என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. அவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. மலேரியா, டைப்பாய்டு, காசநோய், நுரையீரல் சளி, சிறுநீரில் கிருமி, புண் அல்லது சீழ் வைத்தல் போன்றவை காய்ச்சலுக்கு அதிக காரணமாகும். வைரஸ் நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், பறவை மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்றவையும் அதிகமாக காணப்படுகின்றன. காசநோய் நமது உடலில் எந்தப் பாகத்தை அல்லது மண்டலத்தை வேண்டுமானாலும் தாக்கலாம்.

    அதனால், நீண்ட நாட்கள் காய்ச்சல் இருந்தால் அது காசநோயாக இருக்கலாம். அதற்கான சோதனைகளை செய்துகொள்வது நல்லது. வெளியில் தெரியாமல் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய், காசநோய் ஆகியவை நீண்டநாள் காய்ச்சலுக்கு முக்கியக் காரணங்கள். இதய வால்வுகளில் பாதிப்பு வந்தாலும் அதனால் காய்ச்சல் வரும்.

    ஒருவரின் உடலில் 3 வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தால், 3 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து, எல்லா சோதனைகள் முடித்தும் காய்ச்சலுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதை ‘காரணம் தெரியா காய்ச்சல்’ என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.

    மக்களில் பலரும் காய்ச்சலை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். சில சமயங்களில் அது மிகவும் சிக்கலானது. பல நாட்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் எல்லா சோதனைகள் செய்தும் எளிதில் குணமாகாமல் மருத்துவர்களை திணறடிக்கும் காய்ச்சல்களும் உண்டு. பொதுவாக அனைவரும் காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில கடினமான வியாதிகள் உடலுக்குள் இருந்தால் காய்ச்சல் எளிதில் குணமாகாது. பல நாட்கள் கடந்த பின்பே மருத்துவர்களை சென்று பார்க்கிறார்கள்.

    அப்போது மருத்துவர்கள் எந்த பரிசோதனை செய்தாலும் சாதகமான பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில்லை. சரியான சிகிச்சை கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

    வைரஸ் நோய் பாதிப்புகளுக்கு நோயின் அறிகுறிக்கு தகுந்த மாதிரி சிகிச்சை தேவைப்படுவதால், காய்ச்சல் குணமாவதில் தாமதம் ஏற்படலாம் என்று காரணம் தெரியாத காய்ச்சலுக்கான விளக்கத்தை மருத்துவத்துறை சொல்கிறது.
    குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.
    சில குழந்தைகள் விரைவில் பேச தொடங்கும். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதமாகும். குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.

    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பேசும் திறன், கேட்கும் திறன் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வது நல்லது. 6 மாத குழந்தைகளுக்கு, வாயிலிருந்து ‘ஜொள்ளு வழிதல்’ அறிகுறி தெரியும். பேச முயற்சி செய்யும் அறிகுறிகளும் தென்படும். இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம்.

    குழந்தையிடம் பேசும்போது, வாய் அசைவைப் பார்த்து, சத்தம் வருவதைக் குழந்தை உணர்ந்து கொண்டு ‘உர்’ என எச்சிலை ஊதி தள்ளும். இதுவே குழந்தை பேச தொடங்குவதற்கான முதல் அறிகுறி. நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்… ஞ…ங்க…ஞ…’ என்று குரல் எழுப்பும்.

    நீங்கள் பேசும் சத்தம் பார்த்து தன் கவனத்தைத் திருப்புவதும் நல்ல அறிகுறிதான். காது நன்றாக கேட்கிறது. எனவே, பேச்சும் இயல்பாக வரும் என அர்த்தம். குழந்தை பேசுவதற்கு முன்பு அதன் கேட்கும் திறன் நன்றாக இருக்க வேண்டும். நாம் பேசுவதை குழந்தை நன்கு கூர்ந்து கவனித்த பின்பு, அதற்கு பதில் சொல்லவோ செய்கை செய்யவோ முயற்சி செய்யும்.

    கேட்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் சரியாக இருக்க வேண்டும். அதற்கான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, விரைவில் குழந்தையால் பேச முடியும். பேசவும் தொடங்கும். முதல் ஒன்றிரண்டு மாதங்கள் நாம் பேசுவதை நாம் வாய் அசைப்பதைக் கவனிக்கும். தலை அசைப்பதைக் கவனிக்கும். கை, கால் ஆட்டுவதைப் பார்க்கும்.

    ‘ங்ஞா, ங்ஞா’ என்ற வார்த்தைதான் குழந்தைக்கு பேச வரும். பசி வரும் போது, தன்னை யாரும் கவனிக்காதபோது இப்படி சத்தமிடும். அடித்தொண்டையிலிருந்து இப்படி கத்தி சத்தம் போடும். பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் தினமும் குழந்தையிடம் பேசி, சிரித்து, கொஞ்சி விளையாட வேண்டும்.

    என்ன பன்றீங்க… சாப்டீங்களா… பாப்பாக்கு பசிக்குதா… பாப்பாக்கு தூக்கம் வரலையா என எதாவது குழந்தையிடம் பேசி கொண்டு இருப்பது நல்லது. இதுவே மிகவும் முக்கியமான பயிற்சி. குழந்தைகள் நீங்கள் பேசுவதைௐ கவனிக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக குழந்தையும் சத்தம் போட ஆரம்பிக்கும்.

    குழந்தையை சுற்றி பெரியவர்கள் உட்கார்ந்து பேசும் வீட்டில், வெகு விரைவில் குழந்தைகள் பேசுவார்கள்… 10 மாதத்திலே ஒரு குழந்தை இரண்டு எழுத்துகளை கோர்த்து பேசும் அளவுக்கு திறன் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையிடம் அவ்வப்போது பேசி கொஞ்சி விளையாடியதே முக்கிய காரணம்.

    அம்மா சொல்லு, அப்பா சொல்லு, அண்ணா சொல்லு என உறவுகளின் பெயரை சொல்ல சொல்லி பழக்குவது குழந்தைகளுக்கான சிறந்த பயிற்சி. மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.
    பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், கர்ப்பப்பை இறக்கத்தால் பாதிக்கப்படுகிற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
    கருவில் குழந்தையை சுமக்கும் அனைத்து பெண்களும் விரும்பும் விஷயம் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பது தான். சிசேரியன் என்றால் வயிற்றை கிழிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவாரம் படுக்கையில் இருக்கவேண்டும். 6 மாதத்திற்கு எந்த ஒரு கடினமான வேலையும் பார்க்கக்கூடாது என்று பாடாய் படுத்திவிடும் சிசேரியன் முறை குழந்தை பிறப்பு. எனவேதான் பெரும்பாலான பெண்கள் சுகப்பிரசவம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    சுகப்பிரசவம் ரொம்பவே நல்லதுதான். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், கர்ப்பப்பை இறக்கத்தால் பாதிக்கப்படுகிற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சுகப்பிரசவத்தின் போது, ரொம்பவும் சிரமப்பட்டு, குழந்தையை வெளியேற்றுவது, கஷ்டமான பிரசவம், ஆயுதப் பிரசவம்... இதெல்லாம் இடுப்பெலும்பு தசைகளை தளர்த்திவிடும்.

    பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலும், அதிக எடை தூக்குதல், ரொம்பவும் உடம்பை வருத்துகிற மாதிரியான வேலைகளைச் செய்வதன் மூலமாகவும் தசைகள் தளர்ந்து, கர்ப்பப்பை பொதுவாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்து இறங்கிவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பக் கட்டத்துல இருந்தா சரி செய்யறது சுலபம். வலை மாதிரியான ஒன்றின் முனையை கர்ப்பப்பையோட பின் பக்கத்துலயும், இன்னொரு முனையை இடுப்பெலும்புலயும் சேர்த்து தைத்துவிடலாம். இதனால் கர்ப்பப்பை தன்னோட இயல்பான இடத்துக்கே வந்துடும். இந்த சிகிச்சைக்குப் பிறகு எடை தூக்காம இருக்க வேண்டியது முக்கியம்.

    கர்ப்பப்பை இறக்கத்தை ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டால் அது தனக்குப் பக்கத்துல உள்ள சிறுநீர்ப்பை, மலப்பைகளையும் சேர்த்து இழுக்க ஆரம்பிக்கும். சிறுநீர்ப்பை இறங்கத் தொடங்கினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வும், முழுமையாக சிறுநீரை வெளியேற்றாத உணர்வும் ஏற்படும். தவிர, அந்தப் பைக்குள் எப்போதும் சிறுநீர் தங்கி, நோய் தொற்றினை ஏற்படுத்தும். அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.

    இதே மாதிரிதான் மலப்பை இறக்கத்திலேயும் பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும்போது சிறுநீர் பை, மலப்பைகளையும் சேர்த்து தூக்கி வச்சுத் தைக்க வேண்டியிருக்கும் என்கின்றனர் அவர்கள்.

    எதையுமே கவனிக்காமல் விட்டால், பிரச்சனை தீவிரமாகி, கர்ப்பப் பையையே அகற்ற வேண்டி வரலாம். பிரசவமான பெண்களுக்கு மட்டுமில்லாமல், கல்யாணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கலாம். அவங்களுக்கு கொலாஜன் திசுக்கள் பலவீனமாகி, அதன் விளைவாக, கர்ப்பப்பை இறங்கலாம். சிலருக்கு பிறவியிலேயே தசைகள் பலவீனமா இருந்து, இப்படி நடக்கலாம். கர்ப்பப்பை இறக்கத்தை இப்ப லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமாக ரொம்ப சுலபமா சரி செய்ய முடியும் என்றும் ஆறுதலாக தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.
    சிறுதானியங்களில் சத்தான சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று சாமை அரிசி, கருப்பு உளுந்து சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப்
    வெந்தயம் - கால் ஸ்பூன்
    சீரகம் - கால் ஸ்பூன்
    முழுப்பூண்டு - 2
    தேங்காய் துருவல் - அரை கப்
    உப்பு - தேவைக்கேற்ப


     
    செய்முறை :

    சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

    முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, நன்றாக கழுவி அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    உளுந்து பாதியளவு வெந்ததும் ஊறவைத்த சாமை அரிசியை சேர்க்கவும்.

    அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும்.

    அனைத்து நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான சாமை கருப்பு உளுந்துகஞ்சி ரெடி.

    கஞ்சி திக்காக இருந்தால் பால் அல்லது மோர் அல்லது சூடான நீர் சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், பேஸ்பேக் போடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.

    மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.

    மஞ்சள் கொண்டு ஃபேஸ் பேக் போட்ட பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை நன்கு கழுவி, பின் துணியால் தேய்த்து துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.

    ஃபேஸ் பேக் போடும் போது பலரும் முகத்திற்கு மட்டும் தடவி, கழுத்தை மறந்துவிடுவோம். இதனால் கழுத்துப் பகுதி மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே எப்போதும் மாஸ்க் போடும் போது, கழுத்துப் பகுதியிலும் மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் முகம் மற்றும் கழுத்து ஒரே நிறத்தில் இருக்கும்.

    எத்தனைப் பொருட்களைக் கொண்டு மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தினாலும் நீரைக் கொண்டு பயன்படுத்துவதற்கு ஈடாகாது. ஏனெனில் நீரைக் கொண்டு பயன்படுத்தும் போது தான், உண்மையிலேயே மஞ்சளின் முழு நன்மையையும் பெற முடியும்.

    முதலில் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சோப்பானது கஷ்டப்பட்டு முகத்தில் போட்ட ஃபேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளைக் கெடுத்துவிடும். எனவே முதலில் அதைத் தவிர்க்க வேண்டும்.

    பேஸ் பேக் போடும் போது, அதை ரொம்ப நேரம் காய வைத்து நன்றாக காய்ந்ததும் கழுவினால் கூடுதல் அழகு பெறலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று... முகத்தில் சிறிதளவு ஈரப்பதம் இருக்கும் போதே முகத்தை ஸ்கிரப் செய்வது போல செய்து அந்த மாஸ்க்கை கழுவி விட வேண்டும்.
    தியானத்திற்கான பயணத்தை விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை. இப்போது தியானத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும். உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம்.

    முதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம். எனவே 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம். அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை. (அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்). உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம். கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில் காணாமல் போகிறது. பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது.

    ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும். அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.

    தியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப்போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும். தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது. உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக்கவனியுங்கள்.

    அதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள். இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும். திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும். ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.
    ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வாழ்நாள் காப்பீடு மட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வாழ்நாள் காப்பீடு மட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கின்றன என உங்களுக்குத் தெரியுமா?

    காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது பிற நிதிசார் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஆயுள் காப்பீட்டு பாலிசியை பிணையாகக் கொண்டு இக்கடனை அளிக்கின்றன. ஆனால் இந்தக் கடன் திட்டமானது டெர்ம் இன்சூரன்ஸ் அல்லது யூலிப்ஸ் அல்லது ஈக்விட்டி சார்ந்த திட்டங்களுக்குக் கிடையாது.

    இதில் வழங்கப்படும் கடன் அளவானது பாலிசியின் வகை மற்றும் சரண்டர் மதிப்பு இரண்டையும் பொருத்து வழங்கப்படும். கடன் தொகையானது பாலிசியின் சரண்டர் மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவீத அளவில் வழங்கப்படும். அதிகபட்சம் 80 முதல் 90 சதவீதம் வரை சரண்டர் மதிப்பில் இருந்து கடன் பெற முடியும்.

    இந்தக் கடன் திட்டம், மணி பேக் பாலிசி மற்றும் எண்டோவ்மென்ட் பாலிசிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கடன் பெற, அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் பாலிசி பத்திரம் அல்லது ஆவணத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். கடன் தொகையைப் பெறுவதற்கான வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    காப்பீட்டு நிறுவனம் அல்லது நிதி நிறுவனம், இந்தக் கடன் தொகையைச் செயல்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையைக் கட்டணமாகப் பெறும்.

    ‘பர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை விட, இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. ஒருவேளை வட்டித் தவணை, பாலிசி சரண்டர் மதிப்பை விட அதிகமாக இருந்தால் பாலிசிதாரர் அவரது பாலிசியை இழக்க நேரிடும் என்பதை மட்டும் நினைவில்கொள்ள வேண்டும்.
    மாலையில் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கோதுமை மாவில் இனிப்பு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்
    வெல்லம் - அரை கப்
    தேங்காய் - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி



    செய்முறை :

    கோதுமை மாவை வாசம் வரும் வரை வெறும் வாணலியில் போட்டு குறைந்த தீயில் வறுத்துக் கொள்ளவும்.

    வெல்லத்தை தட்டி வைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் தட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

    வடிகட்டிய வெல்ல கரைசலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்ததும், தீயின் அளவை குறைத்து விட்டு பொடியாக நறுக்கிய தேங்காய், ஏலக்காய் தூள், நெய், கோதுமை மாவு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    மாவு வாணலியில் ஒட்டாமல் ஒன்றாக சேர்ந்து வரும். இதுவே சரியான பதம். பதம் வந்ததும், அடுப்பை அணைத்து மூடி போட்டு சற்று நேரம் ஆற விடவும்.

    சூடு சிறிது குறைந்ததும், மாவை சிறிது எடுத்து பிடி கொழுக்கட்டைகளாக செய்து வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    ஏற்கனவே கோதுமை மாவை வெல்லத் தண்ணீரில் வேக வைத்து விட்டதால் இந்த கொழுக்கட்டைகள் சீக்கிரம் வெந்து விடும். எனவே ஐந்து அல்லது ஏழு நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தாலே போதுமானது.

    சுவையான சத்தான கொழுக்கட்டை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    துணைக்கு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
    துணையின் தகாத உறவு தெரிய வருவதும், அதை எதிர்கொள்வதும் படு பயங்கரமான அனுபவம். உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்கிற அனுபவமும் கூட துணைக்கு அப்படியொரு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம். அது உண்மையா, பொய்யா என்கிற மனப்போராட்டத்துக்கு விடை காண்பதே மிகப்பெரிய மன உளைச்சலைத் தரும்.

    சிலரது தகாத உறவானது ஆரம்பித்தவுடனேயே தெரிந்து விடும். அதை உறுதிப்படுத்துகிற ஆதாரங்களும் கிடைத்துவிடும். சில நேரங்களில் அந்த உறவானது துணைக்குத் தெரியாமலே ரகசியமாகத் தொடரும். பத்து, பதினைந்து வருடங்கள் கடந்தும் கூட அது தெரியாமல் வைத்திருக்கப்படுகிற குடும்பங்களும் உள்ளன. அதை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் எதிர்காலம் அமையும். நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி துணையிடம் காணப்படுகிற திடீர் நடத்தை மாறுபாடுகள், அவரது பழக்க வழக்கங்களில் தென்படுகிற திடீர் மாற்றங்கள் மற்றும் உறவுகளிடமிருந்தும், விட்டுச் சூழலில் இருந்தும் தனித்து விலகி இருக்கிற மனப்பான்மை போன்றவையே தகாத உறவுக்கான முதல் அறிகுறிகளாக அமையும்.

    கணவன் - மனைவி இருவருமே பிஸியான வேலையில் இருப்பார்கள் என்றாலோ, வேலை அல்லது பிசினஸீக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தாலோ ஒருவருக்கு ஏற்பட்ட தகாத உறவை இன்னோருவரால் அத்தனை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.

    ஒரு சில பெண்களுக்கு கல்யாணமாகி, குழந்தைகள் பிறந்ததும், கணவனுக்கான நேரமும் கவனிப்பும் குறைந்து, மொத்த கவனமும் குழந்தைகள் பக்கம் திரும்பும். குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டிய பொறுப்பில், கணவரின் மீதான கவனம் சற்றே பின்னுக்குப் போவதும் இயல்புதான். அந்த மாதிரியான
    சந்தர்ப்பங்களிலும் அவர்களால் கணவருக்குத் திடீரென முளைத்த தேவையற்ற உறவு பற்றி அறிய வாய்ப்பில்லாமல் போகலாம்.

    பல நேரங்களில் அக்கம்பக்கத்து வீட்டார், நண்பர்கள், உடன் வேலை செய்கிறவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என மூன்றாம் நபர்கள் மூலமும் துணையின் தகாத உறவு தெரிய வரும். இதெல்லாம் இருந்தாலும் துணையின் தப்பான உறவைக் காட்டிக் கொடுப்பதில் கணவரின் பேன்ட், ஷர்ட் பாக்கெட்டுகளுக்கும், மனைவியின் ஹேண்ட்பேகுக்குமே முதலிடம் என்கிறது ஒரு ஆய்வுத் தகவல். இ மெயில், அழிக்கப்படாத செல்போன் எஸ்.எம்.எஸ்.., அடிக்கடி ஒரே எண்ணிலிருந்து வந்த போன தொலைபேசி எண்கள் போன்றவையும் இந்த விஷயத்தில் முக்கிய சாட்சிகளாக அமைகின்றன.
    மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப்படுகிறது. எளிமையான, சக்தி வாய்ந்த தியானமான மந்திர தியானத்தைப் பார்ப்போம்.
    இந்த மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் அது குருவால் தரப்படும் இரகசியச் சொல்லாக இருந்தது. அது நாமாகத் தேர்ந்தெடுக்கும் சொல்லாக இருந்ததில்லை. குரு மூலம் பெறும் அந்த சொல்லிற்கு மிகுந்த சக்தி இருப்பதாக நம்பப்பட்டதால் அந்த மந்திர தியானம் சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது. அன்றும் இன்றும் பிரபலமான தியான முறைகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது.

    மந்திரத் தியானம் செய்யும் முறையை அறியும் முன் ஒரு மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது முக்கியம். அந்த மந்திரத்தை நீங்கள் ஒரு குருவிடம் இருந்து பெறலாம். இல்லா விட்டால் நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

    மந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ”ஓம்”. பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பே கடிகாரத்தில் அலாரம் செட் செய்து விட்டு தியானத்தை ஆரம்பித்தால் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

    1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.

    2) மூச்சு சீராகவும், ஆழமாகவும் தானாக மாறும் வரை உங்கள் கவனம் அதன் மீது இருக்கட்டும்.

    3) மூச்சு சீரான பிறகு அந்த மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.

    4) அந்த மந்திரத்தை நிறுத்தி நிதானமாக உச்சரியுங்கள். உச்சரிக்கும் விதம் மிக வேகமாகவோ, மிக நிதானமாகவோ இல்லாமல் சாதாரண நிதானத்துடன் இருக்கட்டும்.

    5) உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும். சில முறைக்குப் பின் மனம் கண்டிப்பாக அலைய ஆரம்பிக்கும். எத்தனை முறை அலைந்தாலும் பொறுமையாக அந்த அதை திரும்ப மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள். உட்காரும் நிலை சில உணர்வுகளை உடலில் ஏற்படுத்தக் கூடும். அதில் கவனம் செல்லும் போதும் மீண்டும் மனதை மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள்.

    6) தியானத்தின் போது மந்திரம் உச்சரிப்பது நின்று போகலாம். நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் வேகம் அதிகரிக்கவோ, குறையவோ செய்யலாம். அப்போதெல்லாம். மனதில் மந்திரம் அல்லாமல் வேறெதோ எண்ணம் நுழைந்து விட்டது என்று பொருள். அப்படி எல்லாம் ஆகும் போது சலிப்படையக் கூடாது. இந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டாமல் யாரும் தியானங்களில் உயர்நிலைகள் அடைய முடிந்ததில்லை.

    7) திரும்பத் திரும்ப ஆரம்பித்த அதே ஆர்வத்துடன் அதே நிதானமான முறையில் மந்திரத்தை மீண்டும் உச்சரிக்க ஆரம்பியுங்கள். ஒரு சில நாட்களில் அந்த மந்திரம் உங்களுக்குள் பெரும் மாற்றங்கள் கொண்டு வரும். அப்போதும் கூட அந்த மாற்றங்களைப் பற்றி அந்த தியான நேரத்தில் சிந்திக்க ஆரம்பித்து விடாதீர்கள். அந்த மந்திரச் சொல்லில் மீண்டும் மீண்டும் லயிக்க விடுங்கள்.

    தியானம் நல்ல முறையில் கைகூடிய பின் ஒரு நாளில் ஒரு கட்டத்தில் நீங்கள் மந்திரத்தை மட்டுமே உணர்ந்தவராய் இருப்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே அந்த மந்திரத்தை உச்சரிப்பது போல உணர்வீர்கள். அந்த மந்திரமே உங்கள் பிரபஞ்சமாகி விடும். ஒரு பேரமைதியினை நீங்கள் ஆழமாக உணர்வீர்கள். காலம் அந்த சமயத்தில் ஸ்தம்பித்துப் போவதாய் உணர்வீர்கள்.

    9) ஆனால் அந்த அனுபவங்கள் ஆரம்பங்களில் சில வினாடிகளே நீடிக்கும். பின் அது போன்ற அனுபவங்கள் சீக்கிரம் கிடைக்காமல் போகலாம். அதையே எதிர்பார்த்து தியானம் செய்வது தியானமாகாது. எதிர்பார்ப்பு மனதில் இருக்கிற நேரம் மனம் முழுமையாக தியானத்தில் லயிக்காது.

    10) இது போன்ற அனுபவங்கள் வரும். போகும். ஆனால் இதிலெல்லாம் அலைக்கழியாமல் தியானத்தை மீண்டும் தொடருங்கள். மனம் அலைகின்ற நேரத்தில் அதைப் பொருட்படுத்தாமல் எப்படி அதை மீண்டும் மந்திரத்திற்குக் கொண்டு வருவீர்களோ அப்படியே இந்த எதிர்பார்ப்புகள் வரும் போதும் அதை ஒரு விலகலாக எண்ணி மீண்டும் மனதை மந்திரத்திற்குக் கொண்டு வாருங்கள்.

    வெயில் காலத்தில் எண்ணெய் வைப்பதற்கான சில ஆயுர்வேத குறிப்புகளை காண்போம். இதன் மூலம் மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு தலைமுடி “பிசுபிசுப்பின்றி” காணப்படுவதுடன் கூந்தலின் வேருக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
    வெயில் காலத்தில் கூந்தல் பிசுபிசுப்பாக இருக்கும். வெயிலாகவும் காற்றில் ஈரப்பதம் நிறைந்தும் இருக்கும் காலங்களில் தலைக்கு எண்ணெய் வைத்தால் அது கூந்தலை மேலும் பிசுபிசுப்பாகவும் தொட்டால் ஒட்டும் அளவுக்கு ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்திவிடும்! ஆனால் அதற்காக நாம் வெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைக்காமல் இருக்க வேண்டுமா?

    “அழகான கூந்தலை ஒருவர் பெற வேண்டுமென்றால் கூந்தலுக்கு ரெகுலராக எண்ணெய் வைக்க வேண்டும் கூடவே சத்துணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். வலுவான பளபளப்பான கூந்தல், ஒருவரின் உடல் போஷாக்காகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை குறிக்கும் ” பழமையான ஆயுர்வேத அறிவியலின்படி, இயற்கையான பொருட்கள் அடங்கிய தைலங்களை கொண்டு கூந்தலுக்கு தொடர்ச்சியாக எண்ணெய் வைப்பதே உங்களது கூந்தலின் தரத்தை உயர்த்துவதற்கான ஒரே வழி. அத்தகைய கூந்தல் தைலங்கள் முடியை வேரிலிருந்து உறுதியாக்கி பளபளப்பாக்குகின்றன !

    வெயில் காலத்தில் எண்ணெய் வைப்பதற்கான சில ஆயுர்வேத டிப்ஸ்களை இப்போது நாம் காண்போம். இதன் மூலம் உங்கள் மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு தலைமுடி “பிசுபிசுப்பின்றி” காணப்படுவதுடன் கூந்தலின் வேருக்கு தேவையான ஊட்டச்சத்தினையும் அது வழங்குகிறது.

    * கூந்தலுக்கு குறைவான அளவு எண்ணெய் பூசுவதால் வெயில் காலத்தில் சூரியனின் கடுமையான அல்ட்ரா-வயலெட் கதிர்களிடமிருந்து கூந்தலை காக்கலாம். எனவே, வெயில் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதை முழுவதும் தவிர்க்க வேண்டாம். சிறிது பூசிக் கொள்ளலாம்.

    * தலைக்கு எண்ணெய் தேய்த்து இரவு முழுவதும் அதனை ஊறவிடுவதால் ஷாம்பூ தேய்த்தாலும் கூட உங்களது தலை சருமம் எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படும். இதனை நீக்க அதிகளவு ஷாம்பூ பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் கூந்தல் வேர்களில் கெமிக்கல்கள் படியக்கூடும். அதற்கு பதிலாக கூந்தலில் சிறிது தைலம் தடவி இரண்டு மணி நேரங்களுக்குள் தலைக்கு குளித்துவிடவும். ஆயுர்வேதத்தில் கூந்தலில் எண்ணெய் வைத்து இரவு முழுக்க ஊற விடுவது பற்றி சிறப்பாக கூறப்படவில்லை.

    * மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணெயை கூந்தலில் பூசுவது அவசியமாகும். இதனால் தலையில் பூஞ்சை வளர்ச்சி தவிர்க்கப்பட்டு தலை சருமம் ஆரோக்கியமாகிறது. ஆனால் சரியான முறையில் பூசுவதும் பின்னர் வாஷ் செய்வதும் அவசியமாகும். மேலும் அது மயிற்கால்களுக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்பி தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மயிற்கால்களுக்குள் ஊடுறுவாமல் காக்கிறது. அதிக சக்தியுடைய ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பூக்களை பயன்படுத்துவதால் கூந்தல் பாதிக்கப்படுவதையும் அது தடுக்கிறது. 
    ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது. இன்று ராஜ்மா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ராஜ்மா - 1 கப்,
    உப்பு - தேவைக்கு,
    கடுகு - 1/2 டீஸ்பூன்,
    எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லி, புதினா விழுது - 1 டீஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்தமிளகாய் - 3,
    ஆளிவிதைப் பொடி - அரை டீஸ்பூன்



    செய்முறை

    ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி அதிகம் வதங்கக்கூடாது.

    அடுத்து அதில் கொத்தமல்லி, புதினா விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்பு வேக வைத்த ராஜ்மாவை போட்டு கிளறி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, ஆளிவிதைப் பொடி தூவி பரிமாறவும்.

    சத்தான ராஜ்மா சுண்டல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×