலாம் ஆனால் நோய்க்கிருமிகள் ஈறுகள் வழியாக நமது இரத்த ஓட்டத்தில் சென்று உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
"எங்கள் கண்டுபிடிப்புகள் பல் இழப்பு என்பது ஒரு பல் பிரச்சனை மட்டுமல்ல, இருதய நோய் இறப்பை கணிசமாக முன்னறிவிப்பதாகவும் தெளிவாகக் காட்டுகிறது," என்கிறார் அமெரிக்காவின் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தின் எண்டோடான்டிஸ்ட் அனிதா அமினோஷாரியா.
ஒரு சில பற்களை இழந்தவர்களைக் காட்டிலும், பெரும்பாலான பற்களை இழந்தவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 66 சதவீதம் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தங்கள் ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் முன்னர் வெளியிடப்பட்ட 12 ஆய்வுகளின் தரவுகளை சேகரித்தனர்.
கார்டியோ-வாஸ்குலர் நோய்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் காரணிகள் வரும்போது புகைபிடித்தல், அதிக கொழுப்பு, முதுமை மற்றும் பல காரணிகள் நிச்சயமாக உள்ளன. ஆனால் பல் இழப்புடன் தொடர்பு உள்ளது. இந்த ஆய்வு தொடர்பான ஊடக அறிக்கைகள், இணைப்பு தொடர்புள்ளது என்றும் காரணமல்ல என்றும் கூறுகின்றன.
ஆனால் இது நிச்சயமாக உங்கள் வாயை சுத்தமாக வைத்திருக்கவும், உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு சிறந்த வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
- உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும்.
- உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது.
உடல் பருமன் பிரச்சினையை தவிர்ப்பதற்கும், அதிகரித்த உடல் எடையை பாதுகாப்பாக குறைப்பதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை..
உணவு-உடல் செயல்பாடு
உணவு பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு இவை இரண்டும் உடல் எடை குறைப்பு விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவு உட்கொள்ளும் விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுடன், உடல் இயக்க செயல்பாடுகளை தொடர்ச்சியாக பின்பற்றுவதும், கண்காணிப்பதும் உடல் எடை குறைவதற்கு உதவும் என்று ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
சர்க்கரை-கார்போஹைட்ரேட்
இன்றைய உணவு வழக்கத்தில் சர்க்கரையும், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளன. அவை உடல் பருமனுடன் தொடர்புடையவை. குறிப்பாக வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் கலந்த சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்க செய்யும். உடலில் கொழுப்பு சேர்வதை ஊக்குவிக்கும், இன்சுலின் வெளியிட்டை தூண்டும். எனவே இத்தகைய சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும். அதிக கலோரிகள் உட்கொள்வதை தடுக்கும். உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும்.
நார்ச்சத்து
நார்ச்சத்து என்பது தாவர அடிப்படையிலான கார்போஹைட்ரேட் ஆகும். இது உடல் எடை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது வயிறு நிறைவாக உட்கொண்ட திருப்தியை தரும். கலோரிகளை உட்கொள்ளும் அளவை குறைக்கும். முழு தானியங்களில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, பருப்பு மற்றும் நட்ஸ் வகைகள் போன்ற நார்ச்சத்து நிரம்பப்பெற்ற பொருட்களை உட்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை கொடுக்கும். அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்.
உடற்பயிற்சி
உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது. ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபடலாம். அத்துடன் உடற்பயிற்சி வல்லுனர்களின் வழிகாட்டுதல்படி வலு தூக்குதல் உள்ளிட்ட கடினமான பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இந்த இரண்டு வகை பயிற்சிகளும் கலோரிகளை எரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும், உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
பானங்கள்
சர்க்கரை கலந்த பானங்கள், மது, அதிக கலோரி கொண்ட காபி போன்ற பானங்கள் ஊட்டச்சத்து நன்மைகளை வழங்காமல் கலோரிகளை அதிகரிக்க செய்யலாம். கலோரி உட்கொள்ளலை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது கருப்பு காபியை தேர்வு செய்யலாம்.
- தாகம் நீரிழப்பின் முதல் அறிகுறியாகும்.
- நீரிழப்புடன் இருக்கும்போது ரத்த ஓட்டத்தின் அளவு குறையும்.
கோடை காலத்தில் சுட்டெரித்த வெயிலால் ஏற்பட்ட நீரிழப்பை ஈடுசெய்ய அடிக்கடி தண்ணீர் பருகியவர்கள் மழைக்காலம் தொடங்கியதும் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவார்கள். பருவநிலை மாறினாலும் போதுமான அளவு தண்ணீர் பருகாவிட்டால் நீரிழப்பு ஏற்பட்டு பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஒருசில அறிகுறிகள் உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருப்பதை உணர்த்தும். அவை...

தாகம்
இதுதான் நீரிழப்பின் முதல் அறிகுறியாகும். நீரிழப்புடன் இருக்கும்போது, தாகம் ஏற்படுவதை உணர்த்த உடல் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும். அதிக தாகமாக இருப்பதை நீங்கள் உணர்வதற்குள் ஓளரவு உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் அடிக்கடி சிறிதளவாவது தண்ணீர் பருக வேண்டும்.
சிறுநீர் கழித்தல்
உடல் நீரிழப்புக்கு ஆளாகும்போது, திரவங்களை சேமிக்க முயற்சிக்கும். அதனால் சிறுநீர் வெளியேறுவது தாமதமாகும். அல்லது குறைவாகவே சிறுநீர் வெளியேறும். நீண்ட நேரமாக சிறுநீர் கழிக்காமல் இருந்தால் உடல் நீரிழப்புக்கு உள்ளாகி இருப்பதை உணர்த்தும். வெளியேறும் சிறுநீரின் நிறமும் மாறி இருக்கும்.
வாய் வறட்சி
நீரிழப்பு ஏற்பட்டிருந்தால் வாய் மற்றும் உதடுகள் வறண்டு போய்விடும். உதட்டில் ஆங்காங்கே சிறு சிறு வெடிப்புகளும் ஏற்படக்கூடும். உதடு நன்றாக உலர்ந்த நிலையில் காணப்படும். வாய் துர்நாற்றமும் ஏற்படக்கூடும்.

சோர்வு - மயக்கம்
நீரிழப்புடன் இருக்கும்போது ரத்த ஓட்டத்தின் அளவு குறையும். அதன் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படும். அதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் உண்டாகக்கூடும். சிலருக்கு மயக்கமும் ஏற்படும்.

தலைவலி
நீரிழப்பு அதிகரித்துவிட்டால் தலைவலியை ஏற்படுத்தும்.ஏனெனில் திரவங்களின் பற்றாக்குறை காரணமாக மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிப்படையும். அதன் வெளிப்பாடாக தலைவலியால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
உலர்ந்த சருமம்
நீரிழப்பு உதட்டை மட்டுமல்ல சருமத்தை வறண்டுபோக செய்துவிடும். சருமத்தின் மென்மைத்தன்மை மாறிவிடும். சிலருக்கு அரிப்பு ஏற்படக்கூடும்.
கண்கள்
நீரிழப்பு கண்களையும் பாதிப்படையச் செய்துவிடும். நீரிழப்பை ஈடு செய்ய கண்களைச் சுற்றியுள்ள எல்லா இடங்களில் இருந்தும் திரவங்களை இழுக்கும். அதனால் கண்களை சுற்றி வறண்டு, குழி விழுந்தது போல் காட்சி அளிக்கும்.
தசைப்பிடிப்பு
நீரிழப்பு உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கும். அதன் காரணமாக தசைப்பிடிப்பு உண்டாகும். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது அதற்குப் பிறகோ தசைப்பிடிப்பால் அவதிப்பட வேண்டியிருக்கும். இதனை தவிர்க்க போதிய அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்ய வேண்டும்.
- பொதுவாக உடல் வியர்ப்பது என்பது இயல்பான ஒன்று.
- சிலருக்கு வியர்வை தொற்று பாதிப்பு எற்படலாம்.
பொதுவாக உடல் வியர்ப்பது என்பது இயல்பான ஒன்று. சாதாரண நிலையில், இயல்பான வெப்ப நிலை இருந்தும் அதிகமாக வியர்வை ஏற்படுவதை ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்று அழைக்கிறோம். இதில் வியர்வை சுரப்பிகளில், நரம்புகளின் அதீத செயல்பாட்டால் நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அதிகமாக வியர்வை உண்டாகிறது.
இது குறிப்பாக பாதங்கள், கைகள், முகம், நெற்றி, கழுத்து, அக்குள் போன்ற இடங்களில் இயல்பை விட அதிகமாக வியர்வையை ஏற்படுத்துகிறது.

இது இரண்டு வகைப்படும். காரணம் இல்லாமல் இளவயதில் அதிகமாக வியர்வை ஏற்படுவதை ஓவர் ஆக்டிவ் பெர்ஸ்பிரேஷன் அல்லது பிரைமரி ஹைபர் ஹைட்ரோசிஸ் என்று கூறுகிறோம். மரபணு காரணங்களால் இளம் வயதினருக்கு இது ஏற்படுகிறது.
நீரிழிவு நோய் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை, தைராய்டு பிரச்சனை, உடல் பருமன், மாதவிடாய் நிறுத்தம், மன அழுத்தம், நோய் தொற்று, பார்க்கின்சன் நோய் போன்ற மருத்துவ காரணங்களாலோ அல்லது மருந்துகளின் பக்க விளைவுகளாலோ வியர்வை அதிகமாக ஏற்படுவதை செகன்டரி ஹைபர் ஹைட்ரோசிஸ் என்று அழைக்கிறோம்.

ஹைபர் ஹைட்ரோசிஸின் காரணமாக சிலருக்கு வியர்வை தொற்று பாதிப்பு எற்படலாம். மேலும் உடலில் இருந்து வீசும் துர்நாற்றம் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது. இதற்கு தீர்வாக நீங்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்:
1) தினமும் 2 முறைக்கு மேல் குளிக்க வேண்டும்
2) பாலியஸ்டர் உடைகளை தவிர்த்து மெல்லிய மிருதுவான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், 3) கிளைகோ பைரோலேட் கிரீம், ஆன்டி பெர்ஸ்பிரன்ட்ஸ், நரம்பு தடுப்பான்கள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் பயன் தரும்.
மேற்கூறிய அனைத்தும் பலனளிக்கவில்லை எனில் போட்டாக்ஸின் போன்ற நியூரோடாக்ஸின் ஊசியை உட்செலுத்துதல், மைக்ரோவேவ் தெரபி, அயோன்டோபோரோசிஸ், சிம்பதெக்டமி போன்ற வழிமுறைகள் இப்பிரச்சனைக்கு தீர்வு தரும்.
இந்த முயற்சிகளும் தோல்வியுற்றாலும் கூட வியர்வை சுரப்பிகளை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றி இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
- கருத்தரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
- கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு செல்வதை தடுக்கும்.
சினைப்பைகளையும், கர்ப்பப்பையையும் இணைக்கும் பாலமாக சினைப்பாதைக் குழாய்கள் இருக்கின்றன. கருத்தரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சினைப்பாதைக்குழாய் அடைப்பின் விளைவாக, சினைப்பாதையில் கருவுறுதல் நடைபெறாது. அல்லது கருவுறுதல் நடைபெற்றாலும் (குழாய் அடைப்பின் காரணமாக), கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு செல்வதை, சினைப்பாதைக் குழாயில் உள்ள அடைப்பு தடுக்கும். இதனால் சினைப்பாதைக் குழாயில் இடம்மாறிய கர்ப்பம் ஏற்படும்.

சினைப்பாதைக் குழாய் அடைப்பின் அறிகுறிகள், அடைப்பின் காரணத்தைப் பொறுத்து இருக்கும். சினைப்பாதைக் குழாயில் திரவம் நிரம்பி இருந்தால் வயிற்றின் ஒரு பக்கத்தில் லேசான வலி ஏற்படலாம். சில பெண்களுக்கு அவ்வப்போதோ அல்லது மாதவிடாயின் போதோ இடுப்பு பகுதியில் வலி ஏற்படலாம்.
அடைபட்ட சினைப்பாதைக் குழாய்களை கண்டறிய பயன்படுத்தப்படும் பொதுவான சோதனை ஹிஸ்டெரோசால்பின்கோக்ராம் எனப்படும். இதில் ஒரு பாதுகாப்பான சாயம் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு, சினைப்பாதைக் குழாய்களிலுள்ள அடைப்புகள் கண்டுபிடிக்கப்படும்.

சித்த மருத்துவத்தில் நோய்த்தொற்றுக்குரிய சிகிச்சைகள் மற்றும் சதையடைப்புக்குரிய சிகிச்சைகள் கொடுக்கப்படும். இதை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோய்த்தொற்றுக்கு சேராங்கொட்டை நெய் 5 மில்லி லிட்டர் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும். சதையடைப்பு நீங்க மாவிலிங்கப்பட்டைச் சூரணம் 1 கிராம், வெடியுப்புச் சுண்ணம் 200 மில்லிகிராம், நண்டுக்கல் பற்பம் 200 மில்லிகிராம், குங்கிலிய பற்பம் 200 மில்லிகிராம் வீதம் மூன்று வேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும். இதை மருத்துவர் ஆலோசனையின் பேரில் உண்பதே நல்லது.
- ஜாக்கிங் பயிற்சியை பலரும் காலைப்பொழுதில்தான் மேற்கொள்வார்கள்.
- இரவில் ஜாக்கிங் பயிற்சி செய்வதில் சில பிரச்சனைகளும் இருக்கின்றன.
நடைப்பயிற்சியின் அடுத்தக்கட்டமாக 'ஜாக்கிங்' அமைந்திருக்கிறது. இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு உடலை அதிகம் வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. ஜிம்முக்கு சென்று மேற்கொள்ளப்படும் கடினமான பயிற்சிகளை போன்று சிரமப்பட வேண்டியதில்லை. அதே வேளையில் எளிமையான முறையில் கலோரிகளையும் ஓரளவுக்கு எரித்துவிடலாம். இதனை மேற்கொள்வதற்கு தரமான, பொருத்தமான காலணிகள் இருந்தால் போதுமானது.
இந்த ஜாக்கிங் பயிற்சியை பலரும் காலைப்பொழுதில்தான் மேற்கொள்வார்கள். ஜாக்கிங் பயிற்சி செய்வதற்கு ஆர்வம் இருந்தும் சோம்பேறித்தனம் காரணமாக காலையில் அதனை தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இரவு நேரத்தில் கூட ஜாக்கிங் பயிற்சியை மேற்கொள்ளலாம். இரவு நேர ஜாக்கிங் பயிற்சியின் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
* இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு ஜாக்கிங் செய்யும்போது உணவு செரிமானம் ஆவதற்கு போதுமான கால அவகாசம் கிடைக்கும். உணவும் எளிதில் ஜீரணமாகிவிடும். கலோரிகளை எளிதாக எரிப்பதற்கும் வித்திடும். காலையில் வெறும் வயிற்றில் ஜாக்கிங் மேற்கொள்வது சவாலாக இருக்கும். அதனை விரும்பாதவர்களுக்கு இரவு நேர ஓட்டம் ஏற்றதாக இருக்கும். ஆனால் இரவு சாப்பிட்ட உடனேயே ஜாக்கிங் செய்யக்கூடாது.
* இரவு நேரத்தில் ஓடுவது அதிகப்படியான ஆற்றலை எரிப்பதற்கும் உதவிடும்.
* இரவில் ஓடும்போது தசைகளுக்கும் பலம் சேர்க்கும். அவை வேகமாக வலுவடைவதற்கு உதவும். தசைகள் தளர்வடைவதற்கும் உதவும் என்பதால் இரவில் நன்றாக தூங்குவதற்கு உதவிடும்.
* இரவில் ஜாக்கிங் செய்வது மனநிலையை அதிகரிக்கச் செய்யும் எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிடுவதற்கும் வழிவகுக்கும். அதன் மூலம் மனக்கவலை, மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் வைக்கும். மனக்குழப்பத்தை விலக்கி அடுத்த நாள் சிறப்பாக திட்டமிடுவதற்கும் வழிவகை செய்யும்.
* பகல் நேரத்தை விட இரவில் ஓடும்போது சுற்றுச்சூழலை சூழ்ந்திருக்கும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். அதனால் கூடுதல் நேரம் ஓடுவதற்கும் துணை புரியும்.
* காலையில் அலாரத்துடன் போராடி எழுந்து அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் குறைவாக நேரமே ஜாக்கிங் செய்பவர்கள் இரவு நேரத்தை தேர்ந்தெடுக்கலாம். இரவில் அதிக நேரம் ஓடியும் பயிற்சி பெறலாம்.
* இரவில் ஜாக்கிங் பயிற்சி செய்வதில் சில பிரச்சனைகளும் இருக்கின்றன. பகலை விட இரவில் வெளிச்சம் குறைவாக இருக்கும் என்பதால் ஓடும் பாதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பள்ளங்கள், கற்கள் சிதறி கிடந்தால் பாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால் கவனமாக ஓட வேண்டும்.
- ஸ்ட்ராபெர்ரி பழத்தில் போலேட், போலிக் அமிலம் உள்ளது.
- ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பாலிபீனால்கள், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன.
பழங்கள் பல்வேறு வண்ணங்களில் விளைகின்றன. ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொரு விதமான சத்துக்களை கொண்டிருக்கின்றன. பழங்களின் வண்ணத்தை பொறுத்தும் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் மாறுபடும். அந்த வகையில் சிவப்பு வண்ண பழங்கள் சிலவற்றை பற்றியும், அவற்றின் சத்துக்கள் பற்றியும் பார்க்கலாம்.
மாதுளை
மாதுளையில் பாலிபினால்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் மிகுந்துள்ளன. அவை புற்றுநோய், இதய நோய் அபாயத்தை தடுக்கக்கூடியவை.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் போலேட், போலிக் அமிலம் உள்ளது. இதுவும் இதய ஆரோக்கியத்தை காக்க துணை புரியும். ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி போன்றவையும் உள்ளடங்கி இருக்கின்றன. அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
ஆப்பிள்
ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பாலிபீனால்கள், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. அதிலிருக்கும் நார்ச்சத்து எடை குறைப்புக்கு வழிவகுக்கும்.
செர்ரி
வைட்டமின் சி, பொட்டாசியம் மட்டுமின்றி நார்ச்சத்து நிரம்பப்பெற்றது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.
தர்பூசணி
92 சதவிகிதம் நீர்ச்சத்து கொண்ட தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லைகோபீன் போன்றவையும் அதிகம் உள்ளன. எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். இதன் மூலம் இதய நோய் அபாயத்தை தவிர்க்கலாம்.
பிளம்ஸ்
வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் இந்த பழத்தில் அதிகம் உள்ளன. பல்வேறு நாள்பட்ட நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.
கிரேப் புரூட்
இந்த பழத்தில் வைட்டமின் சியும், பெக்டினும் அதிகமாக உள்ளன. இவை கொழுப்பைக் குறைக்க உதவும். ஏதேனும் நோய்க்கு மாத்திரை உட்கொள்பவர்கள் டாக்டரின் பரிந்துரையின் படியே கிரேப் புருட் சாப்பிட வேண்டும். ஏனெனில் மருந்துகளுடன் எதிர்வினை புரியக்கூடும்.
திராட்சை
இதில் வைட்டமின் பி, ஏ அதிகம் உண்டு. நீர்ச்சத்தும், லுடீன் ஜியாசாந்தைன் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகளும் நிறைந்திருக்கும். சிவப்பு திராட்சை பழ தோலில் பைட்டோ கெமிக்கல் ரெஸ்வெராட்ரோல் என்னும் சேர்மம் உள்ளது. இது நாள்பட்ட நோய் அபாயத்தை தடுக்க உதவும்.
- பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா.
- 38 டிகிரி வெப்பநிலைக்கு அதிகமாக சுட வைத்து பயன்படுத்தக்கூடாது.
பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா…? என்றால் பொதுவாக மருத்துவ கூட்டமைப்புகள் பாமாயில் பெரிதாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதில்லை என்று கூறுகின்றன. ஆனாலும் பாமாயில் உடலுக்கு நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. அது குறித்த பதிவு உங்களுக்காக….
பெரும்பாலானோர் கடைகளில் விற்கப்படும் பாமாயில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாமாயில் பற்றிய தவறான கருத்து மக்களிடம் பரவலாக உள்ளது.
அதிக அளவு பாமாயில் சாப்பிடுவதை விட முழு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதாவது, வதக்குதல் போன்ற குறைந்த வெப்ப சமையல் முறைகளுக்கு பாமாயிலைப் பயன்படுத்தவும், வறுத்தல் போன்ற உயர் வெப்பநிலை முறைகள் தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும். இருப்பினும், அதிக வெப்ப சமையலுக்கு, ஆலிவ் எண்ணெய் அல்லது கனோலா எண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்களுடன் பாமாயிலைக் கலந்து பயன்படுத்தலாம்.

எண்ணற்ற பதப்படுத்தப்பட்ட பொருட்களான இனிப்புகள், குக்கீஸ்கள், தொழில்துறை பேஸ்ட்ரிகள், கோகோ கிரீம் அல்லது சிப்ஸ் போன்ற நமக்கு சுவையாகத் தோன்றும் பெரும்பாலான பொருட்களில் ஆரோக்கியமற்ற பொருட்கள் உள்ளன.
பாமாயிலை 38 டிகிரி வெப்பநிலைக்கு அதிகமாக சுட வைத்து பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு அதிக வெப்பநிலையில் உணவில் சேர்த்துக்கொள்வதால் அதிகரித்த கொலஸ்ட்ரால் மற்றும் இருதய நோய் அபாயத்தை உண்டுபண்ணுகிறது என்று சில ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கிறது.
அதே சமயத்தில் அதை அளவாக உட்கொண்டால் எந்தவித ஆபத்தும் இல்லை. சாலை ஓரங்களில் விற்பனை செய்யும் கடைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடு செய்து பயன்படுத்தும் போது அது உடலுக்கு நஞ்சாக மாறுகிறது. பாமாயிலையும் நாம் அதிக வெப்பத்தில் வைத்து தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது அது புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை உண்டுபண்ணுகிறது.

முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டு சாப்பாடுகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. நம்முடைய ஆரோக்கியத்தில் நமக்கு முதலில் விழிப்புணர்வு வரவேண்டும்.
- பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
- பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.
மைக்ரோபிளாஸ்டிக்ஸ், நமது உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து உலகம் மாசுபாட்டை எதிர்கொள்கிறது.
இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. இதனால் இதய பிரச்சனைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் ரத்த ஓட்டத்தில் நுழையும் மைக்ரோபிளாஸ்டிக் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் நுகர்வு குறைவதால் ரத்த அழுத்தம் குறைவதை குறிக்கும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ரத்த ஓட்டத்தில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆய்வின் முடிவுகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும் என்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும்.
- தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும்.
நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும். என்ன நடந்தாலும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படக்கூடியது.
தூக்கக் கோளாறுகள் இயல்பான உடல், மன அழுத்தம் உணர்ச்சி செயல்பாடுகளில் தலையிடும் அளவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பாலிசோம்னோ கிராபி மற்றும் ஆக்டிகிராபி ஆகிய சோதனை மூலம் தூக்கக் கோளாறுகளை கண்டறிகின்றனர்.
இந்த சோதனைகள் கடினமானது. இவற்றின் மூலம் ஒருவருக்கு எந்த விதமான தூக்க குறைபாடு உள்ளது என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது கடினம்.
தூக்கமின்மை குறித்து ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் ஐஐஐடி-எச் ஆராய்ச்சியாளர்கள் நவீன முக கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த முக கவசம் வழக்கமான முக கவசம் போல் தோற்றமளிக்கிறது. இதில் பல்வேறு விதமான மின்முனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முக கவசத்தை ஒருவருக்கு அணிய செய்தால் அவருக்கு எந்த விதமான தூக்கமின்மை உள்ளது என்பதை 80 சதவீதத்திற்கு மேல் துல்லியமாக கண்டறிய முடியும். இது கண் மற்றும் கால் இயக்கம் ஆக்சிஜன் அளவு இதயத்துடிப்பு சுவாச முறை மற்றும் மூளை போன்ற பல்வேறு உடல் உறுப்புகளை கண்காணிக்க கூடியது.

இந்த முகமூடி மூலம் வெவ்வேறு விதமான தூக்க குறைபாடுகளை கண்டறிந்து அதன் மூலம் சிகிச்சை அளித்து தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும்.

நமக்கு ஏன் தூக்கம் வர மாட்டேங்குது என நினைப்பவர்கள் நிம்மதியாக தூங்க இந்த முக கவச சோதனையை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
- பொதுவாக 7 முதல் 8 மணிநேர தூக்கம் என்பது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.
- அவரவர் வயதுக்கு ஏற்ப உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வை கொடுப்பது, நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நீண்ட ஆயுளுக்கும் போதுமான தூக்கம் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் எத்தனை மணி நேர தூக்கம் போதுமானதாக கருதப்படுகிறது..? வயதுக்கு ஏற்ப தூக்க நேரம் என்ன?
அதிகமான தூக்கம் அல்லது மிகக் குறைந்த தூக்கம் பெரும்பாலும் உடல் நோய்க்கான அறிகுறியாகும். நீங்கள் இவை இரண்டையும் செய்வதில்லை என்றாலும் உங்கள் வயதுக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக 7 முதல் 8 மணிநேர தூக்கம் என்பது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.
இந்த நிலையில், ஒரு நபருக்கு 4 மணி நேரம் தூக்கம் போதும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக டாக்டர் மனன் வோரா கூறியுள்ளார்.
சமீபத்திய, போட்காஸ்ட் நிகழ்ச்சியில் மருத்துவர் டாக்டர் மனன் வோரா உடல்நலம், தூக்கம், ஊட்டச்சத்து உள்ளிட்ட பலவற்றைப் பற்றிப் பேசினார். அப்போது, நான்கு மணிநேர தூக்கம் கூட ஒரு நபருக்கு போதுமானது என்பதை நிரூபிக்கும் ஆராய்ச்சி ஆய்வுகள் உள்ளதாக கூறினார்.
தூக்கம் வருவதில்லை, இரவு முழுக்க விழித்தே இருக்கிறேன் என புலம்பி தள்ளும் 90-ஸ் மற்றும் 2K கிட்ஸ்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஓரளவுக்கு நிம்மதியை கொடுக்கலாம். எனினும், அவரவர் வயதுக்கு ஏற்ப உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வை கொடுப்பது, நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
- மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும்.
- புற்றுநோயிலும் அதிக ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது.
மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். அப்போது சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். ரத்தப்போக்கு அளவு நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் காலம் 7 நாட்களுக்கு அதிகமாகவும், ரத்தப்போக்கு அதிகரித்தும் காணப்படுவதை 'அதிகரித்த ரத்தப்போக்கு' அல்லது 'பெரும்பாடு' (மெனோரேஜியா) என்பார்கள். இதற்கான காரணங்கள் வருமாறு:-

1) ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஹார்மோன்களுக்கு இடையில் உள்ள சமநிலை மாறுபாடு,
2) கருப்பை உள்ளுறுப்புகளான சினைப்பாதை, சினைப்பை இவற்றில் கருப்பை புறணியான எண்டோமெட்ரியம் வளருதல், எண்டோமெட்ரியம் கடினமடைதல்,
3) கருப்பையில் வளரும் சாதாரண தசைக்கட்டிகள், சினைப்பையில் வளரும் நீர்க்கட்டிகள் மற்றும் சாக்கலேட் கட்டிகள்,
4) கருப்பை புறணியில் வளரும் பாலிப்ஸ், அடினோமயோசிஸ், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களான காப்பர் டி இவை குறிப்பிட்ட நாட்களுக்கு அதிகமாக இருப்பது போன்ற பல காரணங்களால் மாதவிடாய் காலங்களில் அதிகரித்த குருதிப்போக்கு காணப்படுகிறது.
இன்னும் கருப்பை புற்றுநோயிலும் ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது. அதிக ரத்த இழப்பின் காரணமாக உடல் பலவீனம், சோர்வு, மூச்சு விட சிரமம் போன்ற உணர்வு வரலாம். எனவே, என்ன காரணத்தினால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை மருத்துவர் மூலம் அறிந்து ஆலோசனை பெறுவது நல்லது.

சித்த மருத்துவம்
இந்த பிரச்சனைகளுக்கு கீழ்க்கண்ட சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்து பயன்பெறலாம்.
1) திரிபலா சூரணம் 1 கிராம், அன்னபேதி செந்தூரம் 200 மி.கி., படிகார பற்பம் 100 மி.கி. அளவு காலை, மாலை இருவேளை தேனில் உட்கொள்ள வேண்டும்.
2) கொம்பரக்கு சூரணம் 1 கிராம் எடுத்து, நெய் அல்லது தேனில் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிடவும்.
3) திரிபலா சூரணம் 1 கிராம், அயப்பிருங்கராஜ கற்பம் 200 மி.கி, சங்கு பற்பம் 200 மி.கி. அளவு எடுத்து தேனில் காலை, மாலை இரு வேளை ஏழு நாட்கள் உண்ணவும்.
4) வாழைப்பூ வடகம் 1-2 வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.
5) பூங்காவி செந்தூரம் 200 மி.கி. காலை, இரவு இருவேளை சாப்பிடலாம்.
6) இம்பூறல் மாத்திரை 1-2 காலை, இரவு இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.
7) கரிசாலை லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் வீதம் சாப்பிட வேண்டும்.
உணவில் வாழைப்பூ, மாதுளம்பழம், நாவல் பழம், அத்திப்பழம், கறிவேப்பிலை, முருங்கை கீரை, சிவப்பு தண்டுக்கீரை, செவ்வாழைப்பழம் இவைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.






